adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 273 (28.01.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

விஜயகுமார், சீரநாயக்கன்பாளையம்.

கேள்வி:

சிறு வியாபாரம் செய்கிறேன். தாய் தந்தை இல்லை. 47 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் நடக்குமா நடக்காதா என்பதை தாங்கள்தான் கூற வேண்டும். குழந்தை பாக்கியம் உண்டா?

பதில்:

(ரிஷப லக்னம், மகர ராசி, 2ல் சனி, கேது 6ல் சூரி, 7ல் புத, 8ல் சுக், ராகு, 9ல் சந், குரு, 12-ல் செவ், 2-11-1973 இரவு 7-50 கோவை)

லக்னாதிபதி வலுவிழந்தாலே ஒரு மனிதனுக்கு வாழ்க்கைக்குத் தேவையான எதுவும் சரியான நேரத்தில் கிடைக்காது. உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதியும் காமத்திற்கு அதிபதியுமான சுக்கிரன் ராகுவுடன் நான்கு டிகிரிக்குள் மிக நெருங்கி இணைந்து, கிரகணமாகி எட்டில் மறைந்த அமைப்புள்ள ஜாதகம்.

தற்போது ரிஷப லக்னத்திற்கு நான் வரக்கூடாது என்று சொல்லும் குருவின் தசையும் நடந்து கொண்டிருக்கிறது. குருபகவான் ஒன்பதாமிடத்தில் நீச்சமாவது ஒரு நிலையில் ரிஷப லக்னத்திற்கு நல்லது என்றாலும் அவர் உங்களது ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனுடன் இணைந்து நீச்சபங்கத்தை அடைந்தது  ஒரு வகையில் குற்றம். லக்னத்திற்கு இரண்டில் சனியும், ராகு கேதுக்களும் சம்பந்தப்பட்டு எட்டில் ராகு சுக்கிரனை பீடித்திருப்பதால் இதுவரை உங்களுக்கு திருமணம் ஆகவில்லை.

ஏழுக்குடைய செவ்வாய் அந்த வீட்டிற்கு ஆறில், பன்னிரண்டில் மறைந்திருக்கிறார். ராசிக்கு ஏழாம் வீட்டையும், லக்னம் மற்றும் ராசியின் ஐந்தாம் வீடுகளையும் குரு பார்ப்பதால் உங்களுக்கு ஐம்பது வயதில் திருமணம் நடக்கும். குருதசை முடிந்த பின்புதான் உங்களுக்கு பொருளாதார நிலைமை சீரடையும். புத்திரபாக்கியம் நிச்சயமாக உண்டு.

ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை கோவிலுக்குச் சென்று அம்மையப்பனுக்கு நடக்கும் ருத்ராபிசேகத்தை பார்த்து வாருங்கள். வருடமொருமுறை ஸ்ரீகாளகஸ்தி செல்வதை வழக்கமாக கொள்ளுங்கள். ஸ்ரீரங்கம், கஞ்சனூர் போன்ற சுக்கிர ஸ்தலங்களுக்கு செல்லுங்கள். மிக முக்கிய பரிகாரமாக வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்பொழுது, சுக்கிரனின் தானியமான மொச்சைப்பயிறை சிறிதளவு தலையணைக்கு அடியில் வைத்து படுத்து உறங்கி, 20 வாரம் தொடர்ந்து செய்து, 20 பொட்டலம் சேகரித்து 20 வார முடிவில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, நிற்கும் நீரான கிணறு அல்லது குளத்தில் போடுங்கள். திருமணம் நிச்சயம் நடக்கும்.

ஜி. ராமலட்சுமி, மதுரை.

கேள்வி:

ஐயா.. தெய்வபக்தி, சைவ உணவு, முன்னோர் திதி, பணிவு, அடக்கம், என சென்னை ஐடி கம்பெனியில் பணியிலும் நேர்மையுடன் இருக்கும் எனது மருமகன், தன்னிடம் பயிற்சி பெற்ற ஜூனியர்களை நிர்வாகம் வெளிநாடு அனுப்பி வைக்கும் நிலையில் இவரை மட்டும் இதுவரை அனுப்பவில்லை என வருத்தத்தில் இருக்கிறார். ஒன்பது வருடத்தில் ஒருமுறை கூட வெளிநாடு செல்ல வாய்ப்பின்றி, தாழ்வு மனது, மனச்சோர்வுடன் வீட்டுக் கடனை அடைத்து விட துடிக்கும் அவர், எப்போது வெளிநாடு செல்வார்? இருக்கும் வீட்டை மாற்றினால் வாய்ப்பு கிடைக்குமா? பிள்ளைகள் வழி நிம்மதி உண்டா? தங்களின் மாலைமலர் பக்தைக்கு நல்ல பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(மகர லக்கனம், ரிஷபராசி, 1ல் செவ், 2ல் குரு, 3ல் ராகு, 5ல் சந், 9ல் கேது, 10ல் சூரி, புத, சுக், 11ல் சனி, 22-10-1986 மதியம் 1-46 சின்னமனூர்)

