adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன ? (A-015)

#adityaguruji

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கடந்த சில நாட்களாக சென்னையைப் புரட்டிப் போட்ட கொடுமழையைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது என்ற வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களிலும், பேஸ்புக் எனப்படும் முகநூலிலும் நடந்து கொண்டிருக்கின்றன.


காலவியல் விஞ்ஞானம் என்று நான் பெருமையுடன் குறிப்பிடும் இந்த ஜோதிடவியலில் உள்ள ஏராளமான பிரிவுகளில் முண்டேன் அஸ்ட்ராலஜி எனப்படும் உலகியல் ஜோதிடம் பூமியில் ஏற்படும் இதுபோன்ற பேரழிவுகளுக்கான கிரக நிலைகளை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இதனையே நான் எனது 2012 ம் ஆண்டு புத்தாண்டுப் பலன்கள் புத்தகத்தின் முன்னுரையில் “பால்வெளி மண்டல ஜோதிடவிதி” எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தனிமனிதனுக்கென ஜோதிடவிதிகள் இருப்பதைப் போல என்றோ ஒருநாள் பிறந்து தற்போது வளர்ந்து, ஒரு நாள் நிச்சயமாக அழியப்போகும் நமது பூமிக்கும், பூமியின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனித்தனியான நாடுகள் மற்றும் இடங்களுக்கும் பிரத்யேகமான ஜோதிட விதிகள் இருக்கத்தான் செய்கின்றன.

தனிமனிதனை சூரியமண்டலத்தில் உள்ள குரு, சுக்கிர, செவ்வாய் போன்ற கிரகங்கள் பாதித்து இயக்குவதைப் போல இந்தச் சூரியமண்டலத்தை, அது சுற்றிவரும் ‘மில்கிவே’ எனப்படும் பால்வெளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தி கொண்ட கருந்துளைகளும், அவற்றின் ஈர்ப்பு விசைகளும், பால்வெளிமண்டலத்தின் மைய சக்தியும் பாதித்து இயக்குகின்றன.

இந்த இயக்கவிதி இல்லையெனில், பூமியில் மனித நாகரிகங்கள் அழிந்து போனதற்கும், டைனோசர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்ததற்கும், சுனாமிக்கும், பூகம்பங்களுக்கும், எரிநட்சத்திரங்கள், வால்நட்சத்திர மோதல் போன்ற பேரழிவுகளுக்கும், பரிணாம வளர்ச்சிக்கும், எல்லாவற்றையும் விட கடந்த நூறுஆண்டுகளில் மனிதகுலத்தின் மாபெரும் விஞ்ஞான வளர்ச்சியான இந்த செல்போன் யுகத்திற்கும் நீங்கள் விளக்கம் சொல்ல முடியாது.

இந்த மாபெரும் “பால்வெளி மண்டல விதி”க்கு முன் அற்பமான தனிமனித ஜோதிட விதி இயங்க முடியாது. அதாவது ஒரு மாபெரும் பேரழிவு நடக்கும்போது தனிமனிதனின் ஜாதகம் செயலற்றுப் போய் விடும்.

உதாரணமாக ஒரு தனிமனிதன் எண்பது வயது வாழக்கூடிய அமைப்பு ஜாதகப்படி இருந்தாலும் பால்வெளி மண்டல விதிப்படி ஒரு மாபெரும் அழிவு நிகழும் இடத்தில் அவன் இருந்தால் கண்டிப்பாக அற்பாயுளில் இறந்து போவான்.

பெரும் யுத்தங்கள், கலவரங்கள், கொத்துக்கொத்தான பட்டினிச் சாவுகளின் பின்னால் இருப்பது பால்வெளி மண்டல விதிதானே தவிர.தனிமனித விதி அல்ல.

அதேபோல ஒரு நாட்டின் தலைவரின் ஜாதகத்தை வைத்து அந்த நாட்டிற்கான இயற்கைப் பேரழிவுகளைக் கணிக்கவே முடியாது.

நாட்டின் தலைவருக்கு அன்று நேரம் சரியில்லை என்றால் காலை எட்டுமணிக்கு மனைவியிடம் மண்டையில் பூரிக்கட்டையால் அடிவாங்கி பதினோரு மணிக்கு ஒரு உறுப்பினரிடம் முதுகில் ஒரு தட்டு வேண்டுமானால் வாங்குவாரே தவிர அன்று அவர் தேசத்தில் சுனாமியோ, பூகம்பமோ வந்து விடாது.

