adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
காஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஏ. அசோக், திருநெல்வேலி.

கேள்வி:

சூட்சுமங்களைப் புரிய வைத்த குருஜிக்கு வணக்கம். என் வயது 36. எனது குடும்ப   வாழ்க்கை மிகவும் துன்பமாக உள்ளது. தாயார் மற்றும் மனைவியால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. எனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் 38 வயதிற்கு மேல் அப்துல்கலாம் போல் வருவாய் என்றார். ஆனால் வாழ்க்கை மிகவும் சாதாரணமாக இருக்கிறது. ஒரு அரசு வங்கியில் கிளார்க்காக பணிபுரிகிறேன். எனக்கு சன்னியாச யோகம் உள்ளது என்கிறார்கள். அப்படியானால் ஏன் எனக்கு திருமணம் நடந்தது? சுக்கிரன் உச்சமானால் மனைவியால் யோகம் என்று பார்த்தால் மனைவியால் மன கஷ்டம் மட்டும்தான் இருக்கிறது. காஞ்சிப் பெரியவர் போல என்னிடம் துன்பம் என்று வருபவர்களுக்கு வழி காட்ட விரும்புகிறேன். வாழ்வின் இறுதியில் வள்ளலார் போல இறை ஜோதியில் கலந்து விட விரும்புகிறேன். ஒரு ஆன்மீக குருவை வாழ்வில் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைப்பாரா? என் வாழ்க்கை எப்படி அமையும்? குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்தவும்.


பதில்:

(விருச்சிக லக்னம், மிதுன ராசி, 1ல் குரு, 2ல் கேது, 3ல் புத, 4ல் சூரி, 5ல் சுக், செவ், 8ல் சந், ராகு, 12ல் சனி, 22-2-1983 இரவு 11-55 நெல்லை)

ஆன்மீகத்திற்கு காரணமான குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் பிடியில் லக்னமும், ராசியும் அமைந்த ஜாதகம் உங்களுடையது. சனியின் சாரத்தில் அமர்ந்த வர்கோத்தம குரு லக்னத்தில் இருக்கிறார். தன்னுடைய சொந்த மூல நட்சத்திரத்தில் கேது இருக்கிறார். குருவிற்கு சாரம் கொடுத்த சனி உச்ச நிலையில் ராகுவின் சாரத்தில் அமர்ந்து, தன் மூன்றாம் பார்வையாக கேதுவை பார்த்து, அந்த கேது ராசியை தொடர்பு கொள்கிறார். ஆக ஆன்மீக முக்கூட்டு கிரகங்களான குரு, சனி, கேது மூன்றும் லக்னம், ராசியுடன் தொடர்பு கொள்வதால் உங்களால் ஆன்மிக எண்ணங்களில் இருந்து வெளியே வர முடியாது.

அதேநேரத்தில் கர்மாவின் அடிப்படையில் ஏழுக்குடைய சுக்கிரன் உச்சமானதாலும் குரு, செவ்வாய் பரிவர்த்தனை பெற்றதாலும் உங்களுக்கு திருமணம் நடந்து நீங்கள் அல்லல்பட வேண்டும் என்பது விதி. உண்மையில் தாயார் மற்றும் மனைவியால் நீங்கள் மன உளைச்சலை அடையவில்லை. நீங்கள்தான் உங்கள் தாயாருக்கும், மனைவிக்கும் மிகுந்த மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் கொடுத்து கொண்டிருப்பீர்கள்.

பிறவியிலிருந்தே ஆன்மிக தொடர்புள்ள ஜாதகம் உங்களுடையது. குறிப்பாக 18 வயதில் எப்பொழுது உங்களுக்கு குரு தசை ஆரம்பித்ததோ, அதிலிருந்தே நீங்கள் வெளிப்படையான ஆன்மிக எண்ணங்களையும், ஈடுபாட்டையும் கொண்டிருப்பீர்கள். அப்படி இருக்கும்போது பிறர் வற்புறுத்தினார் என்பதற்காக எதற்காக திருமணத்திற்கு சம்மதித்தீர்கள்? திருமணத்தைச் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அல்லவா கெடுக்கிறீர்கள்?

ராசிக்கு பத்தாம் இடம் குருவின் வீடாகி அதை குரு பார்ப்பதாலும், சிம்மத்தை உச்சனின் வீட்டில் அமர்ந்த சூரியன் பார்ப்பதாலும், அரசு வங்கியில் வேலை செய்கிறீர்கள். இன்னும் இரண்டரை வருடங்களுக்கு அஷ்டமச்சனி நடக்கப் போவதால் மனதுக்குப் பிடித்ததை செய்ய இயலாமல் மிகவும் அவதிப்படப் போகிறீர்கள்.

