adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 270 (07.01.2020)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மயில்வாகனன், மதுரை.

கேள்வி:

மதிப்பிற்குரிய குருஜி.. தங்களது கட்டுரைகளையும் காணொளிகளையும் தொடர்ச்சியாக பார்த்து ஜோதிடத்தை புரிந்துகொள்ள முற்பட்டாலும், என் சொந்த வாழ்வில் நடந்த ஒரு பெரிய மாற்றம் ஏன் என்று புரிந்து கொள்ள முடியாமல் தலையை வெடிக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் உயர்ந்த பதவியில் நல்ல சம்பளத்தில் இருந்தேன். கடந்த மார்ச் மாதம் திடீரென என் மேல் வீண்பழி சுமத்தி அசிங்கப்படுத்தி தாய்நாட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். நிறுவனம் தரவேண்டிய சுமார் ஆறு லட்ச ரூபாய் பணத்தையும் தராமல் வெறும் கையோடு அனுப்பிவிட்டனர். லக்னாதிபதி புக்தியிலேயே இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டது. நான் உண்மையில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆட்சி பெற்ற லக்னாதிபதி புதன் புக்தியில் ஏன் இப்படி ஒரு அடியும் தண்டனையும் போன்ற செயலும் நடந்தது? தலையும் மனமும் வெடிக்கிறது. தற்போது வேலை இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக உள்நாட்டில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் இன்னும் சிறிது காலம் வெளிநாட்டில் வேலை செய்து குடும்பத்தை முன்னேற்ற எண்ணுகிறேன். எண்ணம் நிறைவேறுமா? மிதுன லக்னத்திற்கு வரவே கூடாது என தாங்கள் அடிக்கடி எழுதும் செவ்வாய் தசை விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இதுவும் என்னை கலக்கத்தில் ஆழ்த்துகிறது. செவ்வாய் தசை எப்படி இருக்கும்? விளக்கத்தினைத் தருவீர்கள் என்று பாதம் தொட்டு வணங்குகிறேன்.

பதில்:

(மிதுன லக்னம், சிம்மராசி, 1ல் சூரி, புத, சுக், 3-ல் சந், 5ல் செவ், சனி, 6ல் கேது, 7ல் குரு, 12-ல் ராகு, 3-7-1984 காலை 6-30 மதுரை)

“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பது பழமொழி. அதன்படி நமக்கு அடுத்த வருடம் கஷ்டங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் இப்போதே தலைகீழான மாற்றங்கள் நடக்கும். செவ்வாயின் வீடுகளில் அமர்ந்த கிரகங்களின் அல்லது செவ்வாயின் சம்பந்தம் பெற்ற கிரகங்களின் தசா, புக்தி நடக்கும்போது மிதுன லக்கினகாரர்களுக்கு  கெடுபலன்கள் இருக்கும்.

தற்போது சந்திர தசையில் கேது புத்தி உங்களுக்கு வரும் மார்ச் வரை நடக்க இருக்கிறது. அதுவரை உங்களுக்கு வேலையில் நல்ல பலன்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. சந்திர தசையில் புதன் புக்தியும், புதன் தசையில் சந்திர புக்தியும்  நன்றாக இருக்காது என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். உங்கள் ஜாதகப்படி வரும் சந்திர தசை புதன் புக்தியில் ஒரு தலைகீழ் மாற்றம் நடந்து அதன் பிறகு நீங்கள் முன்னேற வேண்டும் என்பது விதி.

என்னதான் இருந்தாலும் லக்னாதிபதி ஆட்சி வர்கோத்தமம் பெற்று, லக்னத்தையும் ராசியையும் லக்னாதிபதியையும் அதிவக்கிர நிலையில் சிவராஜயோகத்தில் உள்ள குரு பார்த்த யோக ஜாதகம் உங்களுடையது. பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ரிஷப ராகு தசையும் சரியான பருவத்தில் நடக்க இருக்கிறது. ராகுதான் மிதுன லக்னத்திற்கு முழு யோகர் என்பதையும் அடிக்கடி எழுதி வருகிறேன். அதனடிப்படையில் 43 வயதிற்கு பிறகு நன்றாக இருக்கக்கூடிய ஜாதகம் உங்களுடையது.

ஒரு முக்கியமான விஷயமாக வீட்டில் யாருக்காவது ஜென்மச் சனி, ஏழரைச்சனி போன்ற அமைப்புகள் நடந்தாலும், குடும்பத் தலைவராகிய நீங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவீர்கள். என்னுடைய கணிப்புப்படி உங்கள் வீட்டில் மிதுனம் அல்லது மகரம் ராசிகளில் ஒருவர் உறுதியாக இருப்பார்கள். நம்பிக்கையை கைவிட வேண்டாம். அடுத்து நடக்க இருக்கும் சந்திரதசை, சுக்கிரபுக்தி முதல் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்படும். மறுபடியும் வெளிநாட்டில் வேலை செய்ய முடியும்.

