ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
மகரம்:
மகரத்திற்கு சனி லக்னாதிபதி மற்றும் தனாதிபதியுமாகி, லக்னத்தில் ஆட்சி பெற்றும், பத்தாமிடத்தில் உச்சம் பெற்றும் சச யோக நிலையை அடைவார்.
சனியின் இரண்டு ராசிகளான மகர, கும்பங்களில் மகரம் ஒரு சர ராசியாகும். மற்ற ராசிகளை விட சர ராசிகள் வலுவானவை என்றும், சர ராசியில் இருக்கும் கிரகங்களும் வலுவானவை என்றும் ஒரு பொது விதி இருக்கிறது.
அதன்படி இந்த இடத்தில் லக்னத்தில் தனித்து அமர்ந்து சனி நேர் வலுப் பெறுவது நல்லதல்ல. எந்த ஒரு நிலையிலும் சனி சூட்சும வலு பெறாமல் நேரிடையாக வலுப் பெறுவது நன்மைகளைத் தராது.
லக்னத்தில் இருக்கும் சனி சூட்சும வலுப் பெறாவிட்டால் உயரம் குறைந்த தன்மையைத் தருவார். ஜாதகரை உலகத்தோடு ஒத்துப் போகாமல் எல்லா விஷயத்திலும் முரண்படும் குணமுள்ளவராகவும், குதர்க்கவாதியாகவும், எதிர்மறை எண்ணங்கள் உடையவராகவும், பிடிவாதக்காரராகவும் மாற்றுவார்.
சார அடிப்படையில் பார்த்தாலும் லக்னாதிபதி சனி இந்த இடத்தில் சூரிய, சந்திர, செவ்வாயின் உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் தான் இருக்க முடியும். மகரத்திற்கு சூரியன் அஷ்டமாதிபதியாகவும், சந்திரன் மாரகாதிபதியாகவும், செவ்வாய் பாதகாதிபதியாகவும் வருவார்கள் என்பதால் அது முழு நன்மையை அளிக்காது என்பதாலும் இங்கே சனி அமர்ந்து வலுப் பெறுவது சரியான நிலை அல்ல.
மகரத்திற்கு எந்த வித சுபத்துவமும், சூட்சும வலுவும் பெறாத சனி தனித்து லக்னத்தில் இருக்கும் நிலையில் அவரது தசை நன்மைகளைச் செய்யாது. மற்ற சுபக் கிரகங்கள் லக்னத்தில் ஆட்சி பெற்று தசை நடத்தினால் நன்மை தருவதைப் போல் சனியும் தருவார் என்று நம்பக் கூடாது. சுப கிரகங்களின் காரகத்துவங்கள் வேறு, பாப கிரகமான சனியின் செயல்பாடுகள் வேறு. சனி சுபத்துவம் பெற்றால் மட்டுமே தனது தசையில் நன்மைகளை செய்வார்.
லக்னத்திலிருந்து சனி 3, 7, 10 மிடங்களைப் பார்ப்பார். லக்னாதிபதியின் பார்வை எனும் நிலையில் அவர் சுபத்துவம் பெற்றிருந்தால் அவரது பார்வை படும் இடங்கள் பலனளிக்கக் கூடும். ஆனால் சூட்சும வலுவோ, சுபத்துவமோ பெறாத சனியின் பார்வை லக்னாதிபதியாக இருந்தாலும் கெடுபலன்களையே தரும்.
இங்கிருந்து சனி மூன்றாமிடத்தைப் பார்க்கும் நிலையில் மூன்றுக்கதிபதி குருவும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் விடா முயற்சியுடன் இருப்பார். ஜாதகரிடம் எழுத்து வன்மை இருக்கலாம். எதையும் சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். இளைய சகோதரத்தால் நன்மைகள் கிடைக்கும்.
சனியின் ஏழாமிடப் பார்வையால் ஜாதகருக்கு தாமத திருமணம், பொருத்தமற்ற துணை, கலப்புத் திருமணம், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் போன்ற நிலை ஏற்படும். சந்திரனின் நிலையைப் பொறுத்தே நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
பத்தாமிடப் பார்வையை எடுத்துக் கொண்டாலும் இதே பலன்தான். பத்துக்கதிபதி சுக்கிரன் சனியின் நண்பர் என்ற முறையிலும், சனி லக்னாதிபதி என்ற முறையிலும், உச்ச வீட்டை அந்த வீட்டில் உச்சமாகும் கிரகம் வலுப் பெற்றுப் பார்க்கிறது என்ற நிலையிலும் சில நன்மைகள் இருக்கும்.
