adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
என்ன செய்து பிழைக்கலாம்?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஒரு வாசகர், களக்காடு.

கேள்வி:

73 வயதாகும் எனக்கு படிப்பு முடிந்ததில் இருந்தே எந்த வேலையும் நிரந்தரமாக இல்லை.  வாழ்நாள் முழுவதும் பொருளாதாரமும் மிகவும் கவலைக்கிடமான நிலைமையில்தான் இருக்கிறது. குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமை பாக்கி உள்ளது. தற்போது கமிஷன் அடிப்படையிலான ஒரு தொழில் வாய்ப்பு வருகிறது. அதைச் செய்யலாமா? நண்பர் ஒருவர் என் பெயரில் கார் வாங்கித் தருகிறேன் என்கிறார். அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாமா? பசு மாடுகள் வாங்கி பால், தயிர், நெய் விற்றுப் பிழைக்கலாமா? அல்லது காபி ஸ்டால் போட்டு சம்பாதிக்கலாமா? இந்த நான்கு வாய்ப்புகளில் எது எனக்கு மிகவும் பொருந்தும்? குருஜி அவர்கள் சரியான வழி காட்ட வேண்டுகிறேன். பொருளாதார நிலை உயரவும், செய்யப் போகும் தொழில் சிறக்கவும், உடல்நலம் நன்றாக இருக்கவும் நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? வாழ்வு வளமாக என்ன மந்திரம் உரு ஏற்றலாம்? சகல காரியமும் வெற்றி பெற என்ன விரதம் மேற்கொள்ளலாம்? லக்னாதிபதியே அவயோகியாக இருப்பதால்தான் இந்த கஷ்டம் ஏற்பட்டுள்ளதா? பிறந்ததிலிருந்தே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கு பரிகாரம் செய்ய முடியுமா? யோகத்தாரை பூராடம் ஆகி, சுக்கிரன் யோகி ஆவதால் நல்ல காரியம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை வெள்ளிக்கிழமை மற்றும் பூராட நட்சத்திரத்தில் செய்யலாமா? பாவத் பாவத்தில் பன்னிரண்டாம் பாவம் முதலிடத்திலும், ஷட்பலத்தில் சூரியன் முதல் இடம் பெற்றிருப்பதன் பலன்கள் என்ன? முதுமையாலும், கவலையாலும், நோயாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். அதற்கு தங்களது ஆசிகளையும், அறிவுரையையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.


பதில்:

(தனுசு லக்கினம், கன்னி ராசி, 6ல் சூரி, ராகு, 7ல் புத, சுக், 8ல் சனி, 9ல் செவ், 10ல் சந், குரு, 12-ல் கேது 8-6-1946 இரவு 7-30 களக்காடு)

பாவத் பாவம், யோகி, அவயோகி, தாரை, ஷட்பலம் போன்றவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் ஒருவிதமான துணை அமைப்புகள்தான்.  நான் சொல்லும் சுபத்துவ- சூட்சும வலு கோட்பாட்டினை புரிந்துகொண்டால், இவை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு ஜாதகத்தின் உயர்நிலை-தாழ்நிலை மற்றும் உண்மை அமைப்புகளை புரிந்து கொள்ளலாம்.

73 வயதாகும் நீங்கள் சிறு வயதிலிருந்தே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். ஒரு ஜாதகத்தில் 2, 9, 11-ஆம் இடங்கள் ஓரளவிற்கேனும் வலுவாக  இருந்தால் மட்டுமே அவரது பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் ஜாதகப்படி இரண்டாமிடத்தை  பாபத்துவ சனி பார்த்து தன வீடு முழுமையாக கெடுகிறது. திரிகோணமான  ஒன்பதாம் இடத்தில் இன்னொரு பாபரான செவ்வாய் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதி சூரியன் ராகுவுடன் மிக நெருங்கி ஆறில் மறைந்திருக்கிறார். லாப ஸ்தானமான 11-ஆம் இடம் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக இருக்கிறது.

