adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கடக, சிம்மத்திற்கு சச யோக பலன்கள் … (B-024)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

கடகம் :

கடகத்திற்கு சனி ஏழாமிடமான களத்திர ஸ்தானத்திற்கும், எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதியாகி, நான்காமிடத்தில் உச்சம் பெற்றும், ஏழாமிடத்தில் ஆட்சி பெற்றும் சச யோக நிலை பெறுவார்.

அஷ்டமாதிபதி உச்சம் பெறுவது எந்த ஒரு லக்னத்திற்கும் நல்ல பலன்களை தரக் கூடிய நிலை அல்ல. அதுவும் சனி, இங்கே சுக ஸ்தானத்தில் அமர்வதால் நீண்ட ஆயுளை மட்டும் கொடுத்து நான்காமிட ஆதிபத்தியங்கள் அனைத்தையும் பலவீனமாக்குவார்.


நான்காமிட சனியால் ஒருவரின் வீடு, வாகனம், கல்வி, அம்மா போன்றவைகள் பாதிக்கப்படும். ஜாதகர் படிப்பில் முதல் மாணவராக இருக்கவோ, கல்வி கற்கவோ தடை ஏற்படும். சொந்த வீடு அமைவது கடினம். பூர்வீக வீடு இருந்தால் அதையும் தன் தசையில் இழந்து வாடகை வீட்டில் இருக்க வைப்பார் சனி. சுபத்துவமும் சூட்சும வலுவும் சனிக்கு இருந்தால் மட்டுமே இந்த பலன்கள் மாறும்.

இன்னொரு ஆதிபத்தியமான ஏழுக்கதிபதியும் அவரே என்பதால் ஏழாமிடத்தோன்  உச்சம் பெற்றதால் நல்ல மனைவியையும், நண்பர்களையும் தருவார் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனெனில் இரு ஆதிபத்தியக் கிரகங்கள் தனது மூலத் திரிகோண வீட்டின் தன்மையையே முன்னிறுத்தி, முதலில் பலன் செய்யும் என்ற விதியின்படி இந்த லக்னத்திற்கு சனியின் கும்பம் அஷ்டம வீடு என்பதால் எட்டுக்கதிபதியின் சாதகமற்ற பலன்களையே சனி முதலில் செய்வார்.

சூரிய, சந்திரர்கள் சனிக்கு எப்போதும் ஆகாத கொடிய பகைவர்கள் என்பதால் ஒரு இக்கட்டான சூழலில் சனி இருந்தால் மட்டுமே கடக, சிம்மத்திற்கு சனியால் நன்மைகள் கிடைக்கும்.

(குருநாதர், பாலஜோதிடம் ஆசிரியர் ஜோதிடபானு, அதிர்ஷ்டம் சி. சுப்பிரமணியம் அய்யா அவர்கள் தனது நீண்ட அனுபவத்தில் சந்திர தசையும், ஏழரைச் சனியும் சந்தித்தால் கொடிய பலன்கள் நடைபெறும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறார் என்பதை இந்த இடத்தில் நினைவு படுத்துகிறேன்.)

கடகத்திற்கு இன்னொரு பலவீனமாக, இங்கிருக்கும் சனியின் கடுமை குறைய வேண்டுமானால் குரு, சனிக்கு திரிகோணத்தில் அமர்ந்து அவரைப் பார்க்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு நிலையில் குரு, எட்டாமிடமான கும்பத்திலோ, பனிரெண்டான மிதுனத்திலோ மறைந்து பலவீனம் பெற்றுத்தான் பார்க்க முடியும். பலமிழந்த குருவின் பார்வை முழுப் பலனை அளிக்காது.

இன்னொரு இயற்கைச் சுபரான சுக்கிரனின் பார்வை கூட கடகத்திற்கு பாதகாதிபதியின் பார்வை என்பதால் சனியின் கெட்ட பலனைக் சிறிதளவே மட்டுப்படுத்தும். சனியின் நண்பரான புதனின் பார்வை அவரைச் சற்று சாந்தப்படுத்தும்.

