adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
அதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..? (A-016)

#adityaguruji

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

ஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை குறிப்பிடும் ஸ்தானங்களான 1, 5, 9, 10 மிடங்களுக்கு அதிபதிகளான கிரகங்கள் வலுவான நிலையில் இருந்து, அவர்களின் தசையும் சரியான பருவத்தில் நடப்பில் இருக்கும்போது அவரது வாழ்வில் அதிர்ஷ்டகரமான செயல்கள் நடப்பதும், நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வருதலும் நடக்கின்றன.


ஜாதகத்தில் ஐந்தாமிடம் என்பது ‘அதிர்ஷ்டம்’ என்பதைக் குறிக்கும் இடமாகும். ஜோதிட மூலநூல்கள் இந்த பாவகத்தை “பூர்வ புண்ணிய ஸ்தானம்” என்று அழைக்கின்றன.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒருவர் இப் பிறப்பில் பெறும் நன்மை, தீமைகளுக்கு அவர் முந்தைய பிறவிகளில் செய்யும் கர்மாவே காரணமாக அமைகிறது. அதன்படி, ஒருவர் பூர்வ ஜென்மத்தில் எப்படிப்பட்ட செயல்களைச் செய்திருக்கிறார்? அவர் செய்த நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டு, அவற்றைச் சேமித்து வைத்திருக்கும் ஸ்தானமாக ஐந்தாமிடத்தை நமது ஜோதிட மூல நூல்கள் குறிப்பிடுகின்றன.

இப்படிப்பட்ட ஐந்தாமிடம் ஒருவர் ஜாதகத்தில் சுபர் பார்வை பெற்று சுபத்துவமாக அமைந்தோ, பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அமராமல் இருந்தோ, ஐந்தாம் அதிபதி நல்ல வலுவான இடங்களில் சுபத்துவ, சூட்சும வலு நிலைகளில் இருந்தாலோ, அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார். அதாவது சென்ற பிறவிகளில் அவர் செய்த நல்ல கர்மாக்களின் விளைவாக அவர் சேமித்து வைத்திருக்கும் புண்ணியங்களை இப்பிறவியில் செலவழித்து இம்முறை நல்ல அதிர்ஷ்டமான சொகுசு வாழ்க்கை வாழ அதிகாரம் கொண்டவராக ஆகிறார்.

(அதேநேரத்தில் இப்பிறவியில் கிடைத்த வாழ்வின் மூலமாக அவர் கெட்ட செயல்கள் ஏதேனும் செய்து பாவங்களைச் சேர்ப்பாராயின், அதை அடுத்த பிறவியில் செலவழித்து அதிர்ஷ்டத்தை இழப்பார்.)

இப்படிப்பட்ட ஜாதகருக்கு அவருடைய வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் அதாவது பள்ளி, கல்லூரிப் பருவத்தை முடித்த நிலையில், அல்லது திருமணப் பருவத்தை எட்டிய நிலையில் நான் மேலே சொன்ன 1, 5, 9-மிடங்கள் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசை நடக்க ஆரம்பித்து, ஏறத்தாழ 15 முதல் 20 வருடங்களுக்கு அந்த தசை நடப்பில் இருக்கும்.

மேற்சொன்ன வருடங்களில் அவருக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான வாய்ப்புக்கள் கிடைத்து, வாழ்க்கைத்தரம் உயர்ந்து, வாழ்வின் முதல் பாதிக்குள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் நிறைவேறி, வாழ்வின் பிற்பகுதியை எவ்விதப் பிரச்னையும் இன்றி நிம்மதியாக அனுபவிக்கும் அதிர்ஷ்ட நிலையை பரம்பொருள் அளிக்கிறது.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி என்பவர் ஜாதகரைக் குறிப்பிடுபவர் என்பதால் அவர் வலுவாக இருக்கும் நிலையில் நீங்களே வலுவானவர் என்பதுதான் பொருள். மேலும் 1, 5, 9 பாவகங்களின் அதிபதிகளாகிய மூன்று கிரகங்களும் வலுவிழந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு நன்மைகளைச் செய்ய மாட்டார்களே தவிர, கண்டிப்பாக கெடுதல்களைத் தர மாட்டார்கள். கூடுமானவரையில் ஜாதகரைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவே முயலுவார்கள்.

