adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
குடிகாரனை திருமணம் செய்ய வேண்டுமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

பாண்டி முத்து, சிவகங்கை.

கேள்வி:

அன்பும் அறிவுரையும் கூறும் குருஜி அவர்களுக்கு வணக்கம். கடந்த மூன்று வருடங்களில் என்னுடைய வாழ்க்கை மிகவும் கவலையாக மாறிவிட்டது. வீட்டில் எனக்கு விருப்பமில்லாத பையனுடன் திருமணம் செய்ய வேண்டும் என்று மிகவும் வற்புறுத்துகின்றனர். நான் முடியாது என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க யாருமில்லை. அவன் முழுநேர குடிகாரன். எப்பொழுதும் குடித்துக்கொண்டே இருப்பான். ஒரு குடிகாரனை எப்படி திருமணம் செய்ய முடியும் ஐயா? இப்படி என்னுடைய பெற்றோர் வற்புறுத்துவதன் காரணம் என்ன? நான் இப்பொழுது வீட்டில் இல்லை. வெளியூரில் தங்கி வேலை செய்து கொண்டிருக்கிறேன். வீட்டிற்கு எவ்வளவு செய்தாலும் எல்லோரும் என்னை விரோதியைப் போலவே பார்க்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையை எனது விருப்பப்படி வாழ நான் விரும்புகிறேன். எனக்கு ஆன்மீகத்தில் விருப்பம் அதிகமாக உள்ளது. ஏழரைச்சனி வேறு ஆரம்பிக்க இருப்பதால் மிகுந்த பயத்துடனும், குழப்பத்துடனும் உள்ளேன் ஐயா. இன்று எனக்கு அறிமுகமான ஒரு நபர்தான் என் பிரச்சினைக்கான தீர்வு உங்களிடம் கிடைக்கும் என்று கூறினார். அதன் பிறகு இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். அறிவுரை கூறுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

பதில்:

(கன்னி லக்னம், கும்ப ராசி, 1ல் செவ், ராகு, 5ல் குரு, 6ல் சூரி, சந், புத, சுக், 7ல் சனி, கேது, 7-3-1997 இரவு 8-25 சிவகங்கை)

அம்மா... ஒரு ஜோதிடரிடம் வந்து வாழ்க்கை பற்றிய அறிவுரையைக் கேட்கும்பொழுது ஜோதிடரீதியாகத்தான் உனக்கு நான் பதில் தர முடியும். லக்னாதிபதி புதன் ஆறில் மறைந்து, அம்சத்தில் நீச்சமாகி, பூரண அமாவாசையில் பிறந்த ஜாதகம் உன்னுடையது. லக்னத்தோடு பாபர்களான செவ்வாய், சனி, ராகு மூவரும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தற்போது உனக்கு குருதசையில், சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களில் வாழ்க்கை மிகவும் கவலையாக மாறிவிட்டது என்று நீ குறிப்பிட்டிருக்கும் இந்த மூன்று வருடங்களில்தான் கடந்த பிப்ரவரி 2017 முதல் உனக்கு நீச்சனாகி, சனியுடன் பரிவர்த்தனை பெற்ற குருவின் தசை ஆரம்பித்திருக்கிறது. இந்த குரு அமாவாசை இருள் சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு ஆகியோர் கணவனைக் குறிக்கும் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்கும் நிலையில், ஒரு பெண்ணிற்கு 23 வயதில் திருமணம் செய்து வைப்பது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் விழுவதற்கு சமம். இப்போது நான் தரும் பதிலை உன்னுடைய பெற்றோரிடம் கொண்டு போய்க் காட்டு. 

அதிலும் லக்னத்திற்கு 7மிடத்தில் சனி-கேது, அதற்கு செவ்வாய் பார்வை என்றிருக்கும் நிலையில், ராசிக்கு இரண்டில் சனி, எட்டில் செவ்வாய், ராகு என்பது திருமண விஷயத்தில் மிகவும் கடுமையான பலன்களை தரக்கூடிய ஒரு அமைப்பு. இதுபோன்ற நிலை உள்ளவர்களுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைத்தால் இரண்டு திருமண அமைப்பு மற்றும் நிம்மதியற்ற வாழ்க்கை சூழல் ஆகியவை அமையும்.