சனியின் காரகத்துவங்களும், சுக்கிரனின் காரகத்துவங்களும், இணைந்து ஜாதகரின் தொழில், வேலை வாய்ப்புக்கள் அமையும். தொழில் முன்னேற்றத்திற்கு சுக்கிரனின் வலுவும் முக்கியம். துலாம் சர ராசி, அதாவது துடிப்பான இயங்கும் ராசி, சுக்கிரன் பெண்களுக்கு உரியவர் மற்றும் கலைகளுக்கான கிரகம், சனி இரும்பு மற்றும் நீசத் தொழில்களைப் செய்ய வைப்பவர் எனும் நிலையில் இவையெல்லாம் கலந்த தொழில் அமைப்புகள் ஜாதகருக்கு இருக்கும்.
மேலும் தனாதிபதி தனது வீட்டிற்கு பனிரெண்டில் (லக்னத்தில்) மறைந்து பத்தாமிடத்தை வலுப் பெற்றுப் பார்க்கிறார் எனும் நிலையில் பேச்சினால் வருமானம் வரக் கூடிய நிலை ஜாதகருக்கு இருக்கலாம்.
அடுத்து சனி பத்தாமிடத்தில் உச்சம் பெற்று சச யோகம் தரும் நிலையைப் பார்க்கையில், லக்னாதிபதி பத்தாமிடத்தில் உச்சம் பெறுவது என்பது சனி, செவ்வாய் ஆகிய இரண்டு பாபக் கிரகங்களுக்கு மட்டுமேயான தனிப்பட்ட ஒரு நிலையாகும். பாபக் கிரகங்கள் லக்னாதிபதியாகவே வந்தாலும் ஆட்சி, உச்சம் போன்ற ஸ்தான பலத்தை நேரிடையாகப் பெறுவது நல்ல அமைப்பு அல்ல. பாபக் கிரகங்கள் வலிமை பெற்றால் அதனுடைய பாபக் காரத்துவங்களையே வலுவாகச் செய்யும் என்பதே சூட்சுமம்.
இந்த இடத்தில் உச்சமாகும் சனி, சுபர்களின் சம்பந்தத்தையோ, சூட்சும வலுவையோ பெறவில்லை எனில் தனது தசையில் நற்பலன்களை அளிக்க மாட்டார். மகர லக்னத்தவர்களுக்கு தனித்த உச்ச சனி தசையில் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட, அல்லது இரும்பு போன்ற சனியின் காரகத்துவங்கள் சம்பந்தப்பட்ட சாதாரண தொழில் அல்லது வேலை அமைப்புகளே இருக்கும்.
லக்னாதிபதி பத்தாமிடத்தில் உச்ச பலம் பெற்று தசை நடத்துகிறார் என்றவுடன் ஜாதகர் மாடமாளிகை கட்டி கோடீசுவரனாவார், குபேரனுக்கு இவர்தான் அண்ணன் என்றெல்லாம் சொல்லி விட முடியாது.
சூட்சும வலுப் பெறாத சனி ஜாதகரை கீழ்நிலைப் பணியாளர் ஆக்குவார். பியூன், அட்டெண்டர், மெக்கானிக், கழிவு நீர் அகற்றுதல், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற வேலைகள்தான் இருக்கும். வேறு சில நிலைகளில் குரு தசையில் இருந்த நல்ல தொழில், வேலை அமைப்புகள் கூட சனி தசையில் இருக்காது.
மகர லக்னத்திற்கு உச்சம் பெற்ற சனி தசையில் சைக்கிளில் பெட்டியைக் கட்டிக் கொண்டு பழைய இரும்பு, வேஸ்ட் பேப்பர் வாங்கிக் கொண்டு தொழில் நடத்தும் ஜாதகர்களை என்னால் காட்ட முடியும். இன்னும் சொல்லப் போனால் உச்ச சனி ஜாதகரை உடல் ஊனம் ஆக்கக் கூடும். பெரும்பாலும் நடக்க இயலாதவர் ஆக்குவார் சனி. அல்லது சனிதசை வந்தவுடன் வேலை, தொழில் அமைப்புகளில் தொந்தரவுகளைச் செய்வார்.
