ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
சி. சிவசுப்பிரமணியன், மயிலாடுதுறை.
கேள்வி.
உங்களின் மாலைமலர் கட்டுரைகள் மற்றும் யூட்யூப் வீடியோக்களை பின்பற்றி வருகிறேன். சமீபத்திய ஜோதிடப்பயிற்சி வகுப்பில் ரிஷபத்திற்கு ஒன்பதில் குரு அமர்ந்து ராகு மற்றும் சனியின் சேர்க்கை பெற்று கெட்டு விட்டார் என்றும், இந்த நீச்ச குருவிற்கு பார்வை கிடையாது என்றும் விளக்கினீர்கள். ஆனால் பௌர்ணமி சந்திரன் கடகத்தில் இருந்து பார்த்தால் அது குருவை பலப்படுத்தும் என்றும் அந்த அமைப்பிலுள்ள குருவிற்கு பார்வைபலம் உண்டு என்றும் கூறினீர்கள். இணைக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் லக்னாதிபதி குரு 9-ஆம் இடத்தில் ராகுவோடு கிரகணமாகி சனியின் பார்வையில் இருக்கிறார். இந்த குருவை மூன்றாமிடத்தில் உள்ள சந்திரனின் பார்வையை பலப்படுத்துமா? இங்கே குருவின் நிலை பற்றிய விளக்கத்தை தரும்படியும், ராகுதசை எப்படி இருக்கும் என்பதையும் விளக்கும்படி ஆசானிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதில்.
நீங்கள் குறிப்பிட்ட ஜோதிடப் பயிற்சி வகுப்பில் நீச்சமான குரு, சனி-ராகுவுடன் இணைந்திருக்கையில் அதற்கு பார்வை பலம் இல்லை என்பதை விளக்கினேன். ஆனால் இந்தக் குழந்தையின் ஜாதகப்படி குரு, 9-மிடமான அவருக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் இருக்கிறார். சிம்ம குருவிற்கு எப்போதுமே சுபவலு அதிகம்.
ராகுவிடம் 4 டிகிரிக்குள் குரு இணைந்திருப்பது வலுக்குறைவுதான் என்றாலும், தேய்பிறை ஆனாலும் சப்தமி திதியில் உள்ள பாதியளவு ஒளி கொண்ட சந்திரனின் பார்வையில் குரு இருப்பது, ராகுவிடம் இழந்த ஒளியை ஓரளவு திரும்பப் பெறுவதுதான். ஆயினும் குருவிற்கு இங்கே முழு பலம் கிடைத்துவிடாது. அதே நேரத்தில் அவர் முற்றிலும் வலுவிழக்கும் நிலையிலும் இல்லை. எனவே இந்தக் குழந்தைக்கு ஓரளவிற்கு கஷ்டமில்லாத நடுத்தரமான நல்ல வாழ்க்கை கண்டிப்பாக கிடைக்கும்.
அதைவிட மேலாக திரிகோணத்தில் அமர்ந்த லக்னாதிபதியின் தசை 20 முதல் 30 வயது வரை நடக்க இருப்பதால், குழந்தை எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும். 36 வயதிற்கு பிறகு நடக்கும் சனிதசை சுக்கிரனின் பார்வையிலும், அதன்பிறகு நடக்க இருக்கும் புதன்தசை குருவின் பார்வையிலும் இருப்பதால், வாழ்நாள் முழுக்க அடிப்படை தேவைகளுக்கு சிக்கல்கள் இன்றி வாழ்க்கை நன்றாகவே இருக்கும் ஜாதகம் இது. அர்த்த சந்திரன் என்று சொல்லப்படும் பாதிச் சந்திரனின் ஒளியை குரு பெற்றுள்ளதால் இங்கே குருவிற்கு 50 சதவிகித பார்வைத்திறன் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
கே. கார்த்திகேயன், மதுரை.
கேள்வி.
மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நானும் உடன் படிக்கும் பெண்ணும் விரும்புகிறோம். நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தப் பெண் வசதியானவள். எனவே எனக்கு சிறு தயக்கம் இருக்கிறது. அதுவும் தவிர அந்தப் பெண்ணிற்கு கும்பராசியாகி ஏழரைச்சனியும் ஆரம்பிக்கிறது. இது எங்களுக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணுமா? என்னால் அவளை நன்றாக வைத்துக்கொள்ள முடிந்தால் மட்டுமே திருமணம் என்று அந்தப் பெண்ணிடமே சொல்லியிருக்கிறேன். எங்களுக்கு திருமணம் நடக்குமா? நாங்கள் நன்றாக இருப்போமா?
