adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 264 (26.11.2019)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

எம். பாலசுப்பிரமணியம், 

சேலம்.

கேள்வி:

ஜோதிடம் மூலமாக அனைவருக்கும் வழிகாட்டும் சமூக சேவகருக்கு வணக்கம். என் மனைவியின் தங்கை ஜாதகத்தை கேட்டு பல வரங்கள் வருகின்றன. குறிப்பாக என் மாமனாரின் சொந்தக்காரப் பையன் ஒருவர் பலமுறை பெண் கேட்டு வருகிறார். இவர்கள் இருவரின் ஜாதகத்தையும் உள்ளூரில் உள்ள ஐந்து ஜோதிடர்களுக்கு மேலாக பொருத்தம் பார்த்து விட்டோம். குழப்பம்தான் வந்ததே ஒழிய தீர்வு கிடைக்கவில்லை. எனது திருமணம் எப்போது நடக்கும் என்று மிகத்துல்லியமாக  கூறியவர் அல்லவா நீங்கள்? தங்களையே ஜோதிட சுப்ரீம் கோர்ட்டாக நினைத்து இருவரையும் இணைக்கலாமா வேண்டாமா என்ற நல்ல தீர்ப்பை தருமாறு விண்ணப்பிக்கிறோம்.

பதில்:

பெண்ணிற்கு விருச்சிக லக்னமாகி வரும் டிசம்பரில் குரு தசை ஆரம்பிப்பதாலும், ஆணிற்கு கடக லக்னமாகி சந்திர தசையில் சனி புக்தி அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகே ஆரம்பிக்க உள்ளதாலும் இவர்கள் இருவருக்கும் 2020 பிற்பகுதி அல்லது 2021 ஆரம்பத்தில் திருமணம் செய்து வைக்கலாம். வாழ்த்துக்கள்.

முரு.முருகப்பன், சிவகங்கை.

கேள்வி:

என் மகன் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக ஹாஸ்டலில் தங்கியிருந்த நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பு தலைவலிக்கு மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய அரசால் தடை செய்யப்பட மாத்திரையை சாப்பிட்டு, பெட்டிலிருந்து தடுமாறி கீழே விழுந்து உணர்வற்ற நிலையில் 108 ஆம்புலன்சு மூலம் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மறுபிறவி எடுத்திருக்கிறார். உடன் இருந்த நண்பர்களும், ஹாஸ்டல் ஓனரும் அவன் இறந்து விட்டான் என்றே நினைத்து விட்டார்கள்.

தற்போது முழு உடல் பரிசோதனை செய்து பார்த்ததில் உடம்பில் எந்தக் குறையும் இல்லை என்று டாக்டர்கள் உறுதி செய்தாலும், தான் இறந்து விடுவோமோ என்ற பயம் மகனுக்கு ஒரு வருடத்திற்கு மேல் இருந்தது. கவுன்சிலிங் மூலம் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார். இதற்கு என்ன காரணம்? இரண்டு முறை ஐஏஎஸ் தேர்வு,  இரண்டு முறை அசிஸ்டன்ட் கமாண்டன்ட் தேர்வு, இரண்டு முறை வங்கித் தேர்வு எழுதியும், முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்ற நிலையில் மெயின் தேர்வுக்கு போக முடியவில்லை. தற்போதும் அரசுத் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் என் மகனுக்கு அரசு உயர் பதவி கிடைக்குமா?

பதில்:

(மீன லக்னம், கடக ராசி, 1ல் சூரி, புத, 2ல் கேது, 5ல் சந், செவ், 8ல் ராகு, 9ல் குரு, 12ல் சுக், சனி, 10-4-1995 அதிகாலை 5-29 காரைக்குடி)

மகனுக்கு லக்னத்தில் இருக்கும் நீச்ச புதனுடன் இணைந்த சூரியனை, ஒன்பதில் உள்ள குரு பார்த்து சூரியன் ஓரளவு சுபத்துவமான ஜாதகம். அதேபோல் ராஜ ராசியான சிம்மத்தை சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமான சனியும் பார்க்கிறார். மகனுக்கு கெடுதல் நடந்ததாக நீங்கள் சொன்ன காலகட்டத்தில் அவருக்கு கேது தசையில் குரு புக்தி நடந்து கொண்டிருந்தது. தசாநாதனும், புக்தி நாதனும் ஆறு, எட்டு  எனப்படும் சஷ்டாஷ்டகமாக இருக்கும் நிலைகளில் ஜாதகருக்கு நல்ல பலன்கள் நடப்பதில்லை. மேலும் லக்னாதிபதி குரு நீச்சனின் சாரத்திலும், கேது நீச்சனின் வீட்டிலும் இருப்பது குற்றம்.

அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பதற்கு லக்னம், ராசி இரண்டின் பத்தாம் அதிபதிகள் வலுவாக இருக்க வேண்டும். இங்கே லக்னத்திற்கு 10-க்குடையவர் அம்சத்தில் நீச்சமாக இருக்க, ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்திருப்பது பலவீனம். அதைவிட மேலாக அடுத்து நடக்க இருக்கும் அஷ்டமாதிபதி சுக்கிரனின் தசை, மீன லக்னத்திற்கு நன்மைகள் நடப்பதற்கு தடை செய்யும். மகனின் ஜாதகப்படி அரசில் உயர்பதவி வகிக்கும் அமைப்பு இல்லை. ஐஏஎஸ் தேர்வு தவிர மற்ற மத்திய அரசுத் தேர்வு எழுதச் சொல்லுங்கள். வாழ்த்துக்கள்.

ஆனந்தன், வேலூர்.

கேள்வி:

குருஜி அவர்களுக்கு வணக்கம். இது நான் எழுதும் 17ஆவது கடிதம். இந்த முறையாவது பதில் வரும் என்று நம்புகிறேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது? காய்கறி வியாபாரம் செய்கிறேன். வேறு என்ன தொழில் செய்யலாம்? தீவிர அரசியலில் ஈடுபடலாமா? கைகொடுக்குமா? வரும் செவ்வாய் தசை எப்படி உள்ளது?

பதில்:

(விருச்சிக லக்னம், தனுசு ராசி, 1ல் குரு, கேது, 2ல் சந், 7ல் ராகு, 9ல் சுக், செவ், 10ல் சூரி, புத, 12ல் சனி, 15-9-1983 காலை 10-40 வேலூர்)

மாலைமலருக்கு தொடர்ந்து விடாமல் கடிதங்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்குப் பதிலாக உங்கள் ஊரிலேயே இருக்கும் நல்ல அனுபவமுள்ள ஜோதிடரை அணுகி விரிவான பலன்களைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.

உங்கள் ஜாதகப்படி ஜீவனாதிபதி சூரியன் திக்பலமாக சிம்மத்தில் இருந்தாலும், அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்து, நவாம்சத்தில் சனியின் சேர்க்கை பெற்றுள்ளதால் உங்களுக்கு அரசு வேலை அமைப்பு இல்லை. அதே நேரத்தில் அரசியலில் ஈடுபடலாம். அதனால் உங்களுக்கு லாபங்கள் இருக்கும்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் சந்திர தசை, சுக்கிர புக்தியில் அடுத்த வருட இறுதிக்குள் உங்களுக்கு திருமணம் நடக்கும். சுறுசுறுப்பாக பெண் பாருங்கள். செவ்வாயின் காரகத்துவங்களில் உங்களுக்கு தொழில் அமைந்தால் லாபம் தரும். அது மிகவும் சிறப்பானதாகவும் இருக்கும். காய்கறி வியாபாரம் பாக்கியாதிபதி சந்திரனுடையது என்பதால் லாபம் தரும் என்றாலும், சேமிக்கும் அளவிற்கு பெருத்த வருமானங்களைத் தராது.

செவ்வாயின் காரகத்துவங்களான சிகப்பு நிறம், ரியல் எஸ்டேட், கட்டிடம், கல், மண், கிரஷர் போன்றவைகளில் எது உங்களுக்கு தெரிந்த தொழிலோ அதை அமைத்துக் கொள்ளவும். அடுத்து வர இருக்கும் செவ்வாய் தசை நீச்சமாக இருந்தாலும், சுக்கிரனின் இணைவில், குருவின் பார்வையில் சுபத்துவ அமைப்பில் இருப்பதால், நல்ல யோகங்களைச் செய்யும். வாழ்த்துக்கள்.