சில நிலைகளில் ஊராட்சி மன்ற பதவி அமைப்புகளை சனி தருவார். ஊராட்சி மன்றம் என்பது ஊரைச் சுத்தப்படுத்துதல், சாக்கடை அமைத்து தருதல், கழிப்பிடங்கள் கட்டுதல், தார் எனும் கறுப்பு நிற பொருளைக் கொண்டு சாலை அமைத்ததாக சொல்லி முறைகேடு செய்து பணம் சம்பாதித்தல் போன்றவைகளை உள்ளடக்கியது என்பதால் இது போன்றவைகளுக்கும் சனியே காரணம்.
இந்த இடத்தில் வலுப் பெறும் சனி மகரத்தின் பாதகாதிபதியான செவ்வாய், மற்றும் ராகு, விரயாதிபதியான குருவின் சாரங்களில்தான் இருக்க முடியும். இதில் ராகு மட்டுமே சனியின் நண்பர் என்பதால், ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் சனி தசை ஓரளவு பலனளிக்கும்.
அடுத்து பார்வை பலன்களை எடுத்துக் கொள்வோமேயானால் சனி இங்கிருந்து தனது 3, 7, 10 ம் பார்வைகளால் 12, 4, 7 மிடங்களை பார்ப்பார்.
ஒரு கிரகம் லக்னாதிபதியாகி, கேந்திரத்தில் பலம் பெற்றால் அந்த கிரகம் பார்க்கும் இடங்கள் பலப்படும் என்பது பொது விதி. ஆயினும் இங்கே லக்னாதிபதி சனி எனும் நிலையில் அவர் பார்வை கெட்ட பலன்களையும் தரும்.
பனிரெண்டாமிடம் எனும் விரைய ஸ்தானமான தனுசை சனி பார்ப்பது நல்ல நிலை. இதனால் பனிரெண்டாம் பாவத்தின் கெட்ட பலன்கள் இருக்காது. பத்தில் சனி சுபத்துவம் பெற்றால் தலைமைப் பதவியை தருவார். மேலும் பயணம் தொடர்பான தொழில்களில் ஜாதகருக்கு தொடர்பு ஏற்படச் செய்வார்.
அடுத்து சனியின் நான்காமிடப் பார்வையால் லக்னாதிபதியின் பார்வை எனும் நிலையையும் மீறி நான்காமிட ஆதிபத்தியங்களான வீடு, வாகனம், கல்வி, அம்மா தன் சுகம் போன்ற அனைத்தும் நன்மைகளைத் தராது. சனி தசையும் நடக்குமானால் இவை அனைத்திலும் பிரச்னைகள் வரும்.
உச்ச சனி ஏழாமிடமான கடகத்தைப் பார்க்கும் நிலையில் தாமத திருமணம், எதிலும் ஒத்துப் போகாத வாழ்க்கைத் துணை அல்லது காதல், கலப்புத் திருமணம், உடல் ஊனமான துணைவர், திருமணத்திற்குப் பின்பும் மணவாழ்வில் பிடிப்பற்ற தன்மை, மணவாழ்வில் கசப்புகள் போன்ற நிலைகளை சூட்சும வலுப் பெறாமல் உச்சம் மட்டும் பெறும் சனி தருவார்.
கும்பம் :
கும்பத்திற்கு சனி லக்னத்திற்கும், பனிரெண்டாமிடத்திற்கும் அதிபதியாகி, லக்ன விரயாதிபத்தியம் பெற்று கும்பத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண நிலை அடைந்து சச யோக பலன்களைத் தருவார்.
லக்னாதிபதி எனும் போது கூட இந்த இடத்தில் சனி பலம் பெறுவது சரியான நிலை அல்ல. மகரத்திற்குச் சொன்னதைப் போலவே லக்னத்தில் வலுப் பெறும் சனி ஜாதகரை பிடிவாதக்காரராகவும், சுயநலம் உடையவராகவும் ஆக்குவார். பொறாமைக் குணமும் இருக்கும். சூட்சும வலுப் பெறாத சனி ஜாதகரை உயரம் குறைந்தவராகவும், மந்தமானவராகவும், எதிலும் அதிக நிதானமானவராகவும் ஆக்கக் கூடும்.
