ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
சுந்தரம், வேளச்சேரி.
கேள்வி:
சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் என் மகளுக்கு 2020ஆம் ஆண்டு சூரிய தசை, சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும் என்று உறுதி அளித்துள்ளீர்கள். எனது மகள் விவாகரத்து பெற்றவர். வந்திருக்கும் வரனும் தாரம் இழந்தவர்தான். இந்த ஜாதகத்தை இணைக்கலாமா? மாப்பிள்ளை வீட்டில் ஓகே சொல்லிவிட்டார்கள். சில ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் உள்ளதாகவும், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றும் சொல்கிறார்கள். நீங்கள்தான் இறுதித் தீர்ப்பை சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் வழியில்தான் எனது குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது.
பதில்:
(ஆண் 11-11-1990 காலை 9-32 ஒட்டன்சத்திரம், பெண் 4-1-1991 காலை 8-18 ஈரோடு)
பெண் விவாகரத்து பெற்றவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கனவே நடந்த திருமணத்தில் பத்துப் பொருத்தம் பார்த்து, பொருத்தம் நன்றாக இருக்கிறது என்றுதானே திருமணம் செய்திருப்பீர்கள்? அப்போதும் மாங்கல்யப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் எல்லாம் பார்த்திருப்பீர்கள்தானே? அந்தத் திருமணம் நிலைக்காமல் தற்போது ஏன் இரண்டாவது திருமணம் நடக்க இருக்கிறது? இரண்டாவது திருமணத்திலும் இதே பத்து பொருத்தம் என்கின்ற தவறைத்தானே செய்கிறீர்கள்? திருமணத்திற்கு பத்து பொருத்தம் மட்டும் பார்க்க தேவையில்லை, பார்க்கவும் கூடாது என்று நான் எத்தனை முறை சொன்னாலும் இது மாறுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்பதுதான் உண்மை.
நீங்கள் அனுப்பியிருக்கும் பையனுக்கு முதல் மனைவியை குறிக்கும் ஏழாம் அதிபதி புதன் 12ல் மறைந்து, இரண்டாவது மனைவியை குறிக்கும் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதாலும், இருவருக்கும் ஏக ராசியாகி கோட்சாரத்தில் அஷ்டமச்சனி. ஏழரைச்சனி போன்றவைகள் சமீபத்தில் நடக்காததாலும் இருவரையும் தாராளமாக இணைக்கலாம். தனுசு லக்னமாகி லக்னாதிபதி உச்சம் பெற்ற யோக அமைப்பில் இருப்பதால் பையன் நல்ல பையன்தான். இருவரும் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். குழந்தைச் செல்வங்கள் கண்டிப்பாக உண்டு. வாழ்த்துக்கள்.
பி.எம். வேணுகோபால், ஆவடி.
கேள்வி:
குருஜி என்னும் துரோணாச்சாரியாரின் ஏகலைவன் நான். மாலைமலரில் சில கேள்விகளுக்கான பதில்கள் தெரிய வருகிறது. டிகிரி சுத்தமாக எழுதுவது புரிகிறது. பல கேள்விகளுக்கு பதில் புரியவே மாட்டேன்கிறது. அதை இன்னும் எளிய நடையில் என்னை போன்ற மாணவர்களுக்கு புரியுமாறு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய பிரச்சினைக்கு தங்களின் வின் டிவி நிகழ்ச்சியில் பதில் கேட்டுப் பெற்றிருக்கிறேன். அதன்படியே நடந்திருக்கிறது. தற்போது புதிய பிரச்சனை மகன் வடிவில் கடவுள் தந்திருக்கிறார். மகனால் மனம் கலங்கிப் போய் இருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பு முதல் மகன் படிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான். எத்தனை வற்புறுத்தியும் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று நின்றுவிட்டான். டீசி வாங்கி வந்து விட்டோம். அவன் பள்ளிப்படிப்பையாவது முடிப்பானா, இல்லையா என்பதை விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வேறு ஏதாவது தொழில்நுட்ப கல்வி அல்லது எலக்ட்ரிகல் சம்பந்தமான படிப்பு படித்தால் அரசு உத்தியோகம் கிடைக்குமா? அல்லது குடும்பத் தொழிலான நகைத் தொழிலை மகனுக்கு சொல்லிக் கொடுக்கலாமா?
