adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
வஞ்சனையின்றி வாரி வழங்கும் பஞ்ச மஹா புருஷ யோகங்கள் .! ( B006)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு,கேதுக்கள் மற்றும் ஒளிக் கிரகங்களான சூரிய, சந்திரர்களைத் தவிர்த்த பஞ்ச பூதக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்களாலும் கிடைக்கப் பெறுபவை இந்த பஞ்ச மஹா புருஷ யோகங்கள்.

மூல நூல்கள் அனைத்தும் பஞ்ச மஹா புருஷ யோகங்களைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுன்றன.


மேற்கண்ட ஐந்து கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு கேந்திரங்களான 1,4,7,10 ஆகிய இடங்களில் அமர்ந்து ஆட்சி பலமோ, உச்ச பலமோ பெற்றால் இந்த யோகங்கள் உருவாகின்றன. ஒருவரின் லக்னாதிபதி வலுவிழந்து, அந்த ஜாதகத்தை ராசி வழி நடத்தும் நிலையில் சந்திரனுக்குக் கேந்திரங்களில் இந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறும் நிலையிலும் இவை யோகம் செய்யும்.

இந்த யோகங்களில் ஏதேனும் ஒன்று ஜாதகருக்கு சுப பலத்துடன் நல்லவிதமாக அமைந்திருந்து, அந்தக் கிரகத்தின் தசையும் சரியான வயதில் நடைபெறுமானால் ஜாதகர் வாழ்க்கையின் உச்சத்திற்குப் போவார் என்பது உறுதி.

என்னுடைய முப்பதாண்டு காலத்திற்கும் மேலான ஜோதிட ஆய்வில் பரம்பொருள் எனக்குத் தெரிந்து கொள்ள அனுமதித்த சில சூட்சும விஷயங்களை இந்த ஐந்து யோகங்களை விளக்குவதன் வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

முக்கியமாக பாபக் கிரகங்களான செவ்வாய் மற்றும் சனியைப் பற்றிய சில வித்தியாசமான நுணுக்கங்களை ருசக மற்றும் சச யோக விளக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.

குரு, சுக்கிரன், புதன் ஆகிய இயற்கைச் சுப கிரகங்களால் அமையப் பெறும் ஹம்ச, மாளவ்ய மற்றும் பத்ர யோகங்கள் ஒரு மனிதனின் வாழ்விற்குத் தேவையான அனைத்து அடிப்படை விஷயங்களோடு, அதிர்ஷ்டத்தையும் தந்து. ஒருவரை பூமியில் மிகவும் பாக்யவான் என்று பெயரெடுக்கச் செய்பவை. இயற்கைப் பாபக் கிரகங்களான செவ்வாய், சனி தரும் யோகங்கள் அப்படியல்ல.

இதிலும் ஒரு கருத்தாக, ஒரு சிலர் இந்த பஞ்சமகா புருஷ யோகங்களை ராஜயோகங்கள் என்று தவறாகப் பொருள் கொள்கிறார்கள். உண்மையில் பஞ்சமகா புருஷ யோகங்கள் என்பவை ஒரு மனிதனை தான் இருக்கும் துறையில் முதன்மையானவனாக, மகா புருஷனாக்கும் யோகங்கள் மட்டும்தான். இவை ராஜயோகங்கள் அல்ல.

ஒருவரை அரசாள வைக்கும் அல்லது அரசனாக்கும் தகுதி படைத்தவை ஜோதிடத்தின் மூலக் கிரகங்களும், ஒளிக் கிரகங்களுமான சூரிய, சந்திரர்கள் மட்டும்தான்.

வேதஜோதிடத்தில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் எந்த ஒரு இடத்திலுமே தேவையற்ற வார்த்தைகளையோ, தவறான பொருள் தரும் சொற்களையோ ஒருபோதும் உபயோகப் படுத்தியது இல்லை.

ஒரு கிரகம் முறையான நீச பங்கத்தை அடைவதைக் கூட நீச பங்க ராஜயோகம் என்று தனியாக அடையாளப்படுத்திக் காட்டிய நமது ஞானிகள் இந்த யோகங்களை மகாபுருஷ யோகங்கள், அதாவது ஒருவனை மனிதர்களில் முதன்மையாவனாக்கும் யோகம் என்றுதான் அடையாளப் படுத்தினார்களே தவிர இவற்றை ராஜயோக வரிசையில் வைக்கவில்லை.

அதன்படி ஒரு மனிதனை இருக்கும் துறையில் உயர்வான இடத்திற்குக் கொண்டு செல்லும் முதன்மையான யோகங்கள் இவை. குறிப்பாக இந்த ஐந்து கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திரங்களில் வலுப் பெறும்போது தனது காரகத்துவங்களின் வாயிலாகவும், ஆதிபத்தியங்களின் வழியாகவும் மட்டுமே ஒரு மனிதனுக்கு உயர்வுகளைத் தரும்.

