adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 281 (24.03.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

சஞ்சய், சென்னை.

கேள்வி:

நான் தங்களின் தீவிர ரசிகன். கடந்த 8 வருடங்களாக வீட்டில் கடுமையான பிரச்சினை. கல்லூரி முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் நிரந்தர வேலை இல்லை. தொழிலில் முன்னேற்றம் இல்லை. எந்த வேலையில் சேர்ந்தாலும் பிரச்சனை ஒன்றே முதன்மையாக உள்ளது. வீட்டிலும் கடுமையாக பிரச்சினை இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மை, விரக்தியில் இருக்கிறேன். தொழில் செய்யவே விரும்புகிறேன். ஆனால் என்னுடைய சூழ்நிலை தற்போது அதற்கு இடமளிக்கவில்லை. எப்போது தொழில் செய்யமுடியும்? தொழிலில் முன்னேறுவது எப்போது? சமுதாயத்தில் கொஞ்சமேனும் அந்தஸ்தோடு வாழ்வேனா? பிறந்ததிலிருந்து அவமானத்தை மட்டுமே சந்தித்திருக்கிறேன். எப்போது என் வாழ்க்கைக்கு விடிவு காலம் கிட்டும்?


பதில்:

(துலாம் லக்னம், தனுசு ராசி, 3ல் சந், ராகு, 4-ல் சனி, 9ல் செவ், கேது, 11-ல் சூரி, புத, குரு, 12ல் சுக், 6-9-1992 காலை 9-42 விருதுநகர்)

தனுசு ராசி, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் அனைத்து இளைஞர்களும் கடந்த மூன்று வருடங்களாக கடுமையான போராட்டங்களில் இருக்கிறீர்கள் என்பதே உண்மை. 2017, 18, 19 ம் வருடங்கள் தனுசுராசி இளைஞர்களை ஜென்மச்சனி என்ற பெயரில் நிறையவே ஆட்டி வைத்து விட்டது. இந்த வருடத்திலிருந்து தனுசு ராசியினர் அனைவரும் வாழ்க்கையில் நன்றாக இருக்க ஆரம்பிப்பீர்கள்.

ஜாதகப்படி பத்தாம் அதிபதி வளர்பிறைச் சந்திரனாகி, அவரது நண்பரான தனாதிபதியின் பார்வை மற்றும் குருவின் பார்வையில் அமர்ந்து, பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதாலும், துலாம் லக்னத்திற்கு கெடுதல்களை தரும் குரு புக்தி முடிந்து தற்போது சனி புக்தி நடந்து கொண்டிருப்பதாலும், ஜீவனாதிபதி ஆன இந்த சந்திரன் தசையில்  நீங்கள் சொந்த தொழில் செய்யலாம். இனிமேல் படிப்படியாக முன்னுக்கு வருவீர்கள். 2023 ஆம் ஆண்டு முதல் மிகவும் சந்தோஷமான, நிம்மதியான, தொழில் வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் உங்களுக்கு அமையும். வாழ்த்துக்கள்.

கே. ராஜப்பா, கோவை.

கேள்வி:

பேரனின் எம் எஸ் படிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் வெளிநாட்டில் முடிய உள்ளது. படிப்பு முடிந்ததும் இந்தியாவிற்கு திரும்புவான். திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். எப்போது நடக்கும்? பெண் அந்நியத்திலா அல்லது நெருங்கிய உறவினர் வகையிலா? எனது பேரனுக்கு தங்களின் ஆசீர்வாதங்களுடன் கூடிய பதிலை இந்த 84 வயது முதியவன் எதிர்பார்க்கிறேன்.

பதில்:

(மிதுன லக்னம், தனுசு ராசி, 1ல் கேது, 3ல் குரு, 4ல் சுக், 5ல் சூரி, செவ், 6-ல் புத, 7-ல் சந், ராகு, 8ல் சனி 11-11-1991 இரவு 9-13 கோவை)

திருமணத்தைக் குறிக்கும் ஏழாமிடத்தில் ராகு அமர்ந்து, ஏழுக்குடைய குருவின்  பார்வை மற்றும் குடும்பாதிபதி சந்திரனின் இணைவையும் பெற்றுள்ளதால் உங்கள் பேரனுக்கு வரும் ராகு தசை. சுய புக்தி, புதன் அந்தரத்தில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதத்திற்குள் திருமணம் நடைபெறும். பெண் அந்நியம்தான். இன்னும் சிறிது காலத்திற்கு பேரன் வெளிநாட்டிலேயே இருப்பார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் வெளிநாடு செல்வார். 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு கொள்ளுப் பேரன் பிறப்பான். கொள்ளுப் பேரனை நீங்கள் பார்ப்பீர்கள். வாழ்த்துக்கள்.

டி.என். ஜானகிராமன், சூளைமேடு.

