adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 279 (10.03.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

குருபிரசாத், திருவான்மியூர்.

கேள்வி:

பெருமதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு சீடனின் அனேக கோடி நமஸ்காரங்கள். பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பில் முதல் மாணவன் நான். ஐடித் துறையில் நல்ல வேலையில் இருந்தவன் ஐஏஎஸ் வேலைக்காக பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டேன். ஜோதிடமும் கற்று வருகிறேன். சென்ற வருடம் தேர்வு சமயத்தில் அம்மை நோய் தாக்கியதால் தேர்வு எழுத இயலவில்லை. இப்பொழுது படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. இந்த நிலை எப்போது மாறும்? ஐஏஎஸ் பணி அல்லது வெளியுறவுத் துறையில் அதிகாரப் பதவி, இரண்டில் ஒன்றை வரும் கேதுதசை எனக்குத் தருமா? அப்படியான அமைப்பு இருந்தால் எனது முயற்சி எப்போது கைகூடும்?

பதில்:

(விருச்சிக லக்கினம், கடக ராசி, 2ல் குரு, 5ல் சனி,கேது, 7ல் புத, சுக், செவ், 8ல் சூரி, 9ல் சந், 11ல் ராகு, 19-6-1996 மாலை 4-45 திருச்சி)

ஒருவர் அதிகாரமிக்க அரசு வேலையை பெற வேண்டுமெனில், சிம்மம் மற்றும் சிம்மாதிபதி சூரியன் சுபத்துவமாகி வலுத்து பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது சுபத்துவ-சூட்சுமவலு விதி. அதேபோல லக்னமும், லக்னாதிபதியும் பலமாக இருந்து வாழ்நாள் முழுக்க யோகமான அமைப்பிலுள்ள தசா, புக்திகளும் வரவேண்டும். சூரியனை நேருக்கு நேராக குரு பார்க்கும் சிவராஜயோகம் இருப்பது அரசுப் பணிக்கு கூடுதலான ஒரு சிறப்பு.

உங்கள் ஜாதகப்படி விருச்சிக லக்னமாகி, பத்தாமிடமான சிம்மத்தையும், சூரியனையும் சிவராஜ யோகத்தில் உள்ள பங்கமற்ற குரு பார்ப்பது உங்களுக்கு அரசு பணி கிடைக்கும் என்பதைக் காட்டுகிறது. அதேபோல லக்னாதிபதி செவ்வாய் இயற்கை சுப கிரகங்களான சுக்கிரன், புதனுடன் இணைந்து சுபத்துவமாகி லக்னத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்ப்பது மிகவும் சிறப்பு.

லக்னாதிபதி வலுவாக இருப்பது, ஐந்தாம் அதிபதி அந்த வீட்டிற்கு கேந்திரத்தில் ஆட்சி பெற்று சிவராஜயோக அமைப்பில் இருப்பது, 5 10-க்குடையவர்கள் நேருக்கு நேராகப் பார்த்துக் கொள்வது, ஒன்பதாம் அதிபதி வளர்பிறையாகி பாக்கிய வீட்டிலேயே ஆட்சி பெற்றிருப்பது என யோகமான ஜாதகம் உங்களுடையது. அடுத்த வருடம் நடக்க இருக்கும் கேதுதசை, சூரிய புக்திக்குப் பிறகு உங்களுடைய அரசுப் பணி கனவு பலிக்கும். வாழ்த்துக்கள்.

வி. நடராஜன், புலிவலம்.

கேள்வி:

எனது மகன் கேட்டரிங் முடித்து வெளிநாடு சென்று பத்து ஆண்டுகள் ஆகிறது. இந்தியா வரச் சொன்னால் இடையில் வந்து விட்டால் இருக்கும் நாட்டின் குடியுரிமை கிடைக்காது, இப்போது வரமுடியாது என்கிறார். அவருக்கு வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதா? எதிர்காலம் எப்படி? பெரும் கஷ்டத்தில் உள்ள எங்களுக்கு அவரின் உதவி கிடைக்குமா என்பதை தயவு செய்து சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(விருச்சிக லக்னம், சிம்ம ராசி, 1ல் செவ், 2ல் சனி, 3ல் சூரி, 4ல் புத, 5ல் சுக், ராகு, 6ல் குரு, 10ல் சந், 11ல் கேது, 5-2-1988 அதிகாலை 2-5 திருச்சி)

வெளிநாட்டில் வாழ்வதையும், அங்கேயே நிரந்தரமாக வசிப்பதையும் குறிக்கும் 8-12ஆம் இடங்கள்  சுபத்துவ அமைப்பில் இருந்தால் ஒருவர் நிரந்தரமாக வெளிநாட்டில் வசிப்பார் என்பது விதி. அதன்படி மகனுக்கு 12-ஆம் இடத்தைக் குரு பார்த்து, 12 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சமாகி, எட்டாம் இடத்தை குருவின் பார்வை பெற்ற சுபத்துவ சனி பார்ப்பதால் உங்கள் மகன் வெளிநாட்டில் நிரந்தரமாக வசிப்பார்.