லக்னாதிபதி சந்திரன் வளர்பிறைச் சந்திரனாகி பத்தாமிடத்தில் அமர்ந்து சனியைப் பார்ப்பது நல்லதுதான். ஆனால் ஏற்கனவே உச்ச சனி லக்னத்தைப் பார்த்து வலுக் குறைக்கும் நிலையில், இது போன்ற அமைப்பில் லக்னாதிபதி சந்திரனையும் சனி நேருக்கு நேர் பார்த்து பலவீனப்படுத்தி விடுவார். ஜாதகத்தில் வேறு நல்ல யோகங்கள் ஏதேனும் இருந்தால், லக்னமும், லக்னாதிபதியும் சனி பார்வை பட்டு பலமிழந்த நிலையில் எந்த யோகங்களும் பலன் தராது என்பதால் அதுவும் நல்ல நிலையல்ல.

எனவே இந்த இடத்தில் கடக லக்னத்திற்கு சனி நல்ல பலன்களைத் தர வேண்டும் என்றால் ஒரே வழி அவர் உச்ச நிலையில் வக்ரம் பெறுவதுதான். அப்போதுதான் சனி நீச நிலையை அடைந்து ஜாதகருக்கு யோகம் தருவார்.

சரி.... சனி பலவீனம் அடைந்தால் ஆயுள் பங்கமடையுமே என்ற கேள்வி எழலாம்.

என்னதான் சனி ஆயுள்காரகன் என்றாலும் ஆயுள் என்பது சனி மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. லக்னாதிபதியோ, வேறு லக்னமாயிருந்தால் அஷ்டமாதிபதியோ பூரண வலுப் பெற்றால் சனியால் ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்து இங்கிருக்கும் சனி தனது 3, 7, 10 ம் பார்வைகளால் 6, 10 மற்றும் லக்னத்தைப் பார்ப்பார்.

சனி ஆறாமிடத்தைப் பார்ப்பது என்பது நல்ல நிலைதான். அஷ்டமாதிபதி வலுப் பெற்று ஆறாமிடத்தைப் பார்ப்பதால் அந்த இடம் பலவீனமாகும் என்பதால் ஜாதகருக்கு கடன் விஷயங்களில் லாபங்களும், அல்லது கடன் வாங்கத் தேவையில்லாத நிலையும், நீடித்த ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்புகள் இல்லாத நிலையும் இருக்கும்.

ஜீவன ஸ்தானத்தை சனி பார்ப்பதால் நிரந்தரமில்லாத தொழில் அமைப்புகளோ, அடிக்கடி மாறும் வேலை வாய்ப்புகளோ, நுணுக்கமான மெக்கானிச துறைகளோ, சனியின் காரகத்துவ அமைப்பில் தொழில்களோ அமையும்.

லக்னத்தை சனி வலுப் பெற்று பார்ப்பதால் ஜாதகருக்கு சில தேவையற்ற குணங்கள் இருக்கும். பிடிவாதக்காரராகவும், தனக்கென சில தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டவராகவும், அழுத்தக்காரராகவும் இருப்பார். சனி சூட்சும வலு அடைந்திருந்தாலோ அல்லது லக்னத்தை வேறு சுபர்கள் பார்த்தால் மட்டுமே இந்த பலன்கள் மாறும்.

ஏழாமிடமான மகரத்தில் ஆட்சி பெற்று சச யோக நிலை பெறும் சனியால் தாமத திருமணம், பொருத்தமும் விருப்பமும் அற்ற வாழ்க்கைத் துணை அமையலாம். இங்கிருக்கும் சனி தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலையையோ அல்லது முறையற்ற காமத்தையோ ஜாதகருக்குத் தருவார்.

ஏழுக்கதிபதி தன் வீட்டில் ஆட்சி பெறுகிறார் என்பதெல்லாம் இங்கே சனியிடம் எடுபடாது. இந்த இடத்தில் அஷ்டமாதிபதி திக்பலம் பெற்று வலுப் பெறுகிறார் என்பதே சரியானது.

