ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
கடகம் :
கடகத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்று குரு ஹம்ச யோகம் தருவார். மேலும் இங்கே குரு திக்பலமும் பெறுவார். பொதுவாக குரு பலம் பெற்று லக்னத்தோடு சம்பந்தம் பெற்றாலே ஜாதகர் நல்ல எண்ணம், நல்ல நடத்தை, கருணை உள்ளம் போன்ற குணங்களோடு இருப்பார்.
லக்னத்தில் குரு சுப பலம் பெற்றால் ஜாதகர் நல்லவராக இருந்து, இந்த உலகத்தையும் “எல்லாமே நல்லவை” “எல்லோரும் நல்லவர்” என்ற குளிர் கண்ணாடி அணிந்தபடி பார்ப்பதால், தன்னைப் போலவே மற்றவர்களையும் நல்லவன் என்று நம்பி எளிதாக ஏமாறுவார்.
பிறர் பார்வையில் இவர்கள் இளிச்சவாயர்கள் என தென்படுவார்கள். இது ஒன்றே இந்த அமைப்பின் பலவீனம். இறுதியில் உண்மையே வெல்லும் என்பது வேறு விஷயம்.
மற்றபடி லக்னத்தில் வலிமை பெற்று ஹம்ச யோகம் தரும் குரு தனது சுப பார்வையால் ஐந்து, ஏழு, ஒன்பதாமிடங்களைப் பார்ப்பார் என்பதால் நல்ல அறிவும், அதிர்ஷ்டமும் உள்ள குழந்தைகளும், தன்னோடு ஒத்துப் போகும் வாழ்க்கைத் துணையும், வலிமையான பொருளாதார மேம்பாடும் குரு தசையில் கிடைக்கப் பெறும்.
லக்னாதிபதியான சந்திரன் ஏழாமிடத்தில் இருந்து குருவைப் பார்த்தால் குருவின் பொலிவு இன்னும் அதிகமாகும். இது கஜகேசரி யோகமாகும். இந்த அமைப்பால் ஜாதகருக்கு சமுதாயத்தில் கவுரவம் கிடைக்கும். மதிப்பானவராக இருப்பார்.
லக்னத்திலேயே குருவுடன் சந்திரன் இணைவதும் நல்ல அமைப்புத்தான். இதற்கு குருச் சந்திர யோகம் என்று பெயர். சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை அமைப்புகளைப் பொருத்து இந்த யோகத்தின் பலன்கள் இருக்கும். சந்திர சேர்க்கையின் மூலம் குரு தரும் ஹம்ச யோகத்தின் சுபத் தன்மை இன்னும் அதிகரிக்கும். ஜாதகருக்கு சந்திர மற்றும் குரு தசையில் வயதுக்கு ஏற்றபடி அனைத்து பாக்கியங்களும் உண்டு.
அதேநேரத்தில் இங்கு உச்சமாகும் குருவுடன் நீச செவ்வாய் இணைவது யோகத்தை முற்றிலும் பயனற்றதாக்கும். செவ்வாயின் இணைவால் தனது உச்ச பலனை நீசனுக்கு அளித்து செவ்வாயை வலுவாக்கி குரு வலுவிழப்பார்.
கன்னி :
கன்னி உபய லக்னம் என்பதால் நான்கு ஏழாமிடங்களான தனுசு, மீனத்தில் குரு ஆட்சி பெறுவார்.
கன்னிக்கு குருவின் ஆட்சி வீடான மீனம் ஏழாமிடமாகி, பாதக ஸ்தானம் என்ற அமைப்பு பெறுவதாலும், குரு பாதகாதிபதி என்பதாலும், ஏழில் குரு தனித்து ஆட்சி பெற்றால் ஹம்ச யோகம் பலனளிக்காது.
குரு தனித்திருந்து எவர் பார்வையும், இணைவும் பெறாமல் முழு சுபத்துவத்துடன், கேந்திராதிபத்திய தோஷமும் பெற்று இங்கிருக்கும் நிலையில் தனது தசையில் ஜாதகரின் மண வாழ்க்கையில் அமைதியற்ற நிலையைக் கொடுப்பார். சில நிலைகளில் மண வாழ்வில் கெடுபலன்கள் இருக்கும்.
ராகுதசையில் அமைதியான நல்ல வாழ்க்கையைப் பெற்றிருந்த கன்னி லக்னத்தவர்கள் கூட தனித்த ஏழாமிட குருவின் தசை ஆரம்பித்ததும், மண வாழ்வு சிதைந்து போன எத்தனையோ ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே குருவின் தனித்த ஏழாமிட ஆட்சி பலம் பாதகம் செய்து கெடுக்கவே செய்யும்.
ஆனால் இங்கிருந்து குரு லாப ஸ்தானத்தையும், லக்னத்தையும் சகாய ஸ்தானத்தையும் பார்ப்பதால் மேற்படி இடங்கள் வலுப் பெறும். ஜாதகர் அந்தஸ்தான வாழ்க்கை, தைரியம், எதிலும் லாபம் போன்ற பலன்கள் அடையப் பெற்றிருப்பார்.