இங்கே இரண்டாம் அதிபதி, இரண்டாம் வீட்டைப் பார்த்து வலுவாக தானே இருக்கிறார் என்று எடுக்கக்கூடாது. சனி தன் வீட்டைத் தானே பார்த்தாலும் அந்த வீட்டைக் கெடுக்கவே செய்வார் என்பதை அடிக்கடி சொல்லுகிறேன். அதைவிட முக்கியமாக இயற்கைச் சுபரான குரு, வளர்பிறை சந்திரனோடு இணைந்து அதிக சுபத்துவமாகி எந்த பாவகத்தில் இருக்கிறாரோ, அந்த பாவகம் நாசம் என்பதும் மிக முக்கிய ஒரு விதி. அதன்படி குரு பத்தாம் இடத்தில் உள்ள நிலையில் பௌர்ணமிக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் வளர்பிறை சந்திரனால் அதிக சுபத்துவம் பெற்று, தொழில் பாவகத்தில் இருப்பதும் கெடுதல்தான். இதனால் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு நிரந்தரமான தொழில் அமையாது.

நான்கு தொழில்களில் என்ன தொழில் செய்யலாம் என்று கேட்டிருக்கிறீர்கள். ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவமுள்ள கிரகத்தின் தொழில் அமைந்தால் அது நல்லது. அதன் மூலம் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் புதனும் சந்திரனுமே அதிக சுபத்துவமாக இருக்கிறார்கள். சுக்கிரனின் துறையான கார் வாங்கி வாடகைக்கு விடுதல் உங்களுக்கு கண்டிப்பாக ஒத்துவராது. செய்யவே செய்யாதீர்கள்.

அடுத்து நீங்கள் கேட்டிருக்கும் பால், தயிர் போன்றவைகள் சந்திரனின் துறையாக இருந்தாலும் சந்திரன் 8-க்குடையவர் என்பதால் சாப்பாட்டிற்கு மட்டும் வழிவகுத்து லாபங்களை தர மாட்டார். எனவே சந்திரனும் செவ்வாயும் சேர்ந்த அமைப்பில் காபி ஸ்டால் அதாவது நெருப்பும், நீரும் கலந்த காபி ஸ்டால் போடுவது உங்களுக்கு நல்லது.

தற்போது அதிகமான வெள்ளை நிறத்தை உபயோகப்படுத்திக் கொண்டு இருப்பீர்கள். முற்றிலுமாக வெள்ளை நிறத்தை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் லக்னாதிபதியான குருவின் மஞ்சள் நிறத்தை உபயோகப்படுத்துவது நல்லது. உங்களைச் சுற்றி மஞ்சள் நிறமாக்கிக் கொள்ளுங்கள். வியாழன் தோறும் அருகிலிருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. நீங்கள் கேட்டிருக்கும் மந்திரம், விரதம் அனைத்தும் வழிபாட்டுமுறைகள்தானே தவிர பரிகாரங்கள் அல்ல.

வழிபாட்டிற்கும் பரிகாரத்திற்கு வித்தியாசம் இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் வாழ்வின் கடைநிலையில் 76 வயதில் இருக்கும் உங்களுக்கு பரிகாரங்கள் எதுவும் செயல்படாது. கர்மாவின் அடிப்படையில் அனைத்தையும் நீங்கள் தற்போது அனுபவித்தே ஆக வேண்டும். எட்டில் சனி இருப்பது பொருளாதார குறைவைத் தரும் என்றாலும்  எட்டில் சனி ஆயுளை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பு என்பதால் இன்னும் சில ஆண்டுகள் நீங்கள் வாழ்ந்து தான் தீரவேண்டும். லக்னத்தை 2 சுபர்கள் பார்ப்பதால் தைரியத்தை கைவிட மாட்டீர்கள். எதையும் சமாளிக்கக்கூடிய ஜாதகம்தான் உங்களுடையது. என்னை விட பெரிதும் வயதில் மூத்த உங்களுக்கு என்னுடைய ஆசீர்வாதம் தேவையில்லை. நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

(31.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.