ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
ப. பொன்தரன், யாழ்ப்பாணம்.
கேள்வி:
திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. இறைவன் இன்னமும் எங்களுக்கு வாரிசை தரவில்லை. குறிப்பும் பார்த்து களைத்து விட்டோம். எல்லா நேர்த்தியும் செய்துவிட்டோம். தூக்குக் காவடி எடுப்பதாக நேர்ந்து அதுவும் எடுத்துவிட்டேன். பணச்செலவும் மன உளைச்சலும்தான் எஞ்சியது. பலன் கிடைக்கவில்லை. எனக்கு மூன்று தம்பிமார்கள் திருமணம் செய்து பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள். நான் மூத்தவன். எனக்கு எந்த நல்லவையும் நடக்குதில்லை. வீட்டில் நடக்கும் நன்மை தீமைகளுக்கு நான் ஒதுக்கப்பட்டவனாக இருக்கிறேன். எனக்கு எப்போது குழந்தை பலன் உண்டு? தனியார் கம்பெனியில் திருத்துனராக பணியாற்றி வருகிறேன். எனக்கு அரச தொழில் கிடைக்க பலன் உண்டா? மனைவிக்கு சிறுவயதிலிருந்தே கார் வாங்க வேண்டும் என்ற கனவு உண்டு. வாரிசும் இல்லை, வாழ்க்கையும் நன்றாக இல்லை, இப்படி இருந்து எதற்கு உழைத்து என்ன செய்வது? யாருக்காக இருவரும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்? கடன் எடுத்து கார் வாங்கி நாலு இடத்திற்குப் போய் வருவோம், அந்த மனநிறைவென்றாலும் கிடைக்கட்டும் என்று மனைவி கூறுகிறார். என்ன செய்வதென்று புரியவில்லை. குழந்தை பாக்கியம், அரச தொழில், வாகனயோகம் எனக்கு உண்டா?
பதில்:
(ஆண் 25-2-1982 இரவு 9-58 யாழ்ப்பாணம், பெண் 21- 2- 1988 இரவு 11-23 யாழ்ப்பாணம்)
கணவன்-மனைவி இருவருக்குமே துலா லக்னமாகி, ஐந்தில் சூரியன் அமர்ந்த ஜாதகம். புத்திரதோஷம் எனும் குழந்தை பாக்கியம் முழுவதுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது என்றால், அவரது ஜாதகப்படி ஐந்தாம் பாவகம், அதன் அதிபதி, புத்திரகாரகன் குரு ஆகிய மூவரும் செவ்வாய், சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு பலவீனமாக இருக்க வேண்டும். அந்த அமைப்பு உங்களுக்கு இல்லை. எனவே உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் உண்டு.
உங்கள் ஜாதகப்படி லக்னத்தில் திக்பலமாக இருக்கும் குரு, ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதாலும், மனைவியின் ஜாதகப்படி மூன்று ஏழாம் இடங்களில் குரு, செவ்வாய் பரிவர்த்தனை இருப்பதாலும், வரும் 2021ம் ஆண்டு எட்டாவது மாதத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தை உங்கள் கையில் இருக்கும்.
துலாம் லக்னத்திற்கு குருவின் வீட்டில் இருக்கும் கிரகங்கள் பெரும்பாலும் நன்மைகளைத் தருவதில்லை. தற்போது நடைபெறும் தசையின் நாதன் கேது, குருவின் வீட்டில் இருப்பதால், இது உங்களுக்கு மனஉளைச்சலையும், சோர்வையும் தரும். கேதுவிற்கு பிறகு வரும் சுக்கிரனின் தசை, சுக்கிரன் நான்காமிடத்தில் திக்பலமாகி, பாக்கியாதிபதி புதனுடன் இணைந்து, அம்சத்தில் அதிநட்பு வீட்டில் இருப்பதால், வீடு, வாகனத்துடன் பெண் குழந்தையுடன் இருக்கும் யோகத்தையும் தரும்.
சூரியனைக் குரு பார்த்து, அந்த சூரியன் சிம்மத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு அரசு வேலை உண்டு. ஆனால் இன்னும் ஒரு வருடத்திற்கு வாய்ப்பில்லை. இலங்கையின் சட்ட திட்டப்படி, உங்களுக்கு அரசு சார்ந்த வேலை அமைப்பு அடுத்த வருடம் கிடைக்கும். வரும் 2021 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும். 40 வயதில் ஆரம்பிக்கும் சுக்கிரதசை மிகுந்த நன்மைகளை உங்களுக்குச் செய்யும். அதுவரை பொறுத்திருக்கவும். வாழ்க்கையின் பிற்பகுதியில் மிகவும் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
ஆர். பாலச்சந்திரன், கோவை.
