adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சனியைப் பற்றிய சூட்சுமங்கள்..! ( B-017)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

பஞ்சமகா புருஷ யோகங்களில் சனியால் வழங்கப்படும் சச யோகத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இரண்டு வெவ்வேறு எதிரெதிர் நிலைகளாகவே பரம்பொருளால் நமக்குத் தரப்பட்டிருக்கின்றன. 

ஆண் – பெண், இன்பம் – துன்பம், நல்லவை – கெட்டவை, இரவு – பகல், இருட்டு – ஒளி என அனைத்திற்கும் பரம்பொருள் வெவ்வேறு எதிர் நிலைகளை கொடுத்திருப்பதைப் போல, கிரகங்களிலும், சுப-அசுபக் கிரகங்கள் என்று இரு வேறு எதிரெதிர் நிலைகள் இருப்பதை நாம் முன்னரே பார்த்திருக்கிறோம். 


ஒரு கிரகம் பாபக் கிரகம் அல்லது அசுபக் கிரகம் என்று ஏன் அழைக்கப்படுகிறது? அதன் காரகத்துவங்கள், அதாவது அந்தக் கிரகத்தின் செயல்பாடுகள் மனிதனுக்கு கெடுதல்கள் செய்பவைகளாக கெட்டவைகளாக இருப்பதினால்தான். 

அந்த வகையில் இயற்கை பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேதுக்களில் அசுபங்களைத் தருவதில் சனியே முதலிடம் வகிக்கிறார்.

இந்த பாபக் கிரக அமைப்பில் ராகு, கேதுக்களுக்கு சொந்த வீடுகள் இல்லாத நிலையில், தான் இருக்கும் வீட்டின் அதிபதி போன்று பலன் தருவார்கள் என்பதால், சில நிலைகளில் சுபர்களின் பாவங்களிலோ, லக்ன யோகர்களின் வீடுகளிலோ அமரும் பொழுது முழுக்கவே நன்மை செய்பவர்கள் என்றாகி விடுவார்கள். 

அதேபோல செவ்வாயின் காரகத்துவங்களில் மிகச் சில செயல்கள் மனிதனுக்கு அத்தியாவசியமான தைரியத்தையும், உறுதியான உடலினையும் தருபவைகளாக அமைவதால், அவரையும் முழுக்க முழுக்க கெடுப்பவர் என்றும் சொல்லிவிட முடியாது. 

இந்த நால்வரில் சனி ஒருவர் மட்டுமே முழுவதும் கொடிய காரகத்துவங்கள் உடையவர். நன்மைகளான செயல்கள் எதையும் மனிதனுக்கு நேர்வழியில் அளிக்க அதிகாரம் அற்றவர்.  ஆயினும் ஒரு விசித்திர நிலையாக இவ்வுலகில் ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆதாரமான ஆயுளுக்கு காரணமானவர். ஒருவருக்கு நீடித்த ஆயுளைத் தருபவர். 

சனியின் செயல்களில் ஏராளமான விசித்திரங்களும், சூட்சுமங்களும் அடங்கி இருக்கும். 

இதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்... 

இந்த உலகத்தில் நீங்கள் கேட்கும் எல்லா வகையான இன்பங்களையும் தருகிறேன். ஆனால் உங்கள் ஆயுள் இன்றிலிருந்து ஒரு வருடம் வரை மட்டுமே... 

அல்லது, 

இருநூறு வருட ஆயுள் தருகிறேன். ஆனால் இன்றிலிருந்து படுத்த படுக்கையாக கோமா நிலையில் உங்களை வைத்திருப்பேன். இந்த இரண்டில் உங்களுக்கு எது வேண்டும்..?  என்று கேட்டால் நாம் எதைத் தேர்ந்தெடுப்போம்?

இதுவே சனியின் சூட்சும நிலை. 

சூரிய மண்டலத்தில் குருவுக்கு அடுத்தபடியாக இருக்கும் நமது பூமியின் வெளிச் சுற்றுக் கிரகமான சனி, சூரியனிலிருந்து ஏறத்தாழ நூற்றி நாற்பது கோடி மைல்களுக்கு அப்பால் இருப்பதால், சூரியனை ஒரு முறை சுற்றி வர சுமார் முப்பது வருடங்களை எடுத்துக் கொள்கிறார். 

