ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
பி.டி தேவன், சென்னை.
கேள்வி:
பரம்பொருள் உங்களுக்கு எல்லோரையும் விட ஒருபடி மேலே சென்று ஜோதிட ஞானத்தை அள்ளி வழங்கியதை எண்ணி பேருவகையும், பொறாமையும் கொள்கிறேன். தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறேன். தொழிற்சாலை பணிக்கு செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். இரண்டு பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்றும் எனக்கு தொழிற்சாலை பணி கிடைக்கவில்லை. ஆசிரியர் பணி மிக சுலபமாக கிடைத்து விட்டது. ஜோதிடத்தின் மீதும் ஆர்வம் உள்ளது. ஆசிரியர் தொழிலை தொடர வேண்டுமானால் நான் மற்றுமொரு மேற்படிப்பு படிக்க வேண்டும். என் தொழில் என்ன, எந்தத் துறையில் வாழ்க்கையை செலுத்துவது என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறேன். ஆசிரியர் பணியை தொடரலாமா அல்லது தொழிற்சாலை வேலை கிடைக்குமா? ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியுமா? காற்றின் திசையில் போய்க்கொண்டிருக்கும் இந்த ஓடத்திற்கு கலங்கரை விளக்காய் வழிகாட்ட வேண்டுகிறேன்.
பதில்:
(சிம்ம லக்கினம், துலாம் ராசி, 2ல் கேது, 3-ல் சந், 4ல் சனி, 8ல் ராகு, 9ல் குரு, 11ல் சூரி, புத, சுக், 12ல் செவ், 7-7-1987 காலை 10-27 சென்னை)
தொழிற்சாலைப் பணிக்கு காரண கிரகங்களான செவ்வாயும், சனியும் உங்கள் ஜாதகத்தில் சுபத்துவமாக இல்லை, பேசிப் பிழைக்க வைக்கும் ஆசிரியர் பணி கிரகமான குரு மேஷத்தில் மூன்று டிகிரியில் அமர்ந்து, ஒரு நிலையில் ராசிக்கு பத்தாம் இடத்தை தொடர்பு கொள்வதால், உங்களுக்கு ஆசிரியர் பணிதான் சரியாக வரும். புதன் ஆட்சியாக இருப்பதால் உங்களால் மேற்படிப்பு படிக்க இயலும். எனவே ஆசிரியர் துறையிலேயே உங்களுடைய எதிர்காலம் அமையும்.
ஜோதிடத்தையும் பகுதிநேர தொழிலாக வைத்துக்கொள்ள முடியும். அதற்கு இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது ஆரம்ப நிலையில்தான் இருப்பீர்கள். இன்னும் ஆழமாக ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள். சில வருடங்கள் கழித்து ஜோதிடத்தை பகுதி நேர தொழிலாக வைத்துக்கொள்ளலாம். வாழ்த்துக்கள்.
ராகுல், சென்னை.
`
கேள்வி:
எனக்கு கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை. அதனால் தியேட்டர் ஆர்ட்ஸ் படிப்பதற்கு அமெரிக்கா செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாட்டில் இருந்தேன். திடீரென குடும்பச் சூழ்நிலை மிக மோசமாக மாறி விட்டது. எந்த செயலில் இறங்கினாலும் தற்போது சோதனைதான் நடக்கிறது. இப்போது சென்னையில் ஒரு சிறிய தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். செய்யும் வேலை பிடிக்கவில்லை. மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் சினிமா கனவு என்னை போட்டு வாட்டி வதைக்கிறது. சினிமாவில் உலக அளவில் நான் ஜெயிக்க முடியும் என்று என் மனம் சொல்லுகிறது. சினிமா எண்ணத்தால் இந்தக் கனவுத் துறையை நம்பி என் வாழ்க்கையை தொலைக்க போகிறேனா அல்லது சினிமாவில் மிக உயரத்திற்கு போகப் போகிறேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். சினிமாவிற்கே செல்லமுடியாமல் ஒரு தொழிற்சாலையில் கடைசிவரை வேலை செய்வதே விதியாக இருக்குமா? நல்ல பதிலை நோக்கி காத்திருக்கிறேன்.