கும்ப லக்னமாகி சனி நேர்வலுப் பெற்றால் ஜாதகரிடம் குறுகிய மனப்பான்மை இருக்கும். எதிலும் அழுத்தமானவராகவும் மனதில் எண்ணுவதை பிறருக்கு வெளிப்படுத்தாமல் உள்ளவராகவும் இருப்பார். கடின மனமும், தந்திர குணமும் தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். எவரையுமே நம்பாத குணத்தை இங்கு வலுப் பெறும் சனி தருவார். சனி சூட்சும வலுவோ, சுபர் பார்வையோ பெற்றால் மட்டுமே இந்த குணங்கள் மாறும்.
சார அடிப்படையில் பார்த்தால் செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தை விட, சனியின் நண்பர் ராகுவின் நட்சத்திரத்திலோ, அல்லது குருவின் நட்சத்திரமான பூரட்டாதியிலோ சனி இருப்பது அவரது கடுமையைக் குறைக்கும்.
பார்வை பலன்கள் என்று எடுத்துக் கொள்வோமேயானால் இங்கிருந்து சனி 3, 7 10 மிடங்களைப் பார்ப்பார்.
கும்பத்திற்கு சனி விரைய வீடான பனிரெண்டாமிடத்திற்கும் சொந்தமானவர் என்பதால் அவருடைய பார்வை நல்லது செய்யும் என்று சொல்ல முடியாது. அவரது பார்வை மூன்றாமிடத்தில் விழும் நிலையில் ஜாதகரின் இளைய சகோதரத்தால் நன்மைகள் இல்லாத நிலை ஏற்படும். சனி தசையில் இளைய சகோதர உறவு பாதிக்கப்படலாம். செவ்வாய் வலுவிழந்தால் சகோதர விரயம் இருக்கும்.
ஏழாமிடமான சிம்மத்தை சனி பார்ப்பதால் மண வாழ்வில் நெருடல்கள் இருக்கும். ஒருவருக்காகவே, பிறந்த மற்றொருவர் என்பது போன்ற இணை பிரியாத, புரிந்து கொண்ட வாழ்க்கைத் துணை அமைவது கடினம். தாமத திருமணம் அல்லது காதல் கலப்புத் திருமணம் இருக்கும்.
காதல் வரை இனிப்பாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கை, கல்யாணத்திற்குப் பிறகு கசப்பதும் இந்த இடத்தை சனி வலுப் பெற்றுப் பார்ப்பதால்தான். கணவனோ மனைவியோ நோயாளி ஆவதும், உடல் ஊனம் அடைவதும் இந்த இடத்திற்கு கிடைக்கும் சனி பார்வையால்தான்.
பொதுவாகவே கும்ப லக்னத்தவர்களுக்கு புரிந்து கொள்ளும் வாழ்க்கைத் துணை அமைவது அபூர்வம். ஜோதிட விதிப்படி ஒரு லக்னத்தின் அதிபதிக்கு அதன் ஏழாமதிபதி எதிர்த்தன்மை உடையவராகவே இருப்பார் என்றாலும், கும்ப சனியின் ஏழுக்குடையவரான சூரியனுக்கும், சனிக்கும் உள்ள உறவு ஜென்ம விரோதி எனும் வகை என்பதால் கும்பத்திற்கு அனுசரணையான வாழ்க்கைத் துணை அமைவது கடினம்தான்.
பத்தாமிடமான விருச்சிகத்தை சனி பார்ப்பது தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நிரந்தரமில்லாத அமைப்பைத் தரும். ஜாதகருக்கு நிம்மதியான மற்றும் திருப்தியான வேலை வாய்ப்போ, தொழிலோ இருக்காது. கும்ப லக்னத்திற்கு அவர் விரயாதிபதியும் ஆகும் நிலையில் அவரின் பார்வை தொழில் ஸ்தானத்தை பலவீனப் படுத்தவே செய்யும்.
இத்துடன் பஞ்சமஹா புருஷ யோகங்கள் பற்றிய விளக்கங்களை நிறைவு செய்கிறேன்.
ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இந்த ஆய்வுக் கட்டுரைகளில் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படும், தர்ம கர்மாதிபதி யோகமும், பஞ்ச பூதக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோர் லக்ன கேந்திரங்களில் பலம் பெற்றால் உருவாகும் பஞ்ச மகா புருஷ யோகங்களும் விவரிக்கப் பட்டது.
