adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மனைவியிடம் தாம்பத்திய சுகம் கிடைக்குமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

நா. நடராஜன், கரூர்.

கேள்வி:

குருஜி அவர்களுக்கு வணக்கம். பணம் என்பதே இல்லாமல் தினம் தினம் சஞ்சலத்திலேயே வாழ்ந்து வருகிறேன். மனைவிக்கும் எனக்கும் நிறைய கருத்து மோதல்கள் உள்ளது. பல நாட்கள் சாப்பாட்டிற்கே பணம் இல்லை. ரிஷப லக்னத்திற்கு யோக தசையான சனி தசையும் நன்றாக இல்லை. நடக்கும் புதன் தசையும் திருப்தி இல்லை. எனது பவுர்ணமி யோகத்தில் கிரகண தோஷம் உள்ளதா? எனது ஜாதகம் தரித்திர ஜாதகமா? அழகான மனைவி, அழகுப் பெண் குழந்தை உள்ளது. அவர்களை நன்றாக வாழ வைப்பேனா? எனக்கு காமத்தில் அதிக ஈடுபாடு உண்டு. ஆனால் தேவையான தாம்பத்திய சுகம் கிடைக்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் தாம்பத்திய சுகம் கிடைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இது எதனால்? என் மனைவிக்கு தாம்பத்திய சுகத்தில் எவ்வித நாட்டமும் இல்லை. அதற்கு என்ன காரணம்? இத்தனைக்கும் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அடுத்து வரும் கேது தசை மற்றும் சுக்கிர தசையாவது நல்ல வாழ்க்கை, கடன் இல்லா நிலை, சொந்த வீடு, மரியாதையை தருமா? தயவுசெய்து விளக்க கேட்டுக்கொள்கிறேன்.


பதில்:

(ஆண் 21-12-1972 மாலை 5-9 கரூர், பெண் 25-8-1982 அதிகாலை 5-10 ஈரோடு)

கிரகங்கள் இருள் தன்மையை அடைந்திருந்தால் நல்ல பலன்களைச் செய்வதில்லை. இதைத்தான் நான் பாபத்துவம் என்று சொல்கிறேன். பௌர்ணமி யோகத்தில் நீங்கள் பிறந்து, கூடவே சந்திராதி யோகம் நல்ல வகையில் அமைந்திருந்தாலும், நீங்கள் பிறந்த அன்று சந்திர கிரகணமாகி சந்திரன் அன்று அமாவாசை நிலையை அடைகிறார். அதி யோக அமைப்பில் அதாவது சந்திரனுக்கு ஆறு. ஏழில், புதன், சுக்கிரன், குரு இருந்தாலும் சந்திரனுக்கு ஒளி இல்லாமல் போய் விட்டதால் உங்கள் ஜாதகத்தில் சந்திர அதி யோக அமைப்பு இல்லை.

பணம் சம்பாதிக்க துணைபுரியும் 2, 9, 11ம் பாவகங்களும், அதன் அதிபதிகளும் உங்கள் ஜாதகத்தில் பாபத்துவமாக இருக்கிறார்கள். இரண்டில் அமாவாசை சந்திரன் இருக்க, தனகாரகன் குரு, ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் இணைந்து அவரும் கிரகண தோஷ அமைப்பில் இருக்கிறார். லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தோடு சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவரும் சனி, செவ்வாய் தொடர்பில் இருப்பதால் உங்களுடைய மனம் தன்னம்பிக்கை இன்றி இருள் தன்மையோடு இருக்கும்.

ஏற்கனவே நடந்த சனிதசை, தசாநாதன் சனி, இருள் சந்திரனின் சாரம் பெற்று, திக்பலம் இழந்து, அம்சத்தில் நீச்ச செவ்வாயுடன் இணைந்து, பாபத்துவம்  பெற்ற காரணத்தினால் ராஜயோகாதிபதியாக இருந்தாலும் பலன் தரவில்லை. நடைபெறும் புதன் தசையும், திக்பலத்தை பூரணமாக இழக்கும் நிலையான நிஷ்பலத்திற்கு அருகில் அமர்ந்து, சனியின் பார்வை, செவ்வாயின் இணைவு பெற்று, அம்சத்தில் ராகுவுடன் இணைந்து, பாபத்துவமாக இருப்பதால் நல்ல பலன் தராது.