மருமகனுக்கு லக்கினாதிபதி சனி பதினொன்றாம் வீட்டில் பரிவர்த்தனை அமைப்புடன் அமர்ந்து, வீடு கொடுத்த செவ்வாய்  உச்சமாகி, லக்னாதிபதியை பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சுபச் சந்திரன் பார்த்த யோக ஜாதகம். சனி தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் வர்கோத்தமம் ஆகியிருப்பது சிறப்பு. 2026 ஆம் ஆண்டு முதல் சனி தசையும் நடக்க இருப்பது இன்னும் பெரிய நல்ல அமைப்பு.

ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் அல்லது வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்க வேண்டும் எனில் 8-12ஆம் இடங்கள் வலுத்து, சுபத்துவமாகி, 8-12ம் அதிபதிகள் தங்களுக்குள்  தொடர்பு கொண்டு, சர ராசியில் அமர்ந்த கிரகங்களின் தசை அல்லது ராகு கேது தசை வர வேண்டுமென்பது நான் சொல்லும் சுபத்துவ, சூட்சும வலு விதி.

மருமகன் ஜாதகத்தில் எட்டாம் வீட்டை குரு பார்த்தாலும், பன்னிரண்டாம் வீடு சுபர் பார்வை இன்றி இருப்பது பலவீனம், இந்த அமைப்பின்படி மருமகனால் நிரந்தரமாக வெளிநாட்டில் தங்க முடியாது. அதற்கு பதிலாக சென்று வரமுடியும். அடுத்து வர இருக்கும் குரு தசை சூரிய புக்தி பன்னிரண்டாம் அதிபதி தசையில் எட்டுக்குடையவன் புக்தி என்பதால் மருமகனை வெளிநாடு அனுப்பும்.

இருக்கும் வீட்டை மாற்றுவதால் எவ்விதமான பலன்களும் நடந்து விடப்போவதில்லை. உங்களுக்கு நல்ல நேரம் வரும் போது நல்ல அமைப்புள்ள வீட்டில் இருப்பீர்கள். உங்களின் நேரம் சரியில்லை என்றால் சரியில்லாத வீட்டில் இருப்பீர்கள். ஜாதகப்படி ஐந்தாமிடத்தில் சுபர் அமர்ந்து 5க்குடையவன் ஆட்சி பெற்று இருப்பதால் பிள்ளைகளால் அவருக்கு சந்தோஷம் உண்டு. வாழ்த்துக்கள்.

எஸ். ராஜ்குமார், சேலம்- 2

கேள்வி:

மானசீக குருவிற்கு வணக்கம். ராகு தசையில் என் படிப்பைக் கெடுத்து, முடியும் தருவாயில், சூரிய புக்தியில், படிப்பிற்கு சம்மந்தமில்லாத தொழிலில் முதலாளி ஆக்கியது. நானும் கடுமையாக உழைத்தேன். பிறகு ஆரம்பித்த குரு தசை மிகவும் யோகத்தைச் செய்தது. துலாம் லக்னத்திற்கு குரு தசை நன்மைகளை செய்யாது என்று எழுதுகிறீர்கள். ஆனால் குரு தசை சுய புக்தி தவிர மற்ற அனைத்துமே எனக்கு மிக நன்மையாக அமைந்தது. ஆனால் கேது புக்தியில் இருந்து தொழில் படுத்து விட்டது. பழைய வியாபாரம் இல்லை. துலாம் லக்னத்திற்கு சனி தசை யோக தசை என்று சொல்கிறீர்கள். ஆனால் சனிதசை ஆரம்பித்ததிலிருந்து படாதபாடுபட்டு கொண்டிருக்கின்றேன். கடுமையான அவமானங்கள். கையேந்தும் நிலைக்கு தள்ளப் பட்டு விட்டேன். குரு தசையில் இருந்த வாழ்க்கை தற்போது சனி தசையில் இல்லையே, குருநாதர் அவர்கள் இதைப் பற்றி விளக்க வேண்டும்.

பதில்:

(துலா லக்கனம், கன்னிராசி, 2ல் சூரி, புத, சுக், 5ல் கேது, 11ல் செவ், குரு, ராகு, 12ல் சந், சனி 17-11- 1979 அதிகாலை 5-45 திருச்சி)

துலாம் லக்னத்திற்கு குரு தசை வரக்கூடாது என்று சொல்லும் நானே, அதே குரு தன்னுடைய ஆறாமிடத்திற்கு ஆறில் மறைந்து, பதினொன்றில் இருந்தால் யோகத்தை செய்வார் என்றும் எழுதுகிறேன். ஜோதிடத்தில் நிபுணத்துவம் அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் விதியை விட விதிவிலக்குகளை அதிகம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இங்கே ஒவ்வொன்றுக்கும் நுணுக்கமானவைகள் இருக்கின்றன.

