ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
வி. பாலசுப்ரமணியன், திருவனந்தபுரம்.
கேள்வி:
நீண்டகாலமாகவே வேலையிலும், சொந்த வாழ்விலும் மன அழுத்தம் மற்றும் பிரச்சினைகளை சந்திக்கிறேன். 53 வயதாகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. எனக்கு என்ன தசை நடந்து கொண்டிருக்கிறது? அது நல்லதா? மனஅழுத்தம் எப்போது தீரும்? அமைதியான வாழ்க்கை எப்போது கிடைக்கும்? எப்போதும் டென்ஷனாக இருக்கிறேன் இது மாறுமா?
பதில்:
(தனுசு லக்கினம், துலாம் ராசி, 4ல் சனி, 5ல் ராகு, 8ல் குரு, 9ல் சூரி, சுக், 10ல் புத, 11ல் சந், கேது, 12ல் செவ், 9-9-1967 மதியம் 2-10 திருவனந்தபுரம்)
உங்களுக்கு தற்போது சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் சம்பந்தம் பெற்ற அல்லது சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் நன்மைகளைச் செய்வதில்லை. கடந்த 2008 முதல் ஆரம்பித்த கேது தசையில் இருந்து உங்களுக்கு பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டன. குறிப்பாக கடந்த ஆகஸ்டு முதல் 2021 ஏப்ரல்வரை உங்களுக்கு சுக்கிர தசையில். சந்திர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. இது ஆறு மற்றும் எட்டுக்குடையவர்களின் தசா, புக்தியாகும்.
ஒரு மனிதன் கடுமையான மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளை சந்திக்கும் காலம் ஆறு, எட்டுக்குடையவர்களின் தசை, புக்தி காலமாக இருக்கும். அது இப்போது நடந்து கொண்டிருப்பதால் அமைதி என்பது சிறிதும் இல்லாமல் எப்போதும் டென்ஷனாக இருக்கிறீர்கள். என்னதான் சுக்கிரன் உங்களுக்கு கெடு பலன்களைத் தந்தாலும் அவற்றை சமாளிக்கக்கூடிய லக்னாதிபதியான குரு உச்சமாக இருப்பதால் மிகப் பெரிய கெடுதல்கள் எதுவும் உங்கள் வாழ்க்கையில் நடந்து விடப்போவதில்லை.
பாபத்துவம் பெற்ற ஆறாம் அதிபதி தசையில் மனக்கலக்கம், எதிர்காலத்தைப் பற்றிய பயம், கடன், நோய், எதிரி போன்றவைகள் இருக்கும். ஆயினும் லக்னாதிபதி வலுப் பெற்றதால் எதையும் உங்களால் சமாளிக்க இயலும். 55 வயதிற்கு மேல் ஓரளவிற்கு நன்றாக இருக்கக்கூடிய ஜாதகம் உங்களுடையது.
சூரியனும். புதனும் முழுமையான தர்மகர்மாதிபதி யோக நிலையில் இருப்பதால் வேலை, தொழில் போன்றவைகளில் உங்களுக்கு கஷ்டங்கள் வந்து விடாது. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதைப்போல சாப்பாடு துணிமணி அந்தஸ்து கௌரவம் போன்றவற்றிற்கு எப்போதும் பழுது வராது. சுக்கிர தசையின் பிற்பகுதியிலிருந்து பிரச்சினைகள் நீங்கி நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
கணேசன், தர்மபுரி.
கேள்வி:
இத்துடன் எனது இரண்டாவது மகளின் ஜாதகம் இணைத்துள்ளேன். இவள் எதிர்காலம் எப்படி இருக்கும்? டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் உள்ளது. இதன் முடிவு எப்படி அமையும்? மீண்டும் கணவனுடன் வாழ வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். அவன் டைவர்ஸ் கேட்கிறான். இதன் முடிவு என்ன? அனைவருக்கும் குழப்பமாக இருக்கிறது. உண்மை நிலையை தயவுசெய்து தெளிவுபடுத்தி கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை இரண்டாவது திருமணம் முடிந்தால் எந்த திசையில் அமையும்? அவர் எங்கே இருக்கிறார்? எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதையும், சில பெயர்களையும் க்ளூ கொடுக்கவும். நன்றி.
பதில்:
(துலாம் லக்னம் மேஷ ராசி, 1ல் சுக், கேது, 2ல் சூரி, புத, சனி, 4ல் குரு, 7ல் சந், ராகு, 12ல் செவ், 26-11-1985 அதிகாலை 4-40 தர்மபுரி)
லக்னத்திற்கு இரண்டில் பாபத்துவமடைந்த சனி, அதுவே ராசிக்கு எட்டாம் வீடு என்றாகி, ராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்ட நிலை உள்ள பெண்ணிற்கு சீக்கிரமாக திருமணம் நடந்தால் இரண்டு திருமண அமைப்பு உண்டு என்பது விதி. தற்போது ஏழில் உள்ள ராகுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு தான் இருக்கும் வீட்டை கெடுத்து பலன் தருவார் என்ற விதிப்படி முதல் கணவனை குறிக்கும் ஏழாமிடத்தில் இருந்து ராகு தசை நடத்துவதால் அவர் இரண்டாவது திருமணத்தை கொடுத்தே தீருவார்.
