adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 280 (17.03.2020)

வினோத் கண்ணா, புதுச்சேரி.

கேள்வி:

துலாம் லக்னத்திற்கு முழு யோகம் செய்யும் சனி பகவானின் தசை நடந்தாலும் எனக்கு எவ்வித நன்மையும் நடைபெறவில்லை. மாறாக கடனாளியாக்கப் பட்டுள்ளேன். நிரந்தரமான தொழில் அமையவில்லை. திருமணம் நடைபெறவில்லை .அடுத்து வரும் புதன் தசையாவது நன்மைகளைத் தருமா? என் வாழ்வில் மேன்மை உண்டாகுமா? பரம்பொருளை விட மேலான எனது குருவாக தங்களை நினைத்து கேட்கிறேன். இதுவரை பலமுறை கடிதங்கள் அனுப்பியும் விடை அளிக்காததால் அருள் கூர்ந்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(துலாம் லக்கினம், துலாம் ராசி, 1ல் சந், 4ல் கேது, 9ல் சுக், 10ல் புத, ராகு, 11ல் சூரி, குரு, 12-ல் செவ், சனி, 17-8- 1980 காலை 11-55 பாண்டிச்சேரி)

எல்லா யோக தசைகளும் நன்மைகளை தந்து விடுவதில்லை. அதேபோல அனைத்து அவயோக தசைகளும் தீமைகளைத் தந்து விடுவதில்லை. ஒரு கிரகம் தன்னுடைய நன்மை, தீமைகளை தன்னுடைய சுபத்துவ-சூட்சும வலு அமைப்பின்படியே தருகிறது. பாபக் கிரகங்கள் நன்மை தரும் கிரகங்களாக அமைந்தால் அவை சூட்சும வலுவோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கட்டுரைகளிலும், கேள்வி-பதில்களிலும் அடிக்கடி வலியுறுத்தி வருகிறேன்.

துலாம் லக்னத்திற்கு சனி யோகராக இருந்தாலும், அவர் சுபத்துவ- சூட்சும நிலைகளில் இருக்கும்போது மட்டுமே நன்மைகளைத் தருவார். மாறாக பாபத்துவமாக இருக்கும் போது நிச்சயமாக தீமைகளையே தருவார். உங்கள் ஜாதகப்படி சனி 4, 5-க்குடையவர் ஆகி ஐந்தாம் வீட்டிற்கு எட்டில் மறைந்து, பன்னிரண்டாம் வீட்டில் வர்கோத்தமம் பெற்ற செவ்வாயுடன் இணைந்து அவ யோகியான சூரியனின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார்.

சனி சுபத்துவம்- சூட்சும வலுவின்றி தசை நடத்தும் காலங்களில் அவரது அசுப காரகத்துவங்களான கடன், நோய், அசிங்கம், கேவலம் போன்றவைகளையே தருவார். யோகக் கிரகமாக இருந்தாலும் ஸ்தான பலம், சுபத்துவம், சூட்சுமவலு போன்றவைகள் மிகவும் அவசியம். அடுத்து நடக்க இருக்கும் புதன்தசை ராகுவுடன் மிக நெருக்கமாக இணைந்து இருந்தாலும், தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்து, பத்தாவது வீடான கேந்திர வீட்டில் இருப்பதால், ஒன்பதுக்கு உடையவன் பத்தாமிடத்தில் இருக்கிறார் என்ற அமைப்பின் படி உங்களுக்கு சனியை விட நல்ல பலன்களைத் தரும். வாழ்த்துக்கள்.

வி. முருகானந்தம், சுவிட்சர்லாந்து.

