ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
பஞ்ச மஹா புருஷ யோகங்களில் நான்காவதாக செவ்வாயால் உண்டாகும் ருசக யோகத்தைப் பற்றித் தற்போது காண்போம்.
ஏற்கனவே நாம் பார்த்த மூன்று யோகங்களும் இயற்கைச் சுப கிரகங்களால் தரப்படுபவை. தற்போது பார்க்க இருக்கும் ருசக யோகம் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாயால் உண்டாகப் பெறுவது.
ஜோதிட ஆர்வம் உள்ள அல்லது ஜோதிடத்தை அறிந்திருக்கும் சிலருக்கு இந்த ருசக யோகத்தை பற்றியும், இதனையடுத்து சனியால் உண்டாகப் பெறும் சச யோகத்தைப் பற்றியும் நான் தரப்போகும் விளக்கங்கள் இதுவரை படித்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும், வேறுபட்டதாகவும் இருக்கலாம்.
நீண்ட ஆய்வுக்குப் பின் எனக்கேற்பட்ட அனுபவக் கருத்தின்படி எந்த ஒரு ஜாதகத்திலும் இயற்கைப் பாபக் கிரகங்களாகிய சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய நால்வரும் நேரடியாக வலுப் பெறவே கூடாது. சூட்சும வலு தான் பெற வேண்டும். (சூரியன் அரைப் பாபர்தான். முழுப் பாபர் அல்ல )
இதனை "பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி" என ஒரு அமைப்பாகவே நான் சொல்லியிருக்கிறேன்,
அதிகாரம், ஆணவம், அசட்டுத் துணிச்சல், முன்கோபம், சகோதரர், விவேகமற்ற வீரம், பூமி, குன்றுகள், மலைகள், சுரங்க உலோகங்கள், எதிரிகள், கூர்மையான ஆயுதம், சுப்ரமணியக் கடவுள், ரத்தம், சிகப்பு நிறமுடைய பொருட்கள், ஆண் சமையல் செய்தல், விளையாட்டு, உடற்பயிற்சி, மிருகத்தனம், தலைமைக்கான இரக்கமற்ற தகுதி,
சுதந்திர எண்ணம், நெருப்பு, வழக்கு, காவல்துறை, ராணுவம், ஆளுமை, விபத்து மற்றும் அடிதடி, கலவரம், வெட்டுக் காயம், முறையற்ற வேறுபட்ட காமம், கற்பழிப்பு, அறுவைச் சிகிச்சை நிபுணர், சிறைத் தண்டனை, கொடுமையான பேச்சு, மூர்க்கத்தனம், கடினமான மனம், வீண் விவகாரங்கள், உணர்ச்சி வசப்படுதல் போன்ற நிலைகளுக்கு செவ்வாய் காரணமானவர் ஆவார்.
சர, ஸ்திர லக்னங்கள் எனப்படும் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய எட்டு லக்னங்களுக்கு மட்டும் செவ்வாய் கேந்திரங்களில் வலுப் பெற்று ருசக யோகத்தை அளிப்பார். அவர் இவ்வாறு பலம் பெறும் நிலையில், அவரது தசையில் மேலே சொன்ன அவரின் காரகத்துவங்கள் நடக்கும்.
செவ்வாயின் முக்கியமான காரகத்துவங்களில் ஒன்று வீரம்....
இந்த வீரத்தை நாம் இரு வேறு கால கட்டங்களில் இரு வேறுவிதமான அர்த்தங்களாகத்தான் புரிந்துக்கொள்ள முடியும்.
அதாவது பல நூறு ஆண்டுகளுக்கு முன், சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையில் ஒரு தனி மனிதன் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ள, வேறொரு நபரை அல்லது குழுக்களை ஆயுதங்களால் வெட்டுவது, கொல்வது, முரட்டுத்தனமாக அழிப்பது, வீரம் எனப்பட்டது.
ஆனால் காலமும், சமுதாயச் சூழலும் மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் ஒரு தனி மனிதன் மேற்கண்டவைகளை தன்னைப் பாதுகாப்பதன் பொருட்டு செய்ய நேரிட்டாலும் இன்று அது வீரம் எனப்படுவதற்கு பதிலாக குற்றம் என்றுதான் சொல்லப்படும்.
ஆகையால் இன்றைய சூழலில் வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் ஒரு ஜாதகத்தில் வலுப் பெற்றால் வீரனை உருவாக்குவாரா? அல்லது குற்றவாளியை உருவாக்குவாரா?
செவ்வாய் நேரடியாக வலுப் பெற்றால் ஜாதகர் அசட்டுத் துணிச்சல் உள்ளவராகவும் முன் கோபக்காரராகவும் இருப்பார். மூர்க்கத்தனம் ஜாதகரின் பிறவிக் குணமாக இருக்கும்.
