ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
ஒரு வாசகர், கோவை.
கேள்வி:
43 வயதாகும் என் மகளுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. மகள் வேலை செய்யும் அலுவலகத்தின் உரிமையாளர் அவளை ரகசியமாக திருமணம் செய்வதாக கூறியதை நான் தடுத்து விட்டேன். அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி குழந்தைகளும் உள்ளது. மகள் கல்யாணம் நடக்காததற்கு நான்தான் காரணம் என என் வீட்டில் தகராறு நடக்கிறது. எனக்கும் அது உண்மைதானோ என்று சங்கடமாக உள்ளது. என் மகளின் கல்யாணம் எப்படி நடக்கும் என்பதை தயவு செய்து கூறவும்.
பதில்:
(சிம்ம லக்னம், மீன ராசி, 1ல் சனி, 2ல் சுக், ராகு, 3ல் சூரி, புத, 8ல் சந், கேது, 11-ல் குரு, 12ல் செவ், 25-10-1977 அதிகாலை 2-15 கோவை)
மகளுக்கு திருமணத்தை குறிக்கும் ஏழாமிடத்தை பாபத்துவம் பெற்ற சனியும், செவ்வாயும் ஒருசேரப் பார்த்து, ராசிக்கு ஏழாமிடத்தில் ராகு அமர்ந்து, களத்திரகாரகன் சுக்கிரன் நீச்சமும் பரிவர்த்தனையும் பெற்றுள்ள நிலையில், சுக்கிரன் ராசியில் ராகுவுடன் இணைந்து, அம்சத்தில் சனியுடன் இணைந்த திருமண குற்றம் உள்ள ஜாதகம்.
அதே நேரத்தில் பலவீனமான சுக்கிரனை பௌர்ணமிக்கு அருகில் இருக்கின்ற, கேதுவுடன் இணைந்த சந்திரன் பார்ப்பதாலும், அம்சத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதாலும் அவருக்கு திருமணம் நிச்சயம் நடக்கும்.
ராகுவுடன் நான்கு டிகிரிக்குள் இணைந்து, நீச்சமுமாகி முற்றிலும் பலவீனமான நிலையில் சுக்கிரன் உள்ளதால், அவருக்கு பருவத்தில் தாம்பத்திய சுக அமைப்பு இல்லை. அதேநேரம் இதுபோன்ற ஜாதக அமைப்பிற்கு ராகுதசை வந்திருக்குமாயின் இந்தப் பெண்ணிற்கு திருமணம் நடந்திருக்கும். தற்போது சுக்கிர தசையில், ஏழாம் இடத்திற்கு அதிபதியான சனியின் புக்தி நடப்பதால், இந்த வருட பிற்பகுதியில் இவருக்கு திருமண யோகம் கண்டிப்பாக உண்டு.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்தாலே 40 வயதிற்குப் பிறகுதான் ஓரளவிற்கு வாழ்க்கை நிலையானதாக அமையும் என்பது ஜோதிட விதி. அதன்படி இவருக்கு சிம்ம லக்னமாகி, லக்னேசன் சூரியன் நீச்சமும், சனியின் பார்வையையும் பெற்று, இன்னொரு நீச்சனான செவ்வாய் மற்றும் குருவின் பார்வையையும் பெற்றதால் 43 வயதிற்கு பிறகு உங்கள் மகள் நன்றாகவே இருப்பார்.
இப்போது உங்கள் கேள்வியின் மிக முக்கியமான விஷயத்திற்கு வருவோம். மகளை அவளது அலுவலக உரிமையாளர் ரகசியமாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அதை நான் தடுத்து விட்டேன் என்று எழுதி இருக்கிறீர்கள்.
கடிதத்தின் ஆரம்பத்தில் வாய்மையே வெல்லும் என்று குறிப்பிட்டு அதன் பிறகு நீங்கள் கடிதத்தை ஆரம்பித்திருப்பதில் இருந்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது புரிகிறது. சிலரால் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவன் இதற்கு சரிவர மாட்டான் என்று ஒரு தமிழ் திரைப்படத்தில் குறிப்பிடப்படும் நகைச்சுவை காட்சிக்கு ஆதாரமானவராக நீங்கள் இருப்பீர்கள் போலும்.