கேள்வி:

உங்களின் நீண்ட நாள் வாசகன் நான். மகளின் வாழ்க்கையை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன். 2010ல் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு தடைபட்டு விட்டது. அதன் பின்னர் 2015 ஜூனில் திருமணம் செய்து வைத்தோம். 2017 அக்டோபரில் அவருடன் வாழ பிடிக்கவில்லை என்று எங்களுடன் வந்து தங்கி விட்டாள். பிள்ளைகளும் இல்லை. இப்பொழுது அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றம் போயிருக்கிறாள். மாப்பிள்ளை வேண்டாம் சேர்ந்து வாழ்வோம் என்று சொல்கிறார். இந்த திருமணம் விவாகரத்தில்தான் முடியுமா? எங்கள் காலத்திற்குள் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாங்கள் அமைத்து கொடுக்க முடியுமா? மகளுக்கு இரண்டாவது திருமணம் நடக்குமா? எப்போது?

பதில்:

நீங்கள் சொல்லியுள்ள விபரங்களும், மகளின் பிறந்தநாள் விபரங்களும் ஒத்துவரவில்லை. மேலும் விவாகரத்து போன்ற கேள்விகளுக்கு கணவன்-மனைவி இருவரின் ஜாதகங்களும்  இருக்கவேண்டும். மாப்பிள்ளையின் ராசி மற்றும் நட்சத்திரம் மட்டும் அனுப்பி இருக்கிறீர்களே தவிர, அவருடைய ஜாதக குறிப்புகளை அனுப்பவில்லை. உங்கள் மகளது பிறந்தநாள் விபரத்தில் காலை மாலை நேரக் குறிப்பில் ஏதோ தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன். மீண்டும் இருவரது குறிப்புகளையும் அனுப்புங்கள். பதில் தருகிறேன்.

ல. சீனிப்பாண்டி. சாத்தூர்.

கேள்வி:

இந்த நூற்றாண்டின் ஜோதிட அதிசயத்திற்கு வணக்கம். எனக்கு இதுவரை நடந்த சுக்கிர தசையில் புதன் புக்தியில் மட்டும் கொஞ்சம் நல்லது நடந்தது. அதுவும் சனி சாரம் வாங்கிய சுக்கிர தசையில் புதன் புக்தியில், சனி சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்களின் மேற்பார்வையாளராக 2 ஆண்டு பணி செய்தேன். தற்போது அரசு பணிக்காக முயற்சி செய்து வருகிறேன். இனி வரும் சுக்கிரன் சாரம் வாங்கிய சூரிய தசையில் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா ஐயா?  கடந்த இரண்டு வருடமாக ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகமாகி கொண்டே வருகிறது. உறவினர்கள் ஜோதிடம் உன் வாழ்க்கைக்கு உதவப் போவது இல்லை என்கிறார்கள். எனக்கு ஜோதிடம் வருமா?

பதில்

(கடக லக்னம், மேஷ ராசி, 1ல் சுக், 2ல் சூரி, புத, 3ல் செவ், குரு, 5ல் ராகு, 8ல் சனி, 10ல் சந், 11ல் கேது, 5-9- 1993 அதிகாலை 3-4 சாத்தூர்)

ஒருவரது ஜாதகத்தில் சந்திரனும் புதனும் வலுத்திருந்தால் ஜோதிடம் வரும். உன்னுடைய ஜாதகப்படி சந்திரன் பத்தாமிடத்தில் வர்க்கோத்தமம் ஆகி, புதன் அதிநட்பு வீட்டில் உள்ளதாலும், தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து கொண்டிருப்பதாலும் உனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

சூரியன் சிம்மத்தில் அமர்ந்து தனாதிபதியாகி, அடுத்தடுத்து யோக தசைகளான சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் வருவதால் உனக்கு அரசுப் பணி கிடைக்கும். செவ்வாயே அதிக சுபத்துவம் ஆக இருப்பதால், மருத்துவம், விளையாட்டு, கட்டிடம், அதிகாரம் போன்ற செவ்வாயின் துறைகளில் அரசு பணிக்கு முயற்சி செய்யவும். சூரியதசை முதல் வாழ்க்கையில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய ஜாதகம் உன்னுடையது. வாழ்த்துக்கள்.

(17.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.