adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
இறந்த மகனுக்கு என்ன செய்ய வேண்டும்?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

எம்.மகேஸ்வரி, கோவை.

கேள்வி:

கோடிக்கணக்கான மக்களின் துன்பங்களுக்கு வடிகாலாகவும், வழிகாட்டியாகவும் திகழும் தாங்கள் இந்த அபலைப் பெண்ணிற்கு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

வேறு ஜாதியில் பிறந்த என்னை என் கணவர் எனது தாய், தந்தையிடம் மன்றாடி என்னைத்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத 14 வயதில் ஊர் கூடி திருமணம் செய்து கொண்டார். தெய்வத்தை மட்டுமே நம்பியும், கஷ்ட நேரங்களில் உதவியவர்களை கடவுளாக கருதியும், உழைப்பு, உண்மை என்று சேர்ந்து உழைத்து வாழ்கிறோம்.


எனக்கு 2 பிள்ளைகள். எனக்கே என்னை பிடித்தது என் பிள்ளைகளால்தான். பெற்றால் இப்படித்தான் பிள்ளைகளை பெற வேண்டும். வாழ்ந்தால் இவர்களைப் போல் வாழ வேண்டும் என்று காதுபடவே புகழ்வார்கள். தெய்வமே எனக்கு பிள்ளையாக பிறந்தான் என்று நினைத்திருந்தேன். கஷ்டங்களைச் சொல்ல கோவிலுக்கு போகாத நான், இப்படிப்பட்ட பிள்ளைகளை கொடுத்ததற்காக நன்றி உரைக்க மட்டும் கோவிலுக்கு செல்வேன்.

வாழ்க்கை சந்தோஷமாக போய் கொண்டிருந்த நிலையில் 7.3.2016 அன்று காலை எனது 18 வயது மகன் மயங்கி விழுந்ததில், டாக்டர்கள் அவனுக்கு ரத்தப் புற்று நோய் என்று அறிவிக்க, எழுபதே நாளில் 17.5.2016 அன்று எனது மகன் என்ற தெய்வம் வைகுண்டம் சென்று விட்டது.

மரணத் தருவாயில் என் மகனிடம் சத்திய வாக்கு ஒன்று பெற்றேன். எனக்கு என்றும் நீதான் இனிமேல் கடவுள். நீ நினைத்தபடி நம் குடும்பத்தை வழிநடத்த நீதான் துணை இருக்க வேண்டும். எங்கள் கர்மாவால் உனக்கு இந்த நிலை என்றால் அதற்காக மன்னித்துக் கொள் என்றோம்.

என்னிடம் விடைபெற்றுக் கொண்டு சுயநினைவுடன் என் முகம் பார்த்து கொண்டே, என்னையும், என் கணவரின் கைகளையும் பற்றிக் கொண்டே, அவனுக்கு நாங்கள் கொடுத்த நீரை பருகிக் கொண்டே அவன் உயிர் பிரிந்தது.

குடும்பம் கண்ணீரில் மிதக்கிறது. வாழவும் மனதில்லை. கன்னிப் பெண்ணை வைத்துள்ள எங்களால் சாகவும் முடியவில்லை. பெற்றவுடன் அவனுக்கு சர்க்கரை தண்ணீர் விட்டவள், கடைசி நீரையும் விட்டது எந்தக் கர்மாவால் நடந்தது? ஏன் இப்படி எனக்கு நடந்தது? மலை போன்ற சந்தோஷ வாழ்வு தரைமட்டமானது ஏன்?

குடும்பத்துடன் உயிர் விடுவது என முடிவெடுத்த நாங்கள் இன்றுவரை உயிருடன் வாழ்வது ஏன்? பெற்ற மனம் ஒவ்வொரு கணமும் அவனைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. மிகவும் தைரியமான நான் தற்போது சின்னச் சின்ன சம்பவத்திற்கெல்லாம் ரொம்ப பயப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு தாலிக்கொடி முதற்கொண்டு விற்று விட்டோம். ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு மட்டும்தான் மீதம் இருக்கிறது.