எஸ்.பி. பச்சையா, கோவில்பட்டி

கேள்வி:

எந்த ஒரு ஜோதிடரிடம் சென்றாலும் ஐப்பசி மாதத்தில் பிறந்துள்ளதால் சூரியன் நீச்சம் பெறுகிறார் என்றும் அதனால் ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகளைச் சந்திப்பார் என்றும் சுற்றித் திரியும் பிரியம் கொண்டவர் என்றும் அலைச்சலுக்கு என்றே பிறந்தவர் என்றும் திருமணம் இவருக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். ஒரு பக்கம் கடன் தொல்லையும் மறுபக்கம் வேலை எதுவும் இல்லாமலும் மிகவும் கஷ்டப்படுகிறேன். தாங்கள் எனக்கு திருமணம் ஆவதற்கு ஏதேனும் பரிகாரமும், கடன் தொல்லையிலிருந்து நீங்கி நிலையான தொழில் ஏற்படுவதற்கு வழிபாடுகளையும் சொல்லவும்.

பதில்:

(துலாம் லக்னம், மீன ராசி, 1ல் சூரி, புத, சுக், செவ், 2ல் ராகு, 5ல் குரு, 6-ல் சந், 8ல் கேது, 9ல் சனி,  28-10-1974 காலை 6- 55 கோவில்பட்டி)

ஒரு ஜாதகத்தில் ராகு நல்ல நிலைமையில் இல்லாமல் அதனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகங்களின் தசை வருமாயின் நன்மைகள் இருக்காது. தசாநாதனுக்கு ராகு சாரம் கொடுத்தால், அவர் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் போன்ற நல்ல வீடுகளில், சுபர் பார்வையில் அல்லது சுபரின் வீடுகளில் சுபத்துவமான நிலையில் இருந்தால் மட்டுமே தசாநாதனான கிரகம் நன்மைகளைத் தரும்.

உங்கள் ஜாதகப்படி தாம்பத்திய சுகத்தை கொடுக்கும் சுக்கிரனும், புத்திர பாக்கியத்தை கொடுக்கும் குருவும் முறையே சுவாதி மற்றும் சதயம் எனும் ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். ராகு இங்கே அவருக்கு ஆகாத வீடான விருச்சிகத்தில் இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால் நவாம்சத்தில் சுக்கிரனுடன் இணைந்து குருவின் வீட்டில் இருக்கிறார். இதுபோன்ற நிலையில் சுக்கிர தசை தனக்குரிய காரகத்துவங்களை முழுமையாக தருவதற்கு வாய்ப்பில்லை. எனவேதான் உங்களுக்கு 45 வயதாகியும் இன்னும் திருமணமும், புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. அதோடு சுக்கிரனும் செவ்வாயும் இரண்டு டிகிரிக்குள் இணைந்திருப்பதும் குற்றம்.

சூரியன் நீச்சமாக இருந்தாலும் சுக்கிரன் இணைவால் நீச்சபங்கத்தையும், குருவின் பார்வையால் சுபத்துவமும் அடைந்திருக்கிறார். ஆகவே உங்களது கடன் மற்றும் சிக்கல்களுக்கு சென்ற முறை நடந்த சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த கேதுவின் தசையும், தற்போது நடந்து கொண்டிருக்கும் சுக்கிரனின் தசைதான் காரணம்.

தசாநாதன் ராகுவின் சம்பந்தம் பெற்று ராகு இரண்டாம் இடத்தில் இருப்பதால் உங்களது ஜென்ம நட்சத்திர நாளுக்கு முதல்நாள் மாலையே ஸ்ரீகாளகஸ்தி சென்று ஓர் இரவு தங்கி அதிகாலை நடக்கும் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளுங்கள். இன்னொரு ஜென்ம நட்சத்திர நாளன்று ஸ்ரீரங்கத்திற்கு சென்று கோவிலின் உள்ளே குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் இருந்து வழிபடுங்கள். ஒரு வெள்ளிக்கிழமை கும்பகோணம் கஞ்சனூர் சென்று வாருங்கள்.

மிக முக்கியமாக சுக்கிர தோஷம் எனப்படும் தாம்பத்திய சுகம் கிடைக்காத குறை விலக 20 வாரம் வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்பொழுது சிறிது வெள்ளை மொச்சையை தலைக்கடியில் வைத்து படுத்து, 20 பொட்டலம் சேர்த்து, கடைசி வாரம் அனைத்தையும் மொத்தமாக சேர்த்து ஒரே பொட்டலமாக கட்டி, நிற்கும் நீரான கிணறு அல்லது குளத்தில் போடுங்கள். அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் சுக்கிர தசை செவ்வாய் புக்தியில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். கடன்களும் அதன் பிறகு படிப்படியாக குறையும். வாழ்த்துக்கள்.

(26.11.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.