ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
எம். சுபாஷ், நாகர்கோவில்-4.
கேள்வி:
குருவின் பொற்பாதம் பணிகிறேன். நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே சர்வதேச அளவில் சக்கரவர்த்திக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறேன். அப்பாவின் கேட்டை நட்சத்திரம் என்னை வலுக்கட்டாயமாக ஜோதிடத்திற்கு அறிமுகப்படுத்தியது. தங்களது மாலைமலர் கட்டுரைகள், காணொளிகள் அனைத்தும் நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்து உள்ளேன் என்பதை உறுதிப்படுத்தியது.
நேர்மையான என்னிடம் எனது முதலாளி நாடகப் போக்கை கடைப்பிடித்ததால் சொந்தமாக சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் தொடங்கி இருக்கிறேன். எனது நிறுவனத்தை ரோல்ஸ்ராய்ஸ், ரோலக்ஸ், ஆப்பிள், கூகுள் போன்று சர்வதேச பிராண்ட் பெற வைக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். தந்தையின் வழிகாட்டுதல், அன்னையின் தெய்வீக சக்திகள், குருநாதராகிய தங்களின் ஞான ஒளி மட்டுமே எனது நம்பிக்கை. பணத்தின் மீது எனக்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை என்றாலும் நான் நினைக்கும் அதிகாரத்தையும், உயர்ந்த நிலையையும் பெற பணம் மற்றும் ஆள்பலம் இரண்டும் அபரிமிதமாக தேவைப்படுகிறது. சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் பிராண்ட் வேல்யூ பெற செவ்வாய் அதிக சுபத்துவம் பெற்றிருக்க வேண்டும். எனக்கு செவ்வாய் பெரிய அளவில் சுபத்துவமாக இல்லை என்றாலும் வருங்கால மனைவி ஜாதகத்தில் செவ்வாய் அதிக வலு பெற்று இருக்கிறார். எனவே நிறுவனத்தில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கலாமா? வேறு எந்தத் தொழிலை உப தொழிலாக செய்யலாம்? ஜாதகப்படி எந்த அளவு உயர்வேன்? குறைந்தபட்சம் மத்திய கேபினட் மந்திரியாக வர முடியுமா? எனக்கு மைக் பிடிக்கும் அரசியல்வாதியாக ஆசை இல்லை. ஆனால் பன்னாட்டு தலைவர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் வலிமை வாய்ந்த ஆளுமையாக இருக்க வேண்டும் என்பதே இலட்சியம். வருங்கால மனைவியிடம் என் அன்பை வெளிப்படுத்தி விட்டேன். அவள் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆயினும் தங்களிடம் இருந்து கற்ற வித்தையின் பயனாக எனது திருமண தேதி 30 மார்ச் 2020 முதல் மகன் பிறக்கும் தேதி 29 டிசம்பர் 2020 என்பதைக் கணித்துள்ளேன். எனது இலட்சியங்கள் நிறைவேறுமா?
பதில்:
(துலாம் லக்னம், மகர ராசி, 3ல் ராகு, 4ல் சந், சனி, 5ல் செவ், 6ல் புத, சுக், 7ல் சூரி, 9ல் கேது, 11-ல் குரு, 25-4-1992 மாலை 6-18 நாகர்கோவில்)
லக்னாதிபதி உச்சம், ராசிநாதன் ஆட்சி, சூரியன் உச்சம், செவ்வாய் சுபத்துவம் என ஒரு உயர்நிலை லட்சியத்திற்கு தகுதியுள்ள ஜாதகம். அதேநேரத்தில் சுபரான லக்னாதிபதி சுக்கிரன் உச்ச வர்க்கோத்தமம் பெற்றது பலவீனம் என்றாலும், ராசியில் அவர் நீச்ச புதனுடன் இணைந்து தன்னுடைய பலத்தை இழந்திருப்பது ஒரு நிவர்த்தி.
தந்தை கேட்டை நட்சத்திரம் என்பதால் உங்களுக்கு ஜோதிடம் வரவில்லை. புதன் நீசபங்கம் அடைந்திருப்பதால் உங்களுக்கு ஜோதிட அறிவு இருக்கிறது. நைன்டி கிட்ஸ் செய்யும் அதே தவறுகளை நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அந்தத்துறையில் முதன்மையாகக் வேண்டும் என்கின்ற லட்சியத்தை விடுத்து, கட்டிட தொழிலும் செய்ய வேண்டும், ஜோதிடம் வேண்டும், அரசியலிலும் செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை சிதற விடும் வேலைகளைச் செய்கிறீர்கள்.
துலாம் லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் குருவின் தசை இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு ஆரம்பிக்க இருக்கிறது. ஆயினும் குரு தன்னுடைய ஆறாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து பதினொன்றாம் வீட்டில் அதிக வலுவான நிலையில், அம்சத்தில் உச்சம் பெற்று இருப்பது சிறப்பான அமைப்பு. ஆகவே உங்களுக்கு குருதசை நல்ல யோகத்தைச் செய்யும்.
ராஜயோகங்கள் ராஜயோக கிரகங்களின் தசையில்தான் கிடைக்கும் என்பது விதி. அதன்படி 45 வயதிற்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் சனி தசை உங்களுக்கு யோக தசையாக அமையும். சனியே உங்கள் ராசிநாதன் என்பதால் நீங்கள் நினைக்கின்ற உயரத்தை அப்போது எட்டமுடியும். கட்டிடத் தொழிலில் மட்டுமே உங்களது கவனத்தை இப்போது செலுத்துங்கள். வேறு எதிலும் கவனம் சிதற வேண்டாம்.
ஜென்மச் சனி நடப்பதால் குருதிசை சுயபுத்தி வரையில் நீங்கள் நினைப்பது எதுவும் நடைபெறாது. 30 வயதிற்கு பிறகுதான் உங்களுக்கு வாழ்க்கையில் சில நிலைகளை எட்ட முடியும். கிரகமாலிகா யோக அமைப்பில் கிரகங்கள் அனைத்தும் பரவலாக, ஒரு நங்கூரம் போல, வலிமை பெற்ற குருவிற்கு 5, 6, 7, 8, 9 என்ற நிலையில் அமர்ந்திருப்பதால் உங்களால் உலக அளவில் புகழ் பெற முடியும்.
இந்த வயதிலேயே தன்னுடைய திருமண தேதியையும், மகன் பிறக்கும் நாளையும் கணிக்கும் அளவிற்கு ஜோதிடத் திறமை பெற்றதற்கு வாழ்த்துக்கள். மார்ச் 30ஆம் தேதி உங்களின் திருமணம் நடந்ததா என்பதை தெரியப்படுத்துங்கள். குரு தசையின் பிற்பகுதி முதல் வாழ்க்கையின் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.