பதில்:
(தனுசு லக்னம், கடக ராசி, 1ல் குரு, 4ல் சனி, கேது, 7ல் சுக், செவ், 8ல் சூரி, சந், 9ல் புத, 10ல் ராகு, 12-8-1996 மாலை 4 மணி காரைக்குடி)
ஜோதிட பலன் என்பது சகலவிதமான விதிகளையும் மிக நுணுக்கமாக கவனித்து ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியது. லக்னாதிபதி வலுவாக இருந்தால் ஒருவரின் லட்சியம் நிறைவேறும் என்று நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அந்த அமைப்பின்படி லக்னத்தில் குரு திக்பலம், மற்றும் மூலத்திரிகோண நிலையில் பலமாக அமர்ந்துள்ள ஜாதகம் உங்களுடையது. ஆனால் லக்னாதிபதியின் தசை உங்களுக்கு வரவே போவதில்லை.
அதைப்போல ஜாதகம் யோகமாக இருந்தாலும் அவயோக தசாபுக்திகள் நடக்கக்கூடாது. உங்களது ஜாதக அமைப்புப்படி உங்களுக்கு வாழ்க்கையின் மிகப் பெரும்பாலான நாட்கள் வரை புதன், சுக்கிரன் தசைகள் நடக்கும். இவைகள் முழுமையான யோக தசைகள் அல்ல.
சினிமாவில் உலகப் புகழ் பெறுவேனா என்று கேட்கிறீர்கள். ஒருவர் உலகப் புகழ் பெற வேண்டுமெனில், அவரது ஜாதகத்தில் ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் வலுவான ஒரு அமைப்பில் நிச்சயம் இருக்க வேண்டும். எவர் ஒருவருக்கு சூரியனும் சந்திரனும் சுபத்துவ அமைப்பில் இருக்கிறார்களோ அவர்தான் நான்கு பேருக்கு தெரியும் நிலையில் இருப்பார்.
உங்களது ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் எட்டில் மறைந்து அமாவாசை நிலையில் இருக்கிறார்கள். அதாவது சூரியன் முழுக்க இருளான சந்திரனுடன் இணைந்திருக்கிறார். இருவரும் எட்டில் மறைந்து சுபர் சம்பந்தமோ, பார்வையோ இன்றி இருக்கிறார்கள். ஆகவே உலக அளவில் பிரபலம் அடையும் நிலை உங்கள் ஜாதகத்தில் இல்லை.
நடக்கும் தசாநாதன் புதன், சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு தணியாத சினிமா ஆர்வம் இருக்கிறது. உங்கள் ஜாதகப்படி செவ்வாய் அதிக சுபத்துவமாகி, சுக்கிரனின் இணைவில், குருவின் பார்வையில் இருப்பதால் செவ்வாயின் தொழில்களில் மட்டுமே நீங்கள் முன்னேற இயலும்.
ஆனால் நடக்கும் தசா புக்தி அமைப்புகள் உங்களை திசை திருப்பும் என்பதால் உங்களுக்கு சினிமாவைத் தவிர வேறு எவ்வித ஆர்வமும் இருக்காது. கலைத்துறை எண்ணங்களால் வாழ்க்கையை திசை திருப்பிக் கொள்ளும் ஜாதகம் உங்களுடையது. 50 வயது வரை சுக்கிரனின் தசையே உங்களுக்கு நடக்கும் என்பதால் முழுக்க முழுக்க சுக்கிரனின் ஆதிக்கத்தில் சினிமா, சினிமா என்றுதான் இருப்பீர்கள்.
திரும்பத் திரும்ப சினிமா பற்றிய நிகழ்வுகளும், எண்ணங்களுமே உங்களை சுற்றி வரும். சினிமாவை நீங்கள் தவிர்க்க முடியாது. சாப்பாட்டிற்கு ஆதாரமாக செவ்வாயின் தொழில், மனதிற்கு இதமாக சினிமா என இரட்டை குதிரையில் சவாரி செய்வீர்கள். ஐம்பது வயதிற்குமேல் வாழ்வில் நிலைகொள்ளும் ஜாதகம் உங்களுடையது. வாழ்த்துக்கள்.
(21.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.