ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
ரா. கீர்த்திகா, சென்னை.
கேள்வி:
கடந்த இரண்டரை ஆண்டு காலமாக ஜோதிடத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. உங்களின் மாலைமலர் கட்டுரைகள் யூடுயூப் வீடியோக்களின் தீவிர ரசிகை நான். என் ஜாதகத்தில் சுக்கிரன், கேது சூரியனுடன் இணைந்திருப்பதால் எனக்கு திருமணம் நடந்தாலும் நான் தனியாகத்தான் இருப்பேன் என்று ஒரு ஜோதிடர் கூறினார். அது உண்மையா? லக்னத்திற்கு 2, 5, 7, 8ம் இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் குறை இருக்குமா? ராகு தசையில் சந்திரன் புக்தியில் திருமணம் நடக்குமா? எப்படிப்பட்ட கணவர் அமைவார்? வரப்போகும் குரு தசை எப்படி இருக்கும்? பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? உங்களின் பதிலுக்காக செவ்வாய்தோறும் காத்துக் கொண்டிருப்பேன். என் குழப்பத்தை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:
(மிதுன லக்னம், மகர ராசி, 1ல் சூரி, புத, சுக், கேது, 3-ல் குரு, 7ல் ராகு, 8ல் சந், சனி, 11ல் செவ், 19-6-1992 காலை மணி 7-36 சிதம்பரம்)
பொதுவாக லக்னாதிபதி வலுத்திருந்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கி ஒருவருக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பது விதி. அதன்படி உன்னுடைய திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும். குழம்ப வேண்டாம். உன்னுடைய 2, 5, 7, எட்டாம் பாவகங்கள் மேலோட்டமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தாலும், நுட்பமாக பார்க்கப் போனால் நன்றாகவே இருக்கின்றன.
இரண்டாம் வீட்டை சனி பார்த்துக் கெடுப்பது போல தோன்றினாலும் பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனால், சனி சுபத்துவம் பெற்றுப் பார்ப்பதால் சனியின் பார்வை கெடுதல்களைச் செய்யாது. அதே நேரத்தில் இரண்டுக்குடையவர் சனியுடன் சேர்ந்தது பலவீனம். அதனால்தான் 27 வயது ஆகியும் இதுவரை உனக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறது.
அதே போல ஐந்தாம் பாவகத்தை சனி, செவ்வாய் இருவரும் பார்ப்பதைப் போல தோன்றினாலும், சனி ஒளி பொருந்திய சந்திரனால் சுபத்துவப் படுத்தப்பட்டும், செவ்வாய் குருவினால் சுபத்துவப் படுத்தப்பட்டும் பார்ப்பதால் உனது ஐந்தாம் பாவகம் கெட்டுப் போய் விடவில்லை. ஐந்தாம் பாவகாதிபதி சுக்கிரன், சூரியனுடன் சேர்ந்து மிக நெருங்கி இணைந்து அஸ்தமனமாகி இருப்பது பலவீனம்தான். நல்லவேளையாக அவர் ராகுவுடன் இணையாமல் கேதுவுடன் இணைந்திருப்பதால் மிகப் பெரிய சோதனைகள் உனக்கு நிச்சயமாக இல்லை.
ஏழாம் பாவகத்தில் ராகு இருப்பது பலவீனம். என்றாலும் எப்போது வலுப்பெற்ற குரு ராகுவை பார்க்கிறாரோ அப்போது ராகு சுபராகவே இருப்பார் என்பது மிக முக்கிய விதி. அதனடிப்படையில் ஏழாம் பாவகம் உனக்கு வலுவிழக்கவில்லை அதேபோல எட்டாம் பாவகமும் சுபத்துவ சனியின் இருப்பில்தான் இருக்கிறது. ஆகவே உன்னுடைய இரண்டு, ஐந்து, ஏழு, எட்டாம் பாவகங்கள் வலுவிழந்ததாக சொல்லக் கூடாது.
அதே நேரத்தில் மேற்சொன்ன குறைகள் இருப்பதால்தான் உனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. ராசிக்கு 7-ஆம் இடத்தை சனி, செவ்வாய் இருவரும் பார்த்து, லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் ராகு அமர்ந்து, சனி இருப்பதால், உனக்கு 30 வயதிற்கு பிறகுதான் திருமணம். அதன்படி ராகுதசை முழுக்க உனக்கு திருமணம் நடக்கக் கூடாது. ராகு தசை முடியப் போகும் இறுதி நேரத்தில், குரு தசையின் ஆரம்பத்தில் தான் உனக்கு திருமணம் நடக்கவேண்டும்.
குரு தசை சுய புக்தியில் நீ தாயாக வேண்டும் என்பது விதி. குரு, சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்து, நட்பு வீட்டில் வலுவாகி தன்னுடைய ஏழாம் வீட்டையே பார்ப்பதால் குரு தசை முதல் உனக்கு நீடித்த தாம்பத்திய சுகம் கிடைக்க வேண்டும். ஏழாமிட அமைப்பின்படி உனக்கு உறவினர் கணவராக அமைய வாய்ப்பில்லை. அந்நிய மாப்பிள்ளைதான் அமைவார்.
