ஒருவரின் ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை குறிப்பிடும் ஸ்தானங்களான 1, 5, 9, 10 மிடங்களுக்கு அதிபதியான கிரகங்கள் வலுவான நிலையில் இருந்து அவர்களின் தசை நடப்பில் இருக்கும் போது அந்த நபருக்கு அதிர்ஷ்டகரமான செயல்கள் நடப்பதும், நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வருதலும் நடக்கின்றன.
ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடம் என்பது ‘பரிபூரண அதிர்ஷ்டம்’ என்பதைக் குறிக்கும் இடமாகும். அதாவது நம்முடைய கிரந்தங்கள் இந்த பாவத்தை “பூர்வ புண்ணிய ஸ்தானம்” என்று அழைக்கின்றன.
அது ஏனெனில், நம்முடைய மேலான இந்து மதத்தின் படி ஒருவர் இப் பிறப்பில் பெறும் நன்மை, தீமைகளுக்கு அவர் முந்தைய பிறவிகளில் செய்யும் கர்மாவே காரணமாக அமைகிறது.
அதன்படி, ஒருவர் பூர்வ ஜென்மத்தில் எப்படிப்பட்ட செயல்களைச் செய்திருக்கிறார்? அவர் செய்த நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் என்ன? என்பதைக் குறிப்பிட்டு அவற்றைச் சேமித்து வைத்திருக்கும் ஸ்தானமாக ஐந்தாமிடத்தை நமது ஜோதிட மூல நூல்கள் குறிப்பிடுகின்றன.
இப்படிப்பட்ட ஐந்தாமிடம் ஒருவர் ஜாதகத்தில் சுபர் பார்வை பெற்று அமைந்தோ, பாவக்கிரகங்கள் அந்த இடத்தில் அமராமல் இருந்தோ, ஐந்தாமிட அதிபதி நல்ல வலுவான இடங்களில் இருந்தாலோ, அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார்.
அதாவது சென்ற பிறவிகளில் அவர் செய்த நல்ல கர்மாக்களின் விளைவாக அவர் சேமித்து வைத்திருக்கும் புண்ணியங்களை இப்பிறவியில் செலவழித்து இம்முறை நல்ல அதிர்ஷ்டமான சொகுசு வாழ்க்கை வாழ அதிகாரம் கொண்டவராக ஆகிறார்.
(அதே நேரத்தில் இப்பிறவியில் கிடைத்த வாழ்வின் மூலமாக அவர் கெட்ட செயல்கள் ஏதேனும் செய்து பாவங்களைச் சேர்ப்பாராயின் அதை அடுத்த பிறவியில் செலவழித்து அதிர்ஷ்டத்தை இழப்பார்.)
இப்படிப்பட்ட ஜாதகருக்கு அவருடைய வாழ்வின் முக்கியமான காலகட்டத்தில் அதாவது பள்ளி, கல்லூரிப் பருவத்தை முடித்த நிலையில், அல்லது திருமணப் பருவத்தை எட்டிய நிலையில் நான் மேலே சொன்ன ஐந்தாமிடம் சம்பந்தப்பட்ட தசை நடக்க ஆரம்பித்து ஏறத்தாழ 15 முதல் 20 வருடங்களுக்கு அந்த தசை நடப்பில் இருக்கும்.
மேற்சொன்ன வருடங்களில் அவருக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான வாய்ப்புக்கள் கிடைத்து வாழ்க்கைத்தரம் உயர்ந்து வாழ்வின் முதல் பாதிக்குள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் நிறைவேறி வாழ்வின் பிற்பகுதியை எவ்விதப் பிரச்னையும் இன்றி நிம்மதியாக அனுபவிக்கும் அதிர்ஷ்ட நிலையை பரம்பொருள் அளிக்கிறது.
இதையடுத்து திரிகோண ஸ்தானங்களில் பெருங்கோணமான பாக்யஸ்தானம் எனப்படும் ஒன்பதாமிடம் மற்றும் லக்னம் எனப்படும் ஒன்றாமிடத்தின் அதிபதி தசைகளில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் ஏற்படும்.
பாக்யஸ்தானம் என்ற பெயரே ஒருவர் பெறும் பாக்யங்களை குறிப்பிடுகிறது என்பதால் இதைப் பற்றி நான் உங்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. அதோடு ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி என்பவர் ஜாதகரைக் குறிப்பிடுபவர் என்பதால் அவர் வலுவாக இருக்கும் நிலையில் நீங்களே வலுவானவர் என்பதுதான் பொருள் என்பதாலும் மேற்கண்ட கிரகங்களின் தசையில் மிகவும் அதிர்ஷ்ட பலன்கள் ஏற்படும்.மேலும் ஒரு சிறப்பாக இந்த மூன்று கிரகங்களும் வலுவிழந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு நன்மைகள் செய்ய மாட்டார்களே தவிர கண்டிப்பாக கெடுதல்களைச் செய்ய மாட்டார்கள். கூடுமானவரையில் ஜாதகரைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவே முயலுவார்கள்.
அடுத்து ஜீவனஸ்தானம் எனப்படும் பத்தாமிடம் ஒருவர் என்ன செய்து வாழப்போகிறார் என்பதைக் குறிக்கும் இடமானதால் மிக முக்கிய இடமாக ஆகிறது.
என்னுடைய அனுபவத்தில் பத்தாமிடம் மட்டுமே நல்ல வலுவான அமைப்பைக் கொண்ட ஜாதகர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்ளுதல் என்ற குணம் உள்ளவர்களாக அமைந்து வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
பத்தாமிட அதிபதி கிரகத்தின் தசை வரும் போது அவர் லக்னாதி பதிக்கு எதிர்த்தன்மை உடையவராக இல்லாமல் இருந்து, வலிமையான நிலைகளிலும் அமர்ந்திருக்கும் பட்சத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகளால் தொழில்நிலைகளின் மூலம் ஜாதகர் வாழ்க்கையின் உச்சத்திற்குச் செல்வார்.
இன்னொரு அமைப்பாக லக்னபாவிகள் என்று சொல்லப்படும் அந்த ஜாதகத்தின் எதிர்த்தன்மையுடைய கிரகங்கள் 3, 6, 10, 11 எனப்படும் உபசய ஸ்தானங்களில் நட்பு வலிமையில் இருந்தால் மட்டும் (ஆட்சியானால் நன்மை குறையும் ) ஜாதகருக்கு கெடுதல்களை தரக்கூடிய அமைப்பு மாறி நன்மைகளைச் செய்வார்கள்.
குறிப்பாக பதினொன்றாமிடம் எனப்படும் லாபஸ்தானத்தில் அமரக் கூடிய அனைத்துக் கிரகங்களும் நல்ல தன்மையைப் பெற்றுவிடும் என்பதால் அந்த ஸ்தானத்தில் இருக்கக் கூடிய எதிர்க்கிரகங்களும் நன்மை செய்யும்.அதிலும் ஜாதகத்தில் மிகவும் கொடிய பலன்களைத் தரக் கூடிய ஆறாமிடத்தின் அதிபதி பதினொன்றில் இருந்தால் தனது தசையில் நன்மைகளைச் செய்வார். அதாவது ஆறாமிடத்தின் அதிபதி, தன் வீட்டிற்கு ஆறாமிடத்தில் மறைந்து பதினொன்றில் இருப்பதால் “கெட்டவன் கெட்டு நல்லவன் ஆனான்” எனும் நிலையில் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு பெறுவார்.
(ஏப்ரல் 2012 திரிசக்தி மாத இதழில் வெளிவந்தது.)