ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
கும்பம் :
கும்ப லக்னக்காரர்களுக்கு முதலிலேயே ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். எந்த ஒரு யோகமுமே கும்பத்திற்கு முழுமையாக அமையாது. இது ஒரு கால புருஷத் தத்துவம். ஏனெனில் நவ கிரகங்களில் யாருமே கும்பத்திற்கு முழு யோகராக மாட்டார்கள்.
இது ஒரு சிக்கலான சூட்சுமம். இதைப் புரிந்து கொள்ள விரிவாகச் சொல்ல வேண்டுமென்பதால் வேறொரு சந்தர்ப்பத்தில் இதைப் பற்றிச் சொல்லுகிறேன்.
கும்பத்தின் லக்னாதிபதி சனியே பனிரெண்டுக்குடைய விரயாதிபதியும் ஆவார். அடுத்து ஐந்துக்குடைய யோகாதிபதி புதன், எட்டுக்குடைய அஷ்டமாதிபதியாகி, பூரண யோகாதிபதியான ஒன்பதுக்குடைய சுக்கிரன் பாதகாதிபதியும் ஆவார்.
சனியின் நண்பர்களான சுக்கிரனும், புதனுமே கும்பத்திற்கு முழுமையான யோகம் செய்ய முடியாது எனும் போது இந்த லக்னத்தின் அவ யோகிகளும், சனியின் பகைவர்களுமான சூரிய, சந்திர, செவ்வாயைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
கும்ப லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதிகள் சுக்கிரனும் செவ்வாயும் ஆவார்கள். இதில் சுக்கிரன் இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும், செவ்வாய் இந்த லக்னத்தின் அதிபதி சனி மற்றும் சுக்கிரனுக்கும் எதிரியாக அமைவதாலும் இந்த யோகம் முழுமையாக பலன் தராது.
மேலும் இயற்கைச் சுப கிரகமான சுக்கிரனுடன், பாபரான செவ்வாய் இணைவது எந்த ஒரு லக்னத்திற்குமே நல்ல அமைப்பல்ல. இதனால் சுக்கிரனின் காரகத்துவங்கள் முழுமையாகக் கெடும். குறிப்பாக சுக்கிர, செவ்வாய் இணைவு மண வாழ்க்கைக்கு நல்லதல்ல. அதிலும் இருவரும் எட்டு டிகிரிக்குள் இணைவது பண வாழ்வைத் தந்தாலும் மண வாழ்வில் குறைகளைத் தரும்.
உடுமகா தசை அமைப்புப்படி சுக்கிர, செவ்வாய் தசைகளும் அடுத்தடுத்து வருவது இல்லை. எனவே கும்ப லக்னத்தவர்களுக்கு சுக்கிரனும், செவ்வாயும் ஒன்பது மற்றும் பத்தாமிடங்களில் பரிவர்த்தனை பெறுவது முழுமையான தர்மகர்மாதிபதி யோகத்தைத் தரும். பரிவர்த்தனை நிலையால் இருவரும் ஆட்சி பலம் பெறுவார்கள்.
அதேபோல செவ்வாய் மூன்றாமிடத்தில் அமர்ந்து ஒன்பதாமிடத்தைப் பார்ப்பது, சுக்கிரன் நான்காமிடத்தில் அமர்ந்து பத்தாமிடத்தைப் பார்ப்பது போன்ற நிலைகளும் நல்ல பலன் அளிக்கும். நான்காமிடத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுவது மாளவ்ய யோகம் ஆகும். அதேநேரத்தில் சுக்கிரன் இங்கு கேந்திராதிபத்திய தோஷமும், திக்பலமும் அடைவார்.
மற்றபடி சுக்கிரனும், செவ்வாயும் எந்த ஒரு இடத்தில் இருந்தும் ஒருவரை ஒருவர் சம சப்தமமாக பார்த்துக் கொள்வதும், சஷ்டாஷ்டகமாக இருந்து செவ்வாய் சுக்கிரனைப் பார்ப்பதும் சரியல்ல.