ஒரு முக்கிய நிலையாக ஒரு ஜாதகத்தில் 1, 5, 9 க்குடையவர்கள் நீச்சம், பகை, கிரகணம், அஸ்தமனம் போன்ற எத்தகைய வலுவிழந்த நிலையில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு கெடுதல்களைச் செய்யமாட்டார்கள். அதேநேரத்தில் அவர்களால் நன்மைகள் இருக்காது.

லக்னாதிபதி நீச்சமாக இருக்கும் நிலையில் அவரது தசை நடக்கும் பொழுது அதிர்ஷ்டமற்ற நிலை இருக்குமே தவிர, துரதிர்ஷ்டங்களையோ அல்லது கொடுமையான விஷயங்களையோ லக்னாதிபதி ஒருபோதும் செய்யமாட்டார். இதுபோன்ற நேரங்களில் லக்னாதிபதியின் தசை நடக்கும்போது ஜாதகரின் முயற்சிக்கேற்ற பலன்கள் இருந்தே தீரும்.

அதேபோல 5-க்குடையவர் வலுவிழந்திருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தால் எந்தவிதமான முன்னேற்றங்களும் வராது. அவர் தன்னுடைய முயற்சியை மட்டுமே நம்ப வேண்டியிருக்கும். முயற்சிக்கேற்ற கூலியும் இருக்கும். பாக்கியாதிபதி எனப்படும் ஒன்பதாம் அதிபதி வலுவிழந்து அவரது தசை நடக்கும் நேரங்களில் மனித வாழ்க்கைக்கு தேவையான முக்கிய பாக்கியங்கள் கிடைக்காது.

ஜீவனஸ்தானம் எனப்படும் பத்தாமிடம் ஒருவர் என்ன செய்து வாழப் போகிறார் என்பதைக் குறிக்கும் இடமானதால் இதுவும் ஒருவரது ஜாதகத்தில் முக்கிய இடமாக ஆகிறது.

என்னுடைய அனுபவத்தில் பத்தாமிடம் மட்டுமே நல்ல வலுவான அமைப்பைக் கொண்ட ஜாதகர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்ளுதல் என்ற குணம் உள்ளவர்களாக அமைந்து தங்களது தொழில் மூலம் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பத்தாமிட அதிபதியின் தசை வரும் போது அவர் சுபத்துவ, சூட்சும வலுவோடு இருந்து, லக்னாதிபதிக்கு எதிர்த்தன்மை உடையவராகவும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் ஒருவர் அதிர்ஷ்ட வாய்ப்புகளால் தொழில்நிலைகளின் மூலம் வாழ்க்கையின் உச்சத்திற்குச் செல்வார்.

இது போன்ற நேரங்களில் ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் தொழில் பத்தாம் அதிபதி தசையிலோ, அல்லது கல்வியின் மூலமாகவோ, வேறுவகையிலோ அவருக்கு அமைந்து அந்தக் கிரகத்தின் காரகத்துவம் மூலம் மிகப்பெரும் பொருள் வரவு ஜாதகருக்கு இருக்கும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் நம்முடைய மூலநூல்கள் சொல்லும் பத்தாம் அதிபதியைப் பற்றிய எந்த விதிகளும் இந்த இடத்தில் பொருந்தாது. லக்னாதிபதிக்கு ஜென்ம விரோதியான கிரகமாக இருந்தாலும் அல்லது 6, 8- க்கு அதிபதியாக அந்தக் கிரகம் இருந்தாலும், ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களிலும் அந்தக் கிரகம் மட்டும் தனித்து அதிக சுபத்துவ, சூட்சுமவலுவோடு இருந்தால் அதன் காரகத்துவங்களின் மூலம் ஜாதகருக்கு மிகப்பெரிய பொருள் வரவு இருக்கும்.

