ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
செவ்வாயைப் பற்றிய இன்னும் சில நுணுக்கமான விஷயங்களைப் பார்த்துவிட்டு சர மற்றும் ஸ்திர ராசிகளான எட்டு லக்னங்களுக்கும் அவர் அளிக்கும் ருசக யோகத்தை பற்றி தனித்தனியாகப் பார்க்கலாம்.
பொதுவாக செவ்வாய் வலுப் பெற்று லக்னத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் மிகவும் கோபக்காரராக இருப்பார். லக்னத்தில் வேறு பாபக் கிரகங்களும் இருந்தால் கர்ண கடூரமான வார்த்தைகளை கோபத்தில் பேசுவார். அதேநேரம் சில நிலைகளில் செவ்வாய் சுபத்துவம் பெற்றிருந்தால் கோபம் அடங்கியதும் தான் பேசிய வார்த்தைகளுக்கு மனப்பூர்வமாக வருந்துவார்.
ஆயினும் இவரால் கோபத்தையும், அந்த நேரத்தில் தகாத வார்த்தைகள் பேசுவதையும் கட்டுப் படுத்த முடியாது. பேசுவதும் அதற்காக வருத்தப்படுவதும் இவரது தொடர்கதையாக இருக்கும்.
செவ்வாய் வலுப் பெற்றவர்களுக்கு ஆயுதங்களைக் கையாளுவதில் விருப்பம் இருக்கும். ஆயுதங்களின் மேல் காதல் இருக்கும். ஒரு நொடியில் உணர்ச்சி வசப்பட்டு, புத்தி கெட்டு கொலை செய்ய வைப்பவர் சுபத்துவம் பெறாத செவ்வாய் தான்.
பலம் பெற்ற செவ்வாய் ஒருவரை, செய்த தவறை ஒத்துக் கொள்ள விட மாட்டார். தான் செய்தது சரி எனவும் வாதாட வைப்பார்.
ஜாதகத்தில் மூன்றாமிடத்தில் “காரஹோ பாவ நாஸ்தி” நிலையிலோ அல்லது விரயம் செய்யும் நிலையிலோ அமைந்தால் நிச்சயம் ஜாதகருக்கு மிகவும் விருப்பமான இளைய சகோதரனை தனது தசையில் அல்லது புக்தியில் விரயம் செய்வார். அல்லது அவரது காரகத்துவங்களில் ஏதேனுமொன்றைக் கெடுப்பார்.
இது போன்ற அமைப்பில் செவ்வாய் தசை நடக்கும்போது சகோதரனால் விரயம், சகோதரனே விரயம், பங்காளி, தம்பி போன்றவர்களிடம் சண்டை சச்சரவுகள் போன்ற பலன்கள் நடக்கும். செவ்வாய் பாபத்துவம் அல்லது சுபத்துவம் அடைவதற்கேற்ப பலன்கள் மாறுபாடானதாக இருக்கும்.
ஜோதிடத்தில் மிக நுண்ணிய சூட்சும நிலைகளைப் புரிந்தவர்கள் ஒரு உண்மையை அறிவார்கள். எப்பொழுதுமே ஒரே கிரகம் இரு வேறு எதிர் எதிர் நிலைகளை அந்தந்த கட்டங்களுக்கு ஏற்பத் தரும் அல்லது உருவாக்கும்.
இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் சில சூட்சுமங்கள் பிடிபடும். இல்லையெனில் கிரகங்களின் விந்தையைப் புரிந்து கொள்ள முடியாத சராசரி ஜோதிடராக இருக்க வேண்டியது தான்.
இதை ஏன் இந்த இடத்தில் குறிப்பிடுகிறேன் என்றால் மிகப் பெரிய ஞானியை உருவாக்கும் குரு தான் கடவுளே இல்லையென்று வாதாடும் நாத்திகரையும் தோற்றுவிக்கிறார். காமமே கதி எனும் பெண் பித்தர்களை உருவாக்கும் அதே சுக்கிரன்தான் பெண் சுகமே கிடைக்காமல் செய்யும் ஒரு வினோத நிலையையும் உண்டாக்குவார்.
அதுபோலவே என்கௌண்டர் பண்ணப்படும் ரவுடியை உருவாக்குபவரும் செவ்வாய்தான்… அவனைச் சுட்டுக் கொன்று பொதுமக்கள் நலனைக் காக்கும் காவல்துறை அதிகாரியை உண்டாக்குபவரும் செவ்வாய்தான்.
சூட்சும வலுப் பெற்று சுபத்துவமும் அடையும் செவ்வாய் சூரிய, சம்பந்தத்தோடு ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ பத்தாமிடத்தை தொடர்பு கொள்ளும் நிலையில் மிகச் சிறந்த நேர்மையான கடமையை உயிராகக் கருதும் ஐ.பி.எஸ் அதிகாரி, ராணுவ மேஜர்களை உருவாக்குவார்.
அதேபோன்று வலுப் பெற்ற செவ்வாய் கத்தியால் உடலை அறுத்து மிக நுண்ணிய ஆபரேஷன்களைச் செய்யும் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆக்குவார். சிறிது பிசகினாலும் தனது நிஜ காரகத்துவமான அதே கத்தியால் உடலைக் கூறு போடும் கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரனாக மாற்றுவார்.
செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு ரத்தத்தைப் பார்ப்பதில் ஆர்வம் இருக்கும். அது எந்த நிலையில் வருகின்ற ரத்தம், கொலை செய்ய முயலும் போது பொங்குகின்ற ரத்தமா அல்லது உயிர் காக்கும் சிகிச்சையின் போது வழிகின்ற ரத்தமா என்பது செவ்வாயின் சூட்சும வலுவைப் பொருத்தது.
இரக்கமில்லாத கொடிய விபத்துக்களைத் தருபவரும் இவர்தான். வெடிகுண்டுகளால் உடல் சிதறி மரணம் நேர்வதும், கொடிய யுத்தங்கள் நடப்பதும் இவரால்தான். துளியும் கருணை காட்ட மாட்டார்.
தான் ஏற்றுக் கொள்ளும் கொள்கைக்காக முழு மனதுடன் தன்னுயிரைப் பணயம் வைக்கும் தீவிரவாதிகளை இவர்தான் தயாராக்குகிறார். வன்முறையின் நாயகனும் இவரேதான்.
மேலே நான் சொன்னவை அனைத்தும் செவ்வாயின் இயல்பான குணங்கள். செவ்வாயால் நன்மைகளே இல்லையா என்று கேட்பீர்களேயானால் அவர் சுபத்துவம் அடைந்து, சூட்சும வலு பெறும் நிலையில் நன்மைகளைச் செய்வார். ஆனால் அதிர்ஷ்டம் செய்ய மாட்டார். அது அவரின் இயல்பு அல்ல.
இது போன்ற கேள்விகளுக்காகத்தான் ஜோதிட சாஸ்திரம் கிரகங்களை சுப, அசுப கிரகங்கள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. அதிர்ஷ்டத்தை செய்வது அதாவது முறையான வழியில் பணத்தை சம்பாதிக்க வைப்பது, பணம் வந்த பின்னும் எவருக்கும் எதற்கும் பயப்படத் தேவையின்றி நிம்மதியாக இருக்க வைப்பது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய சுபர்கள்தான்.
என்னதான் குருவும், சுக்கிரனும் ஒருவர் ஜாதகத்தில் பாபத்துவம் பெற்றாலும் அந்த நபர் கத்தியைத் தூக்கிக் கொண்டு அலைய மாட்டார். ஆனால் செவ்வாய் அவரது தசையில் அதைச் செய்ய வைப்பார்.
அதனால்தான் செவ்வாய் ஒரு ஜாதகத்தில் நேரடியாக வலுப் பெறக் கூடாது எனவும் ருசக யோகம் என்பது ஒரு அமைப்புத்தானே தவிர அதிர்ஷ்டம் தரும் நிலையல்ல எனவும் நான் சொல்லுகிறேன்.
செவ்வாய் பூமிக்காரகன் ஆவார் என்பதால் சில நிலைகளில் ரியல் எஸ்டேட் பிசினஸ் மூலமாக ஏமாற்றி சம்பாதித்து பொருள் தேட வைப்பார். மனசாட்சியோ கருணையோ இல்லாமல் நில விவகாரங்களில் மோசடி செய்து பணம் சம்பாதிக்க வைப்பார். ஒரு பக்கம் பணம் வந்தாலும் மறு பக்கம் போலீஸ், கோர்ட் கேஸ், ஜெயில் என்று சிறைத் தண்டனையையும் தருவார்.
நெருப்பு ராசிகளோடு இவர் சம்பந்தப்படும் நிலையில் சமையல் கலைஞர்களை உருவாக்குவார். இவரது தசை, புக்தியில் குடும்பத்தையோ, மனைவியையோ பிரிந்து வேறிடத்தில் தானே சமையல் செய்து சாப்பிடும் நிலையை உண்டு பண்ணுவார். ஒரு ஆண் சமையல் கலையில் ஆர்வமாக இருப்பதற்கு செவ்வாயே காரணம். நவீன காலப் படிப்பான கேட்டரிங் துறைக்கு அதிபதி செவ்வாய்தான்.
ஜாதகத்தில் செவ்வாய் தசை சனி புக்தியோ, சனிதசை செவ்வாய் புக்தியோ நடைபெறும்போது இருவருமோ அல்லது ஒருவர் மட்டுமோ வலுப்பெற்று இருந்தால் அறுவைச் சிகிச்சை, வாகன விபத்து, வெட்டு குத்து போன்றவை நடைபெறுவது கண்கூடு.
செவ்வாய் உச்சம் பெற்று வக்ரம் பெற்றிருந்தால் அது அவரின் நீச நிலையைக் குறிக்குமாதலால் அவரின் கொடிய பலன்கள் நடக்காது. அந்நிலையில் ஜாதகரிடம் கருணையும் மனசாட்சியுடன் கூடிய தன்மைகளும் நிரம்பியிருக்கும். நேர்மைத்தனமும் இருக்கும். செவ்வாயின் கொடிய காரகத்துவங்கள் எதுவுமே ஜாதகரிடம் இருக்காது. அதே நேரத்தில் இந்த அமைப்பால் ஜாதகர் எதிலும் சீக்கிரமாக முடிவெடுக்கத் தயங்குபவராக இருப்பார்.
