ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
ஆர். ராஜராஜேஸ்வரி, திண்டுக்கல்.
கேள்வி:
அன்பு அண்ணா... மகனுக்கு கேள்வி கேட்டு தங்கள் அருள் வாக்கினால் நல்ல மாற்றங்களைப் பெற்ற இந்த அன்புத் தங்கை தற்போது மகளுக்காக கேட்கிறேன். கணவரின் துணையின்றி பிள்ளைகளைப் படிக்க வைக்கிறேன். போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ, பெற்றோருடன் இல்லாமல் சித்தி வீட்டில் வேலைக்காரியாக வளர்ந்து, காதலால் ஒருவனை நம்பி ஏமாந்து மணமுடித்து, திருமண வாழ்க்கையும் சரியாக அமையாமல், வீடு கட்டியதால் மிகப்பெரிய அளவில் கடனாளியாகி பணம், நகை, வீடு அனைத்தும் இழந்து தற்போது சம்பாதிக்கும் பணம் கூட வட்டி கட்டுவதற்கே சரியாகப் போய்விடுகிறது. வட்டிக்கு வாங்கி வட்டி கட்டித்தான் காலத்தை கடத்துகிறேன்.
எப்படியாவது பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசையால், மேற்கல்விக்காக என் பெண்ணை கோவையில் விடுதியில் தங்கி படிக்க வைக்கிறேன். நானும் அவளுடன் கோவைக்கு சென்று விடலாம் என்றுதான் அவளை விடுதியில் தங்க வைத்தேன். ஆனால் நான் செல்ல காலதாமதம் ஆகிறது. சமீபத்தில் எனது பெண்ணின் போனில் ஒரு பையனின் புகைப்படத்தை பார்த்தேன். அது முதல் அவள் காதல் வயப்பட்டிருக்கிறாளோ என்ற பயம் மனதை வதைக்கிறது.
அவளது மேற்கல்வியை கோவையில் தொடர விடலாமா அல்லது சொந்த ஊருக்கே திரும்பி அழைத்து வந்து விடவா அல்லது நான் அங்கே செல்லவா என்று தயவுசெய்து ஆலோசனை சொல்லவும். வைராக்கியமாக கடன் பட்டாவது அவளைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் எனது கனவு கலைந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. மீண்டும் அவளை திண்டுக்கல் வரவழைத்தால் சொந்த, பந்தங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற மன உளைச்சலில், என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள் அண்ணா...
பதில்:
(தனுசு லக்னம், துலாம் ராசி, 1ல் செவ், கேது, 4ல் சுக், 5ல் சூரி, 6ல் புத, குரு, சனி, 7ல் ராகு, 11ல் சந், 6-5-2001 இரவு 10-40 திண்டுக்கல்)
அம்மா... ஜோதிடரீதியாக கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக உனது மகள் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பது உண்மை. இந்தப் பருவத்தில் ஆண்களின் மேல் ஒரு ஈர்ப்பு வருவதும், தனக்குத் தகுந்த ஆண் இவனாக இருப்பானா என்று மனம் அலைபாய்வதும் இயற்கைதான். நீயும் வானத்திலிருந்து திடீரென்று ‘பொத்’ தென்று குதித்து வந்து விடவில்லையே? நீயும் இந்தப் பருவத்தைக் கடந்துதானே வந்திருக்கிறாய்? அதிலும் தற்போது உன் மகள் எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதை நீ செய்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டதால்தானே, மகளும் அவ்வாறு செய்து விடுவாளோ என்று மனம் பதைபதைக்கிறது?
இன்றைக்கு வயதாகி வாழ்வின் எல்லையில் இருக்கும் எல்லோரும், என்றோ ஒருநாள் மாபெரும் தவறாகத் தெரியும் இந்தக் காதலைச் செய்துதான் இருக்கிறோம். அதைக் கடந்துதான் வந்திருக்கிறோம். மானுட குலம் இருக்கும்வரை இந்தக் காதல் இருந்தே தீரும். இதை மாற்ற உன்னாலும் முடியாது, என்னாலும் இயலாது. அதேநேரத்தில் காதல் செய்பவர்கள் அனைவரும் தோற்று விடுவதில்லை. காதலர்கள் கணவன்-மனைவி ஆனபிறகு கலைந்து விடுவதும் இருக்கிறது, காலம் முழுவதும் கண்கலங்காமல் ஒருவருக்கொருவர் கனிவாக இருப்பதும் இருக்கிறது.