எந்த ஒரு லக்னாமானாலும் சனி ஏழில் வலுப் பெற்றால் தன்னை விட வயது வித்தியாசமானவர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்துவார். சில நிலைகளில் ஜாதகருக்கு திருமணமே நடக்காமல் போகக் கூடும். சூட்சும வலுப் பெற்றால் மட்டுமே மேலே சொன்ன பலன்கள் இருக்காது.

இங்கிருந்து தன் பார்வைகளால் ஒன்பது, லக்னம், மற்றும் நான்காமிடங்களை சனி பார்ப்பார். சனியின் பார்வையால் தந்தையைக் குறிக்கும் ஒன்பது, தாயைக் குறிக்கும் நான்கு, ஜாதகனைக் குறிக்கும் லக்னம் மூன்றும் பலவீனமடையும்.

பொதுவாக சனி, சூரிய, சந்திர, செவ்வாயின் லக்னங்களுக்கு ஆட்சி, உச்சம் எனும் நேர்வலுவும், ஏழாமிடத்தில் திக்பலமும் பெற்று இரட்டிப்பு வலுவாகி, ஜாதகனுக்கு உயிர் தரும் ஸ்தானங்களான தாய், தந்தையரின் நான்கு, ஒன்பதாமிடங்களைப் பார்த்துக் கெடுப்பதால்தான், செவ்வாய்க்கு பாதகாதிபதியாகவும், சூரிய, சந்திரர்களுக்கு கொடும் பகைவராகவும் ஆகிறார்.

இந்த இடத்தில் பலம் பெற்ற சனி லக்னத்தைப் பார்ப்பதற்கு என்ன பலன் என்பதும் மேலே சொன்னதுதான்.

சிம்மம் :

சிம்மத்திற்கு சனி ஆறு மற்றும் ஏழாமிடத்திற்கு உரியவராகி ஏழாமிடத்தில் மூலத் திரிகோண பலமும், திக்பலமும் பெற்று சச யோக நிலையை அடைவார். கடக லக்னத்திற்கு அவர் ஏழாமிடத்தில் ஆட்சி பலம் மட்டுமே அடைவார். சிம்மத்திற்கு கூடுதலாக மூலத் திரிகோண பலமும் சேரும்.

கடகத்திற்கு அவர் அஷ்டமாதிபதியாகி ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது போலவே, சிம்மத்திற்கு அவர் ஆறுக்குடையவராகி ஏழாமிடத்தில் பலம் பெறுவார். இந்த லக்னத்திற்கு ஏழாமிடத்தில் பலம் பெற்று சச யோகம் தரும் சனியை ஆறுக்குடையவர் ஏழாமிடத்தில் அமர்ந்து மனைவி ஸ்தானத்தை கெடுக்கிறார் என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு பலம் பெற்றிருக்கும் சனியால் தாமத திருமணம் அல்லது திருமணமே ஆகாத நிலை, திருமணத்திற்குப் பிறகும் வாழ்வில் பிடிப்பற்ற நிலை மற்றும் பொருத்தமற்ற வாழ்க்கைத் துணை அல்லது கலப்புத் திருமணம் போன்ற பலன்கள் நடைபெறும்.

சுபர் பார்வையோ, சூட்சும வலுவோ பெறாமல் ஏழில் இருக்கும் சனி ஒரு ஆண்மகனை தன்னை விட வயதில் மூத்த பெண்ணிடம் நேசம் காண வைப்பார். ஜாதகர் பெண்ணானால் சில முறையற்ற தொடர்புகளுக்கு அடிகோலுவார். மேலும் ஜாதகருக்கு உண்மையான நண்பர்களோ, பங்குதாரர்களோ அமைவது கடினம்.

