adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சுக்கிரன் தரும் பலன்கள்..! B-010

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி எண் : 8681 99 8888

துலாம்:

துலாத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். துலாம் ராசி சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வலுவுள்ள இடமும் ஆகும்.

இங்கிருக்கும் சுக்கிரனுடன், சனியும் சேர்ந்து உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் அதீத காம ஈடுபாட்டுடன் இருப்பார். பெண் பித்தராகவும் இருக்கலாம். ஜாதகர் சும்மா இருந்தாலும் பெண்கள் அவரைச் சும்மா இருக்க விட மாட்டார்கள். சனியும் பலம் பெற்றிருப்பதால் ஜாதகர் உழைப்பிற்கு அஞ்சாதவராகவும், நெஞ்சுரம் கொண்டவராகவும், பிடிவாதக்காரராகவும், உயரம் குறைந்தவராகவும் இருப்பார்.

சனி வக்ரம் அடைந்திருந்தாலோ அல்லது வேறுவகையில் பலம் இழந்திருந்தாலோ இந்த பலன்கள் மாறும். மற்றபடி இங்கு தனித்த நிலையில் வலுவுடன் இருக்கும் சுக்கிரனின் தசையில் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சிறந்த மாளவ்ய யோகம் கிடைக்கும்.

லக்னாதிபதிக்கு வேறு கெட்ட ஆதிபத்தியங்கள் இருந்தாலும் லக்ன பலனே வலுப் பெறும் என்று நமது கிரந்தங்கள் கூறினாலும், அனுபவத்தில் அது சரியாக வரவில்லை. துலாம் லக்னத்திற்கு அஷ்டமாதிபத்திய பலனையும் சுக்கிரன் செய்யத்தான் செய்கிறார்.

இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகர் சிறந்த கலா ரசிகராக இருப்பார். திறந்த மனது, அழகுணர்ச்சி, வெளிப்படையான பேச்சு. உண்மைக் குணம் ஆகியவை ஜாதகரிடம் நிரம்பியிருக்கும். சிற்றின்பப் பிரியராக இருப்பார். உண்மைக் காதலராக இருப்பார் என்பதால் பெண்களால் விரும்பப்படுவார். சிறந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை சுக்கிரனால் கிடைக்கும். வாழ்க்கையில் மேலான நிலைக்குச் செல்ல முடியும்.

விருச்சிகம் :

விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தை அளிப்பார்.

சுக்கிரன் இங்கே தனித்திருப்பது களத்திர தோஷத்தை அளிக்கும் என்பதால் வேறுவகையில் வலுவிழக்காத பட்சத்தில் தாமத திருமணம் நடக்கும். ஆயினும் இயற்கைச் சுபரான சுக்கிரன் இங்கிருந்து லக்னத்தைப் பார்வையிடுவார் என்பதால் ஜாதகர் நல்ல குணங்களைப் பெற்றிருப்பார்.

சுக்கிரன் இந்த லக்னத்திற்கு பனிரெண்டுக்குடைய போக ஸ்தானாதிபதியுமாவார். அவர் அயன, சயன, போகஸ்தானத்திற்கு எட்டில் மறைந்து ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது ஒரு வகையில் நல்ல நிலை தான்.

விருச்சிகத்திற்கு ஏழாமிடத்தில் பலம் பெற்று தசை நடத்தும் நிலையில் இங்கிருக்கும் சுக்கிரன் பெண்கள், காதல், காமம் சம்பந்தப்பட்ட பலன்களையே பெரும்பாலும் செய்வார். ரிஷபம் சுக்கிரனின் பெண் ராசி என்பதாலும் அது பற்றிய பலன்கள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும்.

விருச்சிக லக்னத்தவர்களுக்கு தனது முக்கிய காரகத்துவங்களான வீடு, வாகனம் போன்றவைகளை விட தனது தசையில் அவர் பெண்கள், காமம், உல்லாசம், கேளிக்கை, வெளிநாட்டு வேலை, அயல்தேச வாசம், பெண்களால் செலவு, முறை தவறிய போகம் ஆகிய பலன்களை அதிகமாகச் செய்வார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத் துணையின் வழியாக ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார்.

தனுசு :

தனுசு லக்னத்திற்கு நான்காமிடமாகிய மீனத்தில் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்தை சுக்கிரன் செய்வார். தனுசுக்கு ஆறு, பதினொன்றுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி இவர். ஒரு சூட்சும நிலையாக தனுசுக்கு சுக்கிரன் அவரது காரகத்துவங்களை வலிமையாகச் செய்ய வேண்டுமெனில் சுக்கிரனை விட லக்னாதிபதி குரு வலிமை பெற்றிருக்க வேண்டும்

நமது ஞானிகளால் ஜென்ம விரோதிகளாக உருவகப் படுத்தப்பட்ட கிரகங்களின் லக்னத்தில் பிறப்பவர்களுக்கு எதிரிக் கிரகங்கள் லக்னாதிபதியை விட வலுப் பெற்றால் யோகத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது.

