adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
துலாம், விருச்சிகத்திற்கு சனி தரும் சச யோகம்…(B-025)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

துலாம் :

துலாம் லக்னத்தின் ராஜ யோகாதிபதியான சனி, சுக்கிரனின் இன்னொரு லக்னமான ரிஷபத்தைப் போல இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாக ஆகாமல் முழு யோகராக அமைந்து, லக்னத்தில் உச்சம் பெற்றும்,   நான்காமிடத்தில் ஆட்சி பெற்றும் சச யோகம் தரும் நிலையை அடைவார்.

சூட்சும வலுவோ, சுபத்துவமோ பெறாமல் லக்னத்தில் தனித்து சனி உச்சம் பெறும் நிலையில் ஜாதகர் உயரம் குறைந்தவராக இருப்பார். எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களோடு ஒத்துப் போகாதவராகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களோடு முரண்படுபவராகவும், விஷய ஞானம் இல்லாதவராகவும் சுபத்துவமின்றி வலிமை பெறும் சனி ஜாதகரை மாற்றுவார்.


சனி வலிமை பெற்று லக்னத்தோடு தொடர்பு கொள்ளப் பெற்றவர்கள் சுயநலக்காரர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். நம்பிக்கையானவர்களாக இருப்பதும் கடினம். தான் மனதில் என்ன நினைக்கிறோம் என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாதவர்களாகவும், வேஷம் போடுபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். 

இந்த லக்னத்தின் ராஜ யோகாதிபதியான சனி உச்சம் பெறும் நிலையில் நன்மைகளே செய்ய மாட்டாரா என்று கேட்பீர்களேயானால் ஆமாம் என்றுதான் சொல்லுவேன். அப்படியானால் துலாமுக்கு ராஜயோகம் எப்படிக் கிடைக்கும்? என்ற கேள்வி வருமாயின் சனி பெறும் சுபத்துவமோ அல்லது சூட்சும வலுவோதான் அதற்கு பதில் சொல்லும்.  


பரம்பொருள் தரும் விநோத அமைப்புகளில் இதுவும் ஒன்று. சனி என்பவர் ஒரு முழுமையான பாபக் கிரகம். எந்த லக்னமாயிருந்தாலும் அவர் பாபக் கிரகம் தான். துலாம் என்பதால் மட்டும் அவருடைய காரகத்துவங்கள் சுபமாக மாறி விடப் போவதில்லை.

துலாத்திற்கு சனி உச்சமாகும் நிலையில் சூட்சும வலுவோ அல்லது சுபர் பார்வையோ பெறும் நிலையில் மட்டும்தான் நல்ல பலன்களைத் தருவார். இவைகள் இல்லாமல் அவர் உச்சம் மட்டும் பெறுவது அவரது தசையில் நன்மைகளைத் தராது.

இன்னொரு பலனாக உச்சம் பெற்ற சனி இங்கே சுபரான சுக்கிரனோடு இருந்தால் ஜாதகர் அதீதமான காம ஈடுபாட்டோடும், ஸ்திரீலோலனாகவும் இருக்கக் கூடும். பெண்களுக்கு இந்த அமைப்பு சற்றுச் சிக்கலான வேறுவித நிலையை உருவாக்கக் கூடும்.

அதேநேரத்தில் இங்கே சனி தனித்திருந்து சூட்சும வலுப் பெறாத நிலையில் ஜாதகருக்கு பெண் சுகமே கிடைக்காமல் போகும் ஒரு வினோத நிலையும் உருவாகும். அது தீவிரமான ஆன்மிக ஈடுபாடு அல்லது துறவியாகும் நிலையாலும் இருக்கலாம். இதற்கு குருவின் நிலையையும் கவனிக்க வேண்டும்.

பார்வை நிலையை எடுத்துக் கொண்டால் லக்னத்திலிருந்து சனி தன் பார்வைகளால் 3, 7, 10 மிடங்களைப் பார்க்கும் நிலையில் தனது தசையில் இளைய சகோதரர்களிடம் கருத்து வேற்றுமையையும் பிரிவினையும் தருவார்.

