adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 278 (03.03.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

பிரியா குமார், கலிபோர்னியா.

கேள்வி:

தங்களின் மிகப்பெரிய விசிறி நான். பல ஜோதிடர்கள் என் ஜாதகத்தைப் பார்த்து குழம்பி விடுவார்கள். உங்களது சுபத்துவ- சூட்சுமவலு கோட்பாட்டின்படி என் ஜாதகத்தை நான் ஆராய்ந்த போது அது மிகத் துல்லியமாக இருந்தது. சூரியனும் சந்திரனும், ராகு-சனியுடன் நெருங்கி இருந்தாலும், சுக்கிரன் குருவுடன் அவர்கள் மிகவும் நெருங்கி சுபத்துவமாக உள்ளதால் என் பெற்றோர்கள் என்னிடம் மிகவும் அன்பு பாசம் உள்ளவர்கள். சந்திரன் மிகவும் சுபத்துவம் ஆனதால் எனக்கு எப்போதும் பாசிட்டிவ் திங்கிங் உண்டு. உங்களுடைய தொழில் தியரிப்படி அதிக சுபத்துவம் அடைந்த புதனுடன், உச்ச குரு சேர்க்கையால் கோடிகோடியாக நான் சாப்ட்வேர் துறையில் சம்பாதிக்கிறேன். சனி லக்னாதிபதியாகி திக்பலம் பெற்றுள்ளதால் நான் நினைக்கும் அனைத்தையும் இறைவன் எப்பொழுதும் கொடுக்கிறான். திக்பலம் பற்றி நீங்கள்தான் எல்லோருக்கும் புரிய வைத்தீர்கள். எனது பன்னிரண்டாம் பாவகத்தை உச்ச குரு, சுபரான புதன் மற்றும் செவ்வாய் பார்க்கிறார்கள். எனக்கு மோட்சம் உண்டா? என் மனம் எப்பொழுதும் மோட்சம், ஆவிஉலகம், இறந்தபின் செல்லும் உலகம் பற்றியே நினைக்கிறது. தயவு செய்து என் கடிதத்தை தவிர்க்காமல் பதில் சொல்லுங்கள் ஐயா...


பதில்:

(கும்ப லக்னம், சிம்மராசி, 1ல் கேது, 5ல் செவ், 6ல் புத, குரு, 7ல் சந், சூரி, சுக், சனி, ராகு, 22-8-1979 இரவு 7-30 சென்னை)

அனைத்தும் பெற்றிருக்கிறேன் என்று மனப்பூர்வமாக சொல்லும் நீ, வேலை மெனக்கட்டு அமெரிக்காவிலிருந்து கடிதம் எழுதி இருக்கிறாயே என்ற ஒரே காரணத்திற்காக, இந்த கேள்விக்குப் பதில் தருகிறேன்.

என்னுடைய சுபத்துவ-சூட்சுமவலு கோட்பாட்டினைப் பற்றி நீயே கேள்வியும் எழுதி பதிலையும் நீயே கொடுத்து விட்டாய். என் வேலை மிச்சம். கணிக்க முடியாத அளவில் ஓரிடத்தில் கிரகங்கள் கூட்டுச் சேர்க்கையாக இருக்கும் பொழுது என்னுடைய சுபத்துவ- சூட்சுமவலு கோட்பாட்டின்படி ஒரு கிரகம் சுபருடன் நெருங்கி இருக்கிறதா, பாபருடன் நெருங்கி இருக்கிறதா, இணைந்திருக்கும் கிரகங்களின் சுப, பாப தன்மையைப் பொறுத்து ஜாதகத்தை முழுமையாக கணிக்க முடியும் என்பதற்கு உன்னுடைய ஜாதகம் நல்ல உதாரணம்.

எட்டாம் அதிபதி மிகு சுபத்துவமாகி, பன்னிரண்டாம் வீடும் சுப அமைப்பில் உள்ள நிலையில், அடுத்தடுத்து வெளிநாட்டில் வாழ்வதைக் குறிக்கும் தசைகளும் நடப்பதால் நீ அமெரிக்காவிலேயே குடியிருப்பாய். அந்திம காலத்தில் கூட உன்னால் இந்தியாவிற்கு வர முடியாது,

சனி சுபத்துவம் ஆனாலே, இறந்ததற்கு பின் என்னவாகும்? சென்ற பிறவியில் என்னவாக இருந்தோம்? மோட்சம் கிடைக்குமா? சிவபக்தி போன்றவைகளை அபரிமிதமாக தருவார் என்பதை ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளிலும், தெய்வ அருள் எப்போது கிடைக்கும் என்ற கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.  உன் ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருப்பதால் உனக்கு இந்த நினைவுகள் இறுதிவரை மாறாது. போகப்போக இன்னும் அதிகமாகும். ஜாதகப்படி உனக்கு இன்னும் ஒரு பிறவி இருக்கிறது. இது உனக்கு இறுதிப் பிறவி கிடையாது .ஆகவே மோட்சம் என்பதை பற்றிய கேள்வி இப்போது எழவில்லை. அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம். நன்றாக இருப்பாய் அம்மா வாழ்த்துக்கள்.

கே. சீனிவாசன், திருச்சி-12.

