adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 274 (04.02.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

எஸ். வாசுதேவன், சென்னை-18

கேள்வி:

எங்களுக்கு ஒரே பையன். அமெரிக்காவில் படித்து தற்போது அங்கேயே வேலையில் சேர்ந்துள்ளார். நல்ல சம்பளம் வாங்குகிறார். அவனுக்கு கல்யாணத்தைப் பற்றி பேசினால் எதுவும் பதில் சொல்வதில்லை. அப்பா அம்மாவுடன் எப்போதாவது ஒருமுறைதான் பேசுகிறான். நாங்கள் மாத்வ பிராமின். அவன் கல்யாணம் செய்து கொள்ளும் பெண்ணும் எங்கள் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாங்கள் நினைத்தது போல் நடக்குமா? எப்பொழுது நடக்கும்?


பதில்:

(கன்னி லக்னம், விருச்சிக ராசி. 3-ல் சந், 4ல் சனி, 5ல் ராகு, 9ல் செவ், 11ல் சுக், குரு, கேது, 12ல் சூரி, புத, 28-8-1990 காலை 8-30 தஞ்சை) 

வாழ்க்கைத் துணையை குறிக்கும் ஏழாம் அதிபதி குரு உச்சம் பெற்று, சுபராகி, தன் வீட்டைத் தானே பார்த்து, கேளயோகத்தில் அமர்ந்து, சுக்கிரனுடன் இணைந்திருக்கும் நிலையில், ஏழாம் இடத்திற்கு பாபக்கிரக தொடர்புகள் எதுவும் இல்லாததால், உங்களுடைய மருமகள் உங்களுடைய இனத்தைச் சேர்ந்தவராக இருப்பார். 

ராசிக்கு இரண்டில் சனி, ராசிக்கு ஏழில் செவ்வாய் என்கின்ற அமைப்பு இருப்பதால்தான்  உங்கள் மகனுக்கு திருமணம் தாமதமாகிறது. மகனின் 32வது வயதில் கேது தசை ராகு புக்தியில் அவருக்கு திருமணம் நடக்கும். ஐந்தாமிடமான மகரத்தில் அமர்ந்து களத்திர காரக ஆதிபத்திய இருவரான சுக்கிர, குருவின் பார்வையைப் பெற்ற ராகுதான் இந்த ஜாதகத்தில் திருமணத்தை கொடுக்கும் தகுதி பெற்றவர். வாழ்த்துக்கள்.

தர்ஷினி, மதுரை.

கேள்வி:

வணக்கம் ஐயா. என்னுடைய மூன்று வயது மகளுக்கு வயிற்றில் கேன்சர் என்று சொல்லி கடந்த ஒரு மாதமாக ட்ரீட்மென்ட் நடந்து கொண்டிருக்கிறது. ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். வியாதி பூரணமாக குணமாகிவிடும் அல்லவா? ஆயுள் குற்றம் எதுவும் இல்லைதானே? தயவு செய்து பதில் தாருங்கள். கைகூப்பிக் கேட்கிறேன். அவளது எதிர்காலம் எப்படி இருக்கும்? என் மனதின் வேதனை உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

பதில்:

(கன்னி லக்னம், கன்னி ராசி, 1ல் சந், குரு, 3ல் சனி, 4ல் புத, 5ல் சூரி. 6ல் சுக், செவ், கேது, 12ல் ராகு, 18-1-2017 இரவு 11-25 மதுரை)

கன்னி லக்னத்திற்கு கடன், நோய், எதிரியைக் கொடுக்கக்கூடிய செவ்வாய் தசை குழந்தைக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த செவ்வாய் வயதிற்கு ஏற்றார்போல பலன்களை தருவார் என்பதன்படி குழந்தையாக இருப்பதால் ஆரோக்கியக் குறைவு இருக்கிறது. மூன்று, எட்டுக்கு அதிபதியான செவ்வாய் எட்டாம் இடத்தோடு தொடர்பு கொள்ளாமல், மூன்றில் இருக்கும் சனியோடு பரிவர்த்தனையாகி இருப்பதால் இந்த நோய் குணமாகக் கூடியதுதான்.