கேள்வி:
கடந்த மூன்று வருடங்களாக மாலைமலரில் தங்களின் கேள்வி-பதில், ராசிபலன்களை படிக்கும் தீவிர வாசகன் நான். ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு பிரச்சினைகள் மற்றும் அதற்கு நீங்கள் தரும் விளக்கங்கள், பரிகாரங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. என்னுடைய ஜாதகத்தில், அடிப்படையிலேயே எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது.
என் தகப்பனார் நான் பிறந்தபோது எனக்கு ஜாதகம் எழுதி வைத்திருக்கிறார். அந்தக் குறிப்பில் எனது பிறந்த நேரத்தை நேரடியாக எழுதாமல் நாழிகை வினாடியாக ஜோசியர் எழுதியிருக்கிறார். என்னுடைய பிறந்த நேரம் அதில் இல்லை. ஆனால் அதை வைத்து நான் தோராயமாக நான்கு மணி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
சுமார் 22 ஆண்டுகளாக நான் வெளிநாட்டில் நன்றாக பணியாற்றி நன்மதிப்பை பெற்று இருந்தேன். கடந்த 2016 ஆம் ஆண்டு என்னுடைய தவறான பழக்கத்தினால் வேலை பறிபோனது. அதற்கு முன் நான் ஜோதிடம் பார்த்ததில்லை. வேலை இழந்த பிறகு ஜோதிடர்களை பார்த்தேன். அவர்கள் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு என்னுடைய லக்னம் தவறாக இருப்பதாகவும், நான் கடகலக்னம் இல்லை, மிதுனலக்னம் தான் என்றும் கூறினார்கள். அவர்கள் சொன்ன பரிகாரத்தைச் செய்தும் இன்னும் எனக்கு வேலை சரிவர அமையவில்லை. குருஜி அவர்கள் எனது பிறந்த நேரம் என்ன? எனது லக்னம் மிதுனமா, கடகமா? எனக்கு வெளிநாட்டில் மீண்டும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா? கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டு லாட்டரி சீட்டு வாங்கி கொண்டிருக்கிறேன். பரிசு விழும் அதிர்ஷ்டம் இருக்கிறதா என்பதை விளக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:
(மிதுன லக்னம், கன்னி ராசி, 4ல் சந், குரு, கேது, 5ல் செவ், 8ல் சூரி, புத, 10ல் சுக், சனி, ராகு, 6-2-1969 மாலை சுமார் 4 மணி, கோவை)
உங்களது பிறந்த ஜாதகத்தை எழுதிய ஜோதிடர் லக்னத்தை கடகம் என்று தவறாகவே கணித்திருக்கிறார். மிதுனலக்னம் முடிவதற்கு இன்னும் அரை மணி நேரத்திற்கு மேல் இருக்கிறது. தான் செய்யும் தவறை இன்னொரு ஜோதிடரோ அல்லது மற்றவர்களோ கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற வாக்கிய பஞ்சாங்க ஜோதிடர்கள் பிறந்த துல்லியமான நேரத்தை ஜாதகத்தில் வேண்டுமென்றே குறிப்பதில்லை.
நீங்கள் சரியாக மாலை 3-50 மணிக்கு பிறந்தீர்கள் என்று உங்கள் தாயோ, தகப்பனோ ஜோதிடரிடம் துல்லியமாக சொல்லியிருந்தால் கூட இதுபோன்ற ஜோதிடர்கள் சுமார் 4 மணி என்றுதான் ஜாதகத்தில் குறிப்பார்கள். ஆனால் இந்த வழக்கம் தற்போது மறைந்து, இளைய தலைமுறை ஜோதிடர்கள் திருகணிதப் பஞ்சாங்கத்தை பின்பற்றி வருவதால் துல்லியமான நேரத்தை மணி வினாடியாக ஜாதகத்தில் குறிக்கவே செய்கிறார்கள்.
மிதுன லக்னத்தில் நீங்கள் பிறந்திருப்பதால்தான் எட்டாமிடத்தில் லக்னாதிபதி புதன் அமர்ந்து, குருவின் பார்வையால் சுபத்துவமாகி, 8-12-க்குடைய சுக்கிரனும், சனியும் குருவின் பார்வையில் அமர்ந்து, பனிரெண்டுக்குடைய சுக்கிரன் உச்சமாகி, எட்டாம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் குரு பார்த்ததால்தான் நீங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை செய்தீர்கள். கடக லக்னம் என்றால் உங்களுக்கு பாஸ்போர்ட் கூட கிடைத்திருக்காது.