செவ்வாயும் குருவும் இருக்கும் நிலையைப் பொருத்து சகோதர விரயம் கூட ஏற்படக் கூடும். மூன்றாமிடம் சகாய ஸ்தானம் என்பதால் இதைப் பார்க்கும் சனியால் பிறரிடம் இருந்து உதவிகள் கிடைக்காத நிலையும் ஜாதகருக்கு மன சஞ்சலங்களும் இருக்கும். லக்னத்திலிருக்கும் சனி ஏழாமிடத்தைப் பார்ப்பதால் தாமத திருமணம் மற்றும் தாம்பத்திய சுகம் கிடைக்காத ஒரு நிலையையும் உண்டு பண்ணுவார். பொருத்தமற்ற வாழ்க்கைத் துணையோ, காதல் கலப்புத் திருமணமோ நடக்கும்.

வலுப் பெற்ற சனியின் பத்தாமிடப் பார்வையால் ஜாதகருக்கு நிரந்தர வேலையோ தொழில் அமைப்புகளோ அமைவது கடினம். ஜீவனாதிபதி சந்திரனும் வலிமை இழந்திருந்தால் ஜாதகரால் எதிலுமே நிலையாக இருக்க முடியாமல் அடிக்கடி தொழில் அமைப்புக்களை மாற்றிக் கொண்டே இருப்பார்.

துலாம் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று சச யோக நிலையில் இருக்கும் சனி  சூட்சும வலுப் பெறாமல் வெறும் ஆட்சி பலத்தை மட்டுமே அடைந்திருக்கும் நிலையில் நான்காமிடத்தின் முக்கிய செயல்பாடுகளான வீடு, வாகனம், தன் சுகம், கல்வி, அம்மா ஆகியவற்றில் கெடுதல்களைச் செய்வார்.

மகரத்தில் இருக்கும் சனி சூரிய, சந்திர, செவ்வாயின் நட்சத்திரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் தான் இருக்க முடியும். இவர்கள் மூவரும் லக்னாதிபதி சுக்கிரனுக்கு ஆகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் துலாத்திற்கு சந்திரன் பத்தாமிடத்திற்கு உடையவர் என்பதால் சனி திருவோணம் நட்சத்திரத்தில் இருப்பது சிறிது கெடுபலன்களைக் குறைக்கும்.

இங்கிருந்து 6, 10 ம் வீடுகளையும், லக்னத்தையும் சனி பார்க்கும் நிலையை கவனித்தோமானால் ஆறாமிடத்தை அவர் பார்ப்பது நன்மையைத் தரும். குருவும் நன்மை தரும் அமைப்பில் இருந்தால், நோய், கடன், எதிரிகளற்ற வாழ்வு அமையும். கடன் வாங்குவதில் விருப்பம் அற்றவராகவும் கடன் வாங்கத் தேவையில்லாதவராகவும் ஜாதகர் இருப்பார். ஆரோக்கிய வாழ்வும் உண்டு.

சனியின் பத்தாமிடப் பார்வையால் ஜாதகருக்கு நிலையில்லாத தொழில் அமைப்பு இருக்கும். சந்திரனும் வலுவிழந்தால் நடைபெறும் தசைகளையொட்டி தொழில் மாறிக் கொண்டே இருக்கும். மாதமானால் இவ்வளவு வருமானம் என்ற ஒரு நிலையான வருமானம் ஜாதகருக்கு இருக்காது. ஒரு மாதம் வரும்படி அடுத்த மாதம் வெறும்படி என்ற நிலை இருக்கும்.

லக்னத்தை சனி வலுப் பெற்றுப் பார்க்கும் நிலையில் ஜாதகரிடம் சந்தேக குணம் இருக்கும். வேறு சுபர்கள் யாரும் லக்னத்தைப் பார்க்கவில்லை எனில் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்ற மனநிலையில் நல்ல வாய்ப்புக்களை தவற விடுபவராக இருப்பார். பிடிவாதம், குறுகிய மனப்பான்மை, மந்தமான செயல்பாடு, தாழ்வு மனப்பான்மை போன்றவைகள் ஜாதகரிடம் இருக்கும்.

