ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
விருச்சிகம்:
விருச்சிக லக்னத்திற்கு லக்னத்தில் அமர்ந்து செவ்வாய் ருசக யோகத்தைத் தருவார். இந்த இடத்தில் மூலத் திரிகோண பலமின்றி வெறும் ஆட்சி பலத்தை மட்டுமே அவர் அடைவார்.
இந்த லக்னத்தின் ஆறாமிடத்திற்கும் செவ்வாய்தான் அதிபதி என்பதால், ஆறாமிடத்திற்கு எட்டாமிடமான லக்னத்தில் மறைவது, ஆறாமிடத்தின் கெட்ட பலன்களைத் தடுக்கும் ஒரு உன்னதமான நிலை.
லக்னத்தில் வலுப் பெற்று சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடையாமல் தனித்திருக்கும் செவ்வாயால் ஜாதகர் அசட்டுத் துணிச்சல்காரராகவும், அதிகாரம் செய்ய விரும்புவராகவும், முன்கோபக்காரராகவும், ஆத்திரம் கொள்பவராகவும் இருப்பார்.
இங்கிருந்து நான்கு, ஏழு, எட்டாமிடங்களை அவர் பார்க்கும் நிலையில், லக்னாதிபதியின் பார்வை என்பதாலும், ஆறுக்குடையவன் அதற்கு எட்டில் மறைந்து சுபரானார் என்பதாலும், மேற்படி இடங்கள் வலுப் பெறும். என்னதான் லக்னாதிபதியின் பார்வை என்றாலும் செவ்வாய் இயற்கைப் பாபி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான்காமிடத்தை செவ்வாய் பார்க்கும் நிலையில், செவ்வாய் சம்பந்தப்பட்ட தசைகளில், நல்ல வாகனம், வீடு, அம்மாவின் ஆசிகள், கல்வி (புதனும், சனியும் வலுப் பெற்றால்) போன்ற நான்காமிட சுப பலன்களைச் செய்வார்.
ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தை பார்த்து, தான் விரும்பும் பெண்ணை மனைவியாக்குவார். இந்த அமைப்பால் நல்ல குடும்பப் பின்னணியும், பொருளாதார வசதியும் வாழ்க்கைத் துணைக்கு இருக்கும். உதவி செய்யும் நண்பர்கள் இருப்பார்கள்.
எட்டாமிடத்தை லக்னாதிபதி பார்க்கும் நிலையில் எட்டாமிடம் சுபத்துவம் பெறும் என்பதால் ஜாதகர் நீண்ட ஆயுள் உள்ளவராக இருப்பார். (சனி, புதனின் நிலையும் முக்கியம்) எட்டாமிடத்தின் அசுப நிலைகளான அசிங்கம், கேவலம், விபத்து மரணம் ஆகியவை புதன் தசையில் நடக்காமல் செவ்வாய் பாதுகாப்பார்.
சார பலம் என்பதை எடுத்துக் கொள்வோமேயானால் விருச்சிக லக்னத்திற்கு, செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெறும் நிலையில் அவர் கேட்டை நட்சத்திரத்தில் இருப்பது கண்டிப்பாக நல்ல நிலை அல்ல. அம்சத்தில் தனுசு, மகரம், மீனம் என மூன்று நிலைகளில் அவர் பலம் பெற்றாலும் அஷ்டமாதிபதியின் சாரத்தை லக்னாதிபதி பெறுவது மேன்மையைத் தராது.
மகரம்:
மகரம் சர லக்னம் என்பதால் செவ்வாய் இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாகி, தன் பாதக ஸ்தானமான பதினொன்றுக்கு மூன்றில் மறைந்து, லக்னத்தில் உச்சம் பெற்றும், நான்கிற்குடைய சுகாதிபதியாகி நான்காமிடத்தில் ஆட்சி பெற்றும் இரு நிலைகளில் ருசக யோகம் தருவார்.
லக்னத்தில் உச்சம் பெற்று தசை நடத்தும் நிலையில் அவர் பாதகம் செய்யும் அமைப்பைப் பெறுவார். எந்த ஒரு லக்னத்திற்கும் பாதகாதிபதி உச்சம் போன்ற வலிமையை அடைவது நல்லது அல்ல. இதுபோன்ற அமைப்பில் முதலில் நன்மைகள் நடப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் கெடுதல்கள் நடக்கும்.
லக்னத்தில் செவ்வாய் இருக்கும் நிலையில் பாதகாதிபதி வலிமை அடைந்து விட்டார் என்பதோடு, இந்த லக்னத்தின் அஷ்டமாதிபதியான சூரியன் சாரத்திலோ, தனது சுயச் சாரத்திலோ இருந்து விட்டால் செவ்வாய் தசையின் ஒரு பகுதி மிகவும் கடுமையாக இருக்கும்.
