ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
சில ஜோதிட ஆய்வாளர்கள் சனி உச்சம் பெறுவது மிகுந்த அதிர்ஷ்டம் எனவும், தற்போது துலாம் ராசியில் சனி உச்சத்தில் இருப்பதால் இந்த மூன்று வருடங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் எழுதுகிறார்கள். இது முற்றிலும் தவறு. உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுப கிரகங்கள், பாபக் கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
கிரகங்களின் காரகத்துவங்களை சுபம், அசுபம் எனவும் நமக்கு வகைப்படுத்திக் காட்டியிருக்க வேண்டியதும் இல்லை. கிரகங்கள் வலிமை பெற்றால் நல்லது செய்யும் என்று பொதுவாக சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.
நமது கிரந்தங்களில் ஞானிகள், வலுப் பெற்ற கிரகங்கள் மனிதனுக்கு நன்மையைச் செய்யும் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே இல்லை. வலிமை பெற்ற ஒரு கிரகம் தனது காரகத்துவங்களை ஜாதகருக்கு வலுவுடன் தரும் என்றே சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியானால் ஆயுளைத் தவிர்த்து மனிதனுக்கு கெடுதல் செய்பவைகளான வறுமை, தரித்திரம், நோய், கடன் தொல்லை, அடிமை வேலை, உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைத்தல், உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலை போன்றவற்றைத் தரும் சனி உச்ச வலிமை பெற்றால் உங்களுக்கு என்ன பலன்களைத் தருவார்?
மற்ற சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் அமைப்பு சனி, செவ்வாய் உள்ளிட்ட பாபக் கிரகங்களுக்கு கிடையாது.
தனித்து எவ்வித சுபத்தன்மையும் பெறாமல் வலிமை பெறும் நிலையில் சனி தன் தசையில் தாங்க முடியாத கொடிய பலன்களைச் செய்வார்.
சனி நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் குருவின் பார்வையையோ, தொடர்பையோ அல்லது மற்ற சுப கிரகங்கள் அல்லது லக்ன சுபர்களின் சம்பந்தத்தையோ பெற்றிருக்க வேண்டும்.
உச்சத்தில் வக்ரம் போன்ற உச்ச பங்கம் பெற்று, முற்றிலும் நீச நிலையாக வலிமை இழந்து சுபர் பார்வை பெற்ற சனி மிகப் பெரிய சொகுசு வாழ்க்கையைத் தருவார்.
இத்தனை கொடுமையான பலன்களை காரகத்துவங்களாகப் பெற்ற சனியிடம் ஆயுள் எனும் விஷயம் எப்படி வந்தது என்ற சந்தேகம் வரலாம்.
அந்த சூட்சுமத்தையும் இப்போது விளக்குகிறேன்......
பொதுவாக நமது புனித நூல்கள் அனைத்துமே இனிமேல் பிறவாமை வேண்டும், பரம்பொருளின் காலடியில் முற்றிலுமாக சரணடைந்து அதனுடன் இணைய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.
சித்தர்களும், ஞானிகளும் தங்களுக்கு எப்போது ‘முக்தி’ கிடைக்கும் என்றே ஏங்குகிறார்கள். (அதாவது தாங்கள் விரைவில் இந்த பூமியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே முற்றும் துறந்தவர்களின் நோக்கம்.)
உண்மையான புரிதல் என்னவெனில் இந்த மனித வாழ்வே ஒரு சுமை என்பது தான். மனிதனின் இறப்பிற்குப் பிறகு “ஏதோ ஒரு நல்லது” இருக்கிறது என்பதையே நமது ரிஷிகளும், சித்தர்களும் உணர்ந்து நமக்கும் சொல்லியிருக்கிறார்கள்.
விளங்கிக் கொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்திற்காகவே, நாம் எங்கிருந்தோ இந்தப் பூமியின் பக்கம் தற்போது வந்திருக்கிறோம். இங்கே செய்யும் தவறுகளால் இங்கிருந்து விடுபட முடியாமல் மீண்டும், மீண்டும் இங்கேயே பிறக்கிறோம். இது ஒரு வழிப் போக்குப் பயணம் அவ்வளவே.
நாம் கிளம்பிய நல்ல இடத்திற்கு திரும்பிச் செல்லத் தடையாக, நம்மை இங்கேயே இருக்க வைக்கும் நமது ‘ஆயுள்’ என்பது, பலரும் நினைப்பதைப் போல ஒரு சுப காரகத்துவம் கொண்ட நல்ல நிலை அல்ல என்பதே உண்மை.
அதனால்தான் அதுவும் மனிதனுக்கு வேண்டாத காரகத்துவங்களைக் கொண்ட சனியிடம் சேர்ந்தது.
