adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 285 (21.04.2020)

ஜோதிடக்கலை அரசு 

ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

தேவி, ஈரோடு.

கேள்வி:

திருமணமான நாளிலிருந்தே மனைவி என்ற பாசமும் அன்பும் இல்லை மற்றும் அவர் ஒரு சந்தேகப் பேர்வழி. எனக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுக்காக உயிரைப் பிடித்துக் கொண்டு எப்படியோ 25 ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன். நான்கு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு விவாகரத்தும் நடந்து விட்டது. என் கணவருக்கு குழந்தைகள் என்ற பாசம் கூட துளியும் இல்லை. அவர் சம்பாதித்த சொத்துக்களையும் தங்கையின் கணவர் பெயரில் எழுதி வைத்துவிட்டார். இப்பொழுது தங்கையின் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலை எப்போது மாறும்? தங்கையின் மீது இருக்கும் அளவுகடந்த அன்பும், பாசமும் வாழ்நாள் முழுக்க தொடருமா? தங்கையின் வீடே கதியென்று கிடக்கும் என் கணவர் எப்போது திரும்பி வருவார்? எங்கள் வாழ்க்கையில் மாற்றம் வருமா?


பதில்:

(மகர லக்கனம், துலாம் ராசி, 1ல் சுக், செவ், சனி, 3ல் குரு, 6ல் ராகு, 10ல் சந், 12ல் சூரி, புத, கேது, 9-1-1964 காலை 8-16 ஈரோடு)

ஒருவரின் ஜாதகத்தில் இளைய சகோதர அமைப்புகளை குறிக்கும் மூன்றாமிடம் அதிக வலுவாக இருக்கும் நிலையில் அவருக்கு தனக்குப் பின் பிறந்தவர்கள் மேல் அதிகமான பாசம் அல்லது அவர்களால் உதவி போன்றவைகள் இருக்கும். கணவர் ஜாதகத்தில் ராசி, லக்னம் இரண்டிற்கும் மூன்றாம் அதிபதியான குரு பங்கமின்றி தனித்து அமர்ந்து மிகவும் வலுவான ஆட்சி அமைப்பில் இருக்கிறார். ஆகவே கணவருக்கு தங்கையின் பேரில் அபரிமிதமான அன்பும் பாசமும் இருப்பதில் ஆச்சரியமில்லை. அதேநேரத்தில் அவருடைய தங்கையும் உங்கள் கணவரின் பெயரில் உயிரையே வைத்திருப்பார். அண்ணனும், தங்கையும் பாசமலர் சிவாஜிகணேசன்-சாவித்திரி போல சகோதர உறவுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டால் மனைவியால் சந்தோஷம் இல்லை என்பது ஜோதிட விதி. கணவரின் ஜாதக அமைப்பின்படி களத்திரகாரகன் சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்து, அம்சத்தில் நீச்சமாகி, உச்ச செவ்வாயுடனும், சனியுடனும் இணைந்து, அதிலும் குறிப்பாக சனியுடன் ஒரே டிகிரியில் மிக நெருக்கமாக இணைந்து பலவீனமடைந்து இருக்கிறார்.

மனைவியைக் குறிக்கும் லக்னத்திற்கு ஏழாம் இடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்க்க, ராசிக்கு 7-ஆம் இடத்தை உச்ச செவ்வாய் பார்ப்பது மிகக்கடுமையான ஒரு அமைப்பு. இந்த அமைப்பின்படி திருமணம் ஆனதில் இருந்தே ஒரு மனைவிக்குரிய பண்புகளோடு நீங்கள் நடந்திருக்க மாட்டீர்கள். தெளிவாகச் சொல்லப்போனால் மனைவியால் சந்தோஷம் அனுபவிக்கின்ற அமைப்பு உங்கள் கணவருக்கு இல்லை. ஆகவே ஜாடிக்கேத்த மூடி போல உங்களுடைய குணமும் சரியாக இருந்திருக்காது. ஒரு கணவரின் நியாயமான தேவை என்ன என்பதை அறியாத மனைவியாக நீங்கள் இருந்திருப்பீர்கள். ஆகவே மனைவி வேண்டுமா, தங்கை வேண்டுமா என்று கேள்வி எழுப்பினால் சிறிதும் யோசிக்காமல் தங்கையே போதும் என்று பதில் சொல்பவராக உங்கள் கணவர் இருப்பார்.