குரு தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களைப் பலப்படுத்துவார் என்பதால் வலுவான நிலையில் இருக்கும் குரு பாதகாதிபத்தியமும், கேந்திராதிபத்திய தோஷமும் பெற்றிருந்தாலும் கூட அவரது பார்வை படும் இடங்கள் மூலம் ஜாதகருக்கு நன்மைகள் இருக்கும்.
பாதகாதிபதி இருக்கும் இடம்தான் பலவீனமாகுமே தவிர பார்க்கும் இடமல்ல. எனவே அவர் என்னதான் தோஷ அமைப்பில் இருந்தாலும் ஏழாமிடத்தில் இருக்கும் போது தனது வலுவான பார்வையால் லக்னத்தைப் பார்ப்பார் என்பதால் ஜாதகர் அந்தஸ்து, கவுரவத்துடன் வாழும் அமைப்பைக் குரு தருவார்.
நான்காமிடமான தனுசில் குரு ஆட்சி பெற்றிருப்பின், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டாலும், அழகான வீடு, வாகனம், உயர்கல்வி, சுகம், தாயார் வழியில் நல்ல பலன்கள், நல்ல பதவி அல்லது நிரந்தரத் தொழில் ஆகியவற்றைத் தன் தசையில் குறைவின்றித் தருவார். ஆயினும், கேந்திராதிபத்திய தோஷத்தினால் அனைத்திலும் ஏதேனும் ஒரு குறையை வைப்பார்.
துலாம் :
துலாம் லக்னத்திற்கு குரு ஆதிபத்திய விசேஷமின்றி, உபசய ஸ்தானமும், கேந்திரமுமான பத்தாமிடத்தில் உச்சம் பெற்று ஹம்ச யோகம் தருவார்.
இந்த இடத்தில உச்சம் பெறும் குரு பாபத்துவம் பெறாமல் இருந்தால் ஜாதகரை அரச அடிமையாக, கௌரவமான பதவியில் அதாவது ஐ.ஏ.எஸ், வருமான வரித் துறை, வங்கிகளில் உயர் பதவி, தனியார் துறையில் நிர்வாக இயக்குநர் போன்ற உயர் பதவிகளில் வைத்திருப்பார்.
பொதுவாக துலாம் லக்னத்திற்கு குரு கொடிய பாவி என்பதால் பதினொன்றாமிடத்தைத் தவிர (ஆறாமிடத்திற்கு ஆறில் மறைந்து) அவர் வேறு எங்கு இருப்பினும் நல்லதல்ல. ஆறாமிடத்திற்கு குரு அதிபதியாகி பத்தில் உச்சம் பெற்று ஆறாமிடத்தைப் பார்ப்பதால், என்னதான் பணம், கௌரவம் ஆகியவற்றைத் தந்தாலும் கூடவே தசை முழுவதும் ஏதாவது ஒருவகையில் தலைவலியையும் தருவார்.
சில நிலைகளில் உச்சம் பெற்ற குரு அவரது தசையில் ஜாதகரை மோசடியில் சம்பந்தப்படுத்தி சிறைக்கு அனுப்புவார். பொதுவாக இங்கிருக்கும் குருவால் நிம்மதியற்ற நிலை இருக்கும். இந்த லக்னத்திற்கு குரு சகாய ஸ்தானாதிபதியாகவும் ஆவதால் பிறருக்கு உதவி செய்து அதன் மூலம் சிக்கலுக்கு ஆளாகும் அமைப்பையும் தருவார்.
தனுசு :
தனுசிற்கு குரு லக்னாதிபதியாகவும், நான்காமிட சுகாதிபதியாகவும் ஆவதால் முழுமையான ஹம்ச யோகம் கிடைக்கும்.
லக்னத்தில் குரு ஆட்சி பெறும் நிலையில் திக்பலமும் பெறுவார். இந்த இடத்தில் பாக்யாதிபதி சூரியனின் உத்திராடம் ஒன்றாம் பாதத்தில் அமர்ந்தால் வர்க்கோத்தமும் பெற்று இன்னும் வலுவாகி தனது தசையில் ஜாதகரை குபேரனும், நல்ல குணவானும் ஆக்குவார்.
அருமையான வாழ்க்கைத் துணை, அற்புதமான குழந்தைகள், கௌரவமான வழியில் நீடித்த வருமானம் உள்ளிட்ட உலகின் நியாயமான இன்பங்கள் அனைத்தும் முறையான வழிகளில் லக்ன குருவால் ஜாதகருக்கு கிடைக்கும். குருவின் காரகத்துவங்கள் வழியான நன்மைகள் முழுமையாக இங்கே உண்டு.