உதாரணமாக மிதுன லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியான செவ்வாய் கடன், நோய், எதிரி போன்றவைகளை தரும் கிரகமாக இருப்பினும், செவ்வாய் ஜாதகத்தில் அதிக சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் நிலையில், ஜாதகருக்கு செவ்வாயின் காரகத்துவங்களான மருத்துவம், கட்டிடம், விளையாட்டு, அதிகாரம், சிகப்பு நிறம் போன்ற விஷயங்களில் நல்ல தசைகள் நடக்கும்போது செல்வம் சேரும்.

இன்னொரு அமைப்பாக லக்ன பாபிகள் என்று சொல்லப்படும், ஒரு ஜாதகத்தின் எதிர்த்தன்மையுடைய கிரகங்கள் 3, 6, 10, 11 எனப்படும் உபசய ஸ்தானங்களில் நட்பு வலிமையில் இருந்தால் மட்டும் ஜாதகருக்கு கெடுதல்களை தரக்கூடிய அமைப்பு மாறி நன்மைகளைச் செய்வார்கள்.

நமது மூலநூல்களில் ஒரு ஜாதகத்தின் அவயோகர்கள் 3, 6, 10, 11மிடங்களில் இருந்தாலே நன்மை செய்வார்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் என்னுடைய முப்பதாண்டுகளுக்கும் மேலான ஜோதிட ஆய்வில் ஒரு லக்னத்தின் அவயோகர்கள் 3,6,10,11 மிடங்களில் ஆட்சியாக இல்லாமல் நட்புநிலையில் இருந்தால் மட்டுமே நன்மை செய்வதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

சில நிலைகளில் இவர்கள் மேற்கண்ட பாவகங்களில் ஆட்சியாக இருந்தால் தொல்லைகளைத் தருவார்கள். அப்படி தொல்லைகள் இருக்கக் கூடாது எனில் இவ்விடங்களில் இவர்கள் சுபத்துவ, சூட்சும வலுவுடன் இருக்க வேண்டும்.

ஜோதிடம் மிகப்பெரிய நுணுக்கங்கள் நிரம்பியது என்பதை இதுபோன்ற அவயோக கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் நன்மை தரும் எனும் விதியின் மூலம் நம்மால் உணர முடியும்.

உதாரணமாக, மிதுன லக்னத்திற்கு செவ்வாய் அவயோக கிரகமாக வரும் நிலையில் அவர் 3, 6, 10, 11-ம் இடங்களில் இருந்தால் நன்மைகள் கிடைக்கும் என்று நமது மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தச் செவ்வாய் கொடிய துன்பங்களை தரக்கூடிய தனது ஆறாமிடமான விருச்சிகத்திற்கு ஆறில் மறைந்து மேஷத்தில் இருக்கும் நிலையில் ஓரளவுக்கு நன்மைகளைத் தருவார்.

அதேநேரத்தில் எந்த நிலையிலும் அவர் ஆறாமிடத்தில் ஆட்சியாக இருப்பது நல்லநிலை அல்ல. ஆறில் தனித்தோ அல்லது சனி, ராகுவுடன் இணைந்து பாபத்துவ நிலையிலோ இருக்கும் செவ்வாய் தனது தசையில் மிகப்பெரிய கொடுமைகளைச் செய்வார்.

அதே நேரத்தில் செவ்வாய் பத்தாமிடத்தில் நட்பு வலுவுடன் இருக்கும் நிலையில், கூடுதலாக அவருக்கு இங்கே திக்பலமும் சேரும் என்பதால், தனித்திருக்கும் நிலையிலும் அல்லது பாபத்துவம் இல்லாமல் இருக்கும் நிலையிலும் அவரால் கண்டிப்பாக நன்மைகள் இருக்கும். இன்னொரு நிலையான மூன்றாமிடத்தில் இருக்கும் செவ்வாய் தனது நான்காம் பார்வையால் 6-ஆம் இடத்தைப் பார்ப்பார் என்பதால் இங்கே சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் நிலையில் மட்டும் நன்மைகளைத் தருவார்.

