adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
தனுசு, மகரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் யோகம்.! (B 004)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

தனுசு :

தனுசு லக்னத்திற்கு சூரியனும், புதனும் தர்ம கர்மாதிபதிகளாக அமைவார்கள். இதில் ஒன்பதுக்குடைய சூரியன் லக்னாதிபதி குருவுக்கு நண்பராவார். பத்துக்குடைய புதனும், குருவும் தங்களுக்குள் நண்பர்கள் இல்லை. விதிவிலக்காக சூரியனும், புதனும் நண்பர்கள். அதிலும் புதனுக்கு, சூரியன் முதன்மை நண்பர். எனவே தனுசுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் நன்றாகவே பலன் அளிக்கும்.

இதில் தர்ம ஸ்தானம் எனும் ஒன்பதாமிடம் தகப்பனாரைக் குறிக்குமிடமாகும். சூரியன் தந்தைக்குரிய கிரகம். எனவே “காரஹோ பாவ நாஸ்தி” எனப்படும் காரகன், அதே வீட்டில் இருந்தால் அந்த பாவம் கெடும் என்ற விதிப்படி சூரியன் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்றால் தந்தைக்கு ஆகாது.


கர்மாதிபதி புதனோ, பத்தாம் வீட்டில் ஆட்சி, உச்சம் பெற்றால் முழுமையான கேந்திராதிபத்திய தோஷத்தை அடைவார். அதுவும் நல்லதல்ல. எனவே, இருவரும் ஒன்பது, பத்தாமிடங்களில் தனித் தனியே ஆட்சி பெறாமல் பரிவர்த்தனை பெறுவது நல்லது.

இந்த அமைப்பில் சூரியனின் சிம்ம ராசி புதனுக்கு அதி நட்பு ஸ்தானம் என்பதால் புதன் சிம்மத்தில் இருந்தால் மிகவும் வலுப் பெறுவார். பத்தாமிடமான கன்னியில் சூரியனும் திக்பலம் பெற்று பலமடைவார். எனவே சூரியனும், புதனும் பரிவர்த்தனை அடைந்து கிடைக்கும் தர்ம கர்மாதிபதி யோகமே தனுசுவிற்கு முதன்மையானது.

மேலும் புதன் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருப்பார் என்பதால் புதனுக்கு மட்டும் அஸ்தங்க தோஷம் இல்லையென மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே புதன் சூரியனிடம் நெருங்கி அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் தர்ம கர்மாதிபதி யோகம் தனுசுவிற்கு உண்டு. எனினும் புதன் சூரியனை விட்டு பதினான்கு டிகிரிக்கு மேல் விலகியிருப்பது யோகத்திற்கு வலிமை தரும்.

சூரியனும், புதனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது வானியல் விதிப்படி சாத்தியம் இல்லை என்பதால் தனுசுக்கு பார்வை பலம் மூலம் இந்த யோகம் அமையாது. மேலும் புதன் தசையும், சூரிய தசையும் அருகருகே வருவது இல்லை என்பதால் இரண்டில் ஏதாவது ஒரு தசைதான் தர்ம கர்மாதிபதி யோகத்தைச் செய்யும்.

புதன் தசை பதினேழு வருடம், சூரிய தசை ஆறு வருடம் என்பதால் புதன் தசையிலேயே யோகம் மேலோங்கி நிற்பதுதான் நல்லது. இன்னுமொரு முக்கியக் கருத்தாக சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூவரும் முக்கூட்டுக் கிரகங்கள் என்பதால் பெரும்பாலும் இவர்கள் சேர்ந்தே இருப்பார்கள்.

தனுசுக்கு சுக்கிரன் கொடிய பாவி என்பதால் சூரியன், புதனுடன், சுக்கிரன் இணைந்தால் தர்ம கர்மாதிபதி யோகம் கெடும். எந்த இடத்திலும் இவர்களுடன் சுக்கிரன் இணையக் கூடாது.

லக்னத்தில் தர்ம கர்மாதிபதிகள் இணைவது சூரியனுக்கு வலு சேர்க்கும். அதோடு புதன் லக்னத்தில் திக்பலம் பெறுவார் என்பதால் இருவரும் சுக்கிரனுடன் சேராமல் இங்கு இருப்பது இருவரின் தசைக்கும் நல்லதே. முழுமையான யோகம் லக்னத்தில் சூரியனும், புதனும் இணைகையில் ஜாதகருக்குக் கிடைக்கும்.

