adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 284 (14.04.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


என். கோபாலன், கும்பகோணம்.C

கேள்வி:

எனது ஒரே மகள் இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறார். அவருக்கு எந்தத் துறையில் கல்லூரி படிப்பு அமையும்? எந்தத் துறையில் வேலை அமையும் என்பதை தயவு செய்து சொல்லுங்கள். லக்னம் மற்றும் லக்னாதிபதி நன்றாக இருக்கிறாரா? எனது குழந்தையின் ஜாதகத்தில் சந்திர அதி யோகம் இருக்கிறதா? சூரியனுக்கு ஒளி குறைந்ததால் அதி யோகம் பலன் தருமா? பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் ஏதாவது இருந்தால் அறிவுரை சொல்லுங்கள்.


பதில்:

(துலாம் லக்னம், மீன ராசி. 1ல் சூரி, புத, கேது 6-ல் சந், 7ல் ராகு, 10ல் சனி, 12ல் சுக், செவ், குரு 25-10- 2004 காலை 7-10 கும்பகோணம்)

ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் உள்ள கிரகத்தின் படிப்பு மற்றும் தொழில் அமையும்  என்பதன்படி உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் செவ்வாயே அதிக சுபத்துவமாக இருக்கிறார், எனது சுபத்துவ, சூட்சும வலுத் தத்துவத்தின்படி 6-8-12 மறைவிடங்கள் மற்றும் நீச்சம், பகை என்பதும் கவனிக்கப்பட தேவையில்லை என்பதால், இங்கே செவ்வாய் பன்னிரண்டில் மறைந்திருக்கிறார், நீச்ச சுக்கிரனுடன் இணைந்திருக்கிறார் என்பது கவனிக்கப்பட தேவையில்லை. மகளின் ஜாதகப்படி பௌர்ணமிக்கு அருகில் இருக்கின்ற 90 சதவிகித ஒளிபொருந்திய சந்திரனுக்கு நேரெதிரே, சுக்கிரன், குருவுடன் செவ்வாய் இணைந்திருப்பதால் அவளுக்கு பயாலஜி படிப்பு மிக நன்றாக வரும். 

இந்த அமைப்பின்படி மருத்துவம், எஞ்சினியரிங், கட்டிடம், விளையாட்டு, அதிகாரம் ஆகிய செவ்வாயின் துறைகளில் அவளுக்கு எதிர்காலம் அமையும். ஜாதகப்படி பன்னிரண்டில் சுக்கிரன் நீச்ச நிலையிலிருந்தாலும், பரிவர்த்தனை அமைப்பிலும், சந்திர அதியோக அமைப்பிலும் இருப்பதால், மகளது ஜாதகம் மிகவும் நன்றாகவே இருக்கிறது. அதைப்போலவே துலாம் லக்னத்திற்கு யோகர்களான சனி, புதன், சுக்கிர தசைகள் வாழ்நாள் முழுவதும் நடப்பதால், எதிர்காலத்தில் குழந்தை மிகவும் நல்ல நிலையில் இருப்பாள். மகளது ஜாதகத்தில் சூரியன் துலாம் ராசியில் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்திருப்பதால் சூரியனுக்கு ஒளி குறைவு என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

சூரியனுக்கு ஒளி குறைவு என்பது இங்கே இல்லவே இல்லை. சூரியனுடைய ஒளி நமக்குத்தான் மேகங்களால் மறைக்கப்பட்டு குறைவாக கிடைக்கிறதே  தவிர சூரியன் அங்கே நிலையாக தன்னுடைய ஒரே ஒளித்தன்மையுடன்தான் இருக்கிறது. ஆகவே சந்திர அதியோக அமைப்பில் சூரியனுடைய ஒளியை குறைத்துக் கணிப்பது கூடவே கூடாது. ஜாதகம் வலுவாக இருப்பதால் பரிகாரம் தேவையில்லை. எதிர்காலத்தில் அனைத்தும் சரியான பருவத்தில் நேர்மையான முறையில் கிடைத்து மிகவும் சிறப்பாக இருக்கக்கூடிய ஜாதகம். வாழ்த்துக்கள்.