பத்தாமிடத்தில் செவ்வாய் இருப்பது “தசம அங்காரா” என்று நமது கிரந்தங்களால் புகழப்படுகிறது. ஒருவர் தொழிலில் சாதனைகளைச் செய்வதற்கு இது உதவுவதால் கும்ப லக்னத்திற்கு செவ்வாய் பத்தில் ஆட்சி மற்றும் திக்பலம் பெற்று தசை நடத்துவது ஓரளவு நல்ல நிலையே.
ஒன்பதாமிடமான துலாத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று தசை நடத்துவது பாதகாதிபதி வலுப் பெறுவார் என்பதால் அவர் வேறுவகையில் பலம் குறைவது நல்லது.
மீனம்:
மீன லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி யோகம் மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
இந்த லக்னத்தின் தர்ம கர்மாதிபதிகளான செவ்வாயும், குருவும் தங்களுக்குள் நண்பர்கள் என்பதாலும், இருவரும் இந்த லக்னத்திற்கு லக்னாதிபதி மற்றும் தனாதிபதியும் ஆவார்கள் என்பதாலும் இந்த யோகம் வலுப் பெற்று ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்.
பெரும்பாலான மீன லக்ன வி.ஐ.பிக்களின் ஜாதகத்தில் இந்த யோகம் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
எந்த ஒரு லக்னத்திற்கும் இல்லாத சிறப்பாக மீனத்திற்கு மட்டும் குருவும், செவ்வாயும் ஒன்பது பத்தாமிடங்களில் பரிவர்த்தனை பெற்றால் இருவரும் லக்னத்தைப் பார்ப்பார்கள்.
அதாவது விருச்சிகத்தில் நிற்கும் குரு தனது விசேஷ ஐந்தாம் பார்வையாலும், மீனத்தில் நிற்கும் செவ்வாய் தனது சிறப்பு நான்காம் பார்வையாலும் லக்னத்தைப் பார்த்து ஜாதகரை மேம்படுத்துவார்கள்.
அதேபோல ஐந்தாமிடமான கடகத்தில் குரு உச்சம் பெற்று, விருச்சிகத்தில் ஆட்சி பெறும் செவ்வாயையும், லக்னத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பது ஒரு சிறப்பான நிலை. ஆயினும் இந்த அமைப்பில் குரு தனித்து இருக்கக் கூடாது. யோகம் பயன் தராது.
லக்னத்தில் குரு ஆட்சி பெற்று, ஒன்பதாமிட செவ்வாயைப் பார்ப்பது மற்றும் இரண்டு, பத்தாமிடங்களில் இருவரும் பரிவத்தனை பெற்று, குரு தனுசில் இருக்கும் செவ்வாயைப் பார்ப்பது ஆகியவையும் தர்ம கர்மாதிபதி யோகத்தைத் தரும் சிறப்பான அமைப்புகள்தான்.
ஆறாமிடமான சிம்மத்தில் செவ்வாய் இருந்து லக்னத்தில் இருக்கும் குருவைப் பார்ப்பதும் நல்லதுதான். இந்த இடம் செவ்வாய்க்கு அதிநட்பு வீடு என்பதால் செவ்வாய் ஸ்தான பலம் பெறுவதோடு, அங்கிருந்து அவர் தனது ஒன்பதாம் வீட்டையும், லக்னத்தையும் பார்ப்பது நல்ல அம்சம்.
கடகம், விருச்சிகத்தில் குரு அமர்ந்து லக்னத்தில் இருக்கும் செவ்வாயைப் பார்ப்பது மற்றும் மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று மேஷத்தில் இருக்கும் குருவைப் பார்ப்பது ஆகியவையும் யோகம் தரும் நிலைகள். மேஷத்தில் செவ்வாய் அமர்ந்து, விருச்சிகத்தில் இருக்கும் குருவைப் பார்ப்பதும் யோகம்தான். இருவரும் சஷ்டாஷ்டகம் அடைந்தாலும் இது யோக நிலைதான்.
