ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
க. பாலமுருகன், சைதாப்பேட்டை.
கேள்வி:
2004-இல் சிவில் இன்ஜினியரிங் முடித்து பிரபல நிறுவனத்தில் 2010 வரை பணியில் இருந்தேன். 2012 முதல் பணியினை டிசைன் இன்ஜினியராக மாற்றம் செய்தேன். மாறிமாறி வேலை மாற்றம் செய்து ஒரு நிறுவனத்தில் ஒரு வருடம் கூட பணிபுரிய முடியவில்லை. முன்னேற்றமும் இல்லை. நான் சிவில் இன்ஜினியரிங் துறையிலேயே தொடரலாமா அல்லது தொழில் எதுவும் செய்யலாமா? தொழிலில் முன்னேற்றம் வருமா? பணியில் தொடரலாமா அல்லது தொழில் செய்யட்டுமா? தங்கள் அறிவுரையை
எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
பதில்:
(மீன லக்னம், கன்னி ராசி, 1ல் சூரி, புத, 2ல் சுக், செவ், 4ல் ராகு, 7ல் சந், 8ல் சனி, 9ல்குரு, 10ல் கேது, 29-3-1983 காலை 6-53 திருச்சி)
மீன லக்னமாகி சிவில் இன்ஜினியரிங் பணிக்கான செவ்வாய் இரண்டில் ஆட்சிபெற்று
வர்கோத்தமமும் அடைந்து, சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பதால் உங்களுக்கு கட்டிடம் சம்பந்தமான துறைதான் ஏற்றது. அதன்படியே அதில் பணி புரிகிறீர்கள்.
மேம்போக்காக பார்க்கையில் லக்னாதிபதி
குரு லக்னத்தை பார்ப்பதும், ஒன்பதாம் அதிபதி
சுபத்துவம் ஆகி ஆட்சியாக இருப்பதும், பௌர்ணமி யோகம் இருப்பதும், தற்போது லக்னாதிபதியின் தசை நடந்து கொண்டிருப்பதும் நல்ல யோக அமைப்புகளாக தெரிந்தாலும், லக்னாதிபதி குரு நீச்ச புதனின் நட்சத்திரத்தில் இருந்து தசை நடத்திக் கொண்டிருப்பது உங்களுக்கு நல்ல பலன்களை தராது.
ஆதிபத்திய விசேஷம் இல்லாத புதன் லக்னத்தில் பலமாக குரு, சந்திரன் பார்வையில் அமைந்திருப்பது உங்களுடைய புத்திசாலித்தனத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர பொருள் வளர்ச்சியை உங்களுக்கு தராது. எந்த ஒரு நிலையிலும் கட்டிடம் தொடர்பான வேலையைத் தவிர வேறு வேலைகளை செய்ய வேண்டாம். அது உங்களுக்கு ஒத்து வராது. அதைப் போலவே இன்னும் மூன்று வருடங்களுக்கு சொந்தத் தொழில் செய்யக்கூடாது.
வரும் ஜூலை மாதம் முதல் மூன்று வருடங்களுக்கு எட்டுக்குடைய சுக்கிரனின் புக்தி ஆரம்பிக்க இருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் எந்தத் தொழில் செய்தாலும் அது சரியாக வராது. ஜாதகம் யோகமாக இருப்பதால் முறையான ஜோதிடரிடம் கேள்வி கேட்டு, அது அவர் பார்வையிலும் பட்டு உங்களுக்கு பதிலாக வருகிறது. ஜாதகம் சரியில்லை எனில் தொழிலை ஆரம்பித்து கூடுதலாக கடன்பட்டு “உள்ளதும் போச்சுடா.. நொள்ளக் கண்ணா” என்ற நிலையில் ஜோதிடரிடம் வருவீர்கள். 2023 ஆம் ஆண்டு வரை எதுவும் செய்ய வேண்டாம். தற்போது சென்று கொண்டிருக்கும் பணிக்கே செல்லுங்கள். நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
சுரேஷ். சி. தெல்கர், அனந்தப்பூர்.
கேள்வி:
குருதசையில் நான் துவங்கிச் செய்து வந்த மெடிக்கல் மார்க்கெட்டிங் தொழிலை சகோதரர்களிடம் இழந்தேன். அவர்களால் ஏமாற்றப்பட்டேன். யாருக்கும் எந்த தீங்கும் நான் செய்யவில்லை. சகோதரர்களை முன்னேற்றப் பாடுபட்டேன். அவர்களால் ஏமாற்றப்பட்டேன். கடந்த 8 வருடங்களாக குரு தசையில் சிரமங்களை மட்டுமே அனுபவித்தேன். எப்படியோ பெரும் தொல்லைகளை மட்டுமே கொடுத்த அந்த
பாதகாதிபதி தசையைக் கடந்துள்ளேன். நடைபெறும் சனி தசையில் எனது வியாபாரம், பொருளாதார முன்னேற்றம் எப்படி இருக்கும்?