நெருப்பின் நாயகனான செவ்வாயுடன் அவரின் நண்பரும் குளுமைக் கிரகமுமான சந்திரன் இணைந்திருந்தாலோ, பார்த்தாலோ நெருப்பை நீர் அணைத்துத் தணிப்பதைப் போல செவ்வாயின் தீயகுணங்களை முற்றிலும் செயலிழக்கச் செய்வார்.
மேலும் குரு போன்ற இயற்கைச் சுபர்களின் இணைவு மற்றும் பார்வை போன்ற தொடர்புகள் செவ்வாய்க்கு ஏற்பட்டிருந்தால் அவரது குரூர குணங்களை மாற்றி அவரை நன்மைகளைச் செய்ய வைக்கும். சுக்கிரனின் இணைவை விட வலுப் பெற்ற சுக்கிரனின் பார்வை செவ்வாயை சுபத்துவப் படுத்தும். அதேபோல தனிப் புதன் செவ்வாயைப் பார்ப்பதும் நன்மையே.
என்னதான் இருந்தாலும் பரம்பொருள் தரும் ஒரு கருணைச் சலுகையாக இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் ஒரு மனிதனுக்கு தன் ஆளுமையைத் தரும் தசை வருடங்கள் வெறும் ஏழு மட்டும்தான்.
இனி லக்ன வாரியாக செவ்வாய் என்ன செய்வார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்….
உயிர்க் காரகத்துவம், ஜடக் காரகத்துவம் என்றால் என்ன?
ஒரு கிரகத்தின் காரகத்துவங்களில் உள்ள சில நுண்ணிய வேறுபாடுகளில் இந்த உயிர், ஜட செயல்பாடுகளும் அடங்கும். ஒரு கிரகம் மனிதனுக்குத் தர இருக்கும் செயல்பாடுகளின் அடிப்படையில் “காரகன்” என ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறது.
உதாரணமாக செவ்வாய் சகோதரக் காரகன், குரு புத்திரக் காரகன், சனி ஆயுள் காரகன் என்றும் அழைக்கப்படுவது அவை எவற்றை முதன்மையாகத் தர இருக்கின்றன என்பதைக் குறிப்பால் உணர்த்தும்.
கிரகங்கள் தர இருப்பவைகளில் உயிருள்ளவை, உயிரற்றவை என்று இரு பிரிவுகள் உள்ளன. செவ்வாய் சகோதர மற்றும் பூமிக் காரகன் என்பதால் செவ்வாயின் உயிர்க் காரகத்துவம் சகோதரன் எனவும் ஜடக் காரகத்துவம் பூமியாகவும் சொல்லப்படும்.
அதேபோல குருவின் உயிர்க் காரகத்துவம் குழந்தைகள் எனவும் ஜடம், பணம் உள்ளிட்ட பிற பொருட்களும், சனியின் உயிர் விஷயம் வேலைக்காரன், உயிரற்ற விஷயம் ஆயுள், கடன், நோய் ஆகியவையாகவும் இருக்கும்.
இதுபோலவே சுக்கிரனுக்கு உயிர், மனைவி என்றும் ஜடம், வீடு வாகனம் என்றும், சூரியனுக்கு தந்தை மற்றும் அரசு, சந்திரனுக்கு அம்மா மற்றும் மனம், புதனுக்கு மாமன் மற்றும் புத்தி எனவும் பிரித்துச் சொல்லலாம்.
ஒரு கிரகம் பாபத்துவம் பெற்று மனிதனுக்கு கெடுதல் செய்யும் நிலையில் இருக்கும்போது குறிப்பாக, “காரகோ பாவ நாஸ்தி” எனப்படும் காரகன் அதே பாவத்தில் இருக்கும்போது தனது செயல்களில் கெடுபலன்களைத் தரும் என்பது ஜோதிட விதி.
இதுபோல சாதகமற்ற அமைப்பில் ஒரு கிரகம் இருக்கும்போது முதலில் தனது உயிர்ச் செயல்பாடுகளையே அதிகம் பாதிக்கும். ஜடக் காரகத்துவத்தில் பாதிப்புகள் இருக்காது.
உதாரணமாக செவ்வாய் மூன்றாமிடத்தில் சுபத்துவ, சூட்சும வலுவின்றி தனித்து காரகோ பாவ நாஸ்தி நிலைகளில் அமர்ந்து தசை நடத்தும் போது ஜாதகரின் இளைய சகோதரனைப் பாதிப்பார். பூமி போன்ற தனது செயல்பாடுகளைப் பாதிக்க மாட்டார். எந்த ஒரு கிரகமும் பாபத்துவம் பெற்று கெடுபலன் தரும் நிலை வரும்போது உயிர்க் காரகத்துவத்தையே முதலில் பாதிக்கும்.
( நவ 07-07, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்…