ஜோதிடத்தை மீறி, யதார்த்தத்தை இங்கே அலசி பார்ப்போமேயானால், மகளுக்கு குழந்தை பெறும் பருவம் தாண்டிவிட்டது. 43 வயது ஆரம்பித்துவிட்டது, என்னதான் இவளுடன் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி பிறந்திருந்தாலும், இவருக்கே இன்னும் திருமணமாகாத நிலையில், அவர்களும் இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகாமல்தான் இருருப்பார்கள்.
கூடப் பிறந்தவர்கள் இல்லை, இந்தப் பெண் உங்களுக்கு ஒரே பெண் என்றால் நீங்கள் இருவரும் எழுபதை ஒட்டிய ஒரு முதுமை நிலையில் இருப்பீர்கள். அதாவது உங்கள் பெண்தான் உங்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பீர்கள். உங்களுக்குப்பின் இந்தப் பெண் ஆதரவற்ற நிலையில் இருப்பாள். ஆகவே நீங்கள் ஓரளவிற்கு நன்றாக இருக்கும் பொழுதே இவளை ஏதாவது ஒருவகையில் கரையேற்ற வேண்டியது உங்களுடைய கடமை.
இதுபோன்று சுக்கிரன் பலவீனமான ஜாதகங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஒரு குறையுள்ள வாழ்க்கைத்துணைதான் அமையும். அதன்படி மகளின் அலுவலக உரிமையாளர் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லாமல் திருமணம் செய்து கொள்கிறார் என்று சொல்கிறாரே என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது ஒரு வழி. அல்லது நேரிடையான வரன் தேட வேண்டியது இன்னொரு வழி. இதில் எதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்களுடைய குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தது.
இந்த விஷயத்தை நீங்கள் எதிர்ப்பதால் வீட்டில் தகராறு ஏற்படுகிறது என்று நீங்கள் சொல்லும் பொழுது, உங்களைத் தவிர வீட்டில் அனைவருக்கும் இவ்வாறு திருமணம் செய்து கொடுப்பதில் சம்மதம் இருக்கிறது என்றே தெரிகிறது. ஒவ்வொரு நாளும் காலம் கடந்து கொண்டே இருக்கிறது என்பதை மனதில் வைத்து மகளின் திருமண விஷயத்தில் முடிவெடுக்கவும்.
நமக்குப் பிறகு ஏதேனும் ஒரு வகையில் அவளுக்கு ஒரு விதமான பாதுகாப்பு தேவை. ஒரு வயதிற்கு பிறகு தாம்பத்திய சுகம் இல்லாவிட்டாலும், இரவு 12 மணிக்கு தலைவலிக்கிறது என்றால், ஒரு மாத்திரையையாவது தேடி எடுத்துக் கொடுப்பதற்கு பக்கத்தில் ஒரு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இருந்தே தீர வேண்டும்.
மகளின் அலுவலக உரிமையாளரின் ஜாதகம் இருந்திருந்தால் இன்னும் கூட ஜோதிட ரீதியாக என்னால் பதில் கொடுத்திருக்க முடியும். ரகசியமாகத் திருமணம் என்றால் ஒருவருக்குமே தெரியக் கூடாத திருமணமா அல்லது ஒருவருக்கு மட்டும் தெரியக் கூடாத திருமணமா என்பதை அந்த அலுவலக உரிமையாளரிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யாருக்குமே தெரியக் கூடாது என்றால் அது திருமணமே அல்ல.
அவர் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் மட்டும் மறைக்க வேண்டும் என்றால் அது விதி. இதுதான் தலைவிதி என்பது உங்கள் பெண்ணிற்கும் அந்த அலுவலக உரிமையாளரின் மனைவிக்கும் இருந்தால் நடப்பது நடந்தே தீரும். எது எப்படியாயினும் இந்த வருட இறுதியில், சுக்கிர தசை, சனி புக்தியில் உங்கள் மகளுக்கு திருமணம் நடக்கும். வாழ்த்துக்கள்.
(04.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆத்திய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.