adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 266 (10.12.2019)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

ஏ. கார்த்திக் குமார், அல்லிநகரம்.

கேள்வி:

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாலைமலர் நாளிதழில் வெளிவந்த 180 வது கேள்வி-பதில் பகுதியில் எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு 2019 பிற்பகுதியில் கிடைக்கும் என்று துல்லியமாக பதில் கூறினீர்கள். உங்களது வாக்குப்படியே எனக்கு கடந்த மாதம் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான நியமன ஆணை கிடைத்தது. உங்களது ஜோதிடப் புலமையை எண்ணி வியக்கிறேன். நானும் பல்வேறு ஜோதிடர்களிடம் பலன் கேட்டுள்ளேன். அரசு வேலை கிடைக்கும் என்று சொன்னார்களே தவிர, எப்போது கிடைக்கும் என்று துல்லியமாகச் சொல்லவில்லை. உங்களுக்கு நிகர் நீங்களே. உங்களைப் போன்ற ஜோதிடர்கள் இருப்பதால்தான் இந்தக் கலை இன்றும் அழியாமல் இருக்கிறது. என்றும் நிலைத்தும் இருக்கும். எனது தம்பி எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறான். அவனுக்கு சொந்தமாக எலக்ட்ரானிக்ஸ் கடை வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இவனுக்கு எலக்ட்ரானிக்ஸ் கடை லாபம் தருமா? சொந்தமாக கடை எப்போது வைக்கலாம்? எனக்கு ஒரு நல்ல வழி காட்டியது போல எனது தம்பிக்கும் வழி காட்டுமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(மிதுன லக்னம், கன்னி ராசி, 4ல் சந், புத, 5ல் சூரி,சுக்,ராகு, 6ல் செவ்,குரு, 9ல் சனி, 11ல் கேது 21-10-1995 இரவு 11-30 தேனி)

தம்பிக்கு இப்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருவதாலும், ஜீவனாதிபதியான குரு ஆறில் மறைந்து செவ்வாய், சனி சம்பந்தம் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், மிதுன லக்னத்திற்கு நண்பரான சூரியன் நீச்சபங்க நிலையில், ராகுவுடன் இணைந்திருப்பதாலும் எலக்ட்ரானிக்ஸ் தொழில் ஏற்றதாகவே அமையும். வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இவருக்கு கடை அமையும். மிதுனத்திற்கு ராகு யோகத்தைச் செய்வார் என்பதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். சுபர் வீட்டில் சுபரோடு அமர்ந்த ராகு தம்பிக்கு நன்மைகளை மட்டுமே செய்வார். வாழ்த்துக்கள்.

என். கே. மூர்த்தி, கோவை-15

கேள்வி:

கடந்த மூன்று வருடங்களாக எல்லாவற்றையும் இழந்து தனிமரமாக நின்று கொண்டிருக்கிறேன். நடந்த திருமணத்தின் மூலமாகவும், அதற்கு பிறகு கிடைத்த விவாகரத்து, தந்தையின் மரணம், தொழிலில் நஷ்டம், இழப்பு, ஏமாற்றம், அவமானம், எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக இழந்து தனிமரமாக இருக்கிறேன். இப்பொழுது இருப்பது கூட எனது வயதான தாயாருக்காகத்தான். தங்களிடம் கேட்பது என்னவெனில், எப்போது நன்றாக இருப்பேன்? இழந்த நிம்மதி, சந்தோஷம், தொழிலில் முன்னேற்றம் எப்பொழுது கிடைக்கும்? கலைத்துறையில் இருக்கிறேன். சினிமா வாய்ப்புகள் வந்து வந்து கைநழுவி சென்றுகொண்டிருக்கிறது. சினிமாவில் சாதிப்பேனா? எனது வாழ்க்கையில் எப்போதுதான் சந்தோஷம், நிம்மதி கிடைக்கும்? எனது ஜாதகத்தில் அதிர்ஷ்டம் என்பதே கிடையாதா? எல்லோருக்கும் போல ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையும், கலைத்துறையில் சாதிக்கும் வாய்ப்பும் அமையுமா? தாயாரை நன்றாக வைத்துக்கொள்ள முடியுமா? எனக்கு ஒரு நல்வாக்கு தர விரும்புகிறேன்.

பதில்:

(ரிஷப லக்கினம், ரிஷப ராசி, 1ல் சந், 3ல் ராகு, 4ல் செவ், 5ல் சனி, 6ல் சூரி, புத, குரு, 8ல் சுக், 9ல் கேது, 13-11-1981 இரவு 7-40 கோவை)

யோகமான ஜாதகத்தைக் கொண்டவராக இருந்தாலும், சாதனை செய்கின்ற அமைப்புக்கு யோக தசா புக்திகள் நடக்க வேண்டும் என்பதை அடிக்கடி எழுதுகிறேன். அதேபோல அஷ்டமச் சனி நடக்கும் பொழுது, ஒரு மனிதனுக்கு வயதிற்கேற்ற கெடுபலன்கள் நடக்கும் என்பதற்கு தற்போது நீங்கள் எழுதியிருக்கும் கடிதமும் ஒரு உதாரணம்.

