ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
சிம்மம்:
கடக லக்னத்திற்கு செவ்வாய் என்ன பலன்கள் தருவார் என்று சொன்னது சிம்மத்திற்கும் பொருந்தும். சிம்மத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி ஆவார். இந்த லக்னத்திற்கு திரிகோணத்துவம் பெறும் செவ்வாய் தனது ஒன்பதாமிடத்திற்கு எட்டில் மறைந்து நான்காமிடத்தில் ஆட்சி பெற்று ருசக யோகம் தருவார்.
முதலில் செவ்வாயின் பார்வை பலத்தை எடுத்துக் கொண்டோமேயானால் இங்கிருந்து அவர் ஏழு, பத்து, பதினொன்றாமிடங்களான களத்திர, ஜீவன, லாப ஸ்தானங்களைப் பார்வையிடுவார். ஏழாமிடத்தை செவ்வாய் வலுப் பெற்றுப் பார்ப்பதால் தாமத திருமணம், காதல் கலப்புத் திருமணம் போன்ற பலன்கள் உண்டு.
செவ்வாய் இந்த லக்னத்திற்கு அதி சுபர் என்பதால் என்னதான் ஏழாம் பாவத்தைப் பார்த்தாலும் திருமண வாழ்வைக் கெடுக்க மாட்டார். ஆனால் சுபத்துவம் பெறாமல் லக்ன பாபர் சம்பந்தம் பெற்றால் நிலைமை வேறாக இருக்கும். அதே நேரத்தில் நான்கில் அவர் ஆட்சி பெறுவது செவ்வாய் தோஷம் அல்ல.
செவ்வாய் சூட்சும வலுப் பெற்றிருந்தால் தனது பத்தாமிட, லாப வீடுப் பார்வை மூலம் தனது காரகத்துவங்களான மருத்துவம், நெருப்பு, விளையாட்டு, சீருடைப் பணி உள்ளிட்டவைகளின் மூலம் ஜாதகருக்கு நன்மைகளையும், லாப வரவுகளையும் அளிப்பார்.
இங்கிருக்கும் செவ்வாய், விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் தான் இருக்க முடியுமாதலால் இந்த இடத்தில் நண்பர்களின் இணைவையோ தொடர்பையோ பெற்றிருப்பது நல்லது. இங்கே லக்ன பாவரான ஆறுக்குடைய சனியின் நட்சத்திரத்தில் இருப்பது சரியான நிலை அல்ல. அதை விட தன, லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமர்ந்து புதனின் லாப வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பு. இந்த நிலையில் செவ்வாய் தசை ஓரளவு பலனளிக்கும்.
துலாம்:
துலாம் லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதி சுக்கிரனின் எதிரியாகி, இரண்டு, ஏழாம் பாவங்கள் எனப்படும் மாரக வீடுகளின் அதிபதியுமாகி, நான்கில் உச்சம் பெற்றும், ஏழாமிடத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோணம் பெற்றும் ருசக யோகத்தைத் தருவார்.
ஏழாமிடத்தில் ஆட்சி பெறும் நிலையில் அவர் பத்தாமிடத்தையும், லக்னத்தையும் அவரது வீடான இரண்டாமிடத்தையும் பார்ப்பார் என்பதால் இரண்டாமிட பார்வையைத் தவிர மற்ற பார்வைகள் கெடுதல்தான்.
இந்த லக்னத்தின் ஜீவனாதிபதி சந்திரன் அவருடைய நண்பர் என்பதால் பத்தாமிடத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகருக்கு தனது காரகத்துவங்கள் ஏதேனும் ஒன்றில் தொழில் அமைத்துத் தருவார். பெரும்பாலும் சீருடை அணியும் துறைகளில் ஜாதகரை பணிபுரிய வைப்பார். நீரும், நெருப்பும் சேரும் சமையல் போன்ற இனங்களில் ஜாதகர் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த இடத்தில் முக்கியமான ஒன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக ஒருவரின் தொழிலை, ஒரே ஒரு கிரகத்தின் பலத்தையோ, சம்பந்தத்தையோ மட்டும் அளவிட்டுச் சொல்ல முடியாது.