லக்னாதிபதி குரு வலுப்பெறும் நிலையில் மட்டுமே இந்த லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம் பெற்று, திக்பலமும் பெறும் சுக்கிரன் தனது தசையில் அவரது நல்ல காரகத்துவங்களைச் செய்வார்.

இந்தக் கட்டுரைகளின் ஆரம்பத்தில் நான் சொன்னதைப் போல எதிரியின் லக்னங்களுக்கு கிரகங்கள் முழுமையான யோகம் தராது. இதுபோன்ற சிக்கலான நிலையில் ஒரு கிரகம் தனது உயிர்க் காரகத்துவத்தைக் கெடுத்து உயிரற்ற ஜடக் காரகத்துவத்தை மட்டுமே செய்யும்.

எனவே மனைவி, தாம்பத்திய சுகம், காமம் போன்ற உயிர்க் காரகத்துவத்தில் சுக்கிரன் ஏதாவது ஒரு குறையை செய்து வீடு, வாகனம் போன்ற ஜடக் காரகத்துவங்களை தருவார்.

இங்கிருக்கும் சுக்கிரனால் வசதியான. நல்ல வீடு அமையும். உயர்தர வாகனம், கல்வி, ஆரோக்கியம், தன் சுகத்திற்காக எதுவும் செய்தல், மற்றும் அம்மா வழியில் லாபங்கள், தாயைத் தெய்வமாகக் கருதுதல் போன்ற பலன்களை அளிப்பார். சில நிலைகளில் மேற்சொன்ன எல்லா வசதிகளையும் ஜாதகருக்கு அளித்து திருமண வாழ்வில் நாட்டம் இல்லாத நிலையை உண்டு பண்ணுவார்.

இந்த லக்னத்திற்கு அவர் ஆறுக்குடையவர் என்பதால் தசையின் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சில சிக்கல்களையும் ஏற்படுத்துவார். ஆனால் சுக்கிரன் இயற்கைச் சுபர் என்பதாலும் சுப காரகத்துவங்கள் உள்ளவர் என்பதாலும் பெரிதாக பாதிக்காது.

மகரம் :

மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்து மற்றும் பத்தாமிடத்திற்கு அதிபதியாகி பத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். சுக்கிரன் இயற்கைச் சுப கிரகம் என்பதால் பெருங் கேந்திரமான பத்தாமிடத்திற்குப் பதிலாக திரிகோணமான ஐந்தில் அவர் ஆட்சி பெறுவதே நன்மைகளைத் தரும்.

ஆயினும் பத்தாமிடத்தில் அவர் மாளவ்ய யோகம் தருவார் என்பதால் சினிமா, தொலைக்காட்சி, மாடலிங், டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல், டிராவல்ஸ், லாட்ஜிங், பேன்சி அயிட்டங்கள், ஆடம்பர, பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் ஜாதகரை வழி நடத்தி செல்வம் அளிப்பார்.

துலாம் சர ராசி என்பதாலும் சர ராசியில் வலுப்பெறும் கிரகங்கள் மிகப் பெரிய யோகத்தைச் செய்யும் என்பதாலும் மாளவ்ய யோகம் மகர லக்னத்திற்கு நன்கு பலன் தரும். ஆயினும் இங்கிருக்கும் சுக்கிரனுடன் சனி இணையக் கூடாது.

மகர லக்னத்திற்கு சனி லக்னாதிபதியாகி பத்தாமிடமாகிய துலாத்தில் உச்சம் பெறுவார். என்னுடைய கருத்தின்படி சனி லக்னாதிபதியே ஆனாலும் நேரடியாக உச்சம் பெற்று வலிமை பெறக் கூடாது. அவ்வாறு வலுப் பெற்றாலும் வேறுவகையில் பலவீனமாகி சூட்சும வலுதான் பெற வேண்டும்.

இங்கு பூரண வலுவுடன் உச்சமாகும் சனி, சுக்கிரன் தர இருக்கும் நல்ல பலன்களைக் கெடுப்பார். எனவே இங்கு சனி, சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலும் வக்ரம் போன்ற நிலைகள் பெற்று வலிமை இழந்து இருப்பது நல்லது.

இங்கே சுக்கிரன் திக்பலத்தை இழந்து, கேந்திராதிபத்திய தோஷம் பெறுவார். அவர் தனித்திருக்கும் நிலையில் தோஷம் வலுப் பெறும். இது நன்மைகளைத் தராது. புதனுடன் இணைத்திருப்பது நல்ல யோகம்.

பத்தாமிடத்தில் இருக்கும் போது நான்காமிடத்தை பார்வையிடுவார் என்பதால் தனது தசையில் அழகிய பெரிய வீடு, நல்ல வாகனம், சுகமான வாழ்க்கை, உயர்கல்வி, தனக்கு ஈடு கொடுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை, தாயார் வழியில் முன்னேற்றம் ஆகியவற்றை சிறப்புடன் வழங்குவார்.

கும்பம் :

கும்பத்திற்கு நான்காமிடத்தில் ஆட்சி பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். மேலும் கும்பத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியும் ஆவார்.