அதேநேரத்தில் ஒருவரின் ஜாதகத்தில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெற்றிருந்து, அவர்களால் நமது ஞானிகள் குறிப்பிட்டுச் சொன்ன ராஜயோகங்கள் உண்டாகியிருக்கும் நிலையில், அந்த ஜாதகரை அரசனாக்க - அதாவது அதிகாரம் செய்ய வைக்க - அரசில் அங்கம் வகிக்கச் செய்ய, இந்த பஞ்சமகா புருஷ யோகங்கள் பெரிதும் துணை நிற்கும்.

பெருமை வாய்ந்த இந்த யோகங்களைத் தரும் நிலையில் இருக்கும் ஐந்து பஞ்சபூதக் கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் லக்ன பாபர்கள் மற்றும் பகைக் கிரகங்களின் இணைவையோ, தொடர்பையோ பார்வையையோ பெற்றிருக்கக் கூடாது.

அப்படி இருப்பின் யோகம் பலவீனமடையும். குறிப்பாக இருள் கிரகங்களான ராகு,கேதுக்களுடன் இணைந்து கிரகணம் அடைவதோ, சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தமனம் பெறுவதோ யோகத்தை பங்கமுறச் செய்யும்.

பின்வரும் ஐந்து யோகங்களும் பஞ்ச மகா புருஷ யோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1. குருவினால் உண்டாகும் ஹம்ச யோகம்

2. சுக்கிரனால் உண்டாகும் மாளவ்ய யோகம்.

3. புதனால் உண்டாகும் பத்ர யோகம்

4. செவ்வாயால் உண்டாகும் ருசக யோகம்.

5. சனியால் உண்டாகும் சச யோகம்.

முதலில் கிரகங்களிலேயே மகா சுபரானவரும், பணத்திற்கு அதிபதியும், புத்திர பாக்யம் உள்ளிட்ட அனைத்து அதிர்ஷ்டங்களையும் அளிப்பவருமான குருவால் கிடைக்கப் பெறும் ஹம்ச யோகத்தைப் பற்றிப் பார்ப்போம்.

ஹம்ச யோகம் :

குரு தரும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள் சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். அதிலும் குருவின் நண்பர்களான செவ்வாயின் மேஷ லக்னத்தவர்களுக்கும், சந்திரனின் கடகத்தவர்களுக்கும் இந்த யோகம் நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

உபய லக்னங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும் இந்த யோகம் அமையப் பெற்றாலும் குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தினால் அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது.

உபயத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமர்ந்திருந்தால் மட்டுமே குரு முழுயோகம் அளிப்பார். ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு குரு கேந்திர ஸ்தானங்களில் ஆட்சியோ, உச்சமோ அடைவதில்லை என்பதால் இந்த லக்னங்களில் பிறந்தவர்கள் ஹம்ச யோகம் பெறும் வாய்ப்பு இல்லை.

மேலும் குரு ஆட்சி, உச்சம் பெறும் நிலையில் அவருக்கு எதிர்த்தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோர் அவருடன் சேருவது மற்றும் அவரைப் பார்ப்பது யோகத்தைக் குறைக்கும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் லக்ன சுபர்களாகவும் ஆகி குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் வலுப் பெறும்.

ஏற்கனவே சொன்னதைப்போல ஹம்ச யோகம் தரும் நிலையில் குரு சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைவதோ, ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் இணைவதோ கூடாது. யோகம் முற்றிலும் வலிமை இழக்கும். அதுவும் ராகுவுடன் அவர் இணைவது, ராகுவை வலுப்படுத்துமே தவிர, குருவை வலிமை இழக்கச் செய்து “சண்டாள யோகம்” என்ற பெயரெடுக்கச் செய்யும்.

ஹம்சயோகம் தரும் நிலையில் குரு, திக்பலமும் பெற்றிருந்தால்  (லக்னத்தில் மட்டுமே குரு திக்பலம் பெறுவார்.) இரட்டிப்பு பலன் தருவார். அதே நேரத்தில் உச்சம் பெறும் குருவை, செவ்வாயும், சனியும் உச்சம் பெற்றுப் பார்க்கக் கூடாது. கடகத்தில் அவர் உச்சமாகும் நிலையில் நீச செவ்வாயுடனும் அவர் சேரக் கூடாது.

சர லக்னங்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். குரு பலம் பெறுவதால் அவரது சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும்.

இந்த உலகத்தில் பிறந்த எவருக்கும் எந்தக் கிரகம் பலவீனம் அடைந்தாலும், இயற்கைச் சுப கிரகங்களான குருவும், சுக்கிரனும் மட்டும் சுப வலுப் பெற்று அவர்களின் தசை நடந்தால் போதும், ஜாதகர் நியாயமான முறையில் முன்னேறி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்.

இனி ஹம்ச யோகம் பெறும் எட்டு லக்னங்களுக்கான விரிவான பலன்களைப் பார்ப்போம்.