உமா, ஈரோடு.

கேள்வி:

ஐயா என் அம்மா நான் சிறுவயதாக இருக்கும்போதே இறந்து விட்டார்கள். அதன்பிறகு  என் மாமாக்கள் என் அம்மாவின் பணம், நகை அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டார்கள். நாங்கள் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. அதனால் அவர்கள் மீது பாகப்பிரிவினை வழக்கு தொடர்ந்திருக்கிறோம். இந்த வழக்கு எங்களுக்கு சாதகமாக முடியுமா? அப்படி என்றால் எத்தனை நாட்கள் ஆகும்?

பதில்:

(ரிஷப லக்கனம், மீனராசி, 4ல் கேது, 5ல் செவ், 6ல் சுக், குரு, சூரி, 7ல் புத, 10ல் ராகு, 11ல் சந், 12ல் சனி, 9-11-1970 இரவு 7-55 ஈரோடு)

வழக்கை குறிக்கும் ஆறாமிடத்தில் லக்னாதிபதி சுக்கிரன் அமர்ந்து, அவரே ஆறாம் அதிபதியுமாகி தசை நடத்துவதால் நீங்கள் இன்னும் 6 வருடங்கள் இந்த வழக்கிற்காக அலைய வேண்டி இருக்கும். 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும். அதுவரை முடிவிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஆறாம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் ஒன்றாக இணைந்து, சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகி உள்ள நிலையில், பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனுக்கு எட்டில் இவர்கள் இருப்பதால்  இந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வாழ்த்துக்கள்.

எம். மகாலட்சுமி, தூத்துக்குடி.

கேள்வி:

ஜோதிடத் தந்தைக்கு எனது பணிவான வணக்கம். நான் உங்களது மாலைமலர் கேள்வி  பதில்களை வெகு காலமாக படித்து வருகிறேன். இது எனது கணவரின் ஜாதகம். நானும் எனது கணவரும் அரசாங்க வேலையில் இருந்தும் கடந்த 5 வருடங்களாக மிகுந்த கடன் பிரச்சனையில் வீட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து  வருகிறோம். எனது மாமனார் பல லட்சங்களை எங்கே விட்டார் என்று இதுவரை தெரியவில்லை. கேட்டாலும் பதில் சொல்வதில்லை. பணம் வரும் என்று மட்டும் சொல்கிறார். இதனால் நற்பண்புகளைக் கொண்ட எனது கணவர் மிகுந்த மன உளைச்சலால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். இந்த நிலை எப்போது மாறும்? எங்களது கடன் பிரச்சனை எப்போது தீரும்? எங்களது பொருளாதார நிலை உயரும்? எனது மாமனார் தொலைத்த பணம் மீண்டும் கிடைக்குமா? என்னை உங்கள் மகளாக பாவித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கூறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(துலாம் லக்னம், கடக ராசி, 1ல் கேது, 2ல் செவ், சனி, 4ல் சூரி, புத, சுக், 5ல் குரு, 7ல் ராகு, 10ல் சந், 26-1-1986 அதிகாலை 12-33 தூத்துக்குடி)

எனது சுபத்துவ சூட்சுமவலு கோட்பாட்டின்படி சிம்மம் குருவின் பார்வையால்  சுபத்துவமாகி, சூரியனும், சந்திரனும் நேர் எதிரே நிற்கும் தைப்பூச பௌர்ணமி தினத்தன்று பிறந்து, சிம்மமும், சிம்மாதிபதியும் சுபத்துவமாக இருப்பதால் உங்களுடைய கணவர் அரசு வேலையில் இருக்கிறார். மாமனார் எங்கே பணத்தை தொலைத்தார் என்பதெல்லாம் உங்களுடைய கணவரின் ஜாதகத்தில் தெரிவதற்கு சாத்தியம் இல்லை. ஆனால் உங்கள் கணவருக்கு ராகுவின் சாரத்தில் அமர்ந்த கேதுவின் தசை நடப்பதால் கடந்த ஆறு வருடங்களாக உங்களுக்கு நேரம் சரியில்லை என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