பத்தாமிடமான தனுசில் செவ்வாய் இருப்பது மிகவும் நல்ல அமைப்பான “தசம அங்காரா” எனும் தொழிலுக்குச் சிறப்பான அம்சம். பத்தில் செவ்வாய் இருக்கும் நிலையில், லக்னத்தில் குருவும் இருந்தால், செவ்வாய் தன் நான்காம் பார்வையால் பத்தாம் அதிபதியான குருவைப் பார்ப்பார். குரு தனது ஒன்பதாம் பார்வையால் செவ்வாயின் வீட்டைப் பார்ப்பார். அனைத்திற்கும் மேலாக இந்த அமைப்பில் இருவரும் திக்பலம் பெறுவார்கள். ஜாதகரை யாராலும் அசைக்க முடியாது.
இந்த லக்னத்தின் இன்னொரு யோகாதிபதியான சந்திரன், வளர்பிறை நிலையில் பலமான இடங்களில் அமர்ந்து குருவையும், செவ்வாயையும் பார்ப்பது அல்லது இவர்களுடன் இணைவது யோகத்தை மேலும் வலுப்படுத்தும்.
ஆனால் இவர்களின் இன்னொரு நண்பரான சூரியன் மீனத்திற்கு ஆறுக்குடையவர் ஆவதால், அவர் இவர்களுடன் இணைவதோ அல்லது பார்ப்பதோ யோகத்தைக் குறைக்கும்.
கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும் உச்சம் பெற்று ஒருவரை ஒருவர் பார்ப்பது “உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சையும் கிட்டாது” என்பதற்கு ஏற்ப யோகத்தை முழுக்க பங்கப் படுத்திவிடும். இதற்கு மாறாக இருவரும் நீசம் பெற்று ஒருவரை ஒருவர் பார்த்தால் நல்ல யோகம்.
குருவும், செவ்வாயும் இணைந்திருக்கும் நிலைகள் என்று பார்க்கப் போவோமேயானால், லக்னத்திலும், இரண்டாமிடமான மேஷத்திலும் குருவும், செவ்வாயும் இணைவது மிகவும் நல்ல அமைப்பு.
இவ்விடங்களில் இணையும் இருவரையும் சுப சந்திரன் பார்த்தாரேயானால் கஜ கேசரி யோகம், சந்திரமங்கள யோகம் ஆகியன உண்டாகும். மேலும் ஒன்று, இரண்டு, ஐந்து, ஒன்பது, மற்றும் பத்துக்குடையவர்களின் சம்பந்தம் ஜாதகரை அசைக்க முடியாத சக்தியாக்கும்.
மூன்று, நான்காமிடங்கள் இருவருக்கும் பகை வீடுகள் என்பதால் இங்கு இருவரும் இணைவது யோகத்தைத் தராது. ஐந்தாமிடமான கடகத்தில் செவ்வாய் நீசமடைவார் என்பதால் அங்கு இருவரும் இணைவது யோகத்தைக் குறைக்கும்.
ஏழாமிடமான கன்னி குரு, செவ்வாய் இருவருக்குமே ஏற்ற இடமல்ல. என்னதான் இருவரும் இங்கிருந்து லக்னத்தைப் பார்த்தாலும் குரு இந்த இடத்தில் பகை பெற்று திக்பலமும் இழப்பார். யோகம் முழுமையாக அமையாது. எட்டாமிடம் சுக்கிரனின் வீடு என்பதால் இருவருக்குமே ஆகாது.
ஒன்பதாமிடமான விருச்சிகத்தில் இருவரும் இணைவது மிக விசேஷம். இங்கிருக்கும் குருவையும், செவ்வாயையும் உச்சம் பெற்ற ரிஷபச் சந்திரன் பார்த்தால் யோகம் அற்புதமாய் வேலை செய்யும். பத்தாமிடமான தனுசில் குரு கேந்திராதிபத்திய தோஷம் அடைந்தாலும் ஒருபாபரான செவ்வாயுடன் இணைவது நிவர்த்தி என்பதால் இங்கே இருவரும் இணைவது சிறப்பான தொழில் அமைப்புகளைத் தரும்.
பதினொன்றில் செவ்வாய் உச்சம் என்றாலும் குரு அங்கே நீசமடைவார் என்பதால் இவர்கள் லாப ஸ்தானத்தில் இணைவது யோகம் தராது. அதேபோல பனிரெண்டாமிடம் மறைவிடம், மற்றும் இருவருக்குமே நட்பு வீடு இல்லையென்பதால் இங்கே இவர்கள் இணைவதும் சிறப்பல்ல.