செவ்வாய் தசையில் முதல் பகுதி மூன்றரை வருடங்கள் கஷ்டமாகத்தான் இருக்கும். பிற்பகுதி மூன்றரை வருடங்கள் மிகவும் நன்றாகவே இருக்கும். இரு ஆதிபத்திய கிரகமான செவ்வாய் ஆறாம் வீட்டோடு தொடர்பு கொள்ளாமல், பதினொன்றாம் வீட்டு தொடர்பு மட்டுமே தொடர்பு கொண்டிருப்பதால் செவ்வாய் தசை கடுமையான கெடு பலன்களை உங்களுக்கு செய்யவே செய்யாது. கவலை வேண்டாம். 43 வயதிற்கு பிறகு அனைத்தும் சீராகும். வாழ்த்துக்கள்.

விவேக், பெங்களூர்.

கேள்வி:

சில வாரங்களுக்கு முன் பிறந்த என் மகனுக்கு புகழ் என்று பெயர் வைத்திருக்கிறேன். பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் இவனது பெயருக்கேற்றார் போல ஏதாவது ஒரு துறையில் அவன் புகழ் பெற வேண்டும் என்று எண்ணுகிறேன். எந்தத் துறையில் அவன் நன்றாக வருவான் என்பது முன்கூட்டியே தெரிந்தால், அத்துறையில் சிறுவயதிலேயே அவனுக்கு நல்ல பயிற்சியும், முயற்சியும் செய்ய வழி வகுத்துத் தருவேன். மகனின் ஜாதகத்தை கணித்து லக்னம் வலுவாக உள்ளதா, லக்னாதிபதி வலுவாக இருக்கிறாரா, அவனது லக்னம் மேஷமா, ரிஷபமா என்பதையும் தெளிவுபடுத்துங்கள். அவனது ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் சுபத்துவம் அடைந்துள்ளன? அவனது ஆயுள் எப்படி? என்பதையும் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதில்: 

(ரிஷப லக்னம்,  கடகராசி, 2ல் ராகு, 3ல் சந், 4ல் செவ், 5ல் சூரி, புத, சுக், 7ல் குரு, 8ல் சனி, கேது, 24-9-2019 இரவு 9-31 பெங்களூர்)

மகனுக்கு ரிஷப லக்னமாகி நட்பு வீட்டில் இருக்கும் குரு, லக்னத்தையும், ராசியையும் வலுப்பெற்று பார்த்த யோக ஜாதகம். லக்னம் சூரியனின் சாரத்திலும், ராசி யோகாதிபதி சனியின் சாரத்திலும்  இருப்பது சிறப்பு. லக்னாதிபதி சுக்கிரன் நீச்சம் அடைந்தாலும் முறையான நீச்சபங்கம் அடைந்திருக்கிறார். ஏறத்தாழ ஐம்பது வயது வரை ரிஷப லக்னத்தின் யோகர்களான சனி, புதன், சுக்கிர தசைகள் நடக்கின்றன. தற்போதைய தசா நாதன் சனி சூட்சுமவலு அடைந்து குருவின் வீட்டில் சுபத்துவமாக இருக்கிறார்.

எட்டில் சனி இருப்பதாலும், லக்னாதிபதி நீச்ச பங்கம் அடைந்திருப்பதாலும், லக்னம், ராசியை குரு பார்ப்பதாலும், குழந்தைக்கு 80 வயது குறையாத தீர்க்காயுள். இந்த ஜாதகத்தில் அதிகமான சுபத்துவத்தை புதனும், சந்திரனும் அடைந்திருக்கின்றன. சந்திரன் மாரகாதிபதி என்பதால் அவருடைய அமைப்பில் தொழில் அமையாது. புதனின் காரகத்துவங்களான கணக்கு, சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் இவன் நிபுணனாக இருப்பான். புதனின் துறைகளில்தான் இவனைக் கொண்டு வரமுடியும். பெயருக்கேற்ப புகழோடு இருக்கக்கூடிய ஜாதகம்தான். எதிர்காலத்தில் கணினித் துறையில் வருவான். வாழ்த்துக்கள்.

ஆர். சதீஷ், யாழ்ப்பாணம்.

கேள்வி:

இந்தக் கேள்வியைக் கேட்பதற்குரிய ஜோதிட அறிவைத் தந்த குருவிற்கு வணக்கம். பெரும் தொழிலதிபராகி, கோடிகளில் சம்பாதித்து பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற பேரவா எனக்கு இருக்கிறது. வேலை செய்வதை விட சொந்தமாக தொழில் செய்வதிலேயே எனது ஆழ்மன துடிப்பு இருக்கிறது. லட்சியம் நிறைவேறுமா? பத்தாம் அதிபதி செவ்வாய் ஆட்சி மற்றும் திக்பலம் அடைந்து, நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் இருப்பதோடு, 3 கிரகங்கள் திக்பலம் அடைந்து, 2, 9, 11ம் அதிபதிகள் சேர்ந்து லக்னத்தில் இருப்பது மகாதன யோகமா? லக்னாதிபதி சனி, செவ்வாயோடு இணைந்திருப்பதால் பாபத்துவம் அடைந்திருப்பதாக எடுத்துக் கொள்வதா அல்லது நவாம்சத்தில் சுக்கிரன், புதன், குரு சேர்க்கை பெற்று இருப்பதால் சுபத்துவமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா?