சிம்மத்திற்கு சனி ஆறுக்குடையவர் ஆவதால் இங்கு பலம் பெறும் சனியால் ஜாதகருக்கு தாம்பத்திய உறவில் நாட்டமில்லாத நிலை வரலாம். அல்லது முறையற்ற உறவில் ஆர்வம் இருக்கும். சுக்கிரனும் கெட்டால் ஜாதகருக்கு சிற்றின்ப சுகம் கிடைப்பது கடினம்.

ஏழாமிடத்தில் ஆட்சி பெறும் சனி தனது 3, 7, 10ம் பார்வைகளால் ஒன்பது, லக்னம், மற்றும் நான்காமிடங்களைப் பார்ப்பார்.

ஒன்பதாமிடத்தை சனி பார்க்கும் நிலையில் ஜாதகருக்கு தந்தையால் பயன் இருக்காது. சூரியனும், செவ்வாயும் வலுக் குறைந்தால் தந்தையிடம் சுமுக உறவு இருப்பது கடினம். தந்தையை விட்டு பிரிந்திருக்கலாம் அல்லது தந்தையை இளம் வயதில் இழக்கலாம்.

சனியின் லக்ன பார்வையால் ஜாதகரிடம் பிடிவாதமும், சந்தேக குணமும் இருக்கும். சுயநலவாதியாக இருப்பார். அடுத்தவரால் புரிந்து கொள்ள முடியாத மர்மமானவராக இருப்பார். மனதில் நினைப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் கமுக்கமாகவும் இருக்கக் கூடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் லக்னத்தைப் பார்த்தால் அதில் ஒரு கிரகத்தை மட்டும் வைத்து ஜாதகரின் குண இயல்பை சொல்ல முடியாது. பார்க்கும் கிரகங்களில் அதிக வலிமை பெற்றது எது? அவை இருக்கும் இடங்களின் தன்மை என்ன? அந்தக் கிரகங்களின் குணங்கள் யாவை? போன்ற அனைத்தையும் கணித்துத்தான் ஜாதகரின் குணங்களை துல்லியமாகக் கூற முடியும்.

மேலும் ஒரு சூட்சுமமாக கும்பத்தில் பலம் பெறும் சனி தன் பார்வைகளால் செவ்வாயின் இரு வீடுகளையும் அதாவது மேஷத்தையும், விருச்சிகத்தையும் பார்த்து பலவீனமாக்குவார். இது ஒருவிதமான தனிப்பட்ட நிலை. இந்த அமைப்பு புதனின் மிதுன, கன்னி லக்னங்களுக்கு நல்லது. அதாவது மிதுனத்திற்கு ஆறாமிடத்தையும், கன்னிக்கு எட்டாமிடத்தையும் சனி பார்த்துக் கெடுப்பார்.

ஆனால் சிம்மத்திற்கு சனி கடும் பகைவர் என்பதால் ஏழாமிடத்தில் அவர் மூலத் திரிகோண பலம் பெறும் நிலையில் ஒரே நேரத்தில் இந்த லக்னத்தின் அம்மா ஸ்தானத்தையும், அப்பா ஸ்தானத்தையும் ஒரு சேரப் பார்த்து பலவீனமாக்குவார்.

ஒரு ஜாதகத்தின் உயிர் ஸ்தானங்களான தாய், தந்தையர் இடங்களை அதாவது ஒரு கேந்திரத்தையும், ஒரு திரிகோணத்தையும் மற்றும் லக்னத்தையும் ஒரே சமயத்தில் பார்த்துக் கெடுப்பதால் தான், சிம்மத்தின் நாயகனான சூரியனுக்கு சனி முற்றிலும் ஆகாத எதிரி ஆகிறார்.

கும்பத்தில் இருக்கும் சனி செவ்வாயின் அவிட்டம் அல்லது ராகுவின் சதயம் மற்றும் குருவின் பூரட்டாதி நட்சத்திரங்களில் தான் இருக்க முடியும். ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தால் லக்னாதிபதி சூரியனுக்கு ராகுவும் பகைவர் எனும் நிலையில் இன்னும் கடுமையான பலன்கள் இருக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537