இதனால் நமது பார்வையில் மெதுவாகச் சுற்றி வருபவர் போலத் தோன்றும் கிரகமான சனி சம்ஸ்க்ருத மொழியில் மெதுவாக நகர்பவர் என்ற அர்த்தத்தில் ‘சனைச்சர’ என்று அழைக்கப்பட்டார். 


இதுவே தமிழில் சனீஸ்வரர் என்று மாறியதே தவிர கிரகங்களில் அவருக்கு மட்டும் “ஈஸ்வர” பட்டம் என்பது பொருத்தமற்ற புகுத்தப்பட்ட கதை. 

சம்ஸ்க்ருதத்தில் அனைத்து மூல மந்திரங்களும் அவரை ‘சனைச்சர’ என்றுதான் கூறுகின்றனவே தவிர நமது மேலான இந்து மதத்தின் புனிதமொழியான சம்ஸ்க்ருதம் சனியை ஒருபோதும் சனீஸ்வரர் என்று குறிப்பிடவே இல்லை. 

ஆனால், எல்லாப் பழமையான புராணக் கதைகளிலும் ஏதேனும் ஒரு விஞ்ஞான உண்மை ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. 

நம் புராணக் கதைகள் அனைத்தும் அபத்தமானவை, அர்த்தமற்ற குப்பைகள், அதீதமான கற்பனைகள் என்று ஒதுக்கித் தள்ளும் மேலை நாட்டுப் பாணி பகுத்தறிவாளர்களுக்கு ஒன்றை மட்டும் உறுதியாகவே சொல்லிக் கொள்கிறேன்... 

இந்த ஒப்பற்ற மேலான மதத்தை நமக்குத் தொகுத்து தந்த அன்றைய ரிஷிகளும், ஞானிகளும், நேற்றைய நமது நியூட்டன்களையும், இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்குகளையும் விட மகத்தானவர்கள். இந்த உலகில் இதுவரை பிறந்த யாருடனும், இனி பிறக்கப் போகும் எவருடனும் ஒப்பிட முடியாதவர்கள். 

(மேலே குறிப்பிட்ட இவர்கள் அனைவரும் சென்ற ஆண்டுகளில் பிரபஞ்சத்தை அளந்த மேலைநாட்டு விஞ்ஞானிகள். மூன்றாமவர் இன்றும் உயிருடன் இருக்கிறார். நம் வாழ்நாளின் மிகப் பெரிய பௌதிக விஞ்ஞானி எனப் போற்றப்படுகிறார்.) 

தங்களது வெறும் கண்களினால் கிரகங்களை அங்குல, அங்குலமாக அளந்த நமது தெய்வாம்சம் பொருந்திய ரிஷிகள் தங்களது மெய் ஞான அனுபவங்களின் மூலமாக இந்த மாபெரும் பிரபஞ்சத்தை உணர்ந்து, அதன் உண்மைகளைக் கண்டு தெளிந்து, மனித வாழ்க்கையின் ரகசியங்களை முன்கூட்டியே அறியும் இந்த எதிர்காலத்தைக் காட்டும் இயலான ஜோதிடக் கலையை நமக்கு விட்டுச் சென்றார்கள்.

“விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர்” என்ற தமிழ் முதுமொழிக்கு உண்மையான அர்த்தமே, தாங்கள் கண்டுணர்ந்த பிரபஞ்ச ரகசியங்களை ஞானிகள் நம்மிடையே நேரிடையாக விளக்கிச் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு கிடையாது என்பதுதான். 

ஆகவேதான் உண்மைகளை அவர்கள் நமக்கு மறைபொருளாகவே அநேக இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். சித்தர்களின் பரிபாஷையின் அர்த்தமும் இதுதான்.