பொதுவாக எந்த ஒரு லக்னத்திற்குமே சனி நான்காமிடத்தில் வலுப் பெறுவது நல்லதல்ல. அந்த இடத்தின் முக்கிய நிலைகளான அம்மா, சொந்த வீடு, கல்வி, போன்றவைகளை அவர் பாதிப்பது ஒரு பக்கம் என்றாலும் இந்த இடத்தில் அவரை நன்மை செய்ய வைக்கும் குருவின் பார்வை அவருக்கு முழுமையாக கிடைக்க முடியாது என்பதுதான் நிஜம்.

லக்னத்திற்கு நான்கில் இருக்கும் சனியை அவருக்கு திரிகோணத்தில் இருந்து குரு பார்க்க வேண்டுமானால், குரு எட்டு, பனிரெண்டாமிடங்களில் மறைந்துதான் பார்க்க முடியும். மறைவிடங்களில் இருக்கும் குருவின் பார்வைக்கு முழு பலன் கிடைக்காது என்பதால் சனி வேறு வகைகளில்தான் சூட்சும வலு அடைய வேண்டியிருக்கும்.

விருச்சிகம் :

விருச்சிக லக்னத்திற்கு நான்காமிடமான கும்பத்தில் ஆட்சி பலத்தையும், மூலத் திரிகோண நிலையையும் பெற்று சனி சச யோகம் தரும் அமைப்பைப் பெறுவார். மேலே துலாம் லக்னத்திற்கு சனியின் நான்காமிட பலன்களாக சொன்னவைகள் அனைத்தும் விருச்சிகத்திற்கும் பொருந்தும்.

ஆனால் விருச்சிக நாதன் செவ்வாய்க்கு சனி ஆகாதவர் என்பதாலும் கும்பத்தில் அவர் மூலத் திரிகோண பலமும் அடைவார் என்பதாலும் கெடுபலன்கள் அதிகமாகத்தான் இருக்கும். சனி சுபத்துவ, சூட்சும வலுப் பெற்றால் மட்டுமே கெடுபலன்கள் இருக்காது.

சனி வலுப் பெற்று நான்காமிடத்தில் அமரும் நிலையில் வீடு, வாகனம், கல்வி, தாயார் வழிகளில் குறைகளைச் செய்வார். உபசய ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு சனி அதிபதியாகி, அந்த இடத்திற்கு இரண்டாமிடத்தில் வலுப் பெறுவதால் மூன்றின் ஆதிபத்தியங்களான தைரியம், எழுத்து, புகழ், இசைத்திறன், இளைய சகோதரம், விடாமுயற்சி போன்றவை வலுப் பெறும்.

இந்த இடத்தில் இருக்கும் சனி, செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்தால் சனி தசையில் ஆறாமிடத்தின் அசுப பலனே அதிகம் நடக்கும். ராகு நன்மை தரும் அமைப்பில் இருந்தால் மட்டுமே ராகுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பது ஓரளவு பலன் அளிக்கும். பூரட்டாதியில் சனி இருந்தால் கெட்ட பலன்கள் குறையும்.

சனியின் பார்வை பலன்களை எடுத்துக் கொண்டால் இங்கிருந்து சனி ஆறு, பத்து மற்றும் லக்னத்தை பார்வையிடுவார். எப்போதுமே பாபக் கிரகங்கள் ஆறாமிடத்தைப் பார்வையிடுவதும், அந்த இடத்தில் இருப்பதும் நல்ல நிலை என்பதால் சனி இந்த இடத்தைப் பார்ப்பதால் ஆறாமிடம் கெட்டு ஜாதகருக்கு கடன் நோய் எதிர்ப்புகள் போன்ற பிரச்னைகள் இருக்காது.

