adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஜோதிடர்கள் அனைத்தும் அறிந்தவர்களா…? (B-021)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

பஞ்சமகா புருஷ யோகங்களைப் பற்றிய இந்த தொடர் கட்டுரைகள் பெரும்பாலான வாசகர்களைப் பாதித்திருக்கிறது என்பது எனக்குத் தினமும் வரும் தொலைபேசி அழைப்புக்களில் இருந்து தெரிகிறது. குறிப்பாக செவ்வாய், சனியைப் பற்றிய கட்டுரைகள் சரியான விதத்தில், சரியானவர்களைச் சென்றடைந்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது.


திருச்சிக்கு அருகிலிருந்து பேசிய ஜோதிடம் அறிந்த 84 வயது பெரியவர் வெங்கடேச சாஸ்திரிகளின் ஆசிர்வாதத்தை ஏற்று அவரின் பாதம் பணிகிறேன்.  ஆனால் அவர் எனக்கு அளித்த பட்டத்திற்கு நான் கொஞ்சமும் தகுதி இல்லாதவன்.

நேர்மையான, எதையும் ஒளிக்காத, முழுமையான எழுத்து வாசிப்பவரை பரவசப்படுத்தும் என்பதற்கு என்னிடம் உரையாடிய அரசு அதிகாரி சென்னை அண்ணாநகர் மனோகரன், கும்பகோணம் மற்றும் சேலம் வாசகர்கள் நல்ல உதாரணம்.

ஜோதிடம் எனும் மகா சமுத்திரத்தில் எனக்குத் தெரிந்தது வெறும் இரண்டு துளிகள் மட்டுமே. சித்தர்களின் வாக்குப்படியே ஒரு மனிதன் ஜோதிடத்தை முழுதாக அறிந்து கொள்வதற்கு அவனுக்கு இரண்டரை முழு ஆயுள் தேவைப்படும். அதாவது முன்னூறு ஆண்டுகள்...! (ஜோதிடப்படி ஒரு மனிதனின் முழு ஆயுள் 120 ஆண்டுகள்.)


இதிலிருந்தே எந்த ஒரு மனிதனும் ஜோதிடத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம்.


ஜோதிடம் என்பது எதிர்காலத்தைக் காட்டும் ஒரு தெய்வீகக் கலை என்பதால் இதைப் பூரணமாக அறிந்தவன் ஜோதிடன் என்ற நிலையில் இருந்து மாறி கடவுளுக்கு அருகில் செல்வான்.

நேற்றையும், இன்றையும், எதிர்காலத்தையும் தெரிந்தது இவைகளைப் படைத்த பரம்பொருள் மட்டுமே என்பதால் அதைத் துல்லியமாக அறிவது என்பது மனிதனால் முடியாத ஒன்று..!

ஒரு மனிதனுக்கு நடக்கும் ஒரு சம்பவம் அல்லது அவன் செய்யும் ஒரு செயல் கிரகங்களால் நடத்தப் பெறுவது என்பதுதான் ஜோதிடத்தின் அடிநாதம். அதாவது கிரகங்களின் நகர்வுகளும், சில விதமான சேர்க்கைகளும்தான் பூமியில் நடக்கும் அனைத்தையும் நிகழ்த்துகின்றன என்பதே வேத ஜோதிடத்தின் கூற்று.

சதுரங்க விளையாட்டின் “மூவ்”களைப் போல, ஆனால் அதை விட கோடிக் கணக்கான காம்பினேஷன்கள் ஜோதிடத்தில் உள்ளன. எட்டுக்கு எட்டு கட்டங்களில் அனைத்தும் அடங்கி விட்ட ஒரு செஸ் விளையாட்டினை நாம் ஒரு சாப்ட்வேருக்குள் அடக்கி, மனிதனையும் கணிப்பொறியையும் விளையாட விடுவதைப் போல இதில் செய்யவே முடியாது.

அப்படி செய்ய முடியுமானால், அன்று பிரபஞ்ச ரகசியத்தை நாம் கண்டு பிடித்து விட்டோம் என்று அர்த்தம்.