இரண்டு, மூன்றாமிடங்களில் இவர்கள் இணைவது புதனுக்கு வலிமை என்றாலும் சூரியனை தனது பகைவராக கருதும் சனியின் வீட்டில் சூரியன் வலிமையிழப்பார். நான்காம் வீடான மீனத்தில் புதன் நீசம் பெறுவார். சூரியனும் இங்கு திக்பலத்தை இழப்பார். என்னதான் புதன் தனது சொந்த வீட்டைப் பார்த்தாலும், அவர் நீசம் பெற்று பார்ப்பது சரியான நிலையல்ல. நீச பங்கம் அடைந்திருந்தால் ஓரளவு பரவாயில்லை, எனவே மேற்கண்ட இடங்களில் யோகம் பங்கமடையும்.

ஐந்தாமிடமான மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுவார். புதன் சமம் பெறுவார். இந்த நிலை சிறப்பானது. இந்த அமைப்பில் யோகம் பூரண பலன் தரும். இங்கிருக்கும் சூரியனையும், புதனையும் லக்னத்தில் திக்பலம் பெற்ற குரு பார்த்தாராகில் ஜாதகர் அசைக்க முடியாத சக்தியாவார்.

ஆறாம் வீடு சுக்கிரனின் ரிஷபம் என்பதால் சூரியனுக்கு பகை வீடு. மறைவிடங்களில் யோகம் பங்கமாகும். இது நல்ல நிலையல்ல, ஏழாமிடமான மிதுனத்தில் புதன் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றாலும் ஒன்பது பத்துக்குடைய இருவரும் லக்னத்தை பார்ப்பார்கள் என்பதால் இது ஒரு நல்ல அமைப்பு.

எந்த ஒரு யோகமாயினும் அந்த யோகத்தைக் கொடுக்கும் இருவரில் ஒருவர் வலிமையாக இருக்கும் போது சிறப்பு நற்பலன்களைத் தருவார்கள் என்பது பொது விதி. அதன்படி இரண்டு கிரகங்கள் இணைந்திருக்கும்போது அதில் ஒருவர் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருப்பது நல்லது.

எட்டாம் வீட்டில் சூரியனும், புதனும் இணைவது ஒரு நல்ல அமைப்பு என்றாலும் தர்ம கர்மாதிபதிகள் எட்டில் மறைவது சரியல்ல. பதினொன்றாமிடத்தில் சூரியன் நீசம் பெறுவதும், பனிரெண்டாமிடத்தில் இருவரும் மறைவு பெறுவதும் யோகத்தை முழுமையாகத் தராது.

மகரம் :

மகர லக்னக்காரர்களுக்கு தர்ம கர்மாதிபதிகள் புதனும் சுக்கிரனும் ஆவார்கள். இருவருமே லக்னாதிபதி சனிக்கு நண்பர்கள் என்பதால் இந்த யோகம் சிறப்பாகச் செயல்படும். புதனுக்கு ஆறாமிட ஆதிபத்தியம் இருந்தாலும், அவரின் மூலத் திரிகோண ஸ்தானம் கன்னி என்பதால் அவருக்கு பாக்கிய ஸ்தானத்தின் அமைப்பே மேலோங்கி நிற்கும்.

மகரத்தவர்களுக்கு சூரியன் அஷ்டமாதிபதி என்பதால் சுக்கிர, புதனுடன் அவர் இணைவதோ, சூரியனுடன் இவர்கள் இருவரும் அஸ்தங்கம் அடைவதோ யோகத்தைக் குறைக்கும்.

சுக்கிரனும் புதனும் லக்னம் மற்றும் இரண்டாமிடத்தில் இணைவது மிகவும் நல்லது. இந்த இரண்டு இடங்களும் லக்னாதிபதி சனியின் வீடுகள் என்பதால் இருவரும் நட்புநிலை பெறுவார்கள். இவ்விடங்களில் சனியும் இவர்களுடன் இணைந்திருப்பது யோகத்திற்கு வலுச் சேர்க்கும் அமைப்புத்தான்.