ஒரு தேசத்தலைவரின் கெட்டநேரம் அந்த தேசத்தின் குடிமகனைப் பாதிக்கவே பாதிக்காது. ஆனால் உலகியல் ஜோதிட விதிப்படி அந்த தேசத்தின் பால்வெளி மண்டல விதி கெடுபலன்களை தரும் நிலையில் அமைந்தால் அந்த தேசத்தின் அனைத்துக் குடிமகன்களையும் பாதித்து அழிவுகளை உண்டாக்கும்.

ஐநூறு வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சென்று வருவது பெருமையாக இருந்ததும், இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்க அவர்கள் அலையாய் அலைந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும் தலைகீழாக மாறி இன்று அதே இந்தியாவில் உள்ளவருக்கு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் போவது பெருமையாகப் போனதற்கும் இந்த பால்வெளி மண்டல விதிதான் காரணம்.

சென்னையில் பெய்த பேய்மழைக்கு இந்த விதி எப்படி பொருந்தும்?

மனிதர்களைப் போலவே நாடுகளுக்கும், நகரங்களுக்கும் உலகியல் ஜோதிடத்தில் ராசிகள் உள்ளன. அதன்படி இந்தியா மகர ராசியையும் அதில் அடங்கிய சென்னை மாநகரம் மேஷ ராசியையும் குறிக்கும்.

(பிரபல ஜோதிட ஆய்வாளரும், பிருகுநந்தி நாடி முன்னோடியும், சிறந்த ஜோதிட மேதையுமான திருமிகு. சித்தயோகி சிவதாசன் ரவி அவர்கள் சென்னையை ரிஷப ராசி எனக் கருதுகிறார்.)

ஜோதிடப்படி பனிரெண்டு ராசிகளும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீரைக் குறிக்கும் ராசிகளாகும்

மிகப்பெரும் மக்கள்கூட்டத்தை சனி குறிக்கிறார். இதனால்தான் ஜனத்தொகையில் உலகின் முதல்நாடான சீனா சனியின் மூலத் திரிகோண ராசியான கும்ப ராசியாகவும், இரண்டாவது பெரிய நாடான இந்தியா சனியின் இன்னொரு ராசியான மகரமாகவும் உலகியல் ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.

அதாவது உலகின் மிகப்பெரும் ஜனக்கூட்டம் இவ்விரு நாடுகளான மகர, கும்ப ராசிகளிலேயே அடங்கி விடுகிறது. அதுபோலவே இன்னொரு பாபக் கிரகமான கேதுவும் பெரும் ஜனத்திரளையும் அவர்களுக்கு ஏற்படும் அழிவையும் குறிப்பிடுபவர்.

சனி கெடுபலன்களைத் தருவதெற்கென்றே உள்ள கிரகம் என்பதாலும், அவர் இருக்கும் ராசி, அதன் தன்மைகளைப் பொறுத்து அழிவைச் சந்திக்கும் எனும் விதிப்படியும், சனி நீர் ராசிகளில் இருக்கும்போது தென்னிந்தியக் கடலோரங்களில் வசிக்கும் மக்கள் கூட்டம் நீரால் அழிவைச் சந்திக்கும்.

இந்த விதியின்படியே 2005 ம் ஆண்டு சனி, முதன்மை நீர் ராசியும் கடலைக் குறிக்கும் ராசியுமான கடகத்தில் இருந்தபோது, தமிழக கடலோரங்கள் சுனாமியால் பேரழிவைச் சந்தித்து பெரும் உயிரிழப்பு நடந்தது.

இப்போது சனி இரண்டாம் நிலை நீர் ராசியான விருச்சிகத்திலும், கேது இன்னொரு நீர் ராசியான மீனத்திலும் இருப்பதால், இந்த மாதம் சென்னை நகரம் மழையால் பேரழிவைச் சந்தித்து மக்கள் கூட்டம் பெரும் துயரப்பட்டது..

வரும் ஜனவரி எட்டாம் தேதி கேது மீனத்திலிருந்து மாறப்போவதால் இனிமேல் சென்னைக்கு மழையால் பாதிப்புகள் இருக்காது.

இவை அனைத்தையும் விட மிக மிக முக்கியமான சென்னை மழை பற்றிய ஜோதிடக் குறிப்பு என்னவென்றால், ராசிகளில் மூன்று ராசிகள் நீர் ராசிகள் எனப்படுவதைப்போல, ஒன்பது கிரகங்களிலும் உள்ள நெருப்பு, நீர், காற்று நிலப்பிரிவுகளின்படி முதன்மை நீர்க் கிரகம் சந்திரனாகும்.