விவாகரத்து எப்போது நடக்கும் என்பதற்கு கணவனின் ஜாதகத்தையும் வைத்துப் பார்த்துத்தான் துல்லியமாகச் சொல்ல முடியும். அதுவே சரியானதாகவும் இருக்கும். இந்த அமைப்பின்படி 2022ஆம் ஆண்டில் மகளுக்கு பிரிவினை இருக்கும். வர இருக்கும் மாப்பிள்ளை எந்த திசையில் இருப்பார், எவ்வளவு தூரத்தில் இருப்பார், அவரது பெயர் என்ன என்பதெல்லாம் ஜோதிடத்தில் முறையான அமைப்பில் விதிகளாக சொல்லப்படவில்லை. அவை முற்றிலும் சரியாகவும் இருக்காது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் நாம் அனைவரும் காடுகளுக்குள் குழுக்களாக வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டங்களில், அத்தை பெண், மாமன் பையன் ஒருவருக்கு இல்லாத நிலையில் இங்கிருந்து நாற்பது கல் தூரம் போ, இவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அது சரியாகவும் இருந்தது. ஆனால் இப்போது உலகமே ஒரு கிராமமாக விட்ட சூழ்நிலையில், சென்னையில் இருக்கும் ஒருவருக்கு கிழக்கிலிருந்து பெண் வரும் என்று சொன்னால் வங்காள விரிகுடா கடலில் குதித்துத்தான் ஏதாவது கடல் கன்னியை தேடி வந்து சேர்க்க வேண்டும்.
எந்த ஒரு நல்ல ஜோதிடரும் உன் எதிர்கால மாப்பிள்ளையின் பெயர் ரமேஷ், சுரேஷ், காமேஷ் என்று சொல்லமாட்டார். இதுபோன்ற குறளி வித்தைகளுக்கு அப்பாற்பட்டது ஜோதிடம். இது ஒரு முறைப்படுத்தப்பட்ட காலவியல் விஞ்ஞானம். இதைப் புரிந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள். வாழ்த்துக்கள்.
எஸ். ஜெகநாதன், கோயம்புத்தூர்.
கேள்வி:
எல்இடி லைட்டிங்க்ஸ் தொழில் செய்து வருகிறேன். இரண்டு வருடங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லை. இத்தொழிலே எனக்கு கைகொடுக்குமா அல்லது வேறு எந்தத் தொழில் செய்யலாம்? ஆரோக்கியம் எப்போது சீராகும்? திருமண அழைப்பிதழ் ஷோரூம் எனது மனைவியின் பெயரில் ஆரம்பித்து நான் கவனித்துக் கொள்ளலாமா?
பதில்:
(துலாம் லக்னம், மகர ராசி, 1ல் சூரி, புதன், 2ல் செவ், 4ல் சந், கேது, 10ல் ராகு, 11ல் சுக், 12ல் குரு, சனி, 18-10-1980 காலை 6-14 திண்டுக்கல்)
துலாம் லக்னத்திற்கு அவயோக தசையான குருவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. குரு தன்னுடைய ஆறாமிடத்தைப் பார்த்து பலப்படுத்தும் அமைப்பில் இருப்பதால், இந்த தசையில் உங்களுக்கு கடன், நோய், எதிர்ப்பு போன்ற பலன்கள் நடக்கும். குறிப்பாக குரு தசையின் முதல் 8 வருடங்கள் 2022 வரை உங்களுக்கு தொழில் முன்னேற்றங்கள் இருக்காது.
மனைவியின் பெயரில் தொழில் ஆரம்பித்து நான் கவனிக்கலாமா அல்லது மனைவிதான் செக்கில் கையெழுத்து போடுகிறார், நான் சும்மா வேலைக்காரன் மாதிரிதான் கடையில் இருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் கிரகங்கள் ஏமாந்து விடாது. நடப்பவை நடந்தே தீரும். சூரியனும், சுக்கிரனும் இலக்னத்தோடு பரிவர்த்தனையாகி, சுக்கிரன் லக்னத்திலேயே அமர்ந்திருக்கும் மறைமுக நிலையில் இருப்பதால், உங்களால் எதையும் சமாளிக்க இயலும். 2020 மற்றும் 2021 இரண்டு வருடங்கள் மகர ராசிக்கு ஜென்ம சனி நடப்பதாலும் தொழில் விருத்தி இருக்காது. நடக்கும் தொழிலை அப்படியே செய்து கொண்டிருங்கள். புதிதாக எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இருப்பதையும் விரிவுபடுத்த வேண்டாம்.
2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தொழில் கை கொடுக்கும். 49 வயதில் ஆரம்பிக்கும் சனிதசை உங்களுக்கு யோகங்களைச் செய்யும். சனி ராஜ யோகாதிபதியாகி, அவரே ராசிநாதனாகவும் இருப்பதால் சனிதசை நன்றாக இருக்கும். ஐம்பது வயதிற்கு பிறகு சாதிக்கும் ஜாதகம் உங்களுடையது. அதுவரை பொறுத்திருங்கள். வாழ்த்துக்கள்.
(18.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.