ஜோதிடத்தில் ஞானிகளால் குறிப்பிடப்படும் யோகம் என்பதை ‘அதிர்ஷ்டம்’ என பெரும்பாலோர் தவறாகப் புரிந்து கொண்டுள்ள நிலையில் யோகம் என்றால் சேர்க்கை அல்லது ஒருவித அமைப்பு எனவும், செவ்வாய் தரும் ருசக யோகமும், சனியால் பெறப்படும் சச யோகமும் அதிர்ஷ்டங்களைத் தராது என்பதும் இங்கே விளக்கப் பட்டது.
கிரகங்கள் தரும் அதிர்ஷ்டமில்லா நிலையைக் கூட நமது மூல நூல்கள் ‘தரித்திர யோகம்’ என்றுதான் சொல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும், கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக இந்த யோகங்களைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதிய நான், என்னிடம் வரும் பலரும் என் ஜாதகத்தில் இருக்கும் எந்த ராஜயோகமும் வேலை செய்யவில்லையே ஏன்? எனக் குறைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகளை ஒரு உண்மையான யோக ஜாதகத்துடன் ஒப்பிட்டு “ராஜ யோகம்” என்றால் என்ன என்பதை விளக்கி இந்தக் கட்டுரைகளை நிறைவு செய்வதே பொருத்தமாக இருக்கும்.
அதே நேரத்தில் இதுவரை விளக்கிச் சொல்லப்பட்ட யோகங்கள் ஒரு மனிதனை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் முதன்மை யோகங்கள்தானே தவிர ராஜ யோகங்கள் அல்ல. அதாவது பஞ்சமகா புருஷ யோகம், தர்ம கர்மாதிபதி யோகம் போன்றவைகள் ஒரு ஜாதகத்தில் ராஜ யோகங்கள் இருந்தால் அவற்றிற்கு துணை நிற்கும் அமைப்புக்கள்தான். இவைகள் ஒருபோதும் ராஜ யோகங்கள் ஆகாது.
செவ்வாய் வலுப் பெற்றால் அவன் காவலர்களின் தலைவன். சனி வலுப் பெற்றால் அவன் கீழ்நிலைப் பணியாளர்களின் தலைவன். அதாவது மகா புருஷன்தான். அரசன் கிடையாது என்பதே அடிப்படை நுணுக்கம்.
நமது ஒப்புயர்வற்ற மூல நூல்களில் ஞானிகள் எந்த ஒரு வார்த்தையையும் அலங்காரத்திற்காகவோ, தேவையில்லாமலோ, மிகுதியாகவோ சொன்னதே இல்லை. நாம்தான் அவற்றை தவறாகப் புரிந்து கொண்டு திசை மாறுகிறோம்.
அனுபவம் அதிகமாக அதிகமாகத்தான் சூட்சுமங்கள் நமக்குப் புரிய ஆரம்பிக்கின்றன. நீசமான ஒரு கிரகம் முறையான நீச பங்கம் அடைவதைக் கூட நீசபங்க ராஜயோகம் என்று தெளிவாகக் குறிப்பிட்ட தெய்வாம்சம் பொருந்திய நமது ரிஷிகள் தர்ம கர்மாதிபதி ‘ராஜ’யோகம், பஞ்சமஹா புருஷ ‘ராஜ’யோகம் என்று சொல்லாமல் வெறும் யோகத்தோடு நிறுத்திக் கொண்டார்கள் என்பதை உணரும் போது “ராஜயோகங்கள்” என்று தனித்துக் குறிப்பிட்டுச் சொல்லும் அமைப்புகளின் மகத்துவம் நமக்குப் புரியும்.
எனவே ஜாதகத்தில் முறையான “ராஜயோகம்” இருந்து அவற்றிற்கு துணை நிற்கும் பஞ்சமகா புருஷ யோகங்களும், தர்ம கர்மாதிபதி யோகமும் அமைந்து வாழ்வில் உச்சத்திற்கு சென்ற ஒரு ஜாதகத்தை அடுத்த அத்தியாயத்தில் விளக்குகிறேன்.
அந்த உதாரண ஜாதகத்தைக் கொண்டவர் நம் அனைவருக்கும் தெரிந்தவராகவும், இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவராகவும் இருந்தால் இன்னும் சிறப்பானது. அது போன்ற ஒரு மகத்தான ராஜயோக ஜாதகத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்த்து யோகங்களைப் பற்றிய மிச்சம் மீதி சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.
வாருங்கள்..நிறைவுப் பகுதிக்குச் செல்வோம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.