லக்னத்தில் குரு வலுப்பெறும் நிலையில் இந்த லக்னத்தின் எதிர்த்தன்மையுடைய கிரகங்களான சுக்கிரன், சனி, புதன் ஆகியோருடன் இணையக்கூடாது. அதுபோலவே நிழல் கிரகமான ராகுவின் சேர்க்கையும் குருவிற்கு இருக்கக் கூடாது. மேற்சொன்ன அமைப்புகள் யோகத்தை நீர்த்துப் போகச் செய்யும்.
நான்காமிட மீனத்தில் குரு ஆட்சி பெறுவது சிறிது கேந்திராதிபத்திய தோஷம் எனினும், குருவே லக்னாதிபதியும் ஆவதால் பெரிதாகப் பாதிக்காது. உயர் படிப்பு, குறைவற்ற செல்வம், தாயார் வழி நன்மை, அன்பு, நல்ல இல்லம், நற்பண்பு ஆகியவற்றை ஜாதகருக்குக் குரு தருவார்.
இங்கு பலம் பெறும் குரு பத்தாமிடத்தைப் பார்ப்பார் என்பதால் நிலையான வேலை, தொழில், ஜீவனாதிபதியான புதனின் காரகத்துவங்களில் அமையும். ஜாதகர் ஒரு பிறவி ஜீனியஸாக இருப்பார். புதன் வலுக் குறைந்திருந்தால் குருவின் காரகத்துவங்களான வங்கி, சொல்லிக் கொடுத்தல், மருத்துவம், நீதித்துறை போன்ற துறைகளும் அமையும்.
மகரம் :
மகரத்திற்கு குரு மூன்று, பனிரெண்டுக்கு அதிபதியாகி, ஆதிபத்திய விஷேசமற்ற அசுபர் ஆவார்.
அவர் விரயாதிபதியாக ஏழாமிடத்தில் உச்சம் பெற்று ஹம்ச யோகம் தருவது குருவின் காரகத்துவங்களான பணம், புத்திரர்களைத் தந்தாலும் திருமண வாழ்வைப் பாதிக்கும். இதுபோன்ற அமைப்பில் ஏழுக்கதிபதி சந்திரன் வலுக் குறைந்திருந்தால் தாமத திருமணம் அல்லது முதல் துணையை விரயம் செய்து இரண்டாம் திருமணம் என்ற நிலையை ஏற்படுத்துவார்.
மேலும் குரு, சகாய ஸ்தானாதிபதியும் ஆவதால் ஜாதகர் குரு தசையில் அடுத்தவர்களுக்கு உதவி (சகாயம்) செய்து தன் செல்வ நிலையை அழித்துக் கொள்வார். அதேநேரம் ஜாதகர் எதிர்பாலினத்தவருக்குப் பிரியமானவராகவும், நல்லவராகவும், தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம், ஈடுபாடு, செயல்திறன் உள்ளவராகவும், மன தைரியம் உடையவராகவும் இருப்பார்.
மீனம் :
மீனத்திற்கு குரு லக்னத்திற்கும், ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்திற்கும் அதிபதி ஆவதால் இரண்டில் எந்த இடத்தில் ஆட்சி பெற்றாலும் நல்லதுதான். ஹம்ச யோகம் முழுமையாகக் கிடைக்கும்.
லக்னத்தில் குரு திக்பலமுடன் இருந்தால் நல்ல மனைவி, குழந்தைகள் அமைவார்கள். அறப் பணிகளிலும், ஆன்மீகத்திலும் ஈடுபாடு இருக்கும். சூட்சும அறிவுள்ளவராக இருப்பார். எதிலும் முறையான செய்கைகள் உடையவராகவும் இருப்பார். குரு தசையில் சகல பாக்கியங்களையும் அனுபவிப்பார்.
பத்தாமிடமான தனுசு குருவின் மூலத்திரிகோண வீடாகவும், உபய நெருப்பு ராசியாகவும் அமைவதால் இங்கே குரு ஆட்சி பெறுவது கேந்திராதிபத்திய தோஷத்தை சிறிது அளித்தாலும், தொழில், வியாபார வகையில் குரு தசையில் முழுமையான ஹம்ச யோகம் கிடைக்கும்.
அன்றாடம் பயன்பட்டு அழியும் பொருட்கள், வங்கித் தொழில், வட்டிக்கு விடுதல், பைனான்ஸ், சிட்பண்டு, ஜுவல்லரி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஆன்மீகத் துறை, சொல்லிக் கொடுத்தல் போன்றவற்றில் மிகப் பெரிய லாபம் கிடைக்கும். இந்த அமைப்பால் மிகவும் நேர்மையான நீதிபதி ஆகலாம். சூரியனும் வலுவாக இருந்தால் அரசுத் துறையில் பெரிய அதிகாரியாகலாம். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட துறைகளிலும் ஜாதகரை ஈடுபட வைத்து பெரும் பொருள் தருவார் தனுசு குரு.
( அக் 30.10.2011 திரிசக்தி ஜோதிட வார இதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்…
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537