அதனால்தான் குருகுல வாசமாய் தங்களிடம் தங்கி புத்தகங்களோ, எழுதும் கருவிகளோ, இல்லாமல் வாய்மூலமாகவும், மனப்பாடம் செய்தும் மட்டுமே பயின்ற இளம் பருவ மாணவர்களுக்கு சில விஞ்ஞான உண்மைகளை, கதை வடிவில் சொல்லித் தந்து நமது ரிஷிகள் புரிய வைத்தார்கள். 

சனியை எமன் அடித்தான் அதனால் அவர் நொண்டியாகி மெதுவாக நடக்கிறார் என்று சொல்லித் தந்தது, சூரிய மண்டலத்தில் சனிதான் மிகவும் மெதுவாக சுற்றும் கிரகம் என்பதை ஒரு இளம் பருவத்து மாணவனுக்கு புரிய வைக்கவே...!

அதேபோன்ற இன்னொரு கதைதான் ராவணன் நவ கிரகங்களையும் படிக்கட்டுகளாக மாற்றி குப்புறப் படுக்க வைத்து அவர்கள் மேல் ஏறி சென்று சிம்மாசனத்தில் அமர்வார் என்றும், அவரின் கொடுமைகளைப் பொறுக்க இயலாத தேவர்கள் சனியிடம் முறையிட்டனர். “இதற்கு நான் ஒரு வழி செய்கிறேன்” என்று உறுதியளித்த சனி, ஒருநாள் ராவணன் ஏறி வரும் பொழுது மல்லாக்க திரும்பிப் படுத்துக்கொண்டார். 

அப்போது சனியின் பார்வை ராவணன் மேல் விழ, அது முதல் அவரின் சரிவு ஆரம்பமாகியது என்பது போன்ற கதைகளெல்லாம் சனியின் பார்வை கொடியது, அவர் பார்வை படும் இடங்கள் நாசம் பெறும் என்ற ஜோதிட உண்மையை அடிநாதமாகக் கொண்டவையே.

அதுபோலத்தான் சந்திரனுக்கு இருபத்தேழு மனைவிகள், அவர்களில் ரோஹிணியை மட்டும் அவருக்கும் பிடிக்கும் என்று சொல்லித் தந்த கதையும்.. 


இதில் சந்திரன் ஒருவர், நட்சத்திரங்கள் இருபத்தி ஏழு என்ற வானவியல் உண்மையும், நிலவு இருபத்தேழு நட்சத்திரங்களின் வழியாக பயணம் செய்கிறது, ரிஷப ராசியின் முழு நட்சத்திரமான ரோஹிணியில் சந்திரன் அதிக சுபத்துவம் அடைவார் என்ற ஜோதிட உண்மையும் இருக்கிறது. 

கற்று கொள்பவனின் மனதில் தெள்ளத் தெளிவாக புரிய வைக்கவே இது போன்ற உதாரணங்களையும், கதைகளையும் நம் ரிஷிகள் பயன்படுத்தினார்கள். இதை உணராமல் உலகின் மூத்த நமது இந்து மத புராணக் கதைகளை நீங்கள் கேலிக்கு உள்ளாக்குவீர்களேயானால் உங்களின் மனநிலையைச் சந்தேகப்படுவதை தவிர வேறு வழியே இல்லை. 

ஆயினும் எல்லா நல்லவைகளிலும் ஒரு துளி குறை இருக்கும் என்பதை போல் நம்முடைய புராணங்களிலும் சில விஷமத்தனமான இடைச் செருகல்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

அவற்றைத் தெளிவாக உணர்ந்து, பிரித்து அறிவதே அறிவாளிகளின் இயல்பு. 

அடுத்த அத்தியாயத்தில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக ஜோதிட உலகில் இதுவரை வெளிப்படுத்தப் படாத,  ஞானிகளைத் தவிர வேறு எவரும் அறியாத, இறையருளால் எனக்குக் கிடைத்த சூட்சும ரகசியமான குரு எப்படி இயற்கைச் சுபர் ஆனார், சனி ஏன் பாபர் ஆனார் என்பதைப் பார்க்கலாம்.

(ஜன 25-31, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.)


அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.