adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 262 (12.11.2019)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

கே. எஸ். செந்தில்குமார், சென்னை-21.

கேள்வி:

2006ல் இருந்து இதுவரை பல துன்பங்களை அனுபவித்து, ஒவ்வொன்றாக இழந்து இன்று பூஜ்ஜியத்தில் சென்று கொண்டிருக்கிறேன். முதுகுத்தண்டு நரம்பில் குறைபாடு ஏற்பட்டு எனது இடது கால் சரியாக செயல்படாததால் பார்க்கும் வேலை இழந்து பணம், மரியாதை, நிம்மதி, தூக்கம் இழந்து அவமானத்தோடு வாழ்கிறேன். இதுவரை பல ஜோதிடர்களை பலமுறை சந்தித்தும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. மாலைமலரில் தீர்க்கமான பதில் தரும் உங்கள் பதில்களால் ஈர்க்கப்பட்டு கேட்கிறேன். அடுத்து வரும் புதன் தசை எனக்கு என்ன பலன் தரும்? புதன் பலமா பலவீனமா?

பதில்:

(சிம்ம லக்னம், கும்ப ராசி, 1ல் சுக், 3ல் சனி, 4ல் குரு, கேது, 7ல் சந், 10ல் ராகு, 11ல் செவ், 12ல் சூரி, புத, 28-7-1983 காலை 8-15 சிவகாசி)

2006 முதல் உங்களின் சிம்ம லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் சனி தசை நடந்து கொண்டிருக்கிறது. சனி எந்த வகையிலும் சுபத்துவமின்றி, பாப அமைப்பில் உச்சமாகி, வக்கிரமும் இன்றி, நவாம்சத்தில் செவ்வாயின் வீட்டில் பாபத்துவமாக இருக்கிறார். சனி நேர்வலு அடைந்தாலே அவரது பாப காரகத்துவங்களை வலுவாக தருவார் என்பது மிக முக்கியமான விதி.

சனியின் மிக முக்கியமான காரகத்துவம் ஒரு மனிதனை நொண்டி ஆக்குதல் அதாவது நடக்க இயலாமல் செய்தல். இரண்டு கால்களிலும் அவருக்கு மிகவும் பிடித்தது இடதுகால்தான். அதன்படி சனி தசை ஆரம்பித்ததுமே உங்களுக்கு முதுகில் நோயைக் கொடுத்து காலை நடக்க இயலாமல் செய்திருக்கிறார். இதே சனி நான் சொல்லும் சுபத்துவ, சூட்சும வலு அமைப்பில் இருந்திருப்பின் உங்களுக்கு இத்தகைய துன்பங்கள் நடந்திருக்காது.

அதிலும் கடந்த 2016 முதல் நடந்த சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகளில் மேற்கண்டவர்கள் சனியின் பகைவர்கள் என்பதால் மிகக் கடுமையான. கொடும் பலன்களை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். தற்போது நடக்கும் ராகு புக்தியும், புக்திநாதன் ராகு சனிக்கு எட்டில் சஷ்டாஷ்டக நிலையில் இருப்பதால் உங்களுக்கு நல்ல பலன்களை தர இயலாது.

2022 பிற்பகுதியில் ஆரம்பமாகும் சனிதசை, குரு புக்தி முதல் உங்களுடைய ஆரோக்கியம் வேலை போன்றவைகள் ஓரளவு சீரடையும். அதேநேரத்தில் உங்களுக்கு ஜென்மச் சனியும் ஆரம்பிப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. சனி தசை முடியும் 2025 வரை வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றையும் நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

அடுத்து நடக்க இருக்கும் புதன் தசையின் நாதன, புதன், சந்திர அதியோக அமைப்பில், குருவின் பார்வையில், லக்னாதிபதியுடன் திக்பலத்திற்கு மிக அருகில், சொந்த சாரத்தில் இருப்பதால் உங்களுக்கு கெடுதல்களை தரமாட்டார். அதைவிட மேலாக சனிதசை கொடுத்த கெடுதல்களை சீர்செய்து, நல்ல வாழ்க்கையைத் தருவார். வாழ்த்துக்கள்.

கே. செல்வவிஜயன், சாயல்குடி.