இதே அமைப்பைக் கொண்டு கும்பம், துலாம், சிம்மம் ஆகிய லக்னங்களுக்கும் ஆறாமிடம் பற்றிய சில பலன்களைக் கணிக்க முடியும். இந்த மூன்று லக்னங்களுக்கும், ஆறாமதிபதியாக அந்த லக்ன ராஜனின் ஜென்ம விரோதிகள் வருவார்கள்.

அதாவது கும்பநாதன் சனிக்கு, சந்திரன் ஜென்ம விரோதி, துலாத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்கு குரு ஜென்ம விரோதி, சிம்ம நாயகன் சூரியனுக்கு சனி ஜென்ம விரோதி.

ஆறாமதிபதி ஜென்ம விரோதியாக அமைந்து அவர்களது தசை நடக்குமாயின் கடுமையான கெடுபலன்கள் உண்டு என்பது மாறாத விதி. அதேநேரத்தில் ஜென்ம விரோதியான ஆறுக்குடையவன் சுபத்துவ, சூட்சும வலுவோடு ஆறாமிடத்திலேயே அமர்ந்திருப்பினும் அல்லது ஏனைய உபஜெய ஸ்தானங்களான 3, 10, 11-ல் இருப்பினும் ஜாதகருக்கு நிச்சயமாக நல்ல பலன்கள் நடக்கும்.

இதுபோன்ற நிலையில் ஆறாமிடத்தின் சுபத்துவ விஷயங்களான வேலை, தொழிலின் மூலம் பணம், லஞ்சம், ஊழல் போன்ற முறையற்ற வழிகளில் பெரும் பொருள்வரவு, எதிரியின் தனம், சூதாட்டம், பங்குச் சந்தையில் பெருத்த லாபம், எதிர்பாராத சொத்து, பினாமி வழிகள் போன்றவற்றில் ஜாதகர் செல்வம் சேர்ப்பார்.

இதுபோன்ற செல்வம் சேருவதற்கு ஆறாமதிபதி மிகுந்த சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்க வேண்டும். உதாரணமாக, கும்பத்தின் ஆறுக்குடைய சந்திரன் பௌர்ணமியை நெருங்கும் நிலையில் சுபத்துவமாக ஆறாமிடத்திலேயே அமர்ந்து, அவருடன் சுக்கிரனோ, தனித்த புதனோ இணைந்து, மீனத்திலோ, விருச்சிகத்திலோ இருக்கும் பங்கமற்ற, பாபியருடன் சேராத குரு தனது வலிமையான பார்வையால் சந்திரனைப் பார்த்த நிலையில் இருக்கும் சந்திரன், தனது தசையில் மிகப் பெரும் பொருள் வரவை தருவார். அதே நேரத்தில் சந்திரன், அமாவாசை நிலையில் இருந்து மிகுந்த பாபத்துவம் பெற்றிருக்கும் நிலையில் இந்த பலன் மாறும்.

பதினொன்றாமிடம் எனப்படும் லாப ஸ்தானத்தில் அமரக் கூடிய அனைத்துக் கிரகங்களும் நல்ல தன்மையைப் பெற்றுவிடும் என்பதால் அந்த ஸ்தானத்தில் இருக்கக் கூடிய எதிர்க்கிரகங்களும் நன்மை செய்யும்.

ஜோதிடம் என்பது பலவித கிரக நிலைகளை சுபத்துவ, சூட்சுமவலு நிலைகளோடு பொருத்திப் பார்த்து பலன் அறிவது என்பதால், ஒரு கிரகம் இந்த இடத்தில் இருந்தாலே நன்மை அல்லது தீமையைத் தரும் என்று சொல்லி விட முடியாது. ஒரு கிரகம் எவ்வித பலனைத் தரும் என்பதற்கு இப்போது நான் சொல்லும் சுபத்துவ, சூட்சும நிலைகளை கணக்கிடுவதே சரியானதாகவும், இறுதியானதாகவும் இருக்கும்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.