சனி தரும் இன்னொரு கொடிய பலனான ஆயுள்... நம்மை பரம்பொருளிடம் சேரும் ஒரு நல்ல நிலையை, இனிமையான அனுபவத்தை இன்னும் சற்றுத் தள்ளி வைக்கும் ஒரு கெட்ட நிலைதான்.
ஜோதிடத்தில் எதுவுமே வெளிப்படையாக புரியும்படி ஞானிகளால் சொல்லப் படுவதில்லை. சொல்லப்படவும் மாட்டாது. அப்படிச் சொன்னாலும் அநேகருக்கு அது புரியாது.
ஆகவே புரியும் தகுதி நிலையை...
அதாவது பள்ளிகளில் முதலில் எல். கே. ஜி அடுத்து ஒன்று முதல் பனிரெண்டு வகுப்புக்கள் பிறகு கல்லூரி, எம். ஏ. போன்ற முதுநிலைப் படிப்புக்கள் போன்ற நிலையை படிப்படியாக எட்டும் வரை சில நுணுக்கமான விஷயங்கள் புரியவே புரியாது.
அதுவே இந்த மகா கலையின் மகத்துவம்.
அடுத்த அத்தியாயத்தில் சனியின் இன்னும் சில நுணுக்கங்களைப் பார்க்கலாம்.
கும்பத்திற்கு எந்தக் கிரகமுமே முழுச் சுபர் இல்லையே... ஏன்?
கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதி சனி உட்பட எந்த ஒரு கிரகமுமே முழுச் சுபராக ஆவதில்லை ஏன் என்பது கூட காலபுருஷத் தத்துவத்தின்படி ஜாதகக் கட்டத்தில் மேஷம் முதல் வீடாகவும், மீனம் பனிரெண்டாவது வீடாகவும் அமைந்தாலும், ராசிச் சக்கரம் அமைக்கப்பட்ட சூட்சும தத்துவத்தின்படி கும்பமே பனிரெண்டு ராசிகளிலும் கடைசி வீடாக அமையும் என்பதால் தான்.
கீழ்க்காணும் படத்தைப் பார்த்தால் நான் சொல்வது புரியும். மேலும் பூமியைச் சுற்றி உள்ள 360 டிகிரி வான்வெளியே ராசிச் சக்கரமாக (பூமி சூரியனைச் சுற்றி வரும் நீள்வட்டப் பாதை) அமைக்கப்பட்டது என்பதையும் இந்தப் படம் தெள்ளத் தெளிவாக புரிய வைக்கும்.
இதில் வலது புறம் நடுநாயகமாக தாயும், தந்தையுமான (சக்தி, சிவம் என்றும் சொல்லலாம்.) சந்திர, சூரியர்களை கடகத்திலும், சிம்மத்திலும் இருத்தி, சூரியனுக்கு அடுத்துள்ள புதனுக்கு, அதனை அடுத்துள்ள மேல் கீழ் ராசிகளான மிதுனம் கன்னியையும், அடுத்த கிரகமான சுக்கிரனுக்கு அதற்குப் பக்கத்து மேல் கீழ் ராசிகளான ரிஷபம் துலாமும்,
அடுத்து நமது பூமியே மையம் என்பதாலும் ராசிச் சக்கரமே நம்முடைய பார்வைக் கோணம்தான் என்பதாலும் நம்மையடுத்த செவ்வாய்க்கு மேஷம், விருச்சிகமும், அடுத்த சுற்றில் உள்ள குருவுக்கு மீனம், தனுசுவும், இறுதியாக கடைசிச் சுற்றில் உள்ள சனிக்கு கடைசி ராசிகளாக மகர, கும்பங்களும் ஒதுக்கப்பட்டன.
இதன்படி பார்த்தாலும் சூரியனின் ஆத்ம, உயிர் ஒளியைப் பெற இயலாத தூரத்தில் கடைசியாக இருப்பது கும்ப ராசிதான்.
கால புருஷத் தத்துவத்தின்படி அயனாம்சத்தின் ஆதாரமான மேஷப் புள்ளியின் காரணமாகவே அசுவினியின் முதல் பாதத்தில் மேஷ ராசி ஆரம்பித்து கால புருஷனின் முதல் ராசியானது.
ஆனால் ராசிச் சக்கரம் அமைக்கப்பட்ட சூட்சுமத்தின்படி சனியின் கும்பமே, கடைசி வீடாகவும், மகரமே அதன் முன் வீடாகவும் அமையும். நீள் வட்ட அமைப்பில் உள்ள ராசிச் சக்கரம் நமது பார்வைக் கோணத்திற்கு வசதியாகவே சதுர வடிவ ஜாதகக் கட்டமாகியது. எனவே சூட்சும அமைப்பின்படி கும்பமே இறுதி வீடு என்பதால் அனைத்திலும் கும்பத்திற்கு இரு நிலை உண்டு.
(பிப் 14 -19 2012 திரிசக்தி ஜோதிடம் வாரஇதழில் வெளிவந்தது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.