கேள்வி:

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதி விட்டேன். ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பதில் வரவில்லை. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். எனது பெண்ணிற்கும் இந்த மாப்பிள்ளைக்கும் திருமணம் செய்யலாமா?

பதில்:

வாரம்தோறும் மாலைமலரில் 4 அல்லது 5 கேள்விகளுக்கு மட்டும்தான் பதில் தர முடிகிறது. ஆனால் வருகின்ற கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தலை சுற்றிப் போய்விடும். ஆயினும் வாசகர்கள் அனுப்பும் கடிதங்கள் அனைத்தையும் படித்துப் பார்த்து அதில் மிகுந்த முக்கியத்துவம் உள்ள கேள்விகளுக்கு பதில் தரத்தான் செய்கிறேன்.

இதுபோன்ற பொருத்தம் பார்க்கும் கேள்விகளை தயவுசெய்து எனக்கு அனுப்பாதீர்கள் நான் பார்த்துச் சொல்வதற்குள் உங்கள் பெண்ணிற்கு திருமணமே நடந்து முடிந்து விடலாம். உங்கள் ஊரில் உள்ள அனுபவமுள்ள ஜோதிடரிடம் நேரில் சென்று திருமண விஷயங்களை கேட்பதே நல்லது. நீங்கள் அனுப்பியிருக்கும் மாப்பிள்ளையின் ஜாதகம் பொருத்தமானதுதான். ஆனால் உங்கள் பெண்ணிற்கு அடுத்த வருடம் ஆவணி மாதம் முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை மட்டுமே திருமண காலம் என்பதால், அடுத்த வருட இறுதியில்தான் உங்கள் பெண்ணிற்கு திருமணம் நடக்கும். வாழ்த்துக்கள்.

பி. நாகநாதன், புதுக்கோட்டை.

கேள்வி:

நான் தனுசுராசி, மூலம் நட்சத்திரம். பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. எப்போது சரியாகும்? கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்.  நானும் என் சகோதரனும் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறோம். குறிப்பாக இந்த இரண்டு வருடங்களில் வியாபாரம் மிகவும் மோசம். எங்களுக்கு பொது சொத்தாக ஒரு வீடு உள்ளது. அது ஏழு பேருக்கு பாத்தியம் உள்ளது. விற்க முயற்சிக்கிறோம், விற்றபாடில்லை. எனது மகனாலும் கடந்த வருடங்களில் மிகுந்த பணவிரயம், மனஉளைச்சல், கடன், அவமானம் எல்லாம் நடந்துவிட்டது. அவனது வெளிநாட்டு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்து விட்டோம். எனக்கு எப்போது விடிவுகாலம்?

பதில்:

(தனுசு லக்னம், தனுசு ராசி, 1ல் சந், 2ல் சனி, குரு, 3ல் கேது, 4ல் சூரி, புத, 5ல் சுக், 7ல் செவ், 9ல் ராகு, 6-4-1961 இரவு 11-8 புதுக்கோட்டை)

தனுசுராசியில் பிறந்த அனைவருக்கும் கடந்த மூன்று வருடங்களாக ஜென்மச்சனி நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி ஜென்மச்சனி விலகியதற்குப்பிறகு துன்பங்கள் குறையும். சனியின் தாக்கம் அவரவர் பிறந்த ஜாதகத்தின்படியும், நடக்கும் தசா புக்தி அமைப்புகளின் படியும் கூடுதல் குறைவாக இருக்கும்.

உங்கள் ஜாதகப்படி தற்போது பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்தில், ஜென்ம விரோதியான சூரியனின் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு, பாக்கியங்களை கெடுப்பார். ராகு திரிகோண வீட்டில் இருந்து சுப பலன்களைச் செய்ய வேண்டுமெனில் யோகம் செய்யக்கூடிய கேந்திராதிபதி ஒருவருடன் இணைந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே நல்ல பலன்கள் இருக்கும். அதாவது ஒன்பதாம் வீட்டில் இருக்கும் ராகுவுடன் 4, 7, 10-க்குடையவர் சுபராகி இணைந்திருந்தால் மட்டுமே நல்ல யோகம். அந்த அமைப்பு உங்களது ஜாதகத்தில் இல்லை. ஆகவே இந்த ராகு தசை உங்களுக்கு நன்மைகளைத் தராது. அதிலும் குறிப்பாக சுக்கிர புக்தி வரை உங்களுக்கு நன்மைகள் நடக்காது.

