adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சீக்கிரம் இறந்து விடுவேனா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஒரு வாசகர், கன்னியாகுமரி.

கேள்வி:

சுபத்துவ சூட்சுமவலுவின் சொந்தக்காரரான குருஜிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. ஐந்து மாத ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது எனக்கு இடது பக்க மார்பில் ஒரு வலி வந்து கொண்டிருக்கிறது. இதை மனைவியிடம் சொல்ல முடியவில்லை. சொன்னால் அவர்கள் பயந்து விடுவார்கள் என்று சொல்ல முடியவில்லை. இந்த வலி எதுவாக இருக்கும் என்று எண்ணி இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை. மனைவி, குழந்தையை அனாதையாக பாதியில் விட்டுவிட்டுச் சென்று விடுமோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு ஆயுள் குற்றம் இருக்கிறதா? என் ஆயுள் எப்படி இருக்கிறது? எனக்கு இதய நோய் வர வாய்ப்பு உள்ளதா என்று தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(கும்ப லக்னம், கடக ராசி, 5-ல் கேது, 6-ல் சந், 7ல் சுக், குரு, 8ல் சூரி, புத, செவ், 11ல் ராகு, 12ல் சனி, 2-10- 1991 மாலை 5-5 குளச்சல்)

ஜோதிடப்படி ஒரு மனிதனின் ஆயுள் 120 ஆக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவருடைய லக்னம், லக்னாதிபதி, ஆயுளைக் குறிக்கும் எட்டுக்குடையவன், ஆயுள் காரகனாகிய சனி ஆகிய நான்கும் சுப வலுவோடு இருக்கும் நிலையில், ஒரு மனிதன் 120 வரை நிறை வாழ்வு வாழ முடியும். இவைகளில் ஏதேனும் ஒன்று குறையும் நிலையில் அவனுக்கு தீர்க்காயுள் எனப்படும் 80 வயது தாண்டிய நிலை இருக்கும். எந்த ஒரு மனிதரும் பூரணமாக 120 வரை வயது வரை வாழ்ந்தது இல்லை. அத்தி பூத்தார் போல நம்மில் எவரோ ஒருவர்தான் 90 வயது தாண்டி வாழும் நிலையை பெற்றிருக்கிறார்கள்.

லக்னத்திற்கு 30, லக்னாதிபதிக்கு 30, எட்டுக்குடையவன் 30, சனிக்கு 30 என ஒவ்வொரு விஷயத்திற்கும் 30, 30 வருடங்களை ஒதுக்கி ஆயுளைக் கணக்கிட முடியும். எவருடைய ஜாதகத்தில் இவை நான்கும் வலுவாக இருக்கிறதோ அவர் தீர்க்காயுள் எனப்படும் எண்பது வயதையும் தாண்டி உயிர்வாழும் அமைப்பை பெறுகிறார். இவை நான்கில் மூன்று அமைப்புகள் பழுதுபட்டால் அவரது ஆயுள் முப்பதுகளில் முடியும். இதையே அற்பாயுள் என்கிறோம். நான்கிற்கு 2 பழுதின்றி அமைந்தால், அவர் 60களில் உயிர் துறப்பார்.

இதைவிட மேலாக ஆயுளைக் கணிப்பதற்கு என வேத ஜோதிடத்தில் சில சூத்திரங்களும் ஆயுர்த்தாயம் எனப்படும் சில நுணுக்கமான கணக்குகளும் இருக்கின்றன. இவற்றை நான் எவ்வளவு எளிமையாக மாலைமலரில் விவரித்தாலும் தலைசுற்றிப் போய் அடுத்த கேள்விக்கான பதிலைப் படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

கும்ப லக்னத்தில் பிறந்திருப்பதால் நீங்கள் எதிலும் சந்தேகம் கொண்ட நபராக இருப்பீர்கள். உங்களை எளிதாக திருப்திப்படுத்த இயலாது. மனதிற்குள் அனைத்தையும் போட்டுக் கொண்டு குழப்பத்திலேயே இருக்கின்ற நபர் நீங்கள். எதையும் யாரிடமும் கேட்டோ அல்லது சொல்லியோ தெளிவு பெற்று விட மாட்டீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். எவராலும் உங்கள் முகத்தை வைத்து அல்லது உங்களுடைய செயலை வைத்து உங்களுக்குள் என்ன நடக்கிறது, அல்லது நீங்கள் எதைப் பற்றி சிந்திக்கிறீர்கள் என்பதை கண்டு பிடிக்கவே முடியாது. ஜாதகப்படி ஒரு தனிமைத் தீவாக நீங்கள் இருப்பீர்கள்.

உங்களுடைய ஆயுளைப் பொருத்தவரை லக்னத்தை குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு சுபர்கள் பார்த்து, லக்னாதிபதியை தசமி திதியில் அமர்ந்து ஆட்சியாக இருக்கின்ற சந்திரன் பார்ப்பதால்  லக்னமும் லக்னாதிபதியும் வலுவாகவே இருக்கிறார்கள். லக்னாதிபதி சனியே ஆயுள்காரகனாகவும் அமைந்து நவாம்சத்தில் தன்னுடைய மூலத்திரிகோண வீட்டிலேயே அமர்ந்திருப்பது ஆயுள்காரகனும் பலம் பெற்றிருக்கிறார் என்பதை குறிக்கிறது.

எட்டாமிடத்தில் அதன் அதிபதி புதன் உச்சநிலையில் அமர்ந்திருப்பது சிறப்பு அவர் சூரியனுடன் ஒரே டிகிரியில் இருந்தாலும் குற்றமில்லை. எந்த ஒரு நிலையிலும் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று ஒருமனதாக அனைத்து மூல நூல்களிலும் சொல்லப்பட்டிருப்பதால், எட்டாம் அதிபதி அஸ்தங்கம் அடைந்து விட்டார் என்பதை இங்கே கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

எட்டாம் இடத்தில் உச்சமாகி, ஆறாம் அதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும் புதனின் தசை தற்போது நடப்பதால்தான் உங்களுக்கு இந்த 28 வயதில் ஆயுளைப் பற்றிய மனக்கலக்கம் வருகிறது. எட்டுக்குடையவன், ஆறுக்குடையவனுடைய சாரம் வாங்கி தசை நடத்துவதால் உங்களுக்கு எதைக் கண்டாலும் ஒரு பயமும், மனக்கலக்கமும் இருக்கும். ஒரு தமிழ் திரைப்படத்தில் இலங்கை தமிழர் வேடமேற்று கமலஹாசன் நடித்த எதைக் கண்டாலும் பயம் என்ற நிலையில் தற்போது நீங்கள் இருப்பீர்கள். இது உங்களது 35 வயது வரை நீடிக்கும்.

35 வயதிற்குப் பிறகு உச்சம்பெற்ற புதனின் வீட்டில், ஐந்தாமிடத்தில் அமர்ந்திருக்கும் கேதுவின் தசை முதல் முன்னேற்றத்தையும், உற்சாகத்தையும் அடைகின்ற ஜாதகம் உங்களுடையது. ஜாதகப்படி 74 வயதிற்குமேல் உயிர் வாழ்வீர்கள். நோயும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வலியைப் பற்றிய கவலையை ஒதுக்கித் தள்ளிவிட்டு களங்கமற்ற உங்கள் குழந்தையின் முகத்தைப் பார்த்து எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தீர்க்காயுள் இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

(10.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.