லக்னாதிபதி புதன் நான்காம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனையாகி, மறைமுகமாக லக்னத்தில் உச்சம் பெற்ற நிலையில், எட்டாமிடத்தில் எவ்வித பாபத் தொடர்பும் இல்லாமல், எட்டாம் அதிபதி செவ்வாய் சுபத்துவமாகி, சூட்சுமவலுவுடன் இருப்பதால் நிச்சயம் குழந்தைக்கு ஆயுள் குற்றமில்லை. அவள் தீர்க்காயுள் இருப்பாள். ஆனால் செவ்வாய் தசை முழுவதும் நோய் இருக்கும். அதிலும் முதல் மூன்றரை வருடங்கள் நோய் சற்று கடுமையாகவே இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன் ஆகியோர் மற்ற கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் அவருக்கு எவ்வித குறைகளும் இல்லாமலும், பாபக் கிரகங்களான சனி, செவ்வாய் மற்ற கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் அவர் குறைகளுடனும் இருப்பார் என்பது ஒரு ஜோதிட சூட்சுமம்.

மகளின் ஜாதகத்தில்  எட்டுக்குடையவனான செவ்வாய், தற்போது தசை நடத்தி, அடுத்து 26 வயது வரை நடக்க இருக்கும் ராகுவை பார்க்கிறார். அதனை அடுத்து 42 வயது வரை நடக்க இருக்கும் குருவையும் செவ்வாய் பார்க்கிறார். பின்னர் 61 வயது வரை நடக்க இருக்கும் சனியோடு செவ்வாய் பரிவர்த்தனை ஆகிறார். செவ்வாயின் தொடர்பு புதனுக்கு இல்லாததாலும், 60 வயதிற்கு பிறகு இவருக்கு லக்னாதிபதியின் தசை ஆரம்பிப்பதாலும் வாழ்க்கையில் சிறுசிறு குறைகள், ஆரோக்கியக் குறைவுகளுடன் ஆயுளுடன் இருக்கும் ஜாதகம் இது. புதன் வலுப்பெற்றதால் நன்கு படிப்பார். பொருளாதாரக் குறைகள் எதுவும் இல்லை. வாழ்த்துக்கள்.

தரன்ஜா, மாத்தளை.

கேள்வி:

ஜோதிட சுவாசத்திற்கு வணக்கம். உங்களிடமிருந்து ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவி நான். கடந்தமுறை மாலைமலரில் தங்களிடம் எனக்கு அரசு தொழில் எப்போது அமையும்? குழந்தை எப்போது என கேட்டிருந்தேன். நீங்கள் 2019 முற்பகுதியில் அரச தொழில் கிடைக்கும் என்று பதில் கொடுத்திருந்தீர்கள். நீங்கள் கூறியது போலவே எனக்கு சந்திரதசை, சந்திர புத்தியில் 2019 மாசி மாதம் நான் விரும்பிய அரச தொழில் கிடைத்தது. உங்களைப் போன்று துல்லியமாக ஆண்டு, மாதம் சொல்லி பலன் சொல்லும் ஜோதிட ஞானத்தை நான் இதுவரை அறியவில்லை ஐயா. அதேபோன்று எனக்கு 2020இல் ஒரு பெண் குழந்தைக்கு பலன் உண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள். இதுவரை அதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை. இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. அவ்வாறாயின் பங்குனி மாதத்திற்குள் நல்லது நடக்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு சென்று சரியான பலன் இல்லை. தோல்விதான் கிடைக்கிறது. மீண்டுமொருமுறை மருத்துவத்திற்கு போய் சிகிச்சைக்கு செல்வதா? ஒரே குழப்பமாக இருக்கிறது. இங்கே எனது கணவரின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர், 2022ல் தான் பிள்ளை பலன் உள்ளது என்று சொல்கிறார். எதுவாக இருப்பினும் எனது மானசீக குருவாகிய நீங்கள் கூறியது போல் காத்திருக்கிறோம். எனக்கு எப்போது பிள்ளை பலன்?

பதில்:

(துலா லக்னம், மேஷ ராசி, 3ல் செவ், சனி, 4ல் புத, 5ல் சூரி, 6ல் சுக், ராகு, 7ல் சந், குரு,12ல் கேது, 21-2- 1988 இரவு 11-23 மாத்தளை இலங்கை)

மானசீக குரு என்று பக்கம் பக்கமாக என் புகழ் பாடி கடிதம் எழுதியிருக்கிறாய்.. ஆனால் குருவின் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையே? இருந்தால் மறுபடியும் கடிதம் அனுப்பியிருக்க மாட்டாயே? நல்லவை எதிலும் முதலில் நம்பிக்கை வை. ஏற்கனவே நான் கூறியுள்ளபடி உனக்கு இந்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் சந்திர தசை ராகு புக்தியில், ராகு குருவின் வீட்டில், சுக்கிரனுடன் வலுவாக இருக்கின்ற அமைப்பில் 2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் உனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும். வாழ்த்துக்கள்.

(04.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆத்திய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.