பதில்:
(தனுசு லக்கினம், சிம்ம ராசி, 3ல் செவ், 4ல் ராகு, 5ல் புத, 6ல் சூரி, சுக், 7ல் சனி, 9ல் சந், 10ல் குரு, கேது, 17-5- 2005 இரவு 10-11 பெங்களூர்)
மகனுக்கு வித்யாகாரகனாகிய புதன், தனுசு லக்னத்திற்கு ஆகாத கிரகமான சுக்கிரனின் சாரத்தில் அமர்ந்து, நான்காம் வீட்டில் ராகு, புதனின் சாரத்தில், வர்கோத்தம நிலையில், அம்சத்தில் செவ்வாயுடன் இணைந்து வலுவிழந்த ஜாதகம். ராகுவை சனி பார்ப்பதும் குற்றம். தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடப்பதால் இன்னும் ஒரு வருடத்திற்கு இவர் பள்ளிக்கு போவதற்கு வாய்ப்பில்லை. 2021ம் ஆண்டு படிப்பதற்கு சம்மதிப்பார். எனவே பத்தாவது பரீட்சை எழுத வையுங்கள். ராசிக்கு 10-ஆம் இடத்தை குரு பார்த்து, லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் கேள யோகத்தில் குரு அமர்ந்திருப்பதால், குடும்பத் தொழிலான நகைத் தொழிலில் மிகவும் நன்றாக வருவார்.
படித்தவர்கள் அனைவரும் நன்றாக இருந்ததுமில்லை. படிக்காதவர்கள் எல்லோரும் கெட்டுப் போய் விடவும் இல்லை. கல்வி என்பது ஒரு வாழ்க்கை அனுபவத்திற்கு தானே தவிர, அதுவே பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணம் இல்லை. கல்வி கற்றவர்களை விட, அனுபவத் தொழில் செய்பவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். இதைத்தான் கிராமங்களில் சரஸ்வதி இல்லாத இடத்தில் லட்சுமி இருப்பாள் என்று சொல்வது உண்டு.
மகனுக்கு கல்வி இல்லை என்றாலும் தொழில் ஸ்தானத்தில் குரு கேளயோகத்தில் அமர்ந்து ராசிக்கு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உங்களது குடும்ப தொழிலான நகை தொழிலில் மிகவும் நன்றாக வருவார். எதிர்காலத்தில் மஞ்சள்நிற தொழிலில் சாதிக்கும் அமைப்புள்ள ஜாதகம் இது. பருவத்தில் யோக தசைகள் வரை இருப்பதால் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.
லட்சுமண ராஜா, ஆலங்குளம்
கேள்வி:
2016 மாலைமலரில் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ற தலைப்பில் எனது கேள்விக்கு மிகவும் துல்லியமாக பதில் கொடுத்து இருந்தீர்கள். நீங்கள் சொன்னபடியே எனது திருமணம் 2018 ஆரம்பத்தில் நடைபெற்றது. தற்போது மகள் பிறந்திருக்கிறாள். இவளது ஜாதகப்படி ஆயுள் ஸ்தானம் சற்று குழப்பமாக இருக்கிறது. ஆயுள் ஸ்தானாதிபதி சூரியனும், காரகன் சனியும் 12-ல் மறைந்து இருக்கிறார்கள். எனது மகளின் பலனை என்னால் கணிக்க இயலவில்லை. இதுபோன்ற துல்லிய பலன்களை தாங்கள் ஒருவரே கூற இயலும் என்பதால் மகளின் ஆயுள்காலம் பற்றி கூறுங்கள் ஐயா..