அதோடு எனது கணிப்பின்படி உங்களுக்கு அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும்  கண்டிப்பாக ஏழரை, அஷ்டமச்சனி அமைப்பு தற்போது நடந்து கொண்டிருக்கும். பாபத்துவ செவ்வாயின் வீட்டில் அமர்ந்த ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது இருப்பதால், கடந்த ஆறு வருடங்களாக உங்கள் கணவருக்கு கடுமையான சோதனைகள் இருக்கும். இந்த நிலை வரும் ஆகஸ்டு மாதம் முதல் மாற இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்கும் சுக்கிர தசையில் இருந்து நிலைமை மேம்படும். 

சுக்கிரன் லக்னாதிபதியாகி நான்காம் இடத்தில் திக்பல அமைப்பில் அமர்ந்து, அம்சத்தில் ஆட்சியும் பெற்று, பத்தாம் இடத்தில் உள்ள பூரணச் சந்திரனின் சாரமாகிய திருவோணம் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் சுக்கிர தசை முதல் உங்களுடைய கணவரின் வாழ்க்கை மேம்படும். பௌர்ணமி சந்திரனுக்கு ஏழு, எட்டில் புதன், சுக்கிரன், குரு ஆகிய மூன்று கிரகங்கள் பூரண அதி யோக அமைப்பில் இருப்பதாலும், அதில் உள்ள சுக்கிரனின் தசை சரியான பருவத்தில் வருவதாலும் கடன்கள் அனைத்தையும் முற்றிலுமாக அடைக்க முடியும். 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடன் தொல்லைகள் இன்றி நிம்மதியாக இருப்பீர்கள்.வாழ்த்துக்கள்.

எஸ். ருத்ரையா, திருக்கோவிலூர்.

கேள்வி:

மகளுக்கு 38 வயது ஆகியும் திருமணம் செய்ய முடியவில்லை அனைத்து வசதிகளும் இருந்தும் அவளுக்கு திருமணம் செய்ய முடியாமல் தத்தளிக்கிறேன். உறவினர்களின் கேலிப்பேச்சு தாங்கமுடியவில்லை. என்ன குற்றம் இருக்கிறது அவளது ஜாதகத்தில்? ஏன் சகல வசதிகளும் இருந்தும் மாப்பிள்ளை வீட்டார் ஒரு பதிலும் சொல்லாமல் திரும்பிப் போகிறார்கள்? கடந்த 15 வருடங்களாக தூக்கமின்றித் தவிக்கும் இந்த தகப்பனின் நிலை ஒரு தகப்பனாகிய உங்களுக்கு புரியும் என்று நம்பி இந்த கேள்விக்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதில்:

பாப கிரகங்களான செவ்வாய், சனி இருவரும் ஒரு ஜாதகத்தில் 2, 7, 8ம் இடங்களில் இணைந்திருப்பார்களேயானால் அவர்களுக்கு திருமணம் மிக தாமதமாக நடைபெறும் என்பதை அடிக்கடி மாலைமலரிலும், வின்டிவியிலும் சொல்லி வருகிறேன். அந்த அமைப்பு உங்கள் மகளுக்கு இருக்கிறது. கூடுதலாக உங்களது வீட்டில் மூவருக்கு விருச்சிகராசியாகி ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதும் கடந்த ஏழு வருடங்களாக உங்கள் குடும்பத்தில் எந்தவித நன்மைகளும் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது. 

கடந்த காலங்களில் மகளுக்கு திருமணம் ஆகி இருந்தாலும் அது சரியாக இருக்காது. திருமணம் இதுவரைக்கும் ஆகாததும் ஒரு விதத்தில் நன்மைதான். வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மகளுக்கு மாப்பிள்ளை முடிவாகும். அடுத்த வருடம் சித்திரை மாதத்திற்குள் அவளுக்கு திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கையில் நன்றாக இருப்பாள். வாழ்த்துக்கள். மூன்று கிரகம் உச்சமாகியும் நன்றாக இல்லை.... 

(14.04.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.