இதையே வேறு விதமாக சொல்லப் போனால் ஞானிகள் மறைமுகமாக சொல்வதைப் போல “அனைத்து ஜோதிட உண்மைகளையும் நான் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளும் திறன் உனக்கு இருக்காது” என்பதுதான்.

இதையே நவீன இயற்பியல் விஞ்ஞானிகளும் “பிரபஞ்சமே தன்னைப் பற்றிய ரகசியங்களை நமக்கு நேரிடையாகச் சொன்னாலும், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்குக் கிடையாது” என்று சொல்கிறார்கள். அவ்வகையில் பரம்பொருளும், ஜோதிடமும், பிரபஞ்சமும் ஒன்றுதான்.

ஒரு தனி மனிதனின் ஜாதகத்தைப் போல இன்னொருவரின் ஜாதகம் இருக்கவே இருக்காது என்பதும் ஜோதிடத்தில் முக்கியமான ஒன்று. அதாவது ஒரே காம்பினேஷனில் இருவர் பிறக்கவே முடியாது என்பதே அது.

அது ஏனெனில்....

இன்றைய கோட்சார நிலைகளின்படி சனி இப்போது துலாம் ராசியில் இருக்கிறார். ஆனால் அது சென்ற முப்பது வருடங்களுக்கு முன் அவர் இருந்த ‘அதே’ துலாம்  ராசி அல்ல..!

புரியும்படி சொல்கிறேன்....!

"பிரபஞ்சத்தில் நாம் கிளம்பிய இடத்திற்கு ஒரு போதும் திரும்பி வரப் போவது இல்லை” என்ற ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிறது. எப்படியெனில் நமது பூமி 365 நாட்களுக்கு ஒரு முறை தன்னையும் சுற்றிக் கொண்டு நமது சூரிய மண்டலத்தின் மையமான சூரியனையும் சுற்றி வருகிறது.

‘மில்கிவே’ எனப்படும் ஏறத்தாழ ஒரு கொசுவர்த்தி சுருளைப் போன்ற இந்த பால்வெளி வீதி மண்டலத்தின் ஒரு ஓரத்தில், வலது பக்க மூலையில் உள்ள நமது சூரியன், தன்னையும் சுற்றிக் கொண்டு நம் பூமி போன்ற அனைத்துக் கிரகங்களையும் இழுத்துக் கொண்டு பால்வெளி வீதி மண்டலத்தின் மையத்தை சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

நம் சூரியனைப் போன்ற ஆறாயிரம் கோடி நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள (முன்பு பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம் என்று நம்பப்பட்டது.) நமது பால்வெளி வீதி எனப்படும் இந்த காலக்ஸி அதன் மையத்தை சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

நம் மில்கிவே காலக்ஸி போன்ற இரண்டாயிரம் கோடி காலக்ஸிகள் நமது பிரபஞ்சத்தில் உள்ளன.

இரண்டாயிரம் அல்ல.... இரண்டாயிரம் கோடி....!

இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் தலை சுற்றும் அளவிற்கு பெரிதான நம் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் புரியும். அதோடு நாமெல்லாம் எவ்வளவு அற்பத்திலும் அற்பமானவர்கள் என்பதும் விளங்கும்.

இந் நிலையில் வெறும் 900 கோடி வருட ஆயுள் மட்டுமே உள்ள அதிலும் தன் வயதில் பாதியான 450 கோடி வருடங்களை கழித்து விட்ட நமது சூரியன், பிரபஞ்ச மையத்தை நம் பால்வெளி மண்டலம் சுற்றும் நிகழ்வின் இடையிலேயே இறந்து போய் விடும்.

சூரியன் இல்லையேல், இந்த பூமி இல்லை, நாம் இல்லை, இதன் புல் பூண்டுகளும் இல்லை.