அம்மா... ஜோதிடரீதியாக தெளிவான மனம் கொண்டவர்கள், தவறான முடிவெடுத்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வதே இல்லை. ஜாதகப்படி பவுர்ணமி யோகத்தில் மனத்தைக் குறிக்கும் சந்திரனை வலிமையாக கொண்ட உனது மகள் தவறான முடிவெடுக்க வாய்ப்பில்லை. லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சமாகி, சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனையாகி, ஐந்தாமிடத்தில் ஒன்பதுக்குடையவன் அமர்ந்து, ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்கு, ஐந்தாம் இடங்களில் இரு உச்ச கிரகங்கள் அமர்ந்து, குறிப்பாக ஐந்தாமிடத்தில் பாக்கியாதிபதி எனும் ஒன்பதாம் அதிபதி அமர்ந்து தவறுகள் எதுவும் செய்யாமல் மனக்கட்டுப்பாடுடன் இருக்கக்கூடிய நல்ல யோகஜாதகம் உன் மகளுடையது.
தற்போது பரிவர்த்தனை பெற்ற லக்னாதிபதி குருவின் தசை அவளுக்கு நடந்து வருகிறது. லக்னாதிபதி பரிவர்த்தனை முறையில் மறைமுகமாக ஆட்சி, ராசிநாதன் உச்சம் என வலிமையான அமைப்புகள் மகளின் ஜாதகத்தில் உள்ளதால், மகளைப் பற்றியோ அல்லது அவளது ஒழுக்கத்தை பற்றியோ, கல்வியைப் பற்றியோ அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
அதேநேரத்தில் பிள்ளைகள் எல்லை மீறிப் போகாமல், வேலி போட்டு பாதுகாப்பதும் நம்முடைய கடமை அல்லவா? முதலில் தோளுக்கு மேல் வளர்ந்த பெண்ணை தோழியாகப் பார்க்கக் கற்றுக் கொள். பெற்ற தாயிடம் எதையும் பேசலாம், எதையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று வளரும் குழந்தைகள் ஒருபோதும் தவறு செய்வதில்லை. அப்படியே செய்தாலும் மனம் உறுத்தி, அதை சரி செய்வதற்காக உன்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்துவிடும்.
சொந்த ஊரில் ஆயிரம் வேலைகள் கிடைக்கட்டும், அனைத்திலும் மேலானது உன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம். முதலில் நீ நினைத்ததைப் போல மகளுடன் சேர்ந்திருப்பதற்காக கோயம்புத்தூர் செல். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எதையும் தியாகம் செய்யலாம். எக்காரணம் கொண்டும் குழந்தையின் மேற்படிப்பை தடை செய்து விடாதே. குழந்தையுடன் சேர்ந்து தங்கி அவளிடம் மனம் விட்டுப் பேசு. கண்டிப்பு என்ற பெயரில் கடினத்தை காட்டி விடாதே. பெற்ற குழந்தையிடம் என்றும் கனிவாக இரு.
இந்தப் பருவத்தில் தவறான எதையும் நீ அறியாமல் தேர்ந்தெடுத்து விட்டால் வாழ்க்கை சிக்கலாகி விடும். அதற்கு உதாரணமாக நானே இருக்கிறேன் என்று உன்னையும், உன் வாழ்க்கையையும் அவளுக்கு சுட்டிக் காட்டு. உலகத்திலேயே மிகவும் சுலபமானது அறிவுரை சொல்வது, மிகவும் கடினமானது அதன்படி கேட்டு நடப்பது. பதின்பருவக் குழந்தைகளுக்கு நம்மைப் போன்றவர்கள் அறிவுரை சொல்வது வேப்பங்காயாக கசக்கத்தான் செய்யும். ஆனாலும் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை அல்லவா? ஊதுகிற சங்கை ஊதி வை.
ஜோதிடரீதியாக உன்னுடைய மகளின் வாழ்க்கை கெடுவதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை. ஜாதகப்படி அவளது திருமணம் அவள் விருப்பப்படி பெற்றோர் சம்மதத்துடன் அமையும். பங்கமற்ற பவுர்ணமி யோகத்தில் பிறந்த குழந்தைகள் தாய், தகப்பனை காயப்படுத்துவதில்லை.
அதேநேரத்தில் இந்தப் பருவத்தில் அவளுக்கு கல்விதான் முக்கியம் காதல் அல்ல என்பதை நாசுக்கான வார்த்தைகளால் தெரியப்படுத்து. மீறினால் ஒரு தாயாக கண்டிப்பு காட்டுவேன் என்ற உறுதியை அவளுக்குச் சொல். ஆனால் அவளது நியாயமான ஆசைகளுக்கு ஒரு தாயாக, ஆதரவாக இருப்பேன் என்பதை குறிப்பால் உணர்த்து. யோகமான ஜாதகத்தைக் கொண்ட உனது மகள் எதிர்காலத்தில் சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்பிலும் சிறப்பாகவே இருப்பாள். வாழ்த்துக்கள் அம்மா.
(17.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.