மிதுனத்தின் அவயோகியான செவ்வாய் புக்தி 2016 இறுதியில் வருவதால் சந்திர புக்தியில் உங்களுக்கு வேலை போய்விட்டது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வர இருக்கும் சனி தசையில், சனி எட்டுக்குடையவனாகி குருவின் பார்வையில், உச்ச சுக்கிரனோடு இருப்பதால் மீண்டும் வெளிநாடு செல்வீர்கள். இம்முறை நல்ல வேலை கிடைக்கும். லாட்டரி சீட்டு மூன்று வருடங்களுக்கு பலன் தராது. அதன்பிறகு சிறிய பரிசுகள் கிடைக்கும். சூதாட்டத்தை நம்ப வேண்டாம். ஆனால் எட்டு, பனிரெண்டுக்குடையவர்கள் ராகுவுடன் இணைந்ததால் என் பேச்சைக் கேட்காமல் லாட்டரி சீட்டு வாங்கி வருமானத்தை தொலைப்பீர்கள். 2022 ஆம் ஆண்டு முதல் வாழ்க்கை சீராகவே இருக்கும். வாழ்த்துக்கள்
டி. சுப்புராம், கோவை.
கேள்வி:
தற்போது ராகு தசையில் கேது புக்தி எனக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஜோதிடர்கள் உங்கள் ஜாதகத்தில் ராகு யோகத்தைச் செய்யும் என்று சொன்னார்கள். ஆனால் பாதியைக் கடந்தும் இன்றும் நல்லது நடக்கவில்லை. தற்பொழுது சிறிதளவு கடனாளியாக இருக்கிறேன். கடனுக்கு வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ராகுதசை ஆரம்பித்தவுடனேயே கடன் வாங்கி விட்டேன். கடன் எப்போது அடையும்? குடிப்பழக்கம் 25 வருடங்களாக இருந்தது. தற்சமயம் ஐந்து மாதங்களாக குடியை நிறுத்தி விட்டேன். மனநல மருத்துவரிடம் சொல்லி தூக்கத்திற்கு மாத்திரை உபயோகிக்கிறேன். எப்போது மாத்திரை இல்லாமல் தூங்குவேன்? குறைவான வருமானம் உள்ளது. எப்போது நல்ல வருமானம் கிடைக்கும்? என் ஜாதகத்தில் கோதண்ட ராகு என்று சொன்னார்கள். அது என்ன?
பதில்:
(துலாம் லக்னம், சிம்ம ராசி, 3ல் ராகு, 4ல் குரு, 7ல் செவ், 9ல் புத, சனி, கேது, 10ல் சூரி, 11ல் சந், சுக், 1-8-1973 மதியம் சுமார் 12 மணி, கோவை)
ஒருவருக்கு ராகு நன்மையை தர வேண்டும் எனில் ராகுவிற்கு வீடு கொடுத்தவர் உச்ச நிலையில் இருக்க வேண்டும் என்பது மிக முக்கிய விதி. ராகுவிற்கு வீடு கொடுத்தவர் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களாகவே இருந்தாலும், அவர்கள் லக்னத்திற்கு தீயவர்களாக இருந்தாலும், அவர்கள் உச்ச நிலையில் இருந்தால், அவர்களின் வீடுகளில் அமர்ந்த ராகு நல்ல யோகத்தை செய்யும்.
இதற்கு நேர்மாறாக நீச்சனின் வீடுகளில் அமர்ந்த ராகு நன்மைகளைச் செய்வதில்லை. அதேநேரத்தில் நீச்சனுடன் சேர்ந்த ராகு, அந்த நீச்ச கிரகத்தின் காரகத்துவம், ஆதிபத்தியம் இரண்டையும் தன்பால் கவர்ந்து, நீச்ச கிரகம் லக்னத்திற்கு யோகமான கிரகமாக இருந்தால் முழு நற்பலன்களை செய்யும்.
உங்கள் ஜாதகப்படி ராகு நீச்ச குருவின் வீட்டில் அமர்ந்ததால் நன்மைகளை செய்வதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி ஆரம்பித்து விட்டதாலும், மூன்றாமிடத்தில் உங்கள் லக்னத்தின் யோகாதிபதிகளான 5 9-க்குடைய சனி, புதனின் பார்வையில் ராகு இருப்பதாலும், ஓரளவிற்கு நன்மைகளைச் செய்து தான் தீரும். தற்போது ஆரம்பித்திருக்கும் சுக்கிரபுத்தி முதல் உங்களுக்கு ராகு தசையில் நன்மைகள் இருக்கும். சுக்கிர புக்தியில் கடன் அடையும். தூக்கமும் வரும்.
ராமனின் ஜாதகத்தில், தனுசில் உங்களைப் போன்ற அமைப்பில் ராகு இருந்ததாக சொல்லப்படுவதால் அவரது வில்லான கோதண்டத்தின் பெயரில் தனுசில் இருக்கும் ராகு கோதண்ட ராகு என்று அழைக்கப்படுகிறது. அதேநேரத்தில் ராமாயண காலத்தில் ராகு கேதுக்கள் ஜாதகத்தில் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதும் ஒரு கருத்து. ஆகவே கோதண்ட ராகு என்பது ஒரு வழக்குச்சொல். அவ்வளவுதான். வாழ்த்துக்கள்.
(19.11.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.