கேள்வி:

மத்திய அரசு அலுவலகத்தில் சாதாரண எழுத்தராக பணிபுரிகிறேன். துறைத் தேர்வுகளின் மூலம் உயர் பதவி பெற்று கெஜடட் ஆபீஸர் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். என்னுடைய ஜாதகத்தில் அரசு உயர் பதவிகளை அடைவதற்கான அமைப்பு இருக்கிறதா? என்னால் உயரிய பதவிக்கு செல்ல முடியுமா?

பதில்:

(சிம்ம லக்னம், கடக ராசி, 1ல் கேது, 5ல் சனி, 7ல் ராகு, 9ல் சூரி, 10ல் புத, சுக், குரு, 11-ல் செவ், 12-ல் சந், 11-5-1989 மதியம் 2-30 விருதுநகர்)

அரசு வேலையைத் தரும் சூரியனும் சந்திரனும் உச்சம், ஆட்சி, தங்களுக்குள் கேந்திரம். ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் அமர்ந்து, லக்னத்திற்கு பத்தாம் வீடு மூன்று சுப கிரகங்களால் சுபத்துவப்படுத்தப்பட்டு, சுக்கிரதசை தற்போது நடப்பதாலும், சிம்மத்தில் ராகு அமராமல் கேது அமர்ந்து பலமாக இருப்பதாலும், உங்களால் அரசு உயர் பதவிகளுக்கு செல்லமுடியும்.

2022 முதல் சுக்கிர தசை, சூரிய புக்தி நடக்கும் காலம் அரசு உயர் பதவிகளை பெற முடியும். அதே நேரத்தில் உங்களின் கடக ராசிக்கு அஷ்டமச்சனி நடக்கும் என்பதால் தடைகளுடன் லட்சியத்தை அடைவீர்கள். அடைந்த லட்சியத்தை அனுபவிப்பதற்கு இரண்டு வருடங்கள் முடியாது. 2024 குப் பிறகு உயர்நிலையில் இருக்கக்கூடிய ஜாதகம் உங்களுடையது. வாழ்த்துக்கள்.

எஸ். சந்திரா, கோவை.

கேள்வி:

இவன் தற்போது பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். இவனது தாத்தா பெரும் வணிகர். பெரிய அளவில் வியாபாரம் செய்கிறார். இவனை அவரது வாரிசாக கடையில் அமர்த்தலாம் என்றிருக்கிறார். இவன் வியாபாரத்திற்கு ஏற்ற திறமைசாலியா? இவனது யோகம் எவ்வாறு உள்ளது? இவன் வேலை செய்து சம்பாதிக்கும் யோகம் உள்ளவனா அல்லது கடையில் அமர்ந்து வியாபாரம் செய்வானா?

பதில்:

(விருச்சிக லக்னம், மீன ராசி, 2ல் செவ், கேது, 5ல் சந், 7ல் சனி, 8ல் குரு, ராகு, 10ல் சுக், 11-ல் சூரி, 12ல் புத, 2-10-2001 காலை 11-21 திண்டுக்கல்)

வாக்கிய பஞ்சாங்கம் துல்லியம் அற்றது, பிழையானது என்பதை அடிக்கடி எழுதுகிறேன். நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி தனுசு லக்னம் வருகிறது. அது தவறானது. விருச்சிக லக்னம் என்பதே சரி.

விருச்சிக லக்னத்தில் பிறந்து, மிக உன்னத, பங்கமற்ற பௌர்ணமி யோகம் இவருக்கு அமைந்திருப்பதாலும், கூடுதலாக அங்கே அதியோகம் இருப்பதாலும், அந்த யோகத்தில் அமைந்த புதன், சுக்கிரன் தசைகள் நடக்க இருப்பதாலும் இவர் மிகப்பெரிய வியாபாரத்தை செய்வதற்கு தகுதியுள்ளவர்.

லக்னாதிபதி செவ்வாய் தன வீடான இரண்டில், சுபத்துவ-சூட்சுமவலுவுடன் அமர்ந்து, இரண்டாம் வீட்டை அந்த வீட்டின் அதிபதியும், தன காரகனுமாகிய குரு பார்த்து, ஒன்பதாம் அதிபதி பூரணச்சந்திரனாகி, லாபாதிபதி புதன் சந்திர அதி யோகத்தில் இருப்பதால் இவர் மிகப்பெரிய பொருள் சம்பாதிப்பார். பத்துக்குடைய சூரியன் லாபத்தில் பவுர்ணமி யோகம் மற்றும் தர்மகர்மாதிபதி யோக அமைப்பில் அமர்ந்து, வியாபாரம் செய்வதற்குரிய புதன் பன்னிரண்டில் மறைந்தாலும் குருபார்வையுடன் வலுவாக இருப்பதால் இவர் வியாபாரத்திற்கு ஏற்றவர். இவரால் ஒன்றை பத்தாக்க முடியும்.

குறிப்பாகச் சொல்வதானால் தன் முன்னோர்கள் கொடுத்துச் செல்லும் ஒரு தொழிலை இவரால் பல மடங்கு பெருக்க முடியும். லக்னாதிபதி சுபத்துவ- சூட்சும வலு அடைந்திருப்பதாலும், பத்தில் தனிச் சுக்கிரன் அமர்ந்து தொழில் ஸ்தானம் வலுவாக உள்ளதாலும், இவரது ஜாதகம் யோக ஜாதகம்தான். இவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய மேன்மையை அடைவார். வாழ்த்துக்கள்.

(03.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.