இந்த லக்னத்திற்கு சூரிய, சந்திர, செவ்வாய் மூவருமே கடுமையான பாவிகள் என்பதாலும், இந்த மூவரின் சாரத்தில் தான் செவ்வாய் லக்னத்தில் இருக்க முடியும் என்பதாலும், சாரம் தரும் மூவரும் ஏதேனும் ஒரு வழியில் சுபத் தன்மை அடைந்தால் ஒழிய செவ்வாய் தசை நன்மை அளிக்காது.
லக்னத்தில் செவ்வாய் இருக்கும் நிலையில் அவர் வளர்பிறைச் சந்திரனின் பார்வை அல்லது தொடர்பைப் பெற்றிருந்தால் தனது பாதகத் தன்மையை மாற்றிக் கொண்டு தன்னுடைய காரகத்துவங்களான மருத்துவம், சீருடைப் பணி, விளையாட்டு, பூமி, நெருப்பு போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி லாபங்களைத் தருவார்.
சந்திரனின் தொடர்பு என்பது செவ்வாயின் பாதகத் தன்மை மற்றும் கடுமையை முழுமையாக மாற்றும் என்ற நிலையில் இன்னொரு சுபரான குருவின் பார்வை அல்லது இணைவும் அவரது கடும் நிலையை மாற்றி ஜாதகருக்கு நன்மைகளைத் தர வைக்கும்.
இந்த லக்னத்தின் ராஜ யோகாதிபதியான சுக்கிரனின் இணைவும் நன்மை தரும் நிலைதான். ஆனால் இங்கே செவ்வாயுடன் சுக்கிரன் இணையும் நிலையில் ஜாதகருக்கு நல்லது செய்யும் தகுதியை சுக்கிரன் இழப்பார். செவ்வாய் சுக்கிரன் இணையும் டிகிரி நிலைகளைப் பொருத்து பலன்கள் மாறுபடும்.
லக்னத்தில் உச்சம் பெற்று நான்கு, ஏழு, எட்டாமிடங்களைப் செவ்வாய் பார்க்கும் நிலையில் அவருடைய வீட்டை அவரே பார்க்கிறார் எனும் நிலையில் நான்காமிடம் மட்டும் வலுப் பெறும். ஜாதகருக்கு தனது பாதகமான வழிகளில் வீடு, வாகனம் போன்றவற்றை செவ்வாய் அளிப்பார்.
ஏழு, எட்டாம் பாவங்களைப் பார்ப்பது நிச்சயம் கெடுதல்தான். மண வாழ்வில் திருப்தியின்மை, சரியில்லாத புரிந்து கொள்ளாத மனைவி, தாம்பத்திய உறவில் அதிக வேட்கை, முறையில்லாத வழக்கமற்ற முறைகளிலான உறவில் நாட்டம், ஆகியவற்றை லக்னத்தில் இருக்கும் செவ்வாய் அளிப்பார்.
எட்டாமிடத்தை அவர் பார்ப்பதும் சரியான நிலை அல்ல. அவரின் தசையில் விபத்து, அடிதடி, கோர்ட், கேஸ் போன்ற வில்லங்கங்களில் மாட்டிவிடுவார். போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வைப்பார்.
மற்றபடி லக்னத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு என்ன குணங்கள் இருக்கும் என்று மற்ற லக்னங்களுக்கு நான் சொன்னதை விட செவ்வாய் இங்கு உச்சம் பெறுவதால் ஒரு படி அதிகமான குணங்களுடன் ஜாதகர் இருப்பார்.
அடுத்து, மகர லக்னத்திற்கு இன்னொரு நிலையான நான்காமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று ருசக யோக அமைப்பில் இருப்பது நல்ல நிலைதான். ஒரு இயற்கைப் பாபக் கிரகம் கேந்திரத்திற்கு அதிபதியாகி கேந்திரத்திலேயே இருப்பதும், ஒரு பாதகாதிபதி தன் பாதக ஸ்தானத்திற்கு ஆறில் மறைந்து பாதகத்தைத் தரும் வலிமை இழப்பதும் நல்ல நிலையே.
இங்கிருக்கும் செவ்வாயால் ஜாதகரை மருத்துவம், காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் உயர் பதவியில் அமர வைக்க முடியும். நான்காமிடத்தின் சுப காரகத்துவங்களான வீடு, வாகனம், அம்மாவின் ஆதரவு, கல்வி போன்றவைகளைத் தர முடியும். கண்டிப்பாக அஷ்டமாதிபதி சூரியனின் சாரமான கிருத்திகையில் இருப்பது பலன்களைக் குறைக்கும்.