மூன்றாமிடமான மீனத்தில் புதன் நீசம் பெறுவார். சுக்ரன் அங்கு உச்சம் அடைவதால் புதன் நீச பங்கம் அடைவார் என்றாலும் சுக்கிரன் சூன்ய பலத்தை பெறுவார் என்பதால் யோகம் முழுமையாக பலன் தராது. நான்காமிடமான மேஷம், சுக்கிரனுக்கும், புதனுக்கும் நட்பு இடம் அல்ல. என்றாலும் இங்கு சுக்கிரன் திக்பலம் பெறுவார் என்பதால் இவர்கள் இங்கு இணைவது நல்லதே.

லக்னாதிபதி சனியும், குருவின் பார்வை அல்லது இணைவு பெற்று பத்தாமிடமான துலாத்தில் உச்சம் பெற்று இவர்கள் இருவரையும் பார்த்தார் என்றால் மிகவும் சிறப்பான யோகம் கிடைக்கும். ஐந்தாமிடமான ரிஷபத்தில் இருவரும் இணைவது மிகவும் நல்லது. சுக்கிரன் இங்கு ஆட்சி பெறுவார். இயற்கைச் சுபரான அவர் ஒரு திரிகோணத்தில் ஆட்சி பெறுவது மிகவும் சிறப்பான யோகம்.

மேலும் மகரத்திற்கு அவர் பத்தாமிடத்திற்கும் அதிபதியாகி கேந்திராதிபத்திய தோஷம் அடைவதால் தனது கேந்திரவீடான பத்திற்கு எட்டில் மறைந்து, ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் கேந்திராதிபத்திய தோஷமும் நிவர்த்தி அடையும்.

ஆறு ஏழு எட்டாமிடங்களில் இருவரும் இணைவது யோகம் அல்ல. ஆறாமிடம் சுக்கிரனுக்கு நட்பு, புதனுக்கு ஆட்சி என்றாலும் எந்த ஒரு சுப யோகமும் மறைவிடங்களில் அமைந்தால் முழுப் பயனை அளிக்காது.

ஏழாமிடம் சந்திரனின் வீடு என்பதால் புதனுக்கு ஆகாது. எட்டாமிடமான சிம்மம் சுக்கிரனுக்கு பகை வீடு. ஒன்பதாமிடமான கன்னியில் சுக்கிரன் நீச பங்கம் அடைந்தாலும் சுக்கிர தசையின் பிற்பகுதியில்தான் நன்மைகள் நடக்கும் என்பதால் அதுவும் நல்ல நிலை அல்ல.

பத்தாமிடமான துலாமில், சுக்கிரனும் புதனும் இணைவது சுக்கிரனுக்கு கேந்திராதிபத்ய தோஷத்தை கொடுத்தாலும் சுக்கிரன் இங்கே திக்பலத்தையும் இழப்பார். லக்னாதிபதி சனியும் இங்கே இணைந்து மூவரும் எட்டு டிகிரி இடைவெளியில் சேர்ந்து இருந்தால் மட்டுமே தர்ம கர்மாதிபதி யோகம் பலனைத் தரும். பதினொன்று பதிரெண்டாமிடங்களில் இருவரும் இணைவது சிறப்பானது அல்ல.

மகரத்தின் தர்ம கர்மாதிபதிகளான சுக்கிரனும், புதனும் அருகருகே பயணிப்பவர்கள் என்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லை. எனவே பார்வை பலத்தினால் உண்டாகும் தர்ம கர்மாதிபதியோகம் மகரத்திற்கும் கிடையாது.

மகர லக்னக்காரர்களுக்கு லக்னாதிபதியான சனியே இரண்டாமிடமான கும்பத்திற்கும் நாயகனாகி தனாதிபதியுமாவதால் சனி நல்ல இடங்களில் அமர்ந்து சூட்சும வலுப் பெற்று, கேது மூன்றாமிடமான மீனத்திலோ, ஆறாமிடமான மிதுனத்திலோ, பதினோராமிடமான விருச்சிகத்திலோ சுப பலம் பெற்று இருப்பது நல்லது.

இதுபோன்ற அமைப்பினால் சனிதசை பத்தொன்பது வருடங்கள், அடுத்து புதன் பதினேழு, அதன்பின் கேது ஏழு, நிறைவாக சுக்கிர தசை இருபது வருடங்கள் என மொத்தம் அறுபத்து மூன்று வருடங்கள் மகர லக்னக்காரர்கள் உன்னதமான வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். மகரம் சர லக்னம் என்பதாலும் இந்த யோகங்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

அக்  5-10, 2011. திரிசக்தி ஜோதிடம் இதழில் வெளிவந்தது.