பதில்:
(மகர லக்கனம், மீன ராசி, 1ல் கேது, 3-ல் சந், செவ், 7ல் ராகு, 11ல் சுக், குரு, 12ல் சூரி, புத, சனி, 13-1-2019, காலை 8-28 தென்காசி)
மகளுக்கு ஆயுள் ஸ்தானாதிபதி சூரியன் 12ல் மறைந்திருந்தாலும், தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில், வர்கோத்தம நிலையில் இருக்கிறார். சொந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்கள் எப்பொழுதுமே வலிமை உடையதாக இருக்கும் என்பது விதி. மேலும் லக்னம் அல்லது ராசி குருவின் தொடர்பில் இருந்தால் அற்பாயுள் இல்லை. அந்த அமைப்பின்படி இங்கே லக்னாதிபதி 12ல் மறைந்து, குருவின் வீட்டில் அம்சத்தில் சுபத்துவமாக இருப்பதும், ராசியைக் குரு பார்ப்பதும், அடுத்தடுத்து புதன், சுக்கிர தசைகள் வருவதும் மகளுக்கு நீண்ட ஆயுள் இருப்பதைக் குறிக்கிறது. வாழ்த்துக்கள்.
சரவணன், திருவண்ணாமலை.
கேள்வி:
எனக்கு குரு தசை ஆரம்பமானதிலிருந்து கடன் மெல்ல ஆரம்பித்து விட்டது. தற்போது கடன் அதிகமாகி அடைக்க பாடுபடுகிறேன். ஏதாவது ஒரு வகையில் இன்னொரு கடன் வந்து எதிர்த் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. எப்போது முழு கடனையும் அடைத்து நிம்மதி வாழ்வு வாழ்வேன்? எல்எல்பி படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் முடிக்க முடியவில்லை. எப்போது படிப்பு முடிந்து வக்கீல் ஆவேன் என்று கணித்துக் கூற வேண்டும்.
பதில்:
(கடக லக்கினம், ரிஷப ராசி, 4ல் கே,து, 5ல் சனி, 6ல் செவ், 8ல் குரு, 9ல் புத, 10ல் சூரி, ராகு, சுக், 11ல் சந்)
கடக லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியான குரு எட்டில் பாபத்துவமாக இருக்கும் நிலையில் முதல் எட்டு வருடங்களுக்கு தன்னுடைய கடன், நோய், எதிரி போன்ற அசுப காரகத்துவங்களையே செய்வார். அதன்படி 2022ஆம் ஆண்டு முதல் தான் உங்களுடைய கடன்களை நீங்கள் அடைக்க முடியும்.
ஒருவர் வக்கீல் தொழில் செய்வதற்கு குரு, சனி இருவரும் ராசி, லக்னத்திற்கு இரண்டு பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதன்படி உங்களுடைய ஜாதகத்தில் சனி, வளர்பிறைச் சந்திரனின் பார்வையில் அமர்ந்து சுபத்துவமாகி, ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு அமர்ந்து ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தையும் பார்த்து, ராசிக்கு பத்தாம் அதிபதியாகிய சனி லக்னத்திற்கு இரண்டாம் இடத்தையும் பார்ப்பதால் நீங்கள் வக்கீல் தொழில் செய்ய முடியும்.
பொய் சொல்லி பிழைக்க வைக்கும் சனியும், சட்டத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுத் தரும் குருவும் ஒருசேர லக்னத்திற்கு இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அடுத்து நடக்க இருக்கும் சனி தசையில் வக்கீல் தொழிலில் நீங்கள் நன்றாக சம்பாதிப்பீர்கள். 2022 ம் ஆண்டிற்குப் பிறகு படிப்பை முடிப்பீர்கள். வாழ்த்துக்கள்.
(14.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.