adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மகன் ஒழுக்கமாக இருப்பானா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

பவித்ரா, வத்திராயிருப்பு.

கேள்வி:

என் ஜோதிட குருவிற்கு பணிவான வணக்கங்கள். இந்த வாரம் மாலைமலர் கட்டுரையில் ராகு எட்டாமிடத்தில் சனி போன்ற பாபக் கிரகங்களுடன் இணைந்து இருந்தால் மிகவும் கெடுதலைச் செய்யும் என்று கூறியிருந்தீர்கள். என் மூத்த மகனின் ஜாதகத்தில் ராகு எட்டில் சனியுடன் இருக்கிறார். செவ்வாயின் பார்வையும் உள்ளது. அந்த ராகுவின் தசை பருவ வயதில் வருவதால் அது அவனது எதிர்காலத்தை பாதிக்குமோ என்று பயமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. அதேபோல இரண்டாவது மகனின் ஜாதகத்தில் தனுசு லக்னமாகி, சனியுடன் இணைந்த புதன் தசை பருவ வயதில் வருவதால் இருவரும் நல்ல நிலையுடன் ஒழுக்கம், நேர்மையுடன் இருக்க வேண்டுமே என்று அந்த விஷயத்தையே சிந்தித்துக் கொண்டும் குழம்பிக் கொண்டும் இருக்கிறேன். என் குரு காஞ்சி மகா பெரியவரை வணங்கி, உங்களின் நல்ல பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

பதில்:

(மூத்தவன் 13-4-2013 அதிகாலை 4-46 ஸ்ரீவில்லிபுத்தூர், இளையவன் 16-10-2014 காலை 11-10 ஸ்ரீவில்லிபுத்தூர்)

வாழ்க்கையில் எதற்குத்தான் குழம்பித் தவிக்க வேண்டும் என்பதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது. ஒரு ஆறு வயதுக் குழந்தை, அதுவும் ஆண் குழந்தை, ஒழுக்கமாக இருக்குமா என்பதை இப்போதே யோசித்துக் கொண்டிருக்கிறாய் என்றால் உன்னைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை அம்மா... இதை ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் டூ மச். மனிதனின் எதிர்காலத்தை அறியும் கலையான ஜோதிடம் ஓரளவிற்கு கைவரப் பெற்றால் வருகின்ற விளைவுதான் இது.

மகளே... ஒழுக்கம் என்பது கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆணுக்கு ஒன்றாகவும், பெண்ணுக்கு வேறு மாதிரியும், மாநிலத்திற்கு மாநிலம், தேசத்திற்கு தேசம் வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் ஒரு ஆணும் பெண்ணும் நட்புணர்வோடு பழகினால் ஏற்றுக் கொள்ள இயலாத தொட்டால்சுருங்கிகளான நாம், கேரளாவிற்கு சென்றால் பருவ வயது ஆண், பெண் குழந்தைகள் பொது இடங்களில் நட்புணர்வுடன் பேசித் திரிவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாததைப் பார்க்கலாம். நம்மில் ஒரு பகுதியான ஈழச் சமூகம் கூட ஒரு ஆணும், பெண்ணும் பருவ வயதினராக இருந்தாலும் நட்புடன் பழகுவதை ஏற்றுக் கொள்கிறது.

திருமணமே வேண்டாம், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் போதும் என்று இளைய சமுதாயம் போய்க்கொண்டிருக்கும் அமைப்பில், இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பிறகு என் மகன் ஒழுக்கமாக இருப்பானா என்பதை நீ இப்போதே சிந்தித்து கொண்டிருக்கிறாய். உண்மையைச் சொல்லப்போனால் திருமணம் என்கின்ற அமைப்பு இன்னும் 30 ஆண்டுகளுக்கு பிறகு இருக்குமா என்பதே  சந்தேகம்தான்.

யாரும் யாருடனும் எப்படியும் வாழலாம் என்கின்ற நிலையை நோக்கி, இந்திய சமூகமும், தமிழ் நாகரிகமும் போய்க் கொண்டிருக்கிறது. படிக்கக் கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. தமிழ்நாட்டு நகரங்களில் தற்போது வேகமாக பரவி வரும் கெட் டு கெதர் கலாச்சாரமும், நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் விவாகரத்து வழக்குகளுமே இதற்கு சாட்சி.

முந்தைய காலத்தைப் போல இவன்தான் என் தலையெழுத்து, இவள்தான் என் தலையெழுத்து என்று இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் ஏற்றுக்கொள்வதில்லை. பிடித்திருந்தால் பார், பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துகொள் என்றுதான் பெற்றவர்களும் அறிவுரை சொல்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே கிட்டத்தட்ட முழுமையாக முடிந்துவிட்ட ஒரு சமூக அமைப்பில், ஆறு வயது மகன் எதிர்காலத்தில் ஒரே பெண்ணுடன் ஒழுக்கமாக இருப்பானா என்று குழம்பித் தவித்துக்கொண்டிருக்கும் உன்னை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

இதிலிருந்து தெரியும் ஒரு உண்மை என்னவென்றால், இந்தக் குழந்தைகள் இருவருக்கும் தாயான நீ மகா ஒழுக்கமானவள். பெரும் பத்தினி. ஆகவேதான் தன்னைப் போலவே ஒழுக்கமானவர்களாக குழந்தைகளும் வருவார்களா என்று எதிர்பார்க்கிறாய். நல்லவேளை தாயே... நீ பெண் குழந்தைகளைப் பெறவில்லை.

உனக்கும் குறைந்தபட்ச ஜோதிட அறிவு இருக்கிறது என்று எழுதி இருப்பதால், உன் குழந்தைகளில் ஒருவன், அதீதமான பெண்கள் ஆர்வம் உள்ளவனாகவும், இன்னொருவன் பெண்களே பிடிக்காதவனாகவும் வருவான். இதில் யார் எப்படி என்பதை நீதான் உன்னுடைய ஜோதிட அறிவைக் கொண்டு கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். நன்றாக இருப்பாய் அம்மா. வாழ்த்துக்கள்.

(03.12.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.