இந்த ஜலக்கிரகமான சந்திரன் ஜலராசியான கடகத்தில் அமர்ந்த கடந்த நவம்பர் முப்பது, டிசம்பர் ஒன்று தேதிகளில்தான் சென்னை வரலாறு காணாத பேய் மழையைக் கண்டு மிரண்டது.

அதிலும் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்த திங்கள்கிழமையன்று சந்திரன் சனியின் பூச நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தார். சென்னை சந்தித்த அந்த இரண்டு கருப்பு மழை நாட்களில் மூன்று நீர் ராசிகளிலும் கிரகங்கள் அமர்ந்திருந்தன.

இதுபோன்ற கிரகநிலைகள் சனியின் சுழற்சியையொட்டி முப்பது மற்றும் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகுபவை. பெரும் உலகப்போர்களுக்கு இடையில் உள்ள முப்பதாண்டு இடைவெளிகளும் உலகின் மிகப்பெரும் பஞ்சங்களுக்கு (தாது வருடப் பஞ்சம்) இடையிலான முப்பது மற்றும் அறுபது வருட சீரான இடைவெளிகளும் உலகியல் ஜோதிட ஆய்வாளர்களாலும் நவீன விஞ்ஞானிகளாலும் ஆராயப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆய்வு இன்னும் முற்றுப் பெறவில்லை.

வரும் 29 ம் தேதி சென்னை அழிந்து விடுமா ?

வரும் இருபத்தி ஒன்பதாம் தேதி சென்னை நகரம் மழையால் அழிந்து போய் விடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிக்கை வெளியிட்டிருப்பதாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வேகமாகப் பரவி சென்னை மக்களை மட்டுமின்றி தமிழக முழுவதிலும் உள்ள சென்னை நகர மக்களின் உறவினர்களையும் பீதிக்கு உள்ளாக்கி வருகிறது.

ஒரு பஞ்சாங்கத்தில் உள்ள கார்த்திகை இருபத்தி ஒன்பதை டிசம்பர் இருபத்தி ஒன்பதாக்கி இந்த வதந்தியை உருவாக்கி உலவவிட்ட வாட்ஸ்அப் பிரம்மாக்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அமெரிக்க நிறுவனமான நாசா ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமே தவிர வானிலை ஆராய்ச்சி மையம் அல்ல. உலகம் முழுவதும் மழை பெய்தபிறகு அதன் ஏற்றத்தாழ்வுகளைக் கணிப்பது அதன் பணிகளில் ஒன்று என்றாலும் சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் உள்ள ஒரு பிளாட்டில் எத்தனை குடம் மெட்ரோ வாட்டர் வந்தது என்று சாட்டிலைட் காமிரா மூலம் அது கவனிப்பதில்லை. அதைவிட மேலாக நாசா ஒருபோதும் அறிக்கைகள் வெளியிடுவதில்லை.

“தங்கத்தாலான பெரிய கோட்டைக் கதவுகளையுடைய இனிய தமிழ் மொழி பேசப்படும் மதுரை” என ராமாயணத்தில் குறிப்பிடப்படும் மதுரையும், “நகரேஷு காஞ்சி” என இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வடமொழி வணங்கிய காஞ்சிபுரமும், ஆயிரமாண்டு பிரம்மாண்டத்தைத் தாங்கி அதற்கும் முன்பே வாழ்ந்து தமிழனின் வீரத்தை பறைசாற்றும் தஞ்சையும் இன்னும் உயிரோடு இருக்கையில் ஆங்கிலேயர் ஆட்சியில் பிறந்த வெறும் முன்னூறு வயதுக் குழந்தையான சென்னை ஒரு அடைமழைக்கு அழிந்து போகும் என்று சொல்வது அபத்தம் இல்லையா?

ஜோதிடப்படி சென்னைக்கு மழையால் அழிவு என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மழைப்பொழிவு இருந்த கிரக நிலைமைகளும் முற்றுப் பெற்று விட்டன. சென்னை மக்கள் எதையும் தாங்கும் இதயமும் சக்தியும் கொண்டவர்கள் என்பது இன்னொரு முறையும் இந்த மழையால் நிரூபிக்கப் பட்டு விட்டது.

முன்னூறு ஆண்டு கண்ட சென்னை, மூவாயிரம் ஆண்டும் காணும் என்பது உறுதி. அதைக் காண இதை எழுதிய நானும், படிக்கும் நீங்களும் இருக்க மாட்டோம் என்பது மட்டும் நிதர்சனம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்