adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
குலம் காக்கும் குலதெய்வம்…! (A-014)

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறி “அனைத்தையும் மிஞ்சிய ஆதி சக்தி ஒன்று இருக்கிறது” என்று வலியுறுத்தும் எனது உன்னத மதத்தில் ஆயிரக்கணக்கான தெய்வங்களுக்கும் பஞ்சமில்லை.

“கடந்து உள்ளே இருப்பதுதான் கடவுள்” என்று தெளிவுபடுத்தி உனக்கும் எனக்கும் உள்ளேதான் கடவுள் இருக்கிறான் என்று வேதம் போதித்த மதமும் உலகின் ஒரே மூத்தமதமான எனது இந்துமதம் மட்டும்தான்.


“நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்று பாடிய சித்தனைத் தொண்டனாகவும் “பித்தா... என்றுதானே என்னை அழைத்தாய்? அதையே முதலடியாகக் கொண்டு பாடு” என்று சொல்லி எம்மைப் பித்துப் பிடிக்கச் செய்து கொண்டிருக்கும் பித்தனைத் தலைவனாகவும் கொண்ட புண்ணியமதம் என் மதம்.

கடவுளைக் காதலனாக காதலியாக மகனாக வேலைக்காரனாக எஜமானனாக அடிமையாக அவன் இவன் என்று உரிமையுடன் உருகியும் போடா வாடா என்று ஏசியும் பேச உரிமை கொடுக்கும் ஒரே மதம் உலகிலேயே எனது மேலான மதம் மட்டும்தான்.

ஏராளமான தெய்வங்கள் இருக்கும் மதம் என்று தன்னை அறியாதவர்களால் தெளியாதவர்களால் குறை காணப்படுகிறது எனது மேலான மதம்.

அவர்களுக்கு நான் பதிலாகச் சொல்லுவது இதுதான்.

எனது குடும்பத்தைக் காக்கும் தலைமகளான ஜெயலட்சுமி எனும் என் தாய் எனக்கு அம்மாவாகவும் எனது தகப்பனுக்கு மனைவியாகவும் என் தாத்தனுக்கு மகளாவும் எனது பெரியமாமனுக்கு தங்கையாகவும் சிறியமாமனுக்கு அக்காவாகவும் என்குழந்தைகளுக்கு பாட்டியாகவும் பக்கத்துவீட்டுப் பெண்ணுக்கு தோழியாகவும் அவதாரம் எடுத்திருக்கையில் அகிலம் காக்கும் எல்லாம் வல்ல என் அன்னை அஷ்டலக்ஷ்மிகளாக அவதரித்ததில், வடிவமைக்கப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது?

உலகின் மிக மூத்த ஒரு சமூகத்தின் சிந்தனைத் தொகுப்பாக, அனைத்துப் புனித மார்க்கங்களின் மையக்கருத்தையும் ஏதோ ஒரு வடிவில் தன்னகத்தே கொண்ட உலகின் தாய்மதமான இந்த மூலமதத்தில் இந்த சிறு தெய்வவழிபாடு எப்படி வந்தது?

ஏதோ ஒரு சிந்தனையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். ரயில் வருவதைக் கவனிக்காமல் குறுக்கே கடக்கிறீர்கள். ரயில் மிக அருகே வந்துவிட்ட நிலையில் பக்கத்தில் இருக்கும் நான் உங்களை இழுத்துக் காப்பாற்றி விட்டேன்.

சுயநினைவுக்கு வந்து நடந்தது என்ன என்று உங்களுக்குப் புரிந்ததும் உங்கள் வாயில் இருந்து வரும் முதல்வார்த்தை “கடவுள்போல வந்து காப்பாற்றி விட்டீர்கள் நன்றி அய்யா” என்பதாகத்தான் இருக்கும்.

தனிமனிதனாகிய உங்களை ஒரு பெரிய துன்பத்திலிருந்து காப்பாற்றிய நான், ஒரு கணநேரம் உங்களுக்குக் கடவுளாக இருந்ததைப் போல ஒரு சமூகத்தை பெரிய துன்பங்களில் இருந்து காத்தவர்கள் ரட்சித்தவர்கள் அந்த சமூகத்திற்கு, அந்தக் குழுவிற்கு, இனத்திற்கு, அந்தக் குடும்பத்திற்குத் தெய்வமானார்கள்.

நம்முடைய மதத்தில் ஆயுதமேந்திய காவல் தெய்வங்கள், குலம் காக்கும் தெய்வங்கள் வந்த வரலாறு இதுதான்.

தனக்கு உடல் கொடுத்த, தான் இந்த பூமியில் வருவதற்குக் காரணமான முன்னோர்களை வணங்கி வழிபட வேண்டியது ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லித் தந்தது அதற்காகத்தான்.தெய்வங்களாகி விட்ட பித்ருக்களே ஒருவரின் குலத்தை வழிநடத்துகிறார்கள். ஒருவரின் குலதெய்வம் என்பது அவரது பரம்பரையின் ஆதிமுதல்வனே ஆகும். நாம், நமது தந்தை, நமது பாட்டன், முப்பாட்டன் என்ற பரம்பரைச் சங்கிலியில் முதல் கண்ணி குலதெய்வமே ஆகும்.