அஷ்டமச்சனியில் ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று நான் எழுதுகின்றேனோ, அவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நடந்ததாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதைவிட மேலாக, பிறந்த ஜாதகப்படி ஆறு, எட்டுக்குடையவர்களின் தசாபுக்தி நடக்கும் பொழுது கோட்சாரத்தில் வரும் ஜென்ம சனி, அஷ்டமச் சனி போன்றவைகள் மிகக் கடுமையான கெடுபலன்களைச் செய்யும்.

தற்போது உங்களுக்கு ரிஷப லக்னத்திற்கு வரவே கூடாத குருவின் தசை, 26 வயது முதல் 42 வயது வரை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நடுத்தர வயது பருவம்தான் ஒரு மனிதன் தொழிலில், சொந்த வாழ்க்கையில் சாதிக்கும் பருவமாக இருக்கும். நடுப் பருவத்தில் ஜாதகப்படி அவயோக தசை நடந்தால் இலட்சியத்தை அடைவதற்கு தடைகள் இருக்கும். அந்த மனிதன் தவறாக வழிநடத்தப்படுவான். அவனது எண்ணங்கள் அவனுக்குத் தேவையில்லாத ஒரு விஷயத்தில் அவனை ஈடுபடுத்தி அவனது வாழ்க்கையை தொலைக்க வைக்கும். இது கர்மாவின் அடிப்படையிலானது.

இந்த அமைப்பின்படி உங்களுக்கு எந்தத் துறை தேவையில்லாததோ, அதில்தான் வாழ்க்கையை தொலைப்பீர்கள். 42 வயதிற்கு பிறகு “சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்” என்று அதை விட்டு விலகி உங்களுக்கு தேவையான, சாப்பாடு தரக்கூடிய துறைக்கு வருவீர்கள். புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி அமர்ந்து, புத்திரகாரகன் குரு ஆறில் மறைந்து கடுமையான புத்திர தோஷம் ஏற்பட்ட ஜாதகம் உங்களுடையது. இதன்படி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நினைப்பில், திருமணத்திலும், சொந்த வாழ்க்கையிலும் அக்கறையின்றி இருப்பீர்கள். 6-8க்குடையவர்களின் பரிவர்த்தனையும் ஜாதகத்தில் இருப்பது நல்லதல்ல. 42 வயது வரை சினிமா என்பது உங்களுக்கு கானல் நீராகவே அமையும்.

நடைபெறும் குரு தசையும், அடுத்து நடக்க இருக்கும் சனி தசையும் செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் இருப்பது உங்கள் லட்சியங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமையும். தவிர லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் மறைவதால் உங்களுக்கு எதிலும் நிலையான ஒரு தன்மை இருக்காது. 42 வயதிற்கு மேல் யோகமாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. அதுவரை நீங்கள் பொறுத்துத்தான் ஆகவேண்டும். வாழ்த்துக்கள்.

ஏ. காளிமுத்து, பழனி.

கேள்வி:

எனக்கு தற்போது 79 வயது நடக்கிறது. உடல்நலக்குறைவால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மகள் வழி பேரனின் ஜாதகத்தை இணைத்திருக்கிறேன். அவனுக்கு 33 வயது ஆகிறது. இவன் பிறந்த உடனே தந்தை இறந்துவிட்டார். இன்று வரை என்னுடைய பராமரிப்பில்தான் இருந்து வருகிறான். எனக்குப் பிறகு இவனை பார்க்க யாரும் இல்லை. இவனுக்கு படிப்பிற்கேற்ற வேலை அமையவில்லை. திருமணமும் தடைபட்டுக் கொண்டே வருகிறது. இங்குள்ள ஒரு நல்ல ஜோதிடரிடம் இவனுடைய ஜாதகத்தை காண்பித்து கேட்டபோது “இந்த ஜாதகருக்கு திருமணம் செய்ய வேண்டுமா? ஏன்.. காமராசர், விவேகானந்தர் மாதிரி இருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன் இவனது தாயாரும் மரணம் அடைந்து விட்டார். எனது பேரனின் ஜாதகப்படி குரு தசை, சூரிய புக்தியில் நீங்களும் உயிருடன் இருக்க மாட்டீர்கள் என்று அந்த ஜோதிடர் சொல்லுகிறார். எனக்கு பிறகு இவனது நிலை என்ன என்பதைப் பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது. இவனது ஜாதகத்தின்படி எப்போது வேலை, திருமணம் கிடைக்கும் என்பதையும், எனக்கு இவனது குருதசை, சூரிய புக்தியில் கண்டம் ஏற்படுமா என்பதையும் தயவுசெய்து சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

இத்தனை விரிவான கடிதம் எழுதியிருக்கும் நீங்கள், பேரனது பிறந்த நேரத்தை குறிப்பிடவில்லை. உங்கள் பகுதியில் எழுதப்படும் தவறான வாக்கிய பஞ்சாங்கப்படி எழுதப்பட்ட முதல் பக்கத்தை மட்டும் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பி இருக்கிறீர்கள். பிறந்த நேரத்தை மறைத்து எழுதப்படும் வாக்கிய பஞ்சாங்க ஜாதகப்படி பலன்களை துல்லியமாக சொல்ல முடியாது எனும் நிலையில் அவனது சூரிய புக்தியில் உங்களுக்கு கண்டம் ஏற்படும் என்பது ஏற்க முடியாதது. பேரனது பிறந்த நாள், நேரம், இடம் பற்றிய விவரங்களோடு கேள்வியை மறுபடியும் அனுப்புங்கள். பதில் தருகிறேன்.

(10.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.