மகளின் எதிர்காலம் எப்படி அமையும்? எங்களின் ஆயுள், ஆரோக்கியம் எதுவரை? எங்கள் மூவருக்கும் ஒரே ராசியாக இருப்பதால்தான் இப்படி நடந்ததா? மகனுக்காக இனி நான் என்ன செய்ய வேண்டும்? தெளிவில்லாத இந்த மகளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து தெளிவான விளக்கம் தந்து ஆற்றித் தேற்றுவீர்கள் என்று நம்பி பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

பதில்:

பாக்கியங்களில் சிறந்த பாக்கியம் புத்திர பாக்கியம், சோகங்களில் பெரிய சோகம் புத்திர சோகம் என்பதை ஸ்ரீராமனைப் பெற்ற தசரதரின் வாழ்க்கை நிரூபிக்கும் அம்மா... நடப்பவை அனைத்தும் கர்மா என்று நீயே உன் அருமைச் செல்வனிடம் சொல்லி அழுது விட்ட பிறகு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

சருகுகள் உதிராமல் இருக்கும் நிலையில், பச்சை இலை உதிருவதும், பட்டுப் போன மரம் மறுபடி துளிர்ப்பதும் அவனின் விளையாட்டுத்தான். வைகுண்ட நாதனின் திருப்பாதங்களை தரிசிக்கும் பாக்கியம் நமக்கு இன்னும் தள்ளிக் கிடைக்கும் என்ற நிலையில் உன் மகனுக்கு சீக்கிரம் கிடைத்து விட்டது. முந்திக் கொண்டு விட்டான். இனி என்றும் அவன்தான் உனக்கும் உன் குடும்பத்திற்கும் தெய்வம். எந்த ஒரு சூழ்நிலையிலும் உன் குடும்பத்தை அவன் வழி நடத்துவான். கவலைப் படாதே.

எங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறாய், இருந்ததிலேயே உன்னதமானதை இழந்து விட்டாய், இனியும் போவதற்கு என்ன இருக்கிறது உன்னிடம்? ஒன்றுமேயில்லை. பரம்பொருள் உனக்கு கொடுத்திருக்கும் மிகுதி நாட்களை நிம்மதியுடன் கழிப்பதற்கு உன் மகனே அருள் புரிவான். உன் வாழ்வில் இதை விட ஒரு கஷ்டம் இனி வரப் போவதே இல்லை. கவலைப் படாதே.

குடும்பத்தில் அனைவருக்கும் ஒரே ராசி என்றால் என்ன பலன் என்ற கேள்விக்கு “சந்தோசம் என்றால் திகட்டத் திகட்ட கிடைக்கும். கஷ்டம் என்றாலும் தாள முடியாமல் வரும்” என்று ஏற்கனவே பதில் தந்திருக்கிறேன். உன் கடிதமும் அதை நிரூபிக்கிறது. உனக்கும், உன் கணவருக்கும், உன் மகளுக்கும் மகர ராசி என்பதால் இன்னும் மூன்று வருடங்களுக்கு உன் குழந்தையை இழந்த மன அழுத்தம் மூவருக்கும் இருக்கும். அதன் பிறகு படிப்படியாகக் குறையும். கவலைப் படாதே.

கணவரின் ஜாதகத்திலும், உன் ஜாதகத்திலும் புத்திர சோக அமைப்பு இருப்பதால் உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. அதே நேரத்தில் உங்கள் மூவருக்கும் தீர்க்காயுள் அமைப்பு இருப்பதால் அவனை நினைத்துக் கொண்டாவது நீங்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும். எப்படி உன் மகனின் முடிவு உன் கையில் இல்லையோ, அதேபோல உன் முடிவும் உன் கையில் இல்லை. அனைத்தும் அவன் தயவில் இனி நன்றாகவே நடக்கும். கவலைப் படாதே.

மகளின் ஜாதகப்படி அவளின் கல்வி, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்தும் நன்றாகவே உள்ளது. அவளின் எதிர்காலம் நல்ல கணவன், குழந்தைகளுடன் செல்வச் செழிப்புடன் சிறப்பாகவே இருக்கும். உன் ஆறுதலுக்காகச் சொல்லவில்லை. அவள் ஜாதகப்படியே சொல்கிறேன். மகர ராசி என்பதால் இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவள் வாழ்க்கை அனைத்திலும் செட்டில் ஆகிவிடும். கவலைப்படாதே.

தந்தை ஸ்தானத்தில் என்னை நிறுத்தி, மகனை நினைத்து பக்கம் பக்கமாக உருகி என் கண்களை கசியச் செய்த தாயே... ஒழிக்க ஒழியாத உறவு என்று நம்மாழ்வார் சொல்லும் உலகின் உன்னத தாய்மையின் உயர் வடிவே... உலகில் உள்ள அனைவருக்கும் தாயாகும் தகுதி கொண்டவள் நீ. உன் திருப்பாதங்களுக்கு வணக்கம். மகனுக்கு இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறாய்.. நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இன்னும் சில ஆண்டுகளில் உன் மகனே உனக்குப் பேரன் என்ற உறவில் உன் மடியில் தவழ்வான், கவலைப்படாதே.

( 9-5-2017 மாலைமலரில் வெளியான   குருஜி அவர்களின் பதில் )

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.