அனைத்தும் துவங்கிய முதல் மூன்று நிமிடங்களை (THE FIRST THREE MINUTES) விளக்க, அதாவது பிரபஞ்சம் தோன்றிய முதல் கணங்களை விவரிக்க, நவீன விஞ்ஞானிகளுக்கு கடவுளின் இருப்பு தேவைப்படுகிறது.

இந்த விஷயத்தை உணர கிழக்கத்திய சிந்தனைகள் அதாவது இந்திய மெய்ஞானிகளின் சிந்தனைத் தொகுப்பான, நமது மேலான இந்து மதத்தின் அரிய பொக்கிஷங்களான வேதங்கள் அவர்களுக்கு வழி காட்ட வேண்டியிருக்கிறது. 


பிரபஞ்சத்தின் ஆரம்ப கணமான ‘பிக்பாங்’ எனப்படும் பெருவெடிப்பின் எச்சமாக, இன்றும் நமது பிரபஞ்சம் வினாடிக்கு ஐந்து லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் விரிவடைந்து கொண்டு வருவதை சமீபத்தில் ஹப்பிள் எனும் விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஒளி செல்லும் வேகமே வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் தான் எனும்போது இந்த மாபெரும் வேகத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

நம் சூரியனைப் போன்ற ஆயிரக்கணக்கான கோடி நட்சத்திரங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு காலக்ஸியும் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்வது தற்போது அவரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அனைத்துமே தலை தெறிக்கும் வேகத்தில் விலகி ஓடிக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தில் இந்த வினாடி நாம் ‘இருக்கும்’ இடத்திற்கு மறுபடியும் நாம் திரும்ப வரப் போவதே இல்லை..! இதன் காரணமாகவே ஒரு தனி மனிதனின் ஜாதகத்தினைப் போல இன்னொரு ஜாதகம் இருக்கவே முடியாது.

பிரபஞ்சம் முழுவதும் ‘ஓம்’ எனும் ரீங்காரம் பரவியுள்ளது என்று நமது இந்து மதம் சொல்கிறது. அதையே நமது பிரணவ மந்திரமாகவும் நமது ஞானிகள் சொல்லியிருக்கின்றனர்.

இதை உலகின் வேறு எந்த மதமும் சொல்லவில்லை என்பதோடு பிரபஞ்சத்தின் தோற்றம், இறப்பிற்குப் பின் மனிதனின் நிலை போன்ற நம்மால் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்களில் முழுமை கொண்டதும் உலகிலேயே நமது இந்து மதம் மட்டும் தான்.

தனது ஒவ்வொரு எழுத்தையும், சொல்லையும் மந்திரமாகக் கொண்டுள்ள புனிதமான நமது சம்ஸ்க்ருத மொழியின் ஆதாரச் சொல்லும் இந்த ‘ஓம்’ என்பதுதான் என அனைவருக்கும் தெரியும்.

1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த, இந்த பூமி உருவாகக் காரணமான பெருவெடிப்பின் போது ஏற்பட்ட மாபெரும் உஷ்ணத்தின் மிச்சம் மீதியான லேசான உஷ்ணமும், ஒலித்த மகா ஓசையின் மீதியான ‘ம்ம்ம் ...’ என்ற ஒலியும் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதை சமீபத்தில் இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து பௌதிகத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர்.

இந்த இரு விஞ்ஞானிகளும் நவீன கருவிகளைக் கொண்டு உஷ்ணம் மற்றும் ஓசையினை அளந்து உலகிற்கு நிரூபித்தனர்.

ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைக் கண்டுபிடித்து, இது ‘ஓம்’ என்ற ஓசை எனவும் அறிந்து இதுவே நமது ஆதார ஒலி எனவும் தமது அற்புத தவ வலிமையால் உணர்ந்த நமது ரிஷிகளையும், ஞானிகளையும் தவிர்த்து எந்த ஒரு ஜோதிடனாலும் ‘முக்காலம்’ பற்றிய பூரணமான அறிவைப் பெற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை...!

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


(பிப் 29- மார்ச் 6 , 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.)