உலகின் உன்னத மதமான நமது மேலான இந்து மதம், இல்லறம் முடித்துத்தான் துறவறம் போகச் சொல்லுகிறதே தவிர, கிரகஸ்தன் ஆகிவிட்ட பிறகு மனைவியையும், தாயாரையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு போ என்று சொல்லவில்லை. எப்பொழுது உங்களை நம்பி ஒருத்தி வந்து விட்டாலோ அப்போதே அவளது அத்தனை சுகங்களையும் கவனிக்க வேண்டியவர் நீங்கள் ஆகிறீர்கள்.

அதேபோல வயதான தாயாரையும் பராமரிக்க வேண்டிய முழுப்பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு பிறக்கும் மகன், அவனது தாயாரை அதாவது உங்கள் மனைவியைக் கவனித்துக் கொள்ளும் பருவம் வந்தவுடன், நீங்கள் விரும்பியபடி காட்டிற்குச் சென்று தவம் செய்யலாம் என்றுதான் நம்முடைய மதம் அறிவுறுத்துகிறது.

மகா பெரியவர் போல மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். காஞ்சி தெய்வமான அவர் ஒருபோதும் ஒரு எறும்புக்கு கூட தீங்கு விளைவித்ததில்லை. எவருடைய மனதையும் நோகடித்தது இல்லை. பால பருவத்திலேயே துறவுக்கு வந்து விட்ட மகான் அவர். நமக்கு கர்மாவின் அடிப்படையில் அதுபோல வர முடியவில்லையே? சுக்கிரனும், செவ்வாயும் இணைந்ததால் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்கின்ற அமைப்பு இருக்கிறதே, என்ன செய்வது?

பொறுமையாக இருங்கள். மனைவி மற்றும் தாயாருடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை நேர்மையாக அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். கணவனின் உண்மையான மன ஓட்டத்தை புரிந்து கொள்ளும் எந்த ஒரு மனைவியும் அவனை அந்த சூழ்நிலையில் இருந்து மீட்டெடுக்கவே முயற்சி செய்வாள்.

ஏழாமிடத்தை குரு பார்த்து, ஏழுக்குடையவன் உச்சமானதால் உங்களுடைய மனைவி அருமையான பெண்ணாக இருப்பார். பிறவியின் அடிப்படையில் திருமண பந்தத்தில் மாட்டிக் கொண்ட நீங்கள் தாய், மனைவி இருவருடைய மனமும் நோகாமல், பாதிக்கா வண்ணம்தான் அந்த பந்தத்தில் இருந்து வெளியே வர வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது வாழ்க்கை துணையிடம் விவாதியுங்கள்.

இதுவரை நான் சொன்னது அனைத்தும் நீங்கள் கேட்டிருந்த வழிகாட்டல். இப்போது ஜோதிட ரீதியாக என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். 

தற்போது உங்களுக்கு எட்டாமிடத்தில் சந்திரனுடன் இணைந்துள்ள ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமர்ந்த உச்ச சனியின் தசையில், சுய புக்தி நடந்து கொண்டிருக்கிறது. இது வரும் மே மாதம் வரை நீடிக்கும். சனி உச்ச வக்கிரம் பெற்றுள்ள நிலையில் சனிக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்று இருக்கிறார்.

உங்கள் ஜாதகத்தில் சூரியன், புதன், இருவரும் உச்சனின் வீட்டிலும் சனி, சுக்கிரன் இருவரும் உச்சமாகவும்  பெற்றுள்ளது நல்ல அமைப்பு. அதேநேரத்தில் அடுத்து நடக்க இருக்கும் புதன் புக்தி உங்களுக்கு நன்மைகளை செய்யாது. அட்டமாதிபதி புக்தியில், அஷ்டமச்சனி நடப்பது நல்லதல்ல. ஆகவே சொந்த வாழ்க்கையிலும், வேலையிலும் கடுமையான மன அழுத்தத்தை நீங்கள் அடைவீர்கள். 2020, 2021 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தரக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

சனிதசை இன்னும் 15 ஆண்டு காலத்திற்கு நீடிக்க இருக்கும் நிலையில் உங்களால் குடும்ப வாழ்க்கையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. 2020 அக்டோபர் மாதம் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆன்மீக குருவை சந்திப்பீர்கள். அதுமுதல் உங்கள் வாழ்க்கை மனைவி, அம்மா வருத்தப்படும் விதமாக ஆன்மீகத்தை நோக்கி திசை மாறும்.

பன்னிரண்டாம் வீட்டில் ஒரு உச்ச கிரகம் அமர்ந்து பன்னிரெண்டாம் அதிபதியும் சுபராகி உச்சமானதால் இந்தப் பிறவியே உங்களின் இறுதி பிறவியாக அமையும். இந்த பிறவியில் நீங்கள் முக்தி அடையவும் முடியும். இதுவே கடைசி பிறவி என்பதால் வாழ்வின் அத்தனை கஷ்டங்களையும் நீங்கள் சந்தித்தே ஆகவேண்டும். 2023 சனி தசை, கேது புத்தி முதல் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். வாழ்த்துக்கள்.

(21.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.