உபய லக்னத்திற்கு குரு 3, 6, 10, 11ல் இருந்தால் நல்ல பலன்களைச் செய்வார் என்பதன்படி, ஐந்தாம் அதிபதியான சுக்கிரனின் சாரம் வாங்கி மூன்றாம் வீட்டில் குரு வர்கோத்தமமாக இருப்பதால் குருவின் தசை முதல் உன்னுடைய வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை. சரியான பருவத்தில் குரு தசை நடக்க இருப்பதால் புத்திர பாக்கியத்திற்கு பிறகு மிகவும் நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள் அம்மா.
கதிர், கோவை.
கேள்வி:
சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறேன். பிஇ படித்திருந்தாலும் சினிமாவின் மேல் உள்ள அதிக ஈர்ப்பினால் இந்தத் துறைக்கு வந்தேன். கடந்த பத்து வருடங்களாகவே இதில் இருக்கிறேன். ஆனால் வருமானம் என்பது துளியும் இல்லை. சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டம். மனைவி இறந்து நான்கு வருடமாகிறது. இரண்டு பிள்ளைகள் வேறு. சினிமாவைத் தவிர வேறு தொழிலில் துளியும் நாட்டம் இல்லை. இது ஏன்? இந்தத் துறையில் முன்னேற்றம் உண்டா? இரண்டாம் திருமணம் நடக்குமா? விரக்தியின் விளிம்பில் நிற்கிறேன். என் குல தெய்வத்திடம் முறையிடுவது போல தங்களிடம் கேட்கிறேன். தயவு செய்து பதில் கூறுங்கள். நான் எப்போது நன்றாக இருப்பேன்?
பதில்:
(துலாம் லக்னம், மகர ராசி, 2ல் ராகு, 3ல் சூரி, செவ், 4ல் சந், புத, சுக், 5ல் குரு, 8ல் கேது, 9ல் சனி, 14-1-1975 அதிகாலை 12-30 கோவை)
கனவுத் தொழிற்சாலை எனப்படும் சினிமாவினால், உன்னதமான வாழ்க்கையைத் தொலைத்த லட்சோப லட்சம் இளையவர்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு இளைஞனின் இன்னுமொரு கடிதம். சினிமாவில் ஜெயிக்க முடியுமா என்று கேட்டே எனக்கு வாரம்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. விளக்கைத் தேடும் விட்டில் பூச்சிகளைப் போல, கர்மாவின்படி மிக முக்கியமான இளைய பருவத்தை தொலைக்கக் கூடிய அனைவரும் இதுபோன்ற தவறான பாதையில்தான் போய் விழுகிறீர்கள்.
கடந்த 14 வருடங்களாக துலாம் லக்னத்திற்கு வரவே கூடாது என்று நான் சொல்லும் குருவின் தசை உங்களுக்கு நடந்து வருகிறது. எப்போதெல்லாம் ஒருவருக்கு கடுமையான அவயோக தசைகள் நடக்கின்றதோ அந்த தசையில் அவர், அவருக்கு தேவையில்லாத ஒன்றை செய்து வாழ்க்கையை தொலைக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. அதன்படி உங்களுக்கு குரு தசை முடியும் காலமான 2022 வரை முன்னேற்றம் என்பது துளியும் இருக்க வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் லக்னாதிபதி திக்பலமாகி, கூடவே சந்திரனும் திக்பலம் பெற்று, 4-9 குடையவர்கள் பரிவர்த்தனையான யோக ஜாதகம் உங்களுடையது. தசாபுக்தி அமைப்புகளே வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதன் அடிப்படையில், வாழ்க்கையின் மிக முக்கிய இளைய பருவத்தில் உங்களுக்கு நடைபெறுகின்ற குருதசை எவ்வித நன்மைகளையும் உங்களுக்கு செய்வதற்கு இல்லை.
அடுத்து நடைபெற இருக்கும் சனி தசையில் உங்களுக்கு உயர்வுகள் இருக்கும். சனி, ஆறாம் அதிபதி குருவின் சாரத்தில் அமர்ந்து இருந்தாலும் அவருக்கு குருவின் பார்வை கிடைத்து சுபத்துவமாகவும் பரிவர்த்தனை ஆகவும் இருப்பதாலும், ஆறாம் அதிபதி அந்த வீட்டிற்கு 12ல் மறைந்து ஐந்தாம் வீட்டிலிருந்து சாரம் கொடுத்திருப்பதாலும், சனி தசை முதல் வாழ்க்கையில் நன்றாக இருப்பீர்கள்.
தர்மகர்மாதிபதிகள் சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் திரும்பத் திரும்ப சினிமா சம்பந்தப்பட்ட, கலைத் துறை சம்பந்தப்பட்ட தொழில்கள் மட்டுமே செய்வீர்கள். நான் என்ன சொன்னாலும் சினிமாவை நீங்கள் கைவிட மாட்டீர்கள். வாழ்நாள் முழுவதும் சினிமா சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு கலை அமைப்புகளில்தான் உங்கள் மனம் செல்லும். 2022 முதல் சனி தசை ஆரம்பித்ததிலிருந்து வாழ்க்கை சீராக செல்லும். இரண்டாவது திருமணமும் அப்போது நடக்கும். வாழ்வின் பிற்பகுதியில் நிம்மதியாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. வாழ்த்துக்கள்.
(31.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.