வலுப் பெற்ற செவ்வாய் கிரிமினல்தனத்தை உருவாக்கி தைரியமாகக் குற்றங்களைச் செய்ய வைப்பார், ரவுடி ஆக்குவார். ஜாதகருக்கு அடிப்பதிலும், தண்டிப்பதிலும் ஆர்வம் இருக்குமாதலால் காவல்துறை அல்லது ராணுவத்தில் பணி புரிய வைப்பார்.
செவ்வாய் பலமாக இருந்தும் மேற்கண்ட குணங்களின் தாக்கத்திலிருந்து ஜாதகர் தப்பிக்கிறார் என்றால் அது அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தவிர்த்து பலமாக உள்ள மற்ற கிரகங்களின் அதிர்ஷ்ட விளைவுகளால்தான் இருக்க முடியும்.
இன்னொன்றையும் நான் உறுதிபடக் கூறுவேன்....
நமது மூல நூல்கள் ஜாதகத்தில் செவ்வாய் வலுப் பெற்றவனை மாபெரும் வீரன், ஆயிரம் தலைகளைக் கொய்பவன், சேனாதிபதி, மஹா தைரியசாலி, பூமியை வெல்பவன் என்றுதான் புகழ்கின்றனவே தவிர இவன் நல்லவன், கருணை உள்ளவன், மகா கோடீஸ்வரன், அரண்மனையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவன், வேகமாகச் செல்லும் ரதங்களில் கட்டிளம் மங்கையரை அருகில் வைத்துக் கொண்டு இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பவன் என்றோ, அல்லது வேதாந்தம் பேசிக் கொண்டு கடவுளுக்கு அருகிலேயே இருந்து அவருக்கு சேவை செய்து அவரின் திருவடிகளைப் போற்றும் அவ்வுலக இன்பத்தை அனுபவிப்பவனாகவோ ஒரு போதும் குறிப்பிடவில்லை.
சரி...
அப்படியானால் பாபக் கிரகங்கள் வலுப் பெறவே கூடாதா? அவர்களின் உச்சம், ஆட்சி போன்ற நிலைகள் வீண்தானா? அவர்களும் வலுப் பெறுவது எதற்காக என்று கேட்பீர்களேயானால் சில நிலைகளில், சில விளைவுகளுக்காக அவர்கள் வலுப் பெற்றுத்தான் ஆக வேண்டும். அப்படி அமைவதுதான் சூட்சும நிலை. அதுதான் படைப்பின் நியதி.
பாபக் கிரகங்கள் உள்ளிட்ட எந்தக் கிரகம் வலுப் பெற்றாலும் ஜாதகத்தில் அவர்கள் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியவர்களோ அந்த இடங்கள் நிச்சயம் வலுப் பெறும். அந்தக் கிரகங்கள் சுப காரகத்துவங்களைப் பெற்ற இயற்கைச் சுபர் என்றால் இரட்டிப்பு நல்ல பலன் கிடைக்கும். இந்த அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவர் கொடுத்து வைத்த யோகசாலி.
ஆனால் தீய காரகத்துவங்களை உடைய பாபக் கிரகங்கள் ஜாதகத்தில் நல்ல ஆதிபத்தியங்களுக்கு உரியவர்களாயினும் நேர்வலு பெறுமாயின் தனது தீய செயல்பாடுகளின் வழியே தான் அந்த ஆதிபத்தியப் பலன்களைத் தரும்.
மற்றொரு உண்மையாக, சில நிலைகளில் சனியும், செவ்வாயும் தங்களின் சர ராசிகளில் ராகு, கேதுக்களுக்கு இடமளிக்கும் போது, அதாவது மகரத்திலும் மேஷத்திலும் ராகு இருக்கும் நிலையில், ராகு தசையில் மறைமுக அபரிமிதமான தன லாபம் கிடைப்பதற்காக சனியும், செவ்வாயும் (ராகு இருக்கும் ராசிநாதன்) வலுப் பெற்றே ஆக வேண்டும்.
அப்போது கூட எனது சூட்சும வலு தியரிப் படி அவர்கள் மறைவிடங்களில்தான் உச்சம் பெறுவார்கள்.
(இந்த விஷயத்தை நேரம் கிடைக்கும் போது பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விளக்குகிறேன். இப்போது இதையும் சொல்ல ஆரம்பித்தால் எடுத்துக் கொண்ட தலைப்பான ருசக யோகத்தை விட்டு விட்டு வேறெங்கோ கிளைகளில் பயணிக்க வேண்டியிருக்கும்.)
அதே நேரத்தில் நீ என்ன நமது ஞானிகளால் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்ட ருசக யோகத்தை விமர்சிக்கிறாய்? என்று என்னைக் கேட்டால் அதுவும் தவறுதான் என்பேன்.