ஒருவரின் குலம் யாரால் உருவானதோ எவரால் தொடங்கப் பட்டதோ அந்தப் புனித ஆத்மாவையே அந்தக் குலத்தின் தெய்வமாக நாம் வணக்குகிறோம். எங்கிருந்து நமது பரம்பரை வாழத் தொடங்கியதோ அந்த இடத்தில்தான் நமது குலதெய்வக் கோவிலும் இருக்கும்.

குலதெய்வமே அனைத்து வழிபாட்டு அமைப்புக்களிலும் மேலான உச்சசக்தி. ஒருவரைக் காக்கும் உன்னத அமைப்புகளில் தலையாய முதன்மை மகாசக்தி குலதெய்வம் மட்டும்தான். ஒருவர் எத்தனை இஷ்ட தெய்வங்களை வணங்கினாலும் அது குலதெய்வ வழிபாட்டிற்கு ஈடாகாது. குலதெய்வம் ஒன்றே நம்மை அனைத்து இக்கட்டுகளிலும் இருந்து காப்பாற்றும் ஒரே உயர் பீடம்.

ஒவ்வொரு நிகழ்வின் ஆரம்பமுனையிலும் நமது மதத்தில் குலதெய்வ பிரார்த்தனையே வலியுறுத்தப் படுகிறது. குலதெய்வத்தை வழிபடாத தோஷம் இருந்தால் குலதெய்வக் குற்றம் இருந்தால் அந்தக் குடும்பத்தில் அடுக்கடுக்காக சோதனைகள் ஆரம்பிக்கின்றன. அதேபோல குலதெய்வ வழிபாட்டுக் குறைகள் இருக்கும்போது பரிகாரங்களும் பயன்தருவது இல்லை.எல்லா நாட்களும் குலதெய்வத்தை வணங்க ஏற்ற நாட்கள்தான் எனும் நிலையில் மகாசிவராத்திரியும் பங்குனி உத்திரத் திருநாளும் குலதெய்வத்தை வணங்கும் உன்னத நாட்களாக தென்மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. குலதெய்வ வழிபாடு கோடிதெய்வ வழிபாடு என்றும் ஒரு சொலவடை தமிழில் இருக்கிறது.

ஒருவருக்கு குலதெய்வ தோஷம் இருந்தால் எந்தமுயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, தடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்பஅமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரியத் தடைகள் தொடரும்.

ஜாதகத்தில் குறைகள் இல்லாத நிலையில் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்னைகளும் இருக்கின்றது என்றால் அதற்கு குலதெய்வத்தினை வழிபடாத குற்றம் காரணமாக இருக்கும். அதேபோல கிரகங்களின் நல்ல பலன்களும் முழுமையாக ஒருவருக்கு பலன் தர வேண்டுமென்றால் குலதெய்வ அனுக்கிரகம் மிக முக்கியமாகத் தேவை.

குலதெய்வ வழிபாடு குலத்துக்கு குலம் மாறுபடுகிறது.. ஒரேஜாதியில் இருப்பவர்களில் கூட குடும்பத்துக்கு குடும்பம் வழிபாட்டுமுறைகள் மாறுபடுகின்றன.

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து குலதெய்வத்தை வணங்குவதன் மூலமே அந்த மகாசக்தியின் அருளை முழுமையாகப் பெற முடியும். குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் பங்காளிகளுக்குக்கிடையில் கருத்து வேற்றுமைகள் சண்டை சச்சரவுகள் இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தனித்தனியாக பிரிந்து மூலைக்கு ஒருவராகப் பிரிந்து நின்று குலதெய்வத்தை வணங்குவது சிறிதும் பலன் தராது.

இதுபோன்ற நிலைமைகள் குடும்பத்தில் வரக்கூடாது, அண்ணன் தம்பிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதும் குலதெய்வ வழிபாட்டில் மிக முக்கியமான விஷயம் என்பதால் வருடம் ஒருமுறை குலதெய்வத்தை வணங்க வரும்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகளை அதற்கு முன்னதாகவே தீர்வு காண்பது நல்லது.

தீர்வு காண சிக்கலாக இருக்கும் பிரச்னைகளை குலதெய்வத்தின் முன் வைத்து பிரச்னைகளுக்கு உள்ளானவர்கள் அங்கே ஒன்றுகூடி குலதெய்வத்தின் அருள்வாக்கினைப் பெற்றோ அல்லது சீட்டுக் குலுக்கிப் போடுவது வெள்ளைப் பூ சிகப்புப் பூ முறைகளைப் பயன்படுத்தியோ குல தெய்வ ஆசியினால் அனைத்துப் பிரச்னைகளையும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம்.வருடம் ஒருமுறை குலதெய்வக் கோவிலுக்குச் சென்று அதற்குப் பிடித்த இச்சைப் பொருட்களைப் படையலிட்டு பொங்கலிட்டு குலதெய்வம் எனும் அந்த மகாசக்தியின் அருளைப் பெறுவதன் மூலம் நம் வாழ்வில் எவ்வித தடையும் இல்லாத முன்னேற்றங்களை ஒருவர் நிச்சயமாகப் பெற்று ஆனந்த வாழ்வு வாழமுடியும்.

(மார்ச் 22 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)