அதோடு தன் மேஷ ராசியை மூலத்திரிகோண இடமாகக் கொண்ட செவ்வாயும், லக்னாதிபதி என்றாலும் நேர்முக வலுவிழந்து சூட்சும வலுப் பெற்றிருப்பது நல்லது.

கும்பத்திலிருந்து சிம்மத்தை சனி பார்க்கும் நிலை எந்த லக்னத்துக்குமே சரியானது அல்ல. பொதுவாக அனைத்து லக்னத்திற்கும் சிம்ம ராசி தொழில் அமைப்பிற்கு காரணமாவது என்பதால் எந்த ஜாதகத்திலும் சிம்மத்தை சனி பார்ப்பது நல்லதல்ல. நமது மூலநூல்கள் சிம்மத்தை சனி வலுப் பெற்றுப் பார்க்கக் கூடாது என்று சொல்வதற்கு மறைமுக அர்த்தம் என்னவெனில் கும்பத்தில் சனி இருக்கக் கூடாது என்பதுதான்.

மேலும் தந்தைக்கு காரகனான சூரியனையும், அவனுடைய வீடான சிம்மத்தையும் சனி பார்ப்பது ஜாதகருக்கு தந்தையின் ஆதரவு கிடைக்காத நிலையையும், சரியில்லாத தந்தையையும் உருவாக்கும்.

ஜீவன ஸ்தானத்தை சனி பார்க்கும் நிலையில் நிலையான வேலையோ நிரந்தரமான தொழில் அமைப்போ ஜாதகருக்கு இருப்பது கடினம். இந்த இடத்தைப் பார்க்கும் சனியால் அரசு வேலை வாய்ப்பு குறையும். கடினமான இனங்களில் பணிபுரியும் நிலையையோ, கீழ்நிலை பணி வாய்ப்பையோ இங்கிருக்கும் சனி உருவாக்குவார்.

லக்னத்தை சனி பார்ப்பதால் ஜாதகருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். ஜாதகரின் முக்கிய குணமாக சுயநலம், பிடிவாதம் இருக்கும். குறுகிய மனப்பான்மையும், சனியால் வரும். சந்தேக குணமும் உடன் பிறந்திருக்கும்.

துலாமிற்கு குரு பார்வை கோடி நன்மையா?

ஒரு முக்கியமான அமைப்பையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். என்னதான் சனி ஒரு அசுபக் கிரகம் என்றாலும், அவர் பார்வை கெடுதல்தான் என்றாலும் சில நிலைகளில் சுபத்துவமும், சூட்சும வலுவும் சனி பெற்றிருக்கும் நிலையில் துலாம் லக்னத்திற்கு,  அவர் பூரண யோகாதிபதி என்பதால் குருவின் பார்வையை விட மேலான ஒரு நன்மையை சனி பார்வை அளிக்கும்.

உண்மையில் குருவின் பார்வை கோடி நன்மை என்பது துலாம் லக்னத்திற்கு முழுக்கப் பொருந்தாது. குரு இந்த லக்னத்தின் கொடிய பாவி என்பதால் ஆறாமிடத்தோடு அவர் தொடர்பு கொண்டு முழுமையான பாப ஆதிபத்திய நிலைகளில் இருக்கும்போது குரு பார்வை துலாமிற்கு கெடுபலன்களைத் தரும். குரு பார்க்கும் இடங்கள் வலுவிழக்கும்.

ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க நுணுக்கங்களாலும், சூட்சுமங்களாலும் நிரம்பியது. இங்கே பொத்தாம் பொதுவான எந்த விதியும் கிடையாது. எல்லா விதிகளுக்கும் இங்கே விதிவிலக்கு உண்டு. உண்மையில் ஒரு விதியை விட அந்த விதிக்கான விலக்கை எப்போது எங்கே உணர முடிகிறதோ அப்போதுதான் சில அதி நுணுக்கமான உண்மை நிலைகள் புரியும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.