இந்த தொடர் கட்டுரைகளின் ஆரம்பக் கட்டுரையான "உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா..?" கட்டுரையின் முதல் வரியிலேயே நான் குறிப்பிட்டதைப் போல் யோகம் என்றால் ஒரு சேர்க்கை, ஒரு அமைப்பு அவ்வளவுதான். அதை அதிர்ஷ்ட நிலைகளோடு நம் ஞானிகள் தொடர்பு படுத்தவில்லை.
வழி வழியாகத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டபடி யோகம் என்றால் அதிர்ஷ்டம் எனவும், அனைவரும் எழுதுவதைப் போல் ருசக யோகமும், சச யோகமும் மகா அதிர்ஷ்டத்தைத் தரும் என்று தவறாக வழிகாட்டும் ஆளில்லை நான்.
என்னுடைய முடிவான கருத்தின்படி ருசக யோகமும், சச யோகமும் எந்த ஒரு நிலையிலும் அதிர்ஷ்டத்தினை ஜாதகருக்குத் தராது. அதற்குப் பதிலாக சில நிலைகளை, அமைப்புகளை ஜாதகருக்குத் தரும். அதிலும் சச யோகம் எந்த ஒரு ஜாதகத்திலும் இல்லாமலிருப்பது மிகவும் நல்லது.
இயற்கைப் பாபரான செவ்வாய், தான் இருக்கும் இடத்தையும், தான் லக்ன பாபராகவும் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகளையும் பலம் இழக்க வைப்பார்.
நம் இந்திய ஜோதிடத்தில் இவரால் ஏற்படும் செவ்வாய் தோஷம் பல பெற்றோர்களின் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியது. ஒருவருடைய ஜாதகத்தில் இவர் 2,4,7,8,12 இடங்களில் அமர்ந்தால் செவ்வாய் தோஷம் எனப்படுகிறது. அதற்கும் பலப் பல விதிவிலக்குகள் உள்ளன.
குடும்பம் எனும் இரண்டு
ஒழுக்கம் எனும் நான்கு
வாழ்க்கைத் துணை எனும் ஏழு
மாங்கல்யம் அல்லது வாழ்க்கைத் துணையின் ஆயுள் எனும் எட்டு,
தாம்பத்ய சுகம் எனும் பனிரெண்டு.
ஆகிய இடங்களில் இயற்கைப் பாபரான செவ்வாய் அமர்ந்து அந்த இடங்களின் நல்ல தன்மைகளைக் கெடுப்பதால்தான் இந்த இடங்களில் இருக்கும் செவ்வாயைப் பற்றிய பயம் வந்தது.
பலம் பெற்ற செவ்வாய் ஒருவருக்கு உடல் ஆரோக்கியத்தையும், வலுவான உடலையும், உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தையும் தருவார். விளையாட்டு, மருத்துவம், போன்ற துறைகளில் அவரால் ஒருவருக்கு ஈடுபாடு வரும்.
அதேநேரத்தில் செவ்வாயும், சனியும் நேருக்கு நேரோ, சனிக்கு பத்தாமிடத்தில் செவ்வாய் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோ இருந்தால் இருவரும் வலிமை இழப்பார்கள். இருவரும் சேர்ந்து ஒரு பாவத்தில் இருந்தால் அதைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது முற்றிலும் கெடும்.
குரு மற்றும் சந்திரனுடன் செவ்வாய் இணைவது, அவர்களின் பார்வையைப் பெறுவது போன்றவை அவரின் குரூரத்தைச் சற்றுக் குறைக்கும். குருவின் இணைவு மற்றும் பார்வையை விட வளர்பிறைச் சந்திரன் அல்லது பவுர்ணமிச் சந்திரனின் சேர்க்கை மற்றும் பார்வையைப் பெற்ற செவ்வாய் ஒரு மனிதருக்கு நல்ல பலன்களைச் செய்வார்.அதேபோல அவரது இன்னொரு நண்பரான சூரியனுடன் இணையும் போதும் வலுப் பெறுவார்.
இவருக்கு எதிர் அணியினரான சுக்கிரன் மற்றும் புதனுடன் இணைந்தால் அவர்களின் சுபத்துவத்தை இவர் கெடுப்பார். சுக்கிரனும், செவ்வாயும் இணைவது பிருகு மங்கள யோகம் என்ற ஒரு நல்ல அமைப்பாக நமது மூல நூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும் இந்த இணைவினால் சுக்கிரனின் சுப பலன்கள் ஜாதகருக்கு குறையும் என்பதால் இந்த அமைப்பு குறைபாடுகளைக் கொண்டது.
அதேநேரத்தில் சுக்கிரனை லக்ன பாபியாகக் கொண்ட தனுசு, மீனம், கடகம், சிம்மம் போன்ற லக்னங்களுக்கு இந்த யோகம் சில நன்மைகளை செவ்வாய் தசையில் செய்யும்.
சர மற்றும் ஸ்திர லக்னங்களுக்கு செவ்வாய் அளிக்கும் ருசக யோகத்தை தனித் தனியாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
( நவ 30-06, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537