கடந்த மூன்று வருடங்களாக குருவின் தசை ஆரம்பித்துவிட்டதால், குரு, அவரது காரகத்துவமான குழந்தையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், அவரே ஏழாம் அதிபதியாகி நீச்ச பரிவர்த்தனையில் இருப்பதால், திருமணம் செய்துவைத்து உன்னுடைய வாழ்க்கையைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவும் உன் பெற்றோர் மூலம் திருமண முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். எந்தக் காரணத்தைக் கொண்டும் திருமணத்திற்கு தற்போது ஒத்துக் கொள்ளாதே. அதிலும் அந்தக் குடிகாரனை திருமணம் செய்துகொள்ள கண்டிப்பாக மறுத்து விடு.

அந்தக்காலம் போல பெண்கள் ஒரு கூட்டுக்குள் அடங்கி இருக்கும் நிலைமை இப்போது இல்லை. நீங்கள் அனைவரும் நன்றாக படித்து உங்களுடைய சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்து விட்டீர்கள். ஆகவே விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை பெற்றோராக இருந்தாலும் கட்டாயமாக திருமணம் செய்து வைத்துவிட முடியாது. அதிலும் நல்லது கெட்டது தெரிந்த ஒரு 23 வயது பெண் நீ. ஆகவே உன் பெற்றோரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி உன்னுடைய திருமணத்தை தாமதப்படுத்து. 

இதனை உன் பெற்றோரின் கோணத்தில் இருந்து பார்த்தால், நீ மூத்தவளாக இருக்கலாம், உனக்கு தங்கைகள் இருக்கலாம், உன்னை கரை சேர்த்த பிறகுதான் அடுத்தவர்களை என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும் என்கின்ற ஒரு தர்மசங்கடமான நிலையில் பெற்றவர்கள் இருக்கலாம். எனவே சீக்கிரமாகவே இந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைப்பது இயல்புதான்.

ஆனால் ஜாதகப்படி உனக்கு தாமத திருமண அமைப்பு இருப்பதால் இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்பதை நீ பக்குவமாக பெற்றோரிடம் எடுத்துச் சொல். குரு, சனி பரிவர்த்தனை ஆகி, சனி சூட்சும வலுவுடன் அமைந்து, லக்னத்தோடு தொடர்பு கொண்டிருப்பதால் உனக்கு ஆன்மீக உணர்வு அதிகமாகவே இருக்கும். அதிலும் தற்போது குருவின் தசை நடந்து கொண்டிருப்பதால் உன்னால் சில ஆன்மிக சாதனைகளை செய்ய முடியும். ஆன்மீக நாட்டம் உனக்கு உயர்வைத் தரும். ஏழரைச்சனி பற்றி பயப்படுகிறாய். கும்பம், சனியின் ராசி என்பதால் அவர் கும்பத்திற்கு பெரிய சங்கடங்களை தருவது இல்லை. ஆகவே சனியைப் பற்றி பயப்படாதே.

இத்தனை அறிவுரைகளையும் உனக்கு நான் ஜோதிடரீதியாக தந்தாலும், அதனை ஏற்க முடியாமல் குழப்பங்களை உருவாக்கி கொள்ளும் ஜாதகம் உன்னுடையது. லக்னத்தோடு செவ்வாய், சனி, ராகு சம்பந்தப்பட்டிருப்பதால், இப்போது நான் சொல்லும் அறிவுரைகளை ஏற்க முடியாத சூழல் உனக்கு இருக்கும். தீர்க்கமாக சிந்தித்து, எதையும் நேர்மையோடு சந்திக்கும் இன்றைய கால பெண்களுக்கு ஒரு உதாரணமாக இரு அம்மா. வாழ்த்துக்கள்.

(10.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.