மக்கள்தொகை குறைந்த அந்த நாட்களில் மிகச் சில தொழில்கள் மட்டுமே இருந்தன. ஏராளமான தொழில்களும், அவற்றின் கிளைத் தொழில்களும் இருக்கும் இந்தக் காலத்தில் எந்த ஒரு ஜோதிடராலும் ஒருவரின் தொழிலை துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் அனுபவமுள்ள ஒரு ஜோதிடரால் இதுபோன்ற துறையில் இருப்பார் என்று கணிக்க முடியும்.
மேலும் நமது கிரந்தங்கள் பத்தாம் பாவாதிபதி இருக்கும் நவாம்சத்தின் அதிபதியின் இனங்களில் ஒருவருக்கு தொழில் அமையும் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் தற்போதைய சூழலில் பத்து சதவிகித ஜாதகங்களில் கூட இது பொருந்தி வரவில்லை.
எனவே ஒருவரின் தொழில் அமைப்பை எந்தக் கிரகம் தனது காரகத்துவங்களில் கொடுக்கும் என்பதை, பத்தாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் அனைத்துக் கிரகங்களின் பலத்தையும், சீர்தூக்கி மதிப்பிட்டே சொல்ல முடியும்.
அடுத்து, முன்பே சொன்னவாறு லக்னத்தை செவ்வாய் பார்க்கும் நிலையில் ஜாதகர் கோபக்காரராகவும், உணர்ச்சி வசப்படுபவராகவும், முன் யோசனையின்றி சட்டென்று முடிவெடுப்பவராகவும் இருப்பார். செவ்வாய் வேறுவகையில் வலுக் குறைந்தால் இந்த பலன் மாறும்.
தனது எட்டாம் பார்வையால் தனது வீடான தன ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பது துலாம் லக்னத்திற்கு மிகச் சிறப்பான நிலை. இந்த அமைப்பால் ஜாதகருக்கு நிலையான பொருளாதார வசதி, வருமான வாய்ப்பு இருக்கும்.
ஆனால் ஜாதகர் எதையும் மறைத்துப் பேசும் வழக்கம் உடையவராக இருப்பார். என்னதான் தன் வீட்டையே செவ்வாய் பார்த்தாலும் அவர் இயற்கைப் பாபர் என்பதால் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பது நல்லதல்ல தான். சில நிலைகளில் ஜாதகர் பொய் பேசக் கூடியவராக இருப்பார். குடும்பத்திலும் கடுமையான போக்குடன் நடந்து கொள்வார். கடின வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்.
இந்த இடத்தில் அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ அதை வைத்தே செவ்வாய் என்ன பலன் செய்வார் என்பதைக் கணிக்க முடியும். அசுவினி ஒன்றாம் பாதத்தில் இருந்தால் வர்க்கோத்தமம் பெற்று மிகவும் வலுப் பெறுவார். இது சில நிலைகளில் நல்லதல்ல.
பரணி நட்சத்திரத்தில் இருப்பது லக்னாதிபதியின் சாரம் என்பதால் அவர் சுப பலன்களைத் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் இருந்தால் பாதகாதிபதியின் சாரம் பெறுவார் என்பது நல்ல நிலையல்ல.
சார வழியில் ஒரு கிரகத்தின் பலனை எடை போட வேண்டுமென்றால் அந்த கிரகத்திற்கு சாரம் தந்த நட்சத்திர நாதன் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு உரியவர், மற்றும் எந்த பாவத்தில் இருக்கிறார் என்பதோடு எந்த மாதிரியான வலுப் பெற்றிருக்கிறார் என்பதை வைத்தே சாரம் பெறும் கிரகம் தரும் பலனைச் சொல்ல முடியும்.
மற்றொரு நிலையாக துலாம் லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம் பெறும் செவ்வாய், ஷட்பலங்களில் முதன்மை மூன்று பலங்களான ஸ்தான பலம், திக் பலம், திருக்பலம் ஆகியவற்றில் திக்பலத்தை இந்த இடத்தில் இழப்பது சிறப்பு.
ஒரு கிரகத்தின் பலத்தை அளவிட நமது ஞானிகள் வகுத்துத் தந்த ஆறுவகை பலங்களில் கீழ்க்கண்ட மூன்று பலங்கள் மட்டுமே முதன்மையானவை. மற்றவை இரண்டாம் பட்சம்தான்.