மேஷம் :

மேஷத்திற்கு குரு ஒன்பதுக்குடைய பாக்யாதிபதியும், பனிரெண்டிற்குடைய விரயாதிபதியும் ஆவார். அவருடைய மூலத் திரிகோணாதிபத்திய வீடு தனுசு என்பதால் இந்த லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய நல்ல பலன்களையே குரு செய்வார்.

மேஷ லக்னத்திற்கு நான்காமிடமான கடகத்தில் குரு உச்சம் பெறுவதால், கடகத்தின் அதிபதி சந்திரனுடன் குரு இங்கே இருந்தால் யோகம் நன்கு பலன் தரும். சந்திரன் இங்கே திக்பலமும் பெறுவார். வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் இன்னும் நன்மையான பலன்கள் நடைபெறும். மகரத்திலிருந்து குருவை, சந்திரன் பார்த்தால் குரு லக்ன கேந்திரமும், சந்திர கேந்திரமும் பெற்று தன் தசையில் மிகப் பிரமாதமான பலன்களைத் தருவார்.

இந்த அமைப்பினால் கஜகேசரி யோகமும் ஜாதகருக்கு அமைந்து நல்ல வாழ்க்கையை ஜாதகர் அடைவார். மேலும் உச்சம் பெறும் குரு பத்தாமிடத்தைப் பார்ப்பார் என்பதால் ஜாதகரின் தொழில் மேன்மைக்கு இந்த யோகங்கள் பெரிதும் உதவும். அதேநேரத்தில் ஆறுக்குடைய புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு அமர்வது சிறப்பல்ல.

மிதுனம் :

மிதுன லக்னத்திற்கு ஏழு, மற்றும் பத்தாமிடங்களான தனுசு, மீனத்தில் குரு ஆட்சி பெறுவார். கூடவே கேந்திராதிபத்திய தோஷமும் அடைவார். மேலும் ஏழாமிடமான தனுசு பாதக ஸ்தானமுமாகி, குரு பாதகாதிபதிபத்தியமும் பெறுவார். எனவே  மிதுனத்திற்கு குரு ஏழில் ஆட்சி பெறுவது ஹம்ச யோகம் தந்தாலும் மண வாழ்க்கையைப் பாதிக்கும்.

ஏழில் ஆட்சி பெறும் குரு லக்னத்தைப் பார்வையிட்டு மதிப்பு, மரியாதையான வாழ்க்கை மற்றும் அதிகாரம் அந்தஸ்து ஆகியவற்றைத் தருவார். ஆனால் மண வாழ்வில் குறையை உண்டு பண்ணுவார் அல்லது மண வாழ்வைக் கெடுப்பார்.

பத்தாமிடமான மீனத்தில் அவர் ஆட்சி பெறுவது கேந்திராதிபத்திய தோஷத்தைத் தந்தாலும் தொழில் அல்லது வேலைவாய்ப்பில் நல்ல பலன்கள் இருக்கும். வங்கி, நீதித்துறை, அரசு, நிதித்துறை, கோவில் பணி, அமைச்சர், பைனான்ஸ், ஜுவல்லரி, சொல்லிக் கொடுத்தல் போன்ற இனங்களில் ஜாதகரை பணிபுரிய வைத்து மேம்படுத்துவார். மீனம் ஜலராசி என்பதால் வெளிநாட்டிலும், ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும் பெரும்பொருள் சம்பாதிக்கத் துணைபுரிவார்.

வலுப் பெற்ற குரு என்ன தருவார்..?

நல்லநெறி, நன்னடத்தை, கருணை உள்ளம், ஆன்மீக ஈடுபாடு, தூய சிந்தனை, குழந்தைகள், தனம், யானை, பருத்த உடல், அன்பு, எதிலும் பெரியது, மஞ்சள், உயிர், எதிர்பார்ப்பில்லா ஆன்மிகம், வங்கி, நீதித்துறை, ஆராய்ச்சி, நிதி அமைப்புகள், பணம் புரளும் இடங்கள், கோவில்கள், அமைச்சர், சொல்லிக் கொடுத்தல், மதம், யோகா, இனிப்புச்சுவை, அரண்மனை, அந்தணன், ஆலய, ஆன்மீகச் சூழல், நகைத் தொழில், நேர்மையான விவாதம், ஆழமான அறிவு,

அதிர்ஷ்டம், பிரம்மம், தனக்கென எதுவும் கொள்ளாமை, துறவு, கோடிக்கணக்கில் பணம், சிவத் தொண்டு, கோவில் கட்டுதல், அர்ச்சகர், பூசாரி, குணமுள்ள வாழ்க்கைத் துணை, பொன்நிறம், தங்கம், அருள்வாக்கு, சாஸ்திரம், சுகபோகம், அதிர்ஷ்டம், வட்டித் தொழில்,  மளிகைக் கடை, நவதானியம், கடலை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்,  ஆகியவற்றை வலிமை பெற்ற குரு தருவார். 

( அக் 17-22, 2011 திரிசக்தி ஜோதிட வார இதழில் வெளிவந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.