இந்த லக்னத்திற்கு சுக்கிரன் இரண்டில் உச்சம் பெறுவதை விட தனது பாதக ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு எட்டில் மறைந்து நான்கில் ஆட்சி பெறுவது சிறப்பான நிலைதான். மேலும் சுக்கிரன் இந்த இடத்தில் திக்பலமும் பெறுவார். இங்கிருக்கும் சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார் என்பதால் சிம்ம லக்னத்திற்கு நான் சொன்னது கும்பத்திற்கும் பொருந்தும்

நான்கில் அமரும் சுக்கிரன் பத்தாமிடத்தை தொடர்பு கொள்ளும் நிலையில் தனது தசையில் சினிமா, தொலைக்காட்சித் துறை, வீடியோ சாதனங்கள், பெண்களின் பொருட்கள், உணவுக் கூடம், துணி விற்பனை, வெண்மையான பொருட்கள், வாகனத்துறை, ஆடம்ப சொகுசுப் பொருட்கள் போன்றவற்றில் ஜாதகரை வழி நடத்தி பணக்காரராக்குவார்.

நான்காமிடத்தில் இருப்பதால் பெரிய வீடு, நல்ல வாகனம், கல்வி, ஆடம்பரமான வாழ்க்கை, தாயாரை தெய்வமாக மதித்தல் போன்ற நல்ல பலன்களை தனது தசையில் ஜாதகருக்கு அருளுவார். இங்கு யோகநிலையில் சுக்கிரன் இருந்தாலும் கும்பத்திற்குப் பாவிகளான சூரிய, சந்திர, செவ்வாய் ஆகியோரின் நட்சத்திரத்தில்தான் அவர் இருக்க முடியும். எனவே யோகத்தில் சில குறைகள் இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் சிற்றின்பப் பிரியராக இருப்பார். காமத்தில் அதிக ஈடுபாட்டுடனும் செயல்திறனுடனும் இருப்பார். பெண்கள் இவரை விரும்புவார்கள். பெண்களுக்காக எதையும் செய்வார். கிருத்திகை நட்சத்திரத்திலிருந்தால் ஏழுக்குடையவரின் சாரம் பெறுவதால் காதல், உல்லாசம், கேளிக்கை, இளமை விளையாட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார்.

மீனம் :

மீனத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். ஆயினும் இந்த லக்னத்திற்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி ஆவார்.

அஷ்டமாதிபதி லக்னத்தில் உச்சம் பெறுவது நல்லதல்ல என்றாலும் அவர் இயற்கை சுபர் என்பதால் எட்டுக்குடையவனின் கெடுதல்கள் எதுவும் இருக்காது. ஆயினும் தனுசு லக்னத்திற்கு நான் சொன்னதைப் போலவே சுக்கிரன் இங்கு உச்சம் பெற்றால் அவர் தரும் யோகத்தை முறைப்படி அனுபவிக்க லக்னாதிபதி குருவும் அதிவலு அடைந்திருக்க வேண்டும்.

லக்னத்தில் சுபர் உச்சம் பெறுவதால் இந்த அமைப்பு உள்ளவர்கள் அழகான தோற்றம் உடையவராக இருப்பார்கள். இவர்களுக்கென்று தனித்துவமான சிந்தனை இருக்கும். வேறு கிரகங்களின் பாதிப்பு இருந்தால் இவர்களின் வழி தனிவழியாக இருக்கும். இளமையில் எந்நேரமும் காதலின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பார்கள்.

தான் காதலிப்பவரின் மேல் அதீத ஈடுபாடும் வெறித்தனமான அன்பும் இருக்கும். அதனாலேயே சிக்கலான ஒத்துவராத முடிவுகளை எடுப்பார்கள். இங்கிருக்கும் சுக்கிரன் ஏழாமிடத்தை உச்சமாகிப் பார்ப்பதால் இவர்களுக்கு காம உணர்ச்சி மிகுதியாக இருக்கும். எப்போதுமே இளமையில் வரும் சுக்கிர தசை இவர்களை திசை திருப்பி விடுகிறது.

மீன லக்னத்திற்கு சுக்கிரன் தனது சுப காரகத்துவங்களைச் செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக தனது தசை, புக்திகளில் ஜாதகரை வெளிநாட்டு இனங்களில் தொடர்பு படுத்துவார். வெளிநாட்டில் அல்லது தூர இடங்களில் வேலை செய்ய வைப்பார். அயல்தேசக் குடிமகன் ஆக்குவார்.

விருந்துகள், கேளிக்கைகள் உள்ளிட்ட இளைமையின் அத்தனை பரிமாணங்களிலும் ஜாதகரை ஈடுபடுத்துவார். சொகுசு வாழ்க்கையும் தருவார். களத்திர காரகன் என்பதால் மாளவ்ய யோகம் எனும் வாழ்க்கையின் தேவைகளை திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத் துணையின் மூலமாக சுக்கிர தசையில் செய்வார்.

( நவ 16-22 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்…

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537