பதில்:
(மிதுன லக்னம், மகரராசி, 1ல் கேது, 5ல் சுக், செவ், 6ல் சூரி, புத, 7ல் குரு, ராகு, 8ல் சந், 12ல் சனி, 10-12-1972 மாலை 6-40 வாணியம்பாடி)
தசாநாதன் எந்த ஒரு காரக கிரகத்திற்கு ஆறு, எட்டாக அமைந்து தசை நடத்துகிறாரோ, அந்த கிரகத்தின் மூலம் பலனிருக்காது மற்றும் தொந்தரவுகள் நடைபெறும் என்பது ஜோதிட விதி. அந்த அமைப்பின்படி தற்போதைய தசாநாதன் சனி, சகோதர காரகனாகிய செவ்வாய்க்கு எட்டில் இருந்து தசை நடத்துவதால், இந்த சனி தசை முழுவதும் உங்களுடைய சகோதரர்களால் ஏமாற்றமும், துயரமும், தொல்லைகளும் இருக்கும். சகோதரர்களிடமிருந்து
சற்று விலகியே இருங்கள்.
லக்னாதிபதி தசையும், ராசிநாதன் தசையும் பெரிய கஷ்டங்களை தந்து விடுவதில்லை என்பதை அடிக்கடி சொல்கிறேன். தசா நாதன் சனி ஆறாம் அதிபதி செவ்வாயின் சாரம் பெற்றிருந்தாலும், செவ்வாய், சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாகி ஐந்தாமிடத்தில் இருப்பதால் உங்களுக்கு இந்த மருத்துவத் தொழில் நீடிக்கவே செய்யும். இதையே தொடர்ந்து நடத்துங்கள். சனி ராசிநாதன் என்பதால் பெரிய தொல்லைகளை நிச்சயமாக செய்துவிட மாட்டார்.
மகர ராசிக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஜென்மச்சனி நீடிக்க உள்ளதால், 2022ஆம் ஆண்டு வரை உங்களுக்கு நல்ல பலன் சொல்வதற்கு இல்லை. இந்த இரண்டு வருட காலகட்டமும் உறவுகள், நட்புகள் எப்படிப்பட்டவை என்பதை புரிய வைத்து, பணத்தின்
அருமையை தெரிய வைக்கும் என்பதால் பணமின்றி கஷ்டப்படவே செய்வீர்கள். எதிலும் அகலக்கால் வைத்து விடவேண்டாம். இருப்பதை அப்படியே நடத்திக்கொண்டிருங்கள். 2023 ஆம் ஆண்டு முதல் மிகவும் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
பி. ஜெனிஃபர், திருவாரூர்.
கேள்வி:
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். தங்களின் பதிவுகளை மாலைமலர் மற்றும் யூட்யூபில் குடும்பத்தாரோடு அமர்ந்து பார்ப்பேன். எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி ஜோதிடத்தை எடுத்துரைப்பீர்கள். கூட்டு கிரகங்களைக் கணிப்பதில் தாங்கள் சிறந்தவர் ஐயா. என்னுடைய ராசியிலும் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்துள்ளது. இந்த இணைவு என்னை கலக்கம் அடையச் செய்கிறது. உயர்கல்வி நன்றாகப் படித்து அரசாங்கத்தில் பணி செய்ய வேண்டும் என்பது எனது லட்சியம். எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
(விருச்சிக லக்னம், மேஷ ராசி, 3ல் கேது, 6ல் சூரி, சந், புத, சுக், குரு, சனி, 7ல் செவ், 9ல் ராகு, 4-5-2000 இரவு 7- 5 திருவாரூர்)
ஆறாம் இடமான மேஷத்தில் ஆறு கிரகங்கள் சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை இணைந்திருப்பது ஒரு வித்தியாசமான அமைப்புத்தான். இதில் மிக முக்கியமாக இந்தக் கிரகங்கள் அனைத்தும் ராகுவிற்கு நான்காமிடத்தில்
இணைந்திருக்கின்றன. வாழ்வின் மிக முக்கியமான பருவமான 24 வயதிலிருந்து 42 வயது வரை உன்னை இராகு வழி நடத்த இருக்கிறார். அந்த ராகு 9-ஆம் இடத்தில் அவருக்கு மிகவும் பிடித்த கடக வீட்டில் இருப்பது விசேஷம். ராகுவுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் கூட்டு சேர்க்கையாக இருக்கும்பொழுது அந்த கிரகங்களின் பலனை ராகு கவர்ந்து தன்னுடைய தசையில் செய்வார் என்பதுதான் விதி.