கடந்த ஏழு வருடங்களாக கணவருக்கு 6-8 க்குடைய சூரியன், புதனுடன் இணைந்த கேது தசை நடந்து வந்ததால் கடுமையான சிக்கல்கள் இருந்திருக்கும். அடுத்த வருடம் மே மாதம் முதல் அவருக்கு ஆரம்பிக்க இருக்கும் சுக்கிர தசையில் இருந்து கணவரது வாழ்வில் மாற்றம் உண்டாகும். ஆயினும் நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்வதற்கு வாய்ப்பில்லை. குழந்தைகளின் நலனுக்காக உங்களிடையே பேச்சுவார்த்தை இருக்கும். நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

ஆர்.எஸ். முத்துராமன், வளசரவாக்கம்.

கேள்வி:

நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். வயது 74. எனது பென்ஷன் பணம் மற்றும் ஓய்வுபெற்ற பணப்பலன்கள் அனைத்தையும்  என் மகனுக்காக செலவு செய்து விட்டேன். 2015இல் மனைவி இறந்த பிறகு ஒரு சேமிப்பும் இல்லை. தற்போதைய வாழ்வாதாரம் ஓய்வூதியம் மட்டுமே. இப்பொழுது தனிமையாக இருக்கிறேன். மகன் நிரந்தரமாக வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டான். என்னையும் ஆசையாக அழைத்துக் கொண்டு போயும் என்னால் இருக்க முடியாமல் 2018ல் வந்துவிட்டேன். ஓய்வு பெற்ற பிறகு பார்த்த வேலை மகனால் போய்விட்டது. என்னால் என் மகனுக்கு நன்மையா? மகனால் எனக்கு நன்மையா? எனது ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது?

பதில்:

(மகர லக்கனம், கடக ராசி, 5ல் ராகு, 7ல் சந், சனி, 9ல் சூரி, புத, 10ல் சுக், குரு, செவ், 11ல் கேது, 20-9-1946 மதியம் 3 மணி சேலம்)

மகனது ஜாதகப்படி நான்கில் ஆட்சி பெற்ற குரு, 8ம் வீட்டையும் 12-ம் வீட்டையும் பார்த்து, 8, 12ம் அதிபதிகளும் சுபத்துவம் ஆகியுள்ளதால் அவர் நிரந்தரமாக வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். உங்களுக்கு அதுபோன்ற அமைப்பு இல்லாததால் வெளிநாட்டில் இருக்க முடியவில்லை. திரும்ப வந்து விட்டீர்கள். இனி உங்களால் வெளிநாடு செல்ல முடியாது.

மகனால் எனக்கு நன்மையா, என்னால் மகனுக்கு நன்மையா என்று கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதனை கோழி முன்னால் வந்ததா, முட்டை முன்னால் வந்ததா என்றும் கேட்கலாம் அல்லது நெய்க்கு தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்றும் கேட்கலாம். மகனை நன்றாக வைத்துக் கொள்வதற்காகத்தான் பெற்றுக் கொள்கிறோம் என்பதால் இந்த கேள்வியே அர்த்தமும் அடிப்படையும் இல்லாதது. மகர லக்னத்தில் பிறந்து அமாவாசையை நெருங்கிக்கொண்டிருக்கும் தேய்பிறை சந்திரனின் இணைவில், ஏழாம் இடத்தில் அமர்ந்து லக்னத்தை பார்க்கும் சனியால் வந்த உங்களுடைய சுயநலத்தால் எழும் கேள்வி இது. வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற குணத்துடனேயே இருந்திருப்பீர்கள்.

லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் குரு அமர்ந்து, ராசிக்கு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஆசிரியர் தொழில் செய்தீர்கள். அஷ்டமாதிபதி தசையில், ஏழாமிடத்தில், 7ம் அதிபதியோடு இணைந்த சனி புக்தியில் 2015 ல் மனைவி இறந்ததற்கு பிறகு உங்கள் வாழ்க்கை பாபத்துவ சனிக்கு உரிய குணமான தனிமையில்தான் அமையவேண்டும். யாருடனும் எதற்காகவும் உங்களால் ஒத்துப்போக முடியாது. மாரகாதிபதி என்பதால் இந்த சந்திர தசையே உங்களுக்கு இறுதியாக அமையும். இறுதிக்காலம் நீங்கள் விரும்பும் தனிமையோடு இருக்கும். வாழ்த்துக்கள்.

மஞ்சுளா, மயிலாடுதுறை.

கேள்வி:

மகன் பிஇ மூன்றாம் ஆண்டு படிக்கிறான். சரியாக படிப்பதில்லை. இது உயர்கல்வி ஜாதகமா? மகனுக்கும் எனக்கும் ஒரே ராசி என்பதால் ஏழரைச்சனி நடக்கும் பொழுது கணவர் 2013இல் இறந்துவிட்டார். நீங்கள் கூறுவது போல படிக்கும் வயதில் ராகு தசை வந்து, என் பையன் டிவி, செல் இதைத்தான் முழுநேரமாக பார்க்கின்றான். படிப்பில் கவனம் இல்லை. ஆனால் ஏர்லைன்ஸ் வேலைக்கு போகவேண்டும் என்று சொல்கிறான். அதற்கான முயற்சியும் இல்லை. ஒரே பையனுக்கு படிக்கும் காலத்தில் ராகு தசை அடுத்து துலாம் லக்னத்திற்கு வரக்கூடாத குரு தசை வருவதால் என் மனம் மிகுந்த குழப்பமாக இருக்கிறது. மகனின் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் ஐயா. என் மகன் இதே கல்லூரியில் படிப்பைத் தொடர்வானா அல்லது வேறு இடத்தில் டிப்ளமோ செய்து முடிப்பானா? படிப்பு பாதியில் நிற்குமா? என் மகனுக்கு என்ன அமைப்பு இருக்கிறது?

பதில்:

(துலாம் லக்கினம், கன்னிராசி, 1ல் செவ், 4ல் கேது, 7ல் குரு, சனி, 10ல் சூரி, புத, ராகு, 11ல் சுக், 12ல் சந், 19-7-1999, 12-32 பகல், மயிலாடுதுறை)

மகனுக்கு சர லக்னமாகி, நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் அமர்ந்து, சதுர் கேந்திர யோகம் பெற்ற ஜாதகம். எல்லா துலாம் இலக்கின ஜாதகர்களுக்கும் குருதசை கெடுபலன்களை செய்து விடுவதில்லை. ஒரு ஜாதகத்தில் ராஜயோகர் தொடர்பு கொண்ட கிரகங்கள் கெடுதல்களை குறைத்து செய்யும் அல்லது செய்யாது என்பது விதி. அந்த அமைப்பின்படி மகனுக்கு சனி ஏழில் நீச்சமாகி, திக்பலம் பெற்று, குருவோடு  இணைந்திருப்பதால் அடுத்து வர இருக்கும் குரு தசை மிகப் பெரிய கெடுதல்களைச் கெடுதல்களைச் செய்யாது.

ஜூலை மாதம் முதல் ராகு தசையில் லக்னாதிபதி சுக்கிரன் புக்தி ஆரம்பிக்க இருப்பதால் அவனது படிப்பு கெடாது. இதே கல்லூரியில் தொடர்ந்து படிப்பார். கவலை வேண்டாம். ஜாதகப்படி 9-10-க்குடைய சந்திரனும் புதனும் பரிவர்த்தனை ஆகியுள்ளது யோக அமைப்பு. ஆகவே அடுத்து வரும் குரு தசையில், சூரியன் திக்பலம், சிம்மம் சுபத்துவம் பெறும் அமைப்பின்படி, அரசு சம்பந்தப்பட்ட துறையில் நல்ல வேலையில் அமர்வார். எதிர்கால வாழ்க்கையில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய ஜாதகம்தான். வாழ்த்துக்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை. அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.