உங்களுடைய ஜாதக அமைப்பு போலவே உள்ள தமிழகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவரும் துலாம் லக்னம்தான். அவருக்கு உங்களைப் போலவே பதினொன்றாம் இடத்தில் இருந்த குரு, நூற்றுக்கணக்கான கோடிகளைத் தந்தது. உங்களுடைய ஜாதகப்படி தன்னுடைய ஆறாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து, செவ்வாயுடன் சேர்ந்து, வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை ஆகி, ராகுவுடன் 4 டிகிரிக்குள் அமர்ந்த குரு தன்னுடைய தசையில் சில லட்சங்களை இலாபமாக கொடுத்திருக்கும். இதே குரு ராகுவுடன் இணையாவிட்டால் கோடிகளைக் கொட்டியிருக்கும்.

நான் எடுத்துக்காட்டாகச் சொன்ன அந்த கோடீஸ்வரரைப் போலவே, உங்களுக்கும் குரு சுக்கிரன் சாரத்தில் வர்க்கோத்தமமாக இருக்கிறார். ஆனால் நடந்து கொண்டிருக்கும் சனி தசை அமாவாசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இருள் சந்திரனுடன் இணைந்தி இருக்கிறார். சந்திரன் ஆதிபத்தியரீதியாக ஜீவனாதிபதியாகி, பனிரெண்டில் மறைந்துள்ள நிலையில் சனியும், சந்திரனும் ஆறாமிடத்தை தொடர்பு கொள்வது சரியல்ல. இந்த நிலை கடன்காரனாக்கும் ஒரு அமைப்பு என்பதால் தற்போது தொழில் சரிவுகளில் சிக்கி இருப்பீர்கள். புதன் புக்தியிலிருந்து ஓரளவிற்கு மீண்டு வரமுடியும். வாழ்த்துக்கள்.

எஸ். ராமசாமி, திருநெல்வேலி டவுன்.

கேள்வி:

மாலைமலரில் செவ்வாய்தோறும் வெளியாகும் கேள்விகளுக்கான பதில்களை கண்டு தங்கள் மேல் ஈர்ப்புக் கொண்ட நான், தங்களின் பதில்களை வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு அவைகளை அடிக்கடி படித்து வருகிறேன். கடந்த மாதம் கூட ஒரு வாசகர் நீங்கள் கூறியபடியே 2019 இறுதியில் கிராம நிர்வாக அதிகாரி வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மிகுந்த ஜோதிட ஞானம் உள்ள தங்களுடைய வாக்குப் பலிப்பதில் ஆச்சரியமில்லை. கடந்தமுறை என் பேரனின் ஜாதகத்திற்கு பலன் கேட்கும்போது, திருக்கணிதப்படி ஜாதகத்தை அனுப்பினால் பதில் தருவதாக சொல்லி இருந்தீர்கள். சென்னையில் பணிபுரியும்  அவனது வேலை நிரந்தரமாகுமா? வெளிநாடு செல்வாரா? தாய், தந்தையை நன்கு கவனித்துக் கொள்வானா? ஆயுள் பலம் உள்ளதா?

பதில்:

(சிம்ம லக்கினம், விருச்சிக ராசி, 1ல் புத, ராகு, 4ல் சந், 7ல் கேது, 8ல் குரு, 9ல் சனி, 11ல் சுக், செவ், 12-ல் சூரி 2-8-1998 காலை 7-32 நெல்லை)

பேரனது ஜாதகப்படி தூர இடங்களைக் குறிக்கும் எட்டாம் அதிபதி சுபராகி, அவரது வீட்டிலேயே அமர்ந்து 12-க்குடைய சந்திரனையும் பார்ப்பதால், பேரனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு நிச்சயமாக உண்டு. லக்னாதிபதியே பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து உள்ளதால், பிறந்த இடத்தை விட்டு தூர இடங்களில்தான் செட்டிலாவார். ஆனால் அது தாமதமாகும். திருமணத்திற்கு பிறகு நிரந்தரமாக வெளிநாட்டிலேயே வசிக்கக் கூடிய அமைப்பு அவருக்கு இருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் சூரியனையும் சந்திரனையும் வலுத்த குரு பார்த்தால், அவர் தாய் தகப்பன் மேல் பாசம் உள்ளவராக இருப்பார். தாய், தந்தையை கடைசி வரை வைத்து காப்பாற்றுவார். எதிர்காலத்தில்  தங்கையுடனான தொடர்பு நன்றாக இருக்கிறாயா என்று கேட்டுக் கொள்ளும் அளவிற்கு இருக்கும். எட்டாம் அதிபதி குரு ஆட்சி பெற்று லக்னாதிபதியை பார்ப்பதால் தீர்க்காயுள் உண்டு. வாழ்த்துக்கள்.

(28.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.