இந்த அமைப்பின்படி இந்தக் கூட்டுக் கிரகச் சேர்க்கை கிரகங்களின் சேர்க்கை பலன் உனக்கு ராகு தசையில் கிடைக்கும். ஏழில் அமர்ந்து லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தை பார்த்தாலும் அவரும் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் ஆகியிருக்கிறார். நல்ல வேளையாக அஸ்தங்கத்தின் ஆரம்ப நிலையில்தான் அவர் இருக்கிறார். கிட்டத்தட்ட 16 டிகிரி விலகி இருப்பது நல்லதுதான். இதனை முழுவதுமாக அஸ்தங்கம் என்று சொல்லிவிட முடியாது. எனவே உன்னுடைய ஜாதகத்தில் கூட்டு கிரகங்கள் ஆறில் அமைந்திருந்தாலும் லக்னம், லக்னாதிபதி போன்றவை வலுவாகவே இருக்கின்றன.
இந்த கூட்டுச் சேர்க்கையில் சூரியன் உச்சமாகி இருப்பது மிகவும் சிறப்பு. சூரியன் குருவுடன் மிக நெருக்கமாக இணைந்து சுபத்துவமாகி இருப்பதாலும், சுக்கிரனும் அங்கே இருப்பதாலும், சூரியனே தொழில் ஸ்தானாதிபதியாகி வலு அடைந்திருப்பதாலும் உனக்கு
அரசு வேலை அமைப்பு நிச்சயம் உண்டு. இந்தக் கிரகச் சேர்க்கை சேர்க்கையில் நீச்ச சனியும் இணைந்திருப்பது நல்லது அல்ல. ஆயினும் இந்த நீச்ச சனியின் தசை 58 வயதிற்கு பிறகே உனக்கு வர இருக்கிறது. ஆகவே சனியால் நடைபெற இருக்கும் தீயவை உனக்கு 58 வயதிற்கு பிறகே நடக்கும்.
அதாவது அரசு வேலையில் நீ 58 வயதுக்கு பிறகு நீ ரிட்டையர் ஆகி பொருளாதாரத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே வயதான காலத்தில் வரும் நிலைகளுக்கு இப்போதே கவலைப்படத் தேவையில்லை.
தர்மகர்மாதிபதிகளான சூரியன், சந்திரன் இருவரும் இணைந்து அங்கே சூரியன் உச்சமாகி குருவை அஸ்தமனம் செய்து மிகுந்த சுபத்துவமும் ஆகி, சுக்கிரனும் அங்கே இருப்பதால் ஆறாமிடத்தில் உள்ள இந்த சேர்க்கை உனக்கு அரச லாபம் போன்ற பொருளாதார நிலைகளைத்தான் தரும். புதனும், சனியும் அங்கே இணைந்திருப்பது யோகத்தில் சிறிது குறைவு. அவ்வளவுதான். 2024 ல் ஆரம்பிக்கும் ராகுதசை முதல் மிகவும் நன்றாக இருப்பாய் அம்மா. வாழ்த்துக்கள்.
எம். பழனிச்சாமி, ஈரோடு.
கேள்வி:
குருஜி அவர்களுக்கு வணக்கம். கடந்த 18 வருடங்களாக எந்தத் தொழிலும் நிரந்தரமாக அமையவில்லை. என் ஜாதகப்படி என்ன தொழில் அமைய வாய்ப்பு உள்ளது? நம்பியிருக்கிறேன். அருள்கூர்ந்து சொல்லுங்கள்.
பதில்:
(மீனலக்னம், ரிஷபராசி, 3ல் சந், குரு, ராகு, 9ல் கேது, 11ல் சூரி, புத, சுக், 12ல் செவ், சனி, 31-1-1956 காலை 10-30 ஈரோடு)
கடந்த பதினாறு வருடங்களாக லக்னாதிபதி குருவின் தசை பாபத்துவ நிலையிலிருந்து
நடைபெற்றதால் உங்களுக்கு எந்த தொழிலும் நிரந்தரமாக அமையவில்லை. லக்னாதிபதி
குருவே, ஜீவனத்திற்கும் அதிபதியாகி தன்னுடைய பத்தாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து தனக்கு ஆகாத சுக்கிரனின் பகை வீட்டில் ராகுவோடு இணைந்திருப்பதால் குரு தசை முழுக்க உங்களுக்கு தொழிலை சரியாக அமைத்துத் தரவில்லை.
அவர் சனியோடு இணைந்து பாபத்துவம் பெற்ற செவ்வாயின் சாரத்தில் அமர்ந்திருப்பதும் குற்றம். தற்போது குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்த சனி தசை 19 வருடங்களுக்கு நடைபெற இருக்கிறது. ஜாதகப்படி புதனே அதிக சுபத்துவமான கிரகம் என்பதால் புதனின் காரகத்துவங்களான தரகு, அறிவை மூலதனமாக வைத்து செய்யும் தொழில்கள், பேப்பர்
ஸ்டேஷனரி போன்ற தொழில்களை அமைத்துக் கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் 50 வயதிற்கு மேல் புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டு சாதித்துவிட முடியாது. தற்போது நான் சொன்ன தொழில்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருக்கும். அதை இனிமேல் அமைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலம்
(07.04.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.