நடப்பு சந்திர தசையிலேயே அவருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். அடுத்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்க இருக்கும் சந்திர தசை, கேது புக்தியில், உச்ச சுக்கிரனின் பார்வையைப் பெற்ற கேது, அவருக்கு திருமண பாக்கியத்தை கொடுப்பார். அடுத்தடுத்து யோக தசைகள் வருவதால் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய ஜாதகம் மகனுடையது. உங்கள் கஷ்டங்களையும் தீர்ப்பார். வாழ்த்துக்கள்.

ஒரு வாசகர், சென்னை

கேள்வி:

ஜோதிடத்திற்கு புது இலக்கணம் வகுத்த குருவின் பாதம் பணிகிறேன். வாழ்வின் முக்கிய விஷயங்களான  வேலை, திருமணம், குழந்தை, மூன்றுமே காலம் தாமதித்து எனக்குக் கிடைத்தது. தமிழக காவல்துறையில் விரும்பிச் சேர்ந்தாலும் வாராந்திர ஓய்வு இல்லாமை, காவலருக்கு உரிய மன அழுத்தம் போன்றவைகளால் வாழ்வில் வெறுப்பு ஏற்படுகிறது. செய்யாத தவறுக்கு தண்டனையும் அனுபவித்தேன், உத்தியோக உயர்வு தடைகளையும் சந்திக்கிறேன். முன்னேற்றமே இல்லாத அதே நிலை வேலை சலிப்பை ஏற்படுத்துகிறது. ஐந்து வருடத்திற்கு பிறகு மருத்துவ முயற்சியின் பலனாக ஒரு மகன் இருக்கிறான். இன்னொரு குழந்தை கிடைக்குமா? எனது மனக்குழப்பங்கள் எப்போது தீரும்?

பதில்:

(விருச்சிக லக்னம், மீன ராசி, 3ல் சூரி, சுக், கேது, 4ல் புத, செவ், 5ல் சந், 9ல் ராகு, 11ல் குரு, சனி, 9-2- 1981 அதிகாலை 1-45 சாயல்குடி)

அரசுப் பணியைக் குறிக்கும் சூரியன், சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையைப் பெற்று சுபத்துவமாகி, பத்தாமிடமான சிம்மத்தை, தனிப் புதனுடன் இணைந்து செவ்வாய் பார்த்ததால் தமிழக காவல்துறையில் பணி செய்கிறீர்கள். பொதுவாகவே விருச்சிகம், மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் சீருடை அணியும் துறைகளில் பணிபுரிவீர்கள்.

நான் அடிக்கடி சொல்லும் விருச்சிக லக்னத்திற்கு வரக்கூடாத புதன் புக்தி கடந்த 2019 ஜூலை முதல் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதெல்லாம் புதன் தசை, புதன் புக்தி ஆகியவை விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நடக்கின்றதோ, அப்போது சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பீர்கள். உங்களுக்கு எதிர்மறையான விஷயங்களை மேஷ, விருச்சிக லக்னத்திற்கு அவயோகியான புதன் தருவார்.

அதேபோல தசாநாதனும், புக்தி நாதனும் கடுமையான அவயோக கிரகங்களாக இருக்கும் நிலையில் ஒரு மனிதன் குழப்பத்தின் உச்சியில் இருப்பான். அது இப்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. புதன் புக்தி முடியும் காலமான 2022 மேமாதம் வரை உங்களுக்கு எவ்வித நல்ல பலனும் சொல்வதற்கு இல்லை. இன்னும் இரண்டு வருடங்கள் நீங்கள் எதிலும் பொறுத்துப் போவது நன்மையைத் தரும்.

உங்களுடைய 42 வயதிற்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் சூரிய, சந்திர, செவ்வாய், ராகு தசைகள் உங்களுக்கு மிகப்பெரிய மேன்மையைத் தரும் என்பது உறுதி. வாழ்வின் பிற்பகுதியில் யோக தசைகள் வருவதால் தற்போது நீங்கள் பணிபுரியும் துறையிலேயே இதைவிட மேலான ஒரு பதவியில், உங்கள் தகுதிக்குரிய உயர்நிலையில் கண்டிப்பாக இருப்பீர்கள்.

அடுத்து வர இருக்கும் குருவின் பார்வையைப் பெற்ற கேது புக்தியில் உங்களுக்கு இன்னொரு குழந்தை பாக்கியம் உண்டு. தற்போதுள்ள அனைத்து மன அழுத்தங்களும் இன்னும் இரண்டு வருடங்களில் தீர்ந்து சந்தோஷமான உற்சாகமான மனநிலையை சுக்கிர திசை, கேது புக்தி முதல் பெறுவீர்கள். அப்போது உங்களுக்கு ஆதரவான ஒரு மேலதிகாரி பதவியேற்று உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பார். சூரியதசை முதல் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

(10.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.