நிறைவாக மீன லக்னத்தவர்களுக்கு ராகுவும் சுபபலம் பெற்று சுப இடங்களில் அமர்ந்திருப்பின், சந்திர தசை பத்து வருடம், செவ்வாய் ஏழு, ராகு பதினெட்டு, குரு பதினாறு என மொத்தம் ஐம்பத்தியொரு வருடங்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது உறுதி.
அடுத்து வரும் அத்தியாயங்களில் வஞ்சனையின்றி வாரி வழங்கும் பஞ்ச மஹா புருஷ யோகங்கள் அனைத்து லக்னங்களுக்கும் எவ்வாறு பலனளிக்கும் அவற்றின் சூட்சுமங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
யோகாதிபதிகள் ஆறாமிடத்தில் இணைவது பலன் தருமா?
எந்த ஒரு யோகமும் ஆறு, எட்டு எனப்படும் மறைவிடங்களில் அமைவது யோகத்தைத் தராது என்று அடிக்கடி எழுதியிருக்கிறேன்.
ஆனால் விதி என்ற ஒன்று இருந்தால் விலக்கு என்பதும் உண்டு என்பதும் ஜோதிடத்தில் ஒரு முக்கியமான அம்சம். அதன்படி மீன லக்னத்திற்கு மறைவிடமான ஆறாமிடத்தில் அமரும் குருவும், செவ்வாயும் வலுவிழக்க மாட்டார்கள். மாறாக நல்ல முறையில் யோகத்தைத் தருவார்கள்.
மீனத்திற்கு மட்டும் இது ஒரு சிறப்பு அமைப்பு. ஏனெனில் உபய லக்னங்களின் அதிபதிகளான குருவும், புதனும் ஆட்சி, உச்ச வலுக்களை அடைந்தால் கடுமையான கேந்திராதிபத்திய தோஷத்தை செய்வார்கள் என்பது ஜோதிடவிதி. எனவே உபயாதிபதிகளான குருவும், புதனும் மறைவிடங்களில் வலுப் பெறுவதே ஜாதகருக்கு அதிக நன்மைகளைத் தரும்.
இன்னும் ஒரு சூட்சுமமாக மிதுனம், கன்னி, தனுசு, மீன லக்னக்காரர்களுக்கு லக்னாதிபதி நீசமடைந்து மறைமுகமாக நவாம்சம் போன்ற இனங்களில் வலுப் பெறுவது நல்ல யோகத்தைத் தரும்.
உண்மையில் மீனத்திற்கு குரு ஐந்தில் உச்சம் பெறுவதை விட ஆறில் மறைவதே யோகம் தரும் நிலை. ஐந்தில் வலுப் பெறுவது காரகோ பாவ நாஸ்திப்படியும், இரு கேந்திரங்களுக்கு குரு அதிபதி என்பதாலும் நன்மைகளைத் தராது. அதிலும் தனித்து குரு உச்சம் பெற்றிருந்தால் ஒருபோதும் நன்மைகளைச் செய்வதில்லை.
சுபரான லக்னாதிபதி உச்சம் அடைந்திருப்பதால் கிடைக்கும் ராஜயோக வாழ்க்கையை குரு தனித்து வலுப் பெறும்போது தருவதில்லை. சாதாரண வாழ்க்கைதான் ஜாதகருக்கு இருக்கும். மீனத்திற்கு லக்னாதிபதியாகி உச்சம் பெறும் நிலையில் குருவுடன் யாராவது இணைவது நல்லது.
ஆறாமிடமான சிம்மம் குருவுக்கும், செவ்வாய்க்கும் அதிநட்பு ஸ்தானமாகும். இங்கு அமரும் ஜீவனாதிபதி குரு தனது ஐந்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பார். ஒன்பதுக்கு அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் தனது பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பார். தர்ம கர்மாதிபதிகள் இருவரும் இணைந்து தங்களது வீடுகளைத் தாங்களே பார்ப்பது நல்ல யோகம் என்பதால் மீன லக்னத்திற்கு ஆறாமிடம் தீமைகளைத் தராது.
(அக் 11-16-2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.