முதலாவதாக ஸ்தான பலம். (உச்சம், ஆட்சி, நட்பு போன்றது )
இரண்டாவதாக திக்பலம். (லக்னத்தில் குருவும் புதனும், நான்கில் சந்திரன் சுக்கிரன், ஏழில் சனி, பத்தில் சூரியன் செவ்வாய் இருப்பது.)
மூன்றாவதாக திருக்பலம். (அதாவது கணிக்கப்படும் கிரகத்திற்கு கிடைக்கும் பார்வை பலம். சுப கிரகங்கள் அதைப் பார்க்கின்றனவா அல்லது அசுப கிரகங்களால் பார்க்கப்படுகிறதா என்பது)
ஆகியவையே முக்கியமானவை ஆகும்.
ஆகவே இயற்கைப் பாபரான செவ்வாய் இந்த இடத்தில் உச்சம் என்ற ஸ்தான பலம் பெற்றாலும், இரண்டாவதான திக்பலம் இழப்பது அவரின் இயல்பான கொடூரத் தன்மையைக் குறைக்கும்.
இங்கு பலம் பெறும் செவ்வாய் தனது 4,7,8 ம் பார்வைகளால் ஏழு, பத்து மற்றும் பதினோராம் பாவங்களைப் பார்ப்பார். உச்சம் பெற்ற நிலையில் தனது வீட்டைப் பார்ப்பது யோகம்தான் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும் ஒரு இயற்கைப் பாபர் வலுப்பெற்று ஏழாமிடத்தைப் பார்ப்பது நல்லதுதான் என்று சொல்ல மாட்டேன்.
இந்த நிலையில் வாழ்க்கைத் துணையின் பின்னணி நல்ல நிலையில் இருக்கலாமே தவிர, நல்ல நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்பது உத்திரவாதம் இல்லை. என்ன இருந்தாலும் செவ்வாய், செவ்வாய்தான்.
தனது ஏழாம் பார்வையால் பத்தாமிடத்தைப் பார்ப்பது ஜாதகரை மருத்துவம், ராணுவம், காவல்துறை போன்ற சீருடை அணியும் துறைகளில் பணிபுரிய வைக்கும். காவல்துறையில் இன்ஸ்பெக்டர் நிலைக்கு மேலான உயர் அதிகாரிகளின் ஜாதகங்களில் செவ்வாய் இங்கு இருப்பதை பார்த்திருக்கிறேன்.
மகரச் செவ்வாய் ஜாதகரை கடுமையான போக்குடைய அதிகாரியாக ஆக்குவார். வேலையில் கடின மனம் இருக்கச் செய்வார். ஜாதகர் வேலையில் ஒரு குணம், வெளியில் வேறு குணம் என இரட்டைக் குணநிலை உள்ளவராக இருப்பார்.
லாப ஸ்தானத்தைப் பார்ப்பது சிம்மம் அவரது அதிநட்பு வீடு என்பதால் துலாம் லக்னத்திற்கு நல்ல நிலைதான். எப்போதுமே சிம்ம ராசியின் மேல் செவ்வாய்க்கு ஒரு தனிப்பட்ட புரிதல் உண்டு. இந்த பார்வையால் சிம்மத்தின் பாதக வலுக் குறைந்து லாப வலு மேலோங்கும்.
அடுத்து, மகரச் செவ்வாய் உச்சம் பெறும் நிலையில் சூரிய, சந்திர, சுயச் சாரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் இருப்பார் என்பதால், பாதகாதிபதி சூரியன் மற்றும் மாரகாதிபதி செவ்வாயின் சுயச் சாரம் ஆகியவற்றில் இருப்பதைக் காட்டிலும் பத்துக்குடையவரான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் இருப்பது இந்த லக்னத்திற்கு நன்மையைத் தரும்.
என்னதான் இருந்தாலும் துலாம் லக்னத்திற்கு செவ்வாயின் தசை வருவது நல்லதல்ல. செவ்வாய் தசை நடப்பில் வராத துலாம் லக்னத்தவர்களே உண்மையான அதிர்ஷ்டசாலிகள்.
(ஜன 3-8, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்…