இருள் கிரகமான ராகுவின் தசை நடக்கும்போது கோட்சார ரீதியில் ஜென்மச்சனி எனும் இன்னொரு இருள் உங்களை சூழ்ந்து இருப்பதால் கடந்த ஐந்து வருடகாலமாக நீங்கள் நன்றாக இல்லை. அடுத்து வரும் குரு தசை உங்களுக்கு யோக தசைதான். ஜென்ம சனி நடக்கும் போது மிகவும் பிடித்த விஷயங்கள் பாதிக்கப்படும் எனும் நிலையின்படி உங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான, நீங்கள் மிகவும் விரும்பும் மகனால் உங்களுக்கு மனச் சங்கடங்கள் இருந்தன.

இவை அனைத்தும் 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கி, வரும் ராகுதசை, சூரியபுக்தியிலிருந்து உங்களுடைய பொருளாதார நிலைமை சீராகும். கடன்களை அடைக்க முடியும். ராகு தசை சுக்கிர புக்தி இறுதியில்தான் உங்களால் பொது சொத்தினை பிரித்துக் கொள்ள முடியும். அதுவரை உங்கள் ஜாதகப்படி உங்களுடைய பொது வீட்டினை விற்றுக் கிடைக்கும் பணத்தை அனுபவிக்கும் அமைப்பு இல்லை. அதேநேரத்தில் வீடு பற்றிய பலன் உங்களுடைய மற்ற சகோதரர்கள் விஷயத்தில் மாறலாம். வாழ்வின் இறுதிக்காலத்தில் வரும் குருதசை உங்களுக்கு யோக தசை என்பதால் உங்களின் அந்திம காலம் மிகவும் நன்றாக இருக்கும். குருவே புத்திரகாரகன் என்பதால் மகனை நன்றாக வைத்து, உங்களை சந்தோஷப்பட செய்வார். வாழ்த்துக்கள்.

கே. பி. சாமி, சென்னை.

கேள்வி: 

என் மகன் தற்சமயம் தனியார் மருந்தகத்தில் வேலை செய்து வருகிறான் சொந்தமாக எங்களிடத்தில் மருந்தகம் நடத்த முடிவு செய்துள்ளோம். கடை வைத்தவுடன் திருமணம் செய்ய உள்ளோம். எப்போது திருமணம் கைகூடும்?

பதில்:

(கடக லக்னம், கடக ராசி, 1ல் சந், சுக், செவ், 2ல் கேது, 6ல் சனி, 8ல் ராகு, 12ல் சூரி, புத, குரு, 6-7-1989 காலை 8-30 தூத்துக்குடி)

ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ அதன் தொழில் அமையும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். எனது சுபத்துவ மற்றும் சூட்சுமவலு கோட்பாட்டின் அடிப்படையில் இது அனைத்து ஜாதகங்களிலும் மிகவும் துல்லியமாக இருக்கும். மகனுக்கு கடக லக்னமாகி, செவ்வாய் லக்னத்தில் வளர்பிறைச் சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து அம்சத்தில் குருவின் வீட்டில் இருப்பதால், செவ்வாயின் தொழிலான மருந்து கடை அமைந்திருக்கிறது.

கடக லக்னத்தின் யோகாதிபதிகள் சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் அடுத்த வருடம் முதல் மகனுக்கு ஆரம்பிக்க இருப்பதால், மகனின் வாழ்க்கை 2021 முதல் மிகவும் சிறப்பாக இருக்கும். 2020 செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க இருக்கும் சுக்கிர தசை கேது புக்தியில் தனியாக மருந்து கடை வைப்பார். 2021ல் குடும்பாதிபதி சூரியனின் தசையில் அவருக்கு திருமணம் நடக்கும், 33 வயதிலிருந்து மிகவும் யோகத்துடன் வாழக்கூடிய ஜாதகம். வாழ்த்துக்கள்.

(12.11.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.