பதில்:

(கும்ப லக்னம், கும்பராசி, 1ல் சந், புத, சுக், குரு, 3ல் ராகு, 9ல் கேது, 10ல் செவ், சனி, 12ல் சூரி, 11-2-1986, காலை 7-34 யாழ்ப்பாணம்)

மிகப்பெரிய தொழில் உச்சநிலைகளுக்கு பாபக்கிரகமான செவ்வாய் ஆட்சி, திக்பலம் என இரு நிலைகளையும் ஒரு சேர அடைவது நல்லதல்ல. அதைவிட அவர் நீச்சமாக அமர்ந்து திக்பலம் அடைந்தால் யோகம். இதைப்பற்றி பத்தாம் பாவகமும், அது சொல்லும் தொழில்களும் என்று எழுதியுள்ள ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன். படியுங்கள்.

உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தவரை அனைத்து நிலைகளும் செவ்வாயை மையப்படுத்தியே உள்ளது. அதாவது லக்னம் சதய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. நட்சத்திர நாதன் ராகு, செவ்வாயின் வீட்டில் இருக்கிறார். சுக்கிரன், புதன், சூரியன்,குரு  ஆகிய 4 கிரகங்களும் செவ்வாயின் நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். ஒன்பதாமிடத்தில் இருக்கும் கேதுவும் சுவாதியில் அமர்ந்து அவரும் மறைமுகமாக செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்த நிலை பெற்றிருக்கிறார்.

ஒரே ஒரு கிரகத்தை சுற்றியே ஜாதகம் அமைந்திருந்தால், அந்தக் கிரகம் அதிகமான சுபத்துவமாக இருக்கின்ற நிலைமையில் ஒருவர் வாழ்க்கையில் மிக உயர் நிலைக்கு செல்வார். இங்கே செவ்வாய் பலமாக இருந்தாலும், சுபத்துவமாக இல்லை. செவ்வாய் திக்பலமாக இருப்பது சூட்சுமவலு மட்டுமே. செவ்வாய், சனியுடன் இணைந்திருப்பது பாபத்துவம்.

சுபத்துவம் என்பதன் முழு அளவையும் ராசிச் சக்கரத்தில் மட்டுமே முதன்மையாக கொள்ள வேண்டும். நவாம்சம் என்பது இரண்டாவது நிலைதான். ராசிச் சக்கரத்தில் அதிக பாபத்துவமுள்ள ஒரு கிரகம் நவாம்சத்தில் சுபத்துவம் அடைந்திருக்கும் நிலையில் சற்று அதனுடைய பாபத்துவம் குறையலாமே தவிர முழுவதுமாக அது சுபத்துவம் அடைந்ததாக சொல்ல முடியாது. எந்த ஒரு நிலையிலும் ராசிச் சக்கரத்தில் உள்ள நிலையே  முக்கியம். ராசியை அடுத்துதான் நவாம்சம்.

லக்னாதிபதியாகவே இருந்தாலும் சனி பத்தாம் வீட்டில் இருக்கக்கூடாது. சனி பாபத்துவமாக இருக்கும் நிலையில் அவர் அந்த பாவகத்தை கெடுப்பார். சனியால்  உங்களது தொழில் பாவகம் வலிமை குறைந்துதான் இருக்கிறது. லக்னத்தில் நான்கு சுப கிரகங்கள் அமர்ந்து உங்களுடைய எண்ணங்களை வலிமையாக்கி இருந்தாலும், பத்தாம் வீட்டில் பாபத்துவமாக இருக்கும் செவ்வாய் தன்னுடைய நான்காம் பார்வையால் அவர்களைப் பார்ப்பது வலிமைக்குறைவு.

ஒரு கிரகத்தின் சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு அமைப்புகளை அதனுடைய தசை தரும் பலன்களிலேயே நாம் எடை போட்டுவிட முடியும். அதன்படி பார்த்தால் 2016 வரை நடந்த சனிதசை உங்களுக்கு என்ன செய்தது என்பது உங்களுக்கே தெரியும். சனி பாபத்துவம்  அடைந்திருப்பதால் 30 வயது வரை நடந்த சனிதசை உங்களுக்கு நன்மைகளைச் செய்திருக்க வாய்ப்பில்லை. சுமாரான வாழ்க்கைதான் இருந்திருக்கும்.

சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்திருக்கும் புதன்தசை, சுக்கிர புக்தி முதல் உங்களுடைய வாழ்க்கை படிப்படியாக உயர்வுக்கு செல்லும். உங்களால் சொந்த தொழில் செய்ய முடியும். தொழிலில் சிறப்பாகவும் இருப்பீர்கள். அதேநேரத்தில் இலங்கையிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரன் அளவிற்கு ஆவீர்களா என்று கேட்டால் முடியாது என்றுதான் சொல்லுவேன். லக்னம் சுபத்துவமாக இருப்பதால் ஒரு தொழிலதிபராக, வீடு, வாகனம் போன்ற சகல வசதிகளுடன், ஒரு சொகுசான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும். வாழ்த்துக்கள்.

(07.01.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.