கேள்வி:

வாடி இருக்கும் மக்களுக்கு தெம்பூட்டும் குருஜி அவர்களே.. நான் எப்பொழுதும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் நாமும் நன்றாக இருப்போம் என்ற எண்ணத்துடன் இருப்பவன். அதைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறேன். ஆனால் எனக்கு தொடர்ந்து துன்பங்கள்தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனது கடன் சுமையும் பிரச்சினைகளும் எப்போது குறையும்? நல்ல எதிர்காலம் எப்போது அமையும்? வேலை செய்யும் இடத்தில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. நான்தான் வேலையை பிடித்துக்கொண்டு இருக்கிறேனே ஒழிய வேலை எப்பொழுதோ என்னை விரட்டி விட்டது. நான் இப்போதிருக்கிற வேலையை விட்டால் எனக்கு வேறு நல்ல வேலை கிடைக்குமா அல்லது தொழில் தொடங்கினால் செட்டாகுமா? என்ன தொழில் செய்வது? அதை யார் பெயரில் தொடங்கினால் சிறப்பாக அமையும்? எனது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்று தெளிவாக கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.

பதில்:

(சிம்ம லக்னம், மகர ராசி, 3ல் சனி, 4ல் குரு, 5ல் கேது, 6ல் சந், 8ல் சூரி, புத, சுக், செவ், 11ல் ராகு, 6-4-1983 மதியம் 3-30 அரக்கோணம்)

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியை விட ஆறுக்குடையவன் அதிக வலிமையாக இருந்தால் கடன் தொல்லை  இருந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் லக்னாதிபதி சுபத்துவ, சூட்சுமவலு அமைப்பில் இருக்கும் நிலையில் கடன்களை சமாளிக்க முடியும். கடன்களால் வாழ்வை செழிப்பாகவும் ஆக்கிக் கொள்ள முடியும்.

உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி சூரியன் எட்டில் மறைந்தாலும். வலுப்பெற்ற குருவின் பார்வையில் இருப்பது மிகவும் சிறப்பு. அதேநேரத்தில் சனி உச்சம் பெற்று இருந்தாலும் அவர் ராசிநாதனாக இருக்கிறார். லக்னாதிபதியும் ராசிநாதனும் வலுத்திருக்கின்ற யோக ஜாதகம் உங்களுடையது. அதேநேரத்தில் சிம்ம லக்னத்திற்கு ராகு தசை நன்மைகளை செய்யாது. அதிலும் சுபத்துவம் இல்லாத ராகு கடுமையான கெடுபலன்களைச் செய்வார். பதினோராம் இடத்தில் ராகு இருந்தாலும், நன்மை தராத இடமான மிதுனத்தில் அவர் அமர்ந்து, சுபர்களின் தொடர்புகள் இல்லாத நிலையில் உங்களுக்கு ராகு தசை நன்மைகளை செய்ய வாய்ப்பில்லை.

இந்த வருட கடைசியுடன் உங்களுக்கு ராகு தசை முடிவடைவது நல்லது. இருக்கின்ற வேலையை இந்த வருடம் வரை விடவேண்டாம். அதே நேரத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்த வேலையில் நீங்கள் இருக்க முடியாது. 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் உங்களுக்கு தொழில் அமையும். தொழில் அமைந்த பிறகு உங்களால் கடன்களை அடைக்க முடியும். நடுத்தர வயதில் குரு தசை வருவதால் உங்களால் 40 வயதிற்கு பிறகு வாழ்க்கையில் நன்றாக இருக்க முடியும். வாழ்த்துக்கள்.

டி. கணேசன், மதுரை.

கேள்வி:

தெய்வீகத்தன்மை வாய்ந்த குருவுக்கு வணக்கம். இது நான் எழுதும் மூன்றாவது கடிதம். என் மகன் திருமணம் எப்போது? எந்த தசா புக்தியில் கம்பெனி சார்பாக வெளிநாடு செல்வார்? புரோட்டின் குறைபாடால் ரத்தம் கெட்டியாகி சிகிச்சைக்கு பின் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுகிறான். எப்போது சரியாகும்? அவனது ஆயுள், ஆரோக்கியம் பற்றி கூறவும்.

பதில்:

(மகர லக்கனம், 1ல் ராகு, 6ல் குரு, 7ல் கேது, 10ல் சூரி, சந், புத, செவ், 11ல் சுக், 12ல் சனி, 30-10-1989 மதியம் 1-24 மதுரை)

மகனது ஜாதகப்படி ஆயுள் ஸ்தானாதிபதியான சூரியன் நீச்சம் அடைந்தாலும், திக்பலம் பெற்று, குருவின் பார்வையில் மிகுந்த வலுவோடு இருக்கும் ஜாதகம். அதேநேரத்தில் ஆறாமிடத்தில் லக்னாதிபதி சம்பந்தப்பட்ட குரு இருப்பதால், நடக்கும் சனி தசை முழுவதும் மாத்திரை சாப்பிட்டே தீரவேண்டிய ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும்.

மகனின் ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் திக்பலம் ஆகி, ஐந்து கிரகங்கள் குருவின் பார்வையில்  இருப்பது மிகவும் யோகம். நடப்பு சனி திசையில் ராகு புத்தியில் அக்டோபருக்குப் பிறகு வெளிநாடு செல்வார். திருமணம் 31 வயதில் நடக்கும். சனி தசை முடிந்த பிறகு முழு ஆரோக்கியத்துடன் தீர்க்காயுளுடன் இருப்பார். வாழ்த்துக்கள்.

(24.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.