அடுத்து நடக்க இருக்கும் கேது இரண்டாம் வீட்டில் இருப்பதாலும், அம்சத்தில் சுக்கிரனோடு சுக்கிரனின் வீட்டில் இணைந்து, ராசியில் ஓரளவிற்கு உள்ள குருவின் பார்வையை பெற்றிருப்பதாலும் மிதமான நன்மைகளைச் செய்யும். சுக்கிரதசை உங்களை மேம்படுத்தும்.

தரித்திர ஜாதகம் என்பதைவிட தன்னம்பிக்கை இழந்த ஒருவரின் ஜாதகம் என்று இதை நான் குறிப்பிடுவேன். லக்னத்தோடு சனி, செவ்வாய் தொடர்பு கொண்டிருப்பதால் உங்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது. ராசியும் பாபத்துவம் அடைந்திருக்கிறது. ஆகவே நீங்கள் எதற்கும் மற்றவரின் மேல் பழியைப் போட்டுவிட்டு, தன்னையே நொந்து கொள்ளும் தன்னம்பிக்கை அற்றவராக இருப்பீர்கள்.

முயற்சி செய்தால் எதையும் மாற்றலாம் என்பதன்படி, உயர்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னை நம்பி வந்த மனைவியையும் தான் பெற்ற குழந்தையையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எப்போது உங்களுக்கு வருகிறதோ அப்போது ஜோதிடத்தையும் மீறி உங்களால் செயல்பட முடியும். தன்னம்பிக்கைதான் வாழ்க்கை.

இப்படித்தான் வாழ்வீர்கள் என்று ஜோதிடம் சொன்னாலும், விதியை மதியால் வெல்லலாம் என்ற கருத்தின்படி அந்த மதி என்று அழைக்கப்படும் பரம்பொருளின் துணையோடு உங்கள் மனதை எப்போது நீங்கள் ஆளுமை செய்கிறீர்களோ அங்கே ஜோதிடம் தோற்றுப்போகும். இதைத்தான் ஞானிகள் “நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும்” என்று சொன்னார்கள்.

மனதை தன் கட்டுக்குள் வைத்திருப்பவனை ஜோதிடம் ஒன்றும் செய்யாது. கிரகங்கள் மனதின் மூலமாகவே ஒருவனை இயக்குகின்றன என்பதால் மனதை எப்போது தன்னம்பிக்கையுடன் செழுமைப்படுத்திக் கொள்கிறீர்களோ அப்போது உங்களுடைய வாழ்க்கை நிச்சயம் உயர்வடையும்.

காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கிறது ஆனால் தாம்பத்திய சுகம் கிடைத்து பல ஆண்டுகள் ஆகிறது என்று எழுதி இருக்கிறீர்கள். ஒன்றை அனுபவிப்பதற்கும் கொடுப்பினை வேண்டும். காமத்தின் காரகனான சுக்கிரன் பலவீனமடைந்து, காமத்தை அனுபவிக்க தரும் பாவகங்களான 3, 7, 12 ம் வீடுகள் வலுவிழந்து இருந்தால் ஒருவருக்கு காமம் கிடைக்காது என்பது விதி.

உங்கள் ஜாதகப்படி சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து, அம்சத்தில் நீச்சமாகி, ராசியில் சனியின் பார்வையைப் பெற்றிருக்கிறார். வீரிய ஸ்தானம் என்று சொல்லப்படக்கூடிய மூன்றாம் பாவகத்தை சனி பார்த்து, மூன்றாம் பாவகாதிபதி அமாவாசை சந்திரனாக இருக்க, 7-12-க்குடைய செவ்வாய் அம்சத்தில் நீச்சமாகி, சனியின் இணைவையும் பெற்றிருப்பதால் நீடித்த தாம்பத்திய சுகம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

அதைப்போலவே உங்களுக்கு சுகத்தை கொடுக்கக்கூடிய மனைவியின் ஜாதகப்படி, அவருக்கு மூன்றாம் அதிபதி உச்சம் என்றாலும், மூன்றாம் வீட்டில் சனி, 12 ஆம் வீட்டில் ராகு என்ற அமைப்போடு, சுக்கிரன் ராசியிலும், அம்சத்திலும் பகை வீட்டில் இருப்பதாலும், அவரது ஏழாம் வீட்டிற்கு பாபத் தொடர்புகள் உள்ளதாலும் அவருக்கும் தாம்பத்தியத்தில் ஆர்வம் இருக்காது. சுக்கிர தசை முதல் ஓரளவு நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்.

(03.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.