லக்னத்தில் இருக்கும்போது குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய சுப கிரகங்களுடன் இணைந்தால் என்ன பலன் என்று சொன்னது நான்காமிட செவ்வாய்க்கும் பொருந்தும் என்பதால் இங்கே அவர் சுபருடன் இருப்பது யோக பலன்களைக் கூட்டித் தரும்.
கும்பம்:
கும்பத்திற்கு செவ்வாய் மூன்று, பத்தாமிடங்களுக்கு உரியவராகி பத்தாமிடத்தில் ஆட்சி பெற்று ருசக யோகம் அளிப்பார்.
பத்தாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவது தொழில், வேலை, வியாபார அமைப்புகளுக்கு ஒரு நல்ல பலனளிக்கும் தசம அங்காரா எனும் நிலை ஆகும். இங்கிருந்து அவர் லக்னம், நான்கு, ஐந்து ஆகிய இடங்களைப் பார்வை செய்வார். ஜீவனாதிபதியாகி இந்த இடத்தில் அவர் ஆட்சி பலமும், அதே நேரத்தில் திக்பலமும் பெறுவார்.
என்னுடைய நீண்டகால அனுபவத்தில் திக்பலம் பெற்ற ஒரு கிரகம் தனது காரகத்துவங்களில் ஏதேனும் ஒன்றை தனது தசையில் மிக வலுவாகச் செய்யும். இந்த திக்பல அமைப்பைப் பற்றி நமது கிரந்தங்கள் நல்லவிதமாக வலியுறுத்திச் சொல்வதால் ஜோதிடத்தில் துல்லிய பலன் சொல்வதற்கு உதவும் சூட்சும அமைப்புகளில் திக்பல வலுவும் ஒன்று.
ஒரு ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் திக்பல அமைப்பில் இருந்தால் அது ராஜயோக ஜாதகம் என்று சில மூலநூல்கள் சொல்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் செவ்வாய் பத்தாமிடத்தில் இருப்பது வலுவுள்ள திக்பல நிலை என்பதால் ஜாதகரின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை நற்பலன் செய்ய வைக்கும்.
பத்தாமிடத்தில் செவ்வாய் ஜீவனாதிபதியாகி வலுப்பெறும் நிலையில் அவரது காரகத்துவங்களில்தான் தொழில் அமையும். இங்கு குரு சம்பந்தத்துடன் அவர் இருந்தாலோ, அல்லது குருவுடன் இணைந்திருந்தாலோ சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணராகவோ, சிசேரியன் செய்யும் மகப்பேறு மருத்துவராகவோ ஆக முடியும். பாபர்களுடன் இணைவது நல்லது அல்ல.
சனியுடன் தொடர்பு கொண்டால் ஜாதகரை எஞ்சினியரிங், கட்டிடத்துறை ஆகியவற்றில் ஈடுபடுத்துவார். தனித்திருக்கும் நிலையில் நெருப்பின் மூலம் லாபம் காண வைப்பார். செவ்வாயும், சனியும் இணைந்திருந்தால் அடுப்பில் எண்ணையை வைத்து செய்யும் (செவ்வாய் நெருப்பு + சனி எண்ணெய்) முறுக்கு, சிப்ஸ் போன்ற துறைகளில் ஜாதகருக்கு வருமானம் வரும்.
இங்கிருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகரிடம் கடினமான குணங்கள் இருக்கும். கோபக்காரராக இருப்பார். நான்காமிடம் மற்றும் ஐந்தாமிடப் பார்வைகள் ஓரளவுக்கு நல்ல பலன்களைத் தரும்.
எந்த சாரத்தில் செவ்வாய் இருந்தால் நல்லது செய்வார் என்று பார்க்கும் பொழுது விசாக நட்சத்திரத்தில் இருந்தாரென்றால், குருவின் சாரம் கும்ப லக்னத்திற்கு சுமாரான பலனைத்தான் அளிக்கும்.
அதேநேரம் அனுஷம் நட்சத்திரம் லக்னாதிபதியின் சாரம் என்றாலும், விரயாதிபதியின் சாரமும் ஆகும். ஐந்துக்குடைய புதன் சுபர் என்றாலும், அவரே அஷ்டமாதிபதியும் ஆவதால், கேட்டை நட்சத்திரமும் சரிவராது. கும்ப லக்னத்திற்கு மட்டும் எல்லாமே ஒரே குழப்பம் தான்.
(ஜன 11-17, 18-24, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்…