பதில்.
பயப்படுகிறவன் காதலிக்கக் கூடாது, காதலிப்பவன் பயப்படக்கூடாது என்கின்ற ஒரு பிரபலமான சொலவடை ஹிந்தியில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப்போல ஒருவன் தயங்கிக் கொண்டும் காதலிக்கக் கூடாது. அது காதல் அல்ல.
எல்லா நிலைகளையும் ஜோதிடத்தில் சொல்ல முடியும் என்றாலும் நீ இந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வாய் என்று எந்த ஒரு ஜோதிடராலும் சொல்ல முடியாது. அது பரம்பொருளின் விருப்பத்திற்கு உட்பட்டது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே லக்னம், ஒரே ராசி, ஒருவருடைய லக்கினம் இன்னொருவருடைய ராசி, எதிரெதிர் ராசிகள், எதிரெதிர் லக்னங்கள் போன்ற ஒற்றுமைகள் இருந்தால் இருவருக்கும் ஈர்ப்பு வரும் என்று எழுதி இருக்கிறேன். ஆனால் உங்கள் இருவருக்கும் சஷ்டாஷ்டக லக்னமாகி, ராசிகள் மட்டும் கேந்திரத்தில் இருக்கின்றன.
அதேநேரத்தில் செவ்வாயும், சனியும், ஒருவருக்கு இணைந்தும், இன்னொருவருக்கு எதிரெதிரே பார்த்துக் கொண்டும் இருப்பது காதல் புரிய வைக்கும் அமைப்பு. அதைவிட மேலாக உன்னுடைய ஜாதகப்படி 5-12 க்குடையவர்கள் பரிவர்த்தனையாகி, எட்டாமிடமும், 12-ஆம் இடமும் சுபத்துவமாக இருப்பதாலும், ராகுதசை தற்போது நடந்து கொண்டிருப்பதாலும் படிப்பு முடிந்தவுடன் நீ வெளிநாட்டில் வேலை செய்வாய்.
அந்தப் பெண்ணிற்கும் அதேபோன்று எட்டாமிடத்தில் லக்னாதிபதி அமர்ந்து பன்னிரண்டாம் இடம் சுபத்துவமாக இருக்கிறது. பெண்ணிற்கு சுக்கிரபுக்தி நடப்பதாலும், உன்னுடைய அமைப்பின்படியும் 2021ல் உங்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும். இருவருக்கும் இணைந்து நடக்குமா, தனித்தனியே நடக்குமா என்பது பரம்பொருளின் விருப்பத்தைப் பொறுத்தது. இணைந்து நடக்க வாழ்த்துக்கள்.
ஒரு வாசகி, கோவை.
கேள்வி.
பெண் பிள்ளைக்கு நகை, பணம் சேர்த்து வைப்பதை விட நல்ல கல்வி கொடுத்தால் அவள் எதிர்காலம் சிறப்படையும் என்று என் பெற்றோர் சக்திக்கு மீறி என்னைப் படிக்க வைத்தனர். நானும் 85 சதவிகித மார்க்குகளுடன் தேர்வானேன். தற்போது அரசுத் தேர்வுகள் எழுதி வருகிறேன். தனியார் நிறுவனங்களுக்கும் இன்டர்வியூ சென்று வருகிறேன். கடைசிக் கட்டம் வரை தேர்வு அடைந்தும் கூட இரண்டு நாளில் தெரிவிக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் பிறகு அழைப்பதே இல்லை. நான் ஒரே பெண் என்பதால் என்னை வெளிநாட்டிற்கு, வெளிமாநிலத்திற்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு இஷ்டமில்லை. உள்ளூரிலேயே வேலை தேடு என்கிறார்கள். எப்போது எனக்கு நல்ல வேலை அமையும்? கஷ்டப்படுகிற என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இரண்டு வருடங்களாவது சம்பாதித்துக் கொடுக்க விரும்புகிறேன். பிறகு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்?
பதில்.
லக்னாதிபதி சுக்கிரன், லக்னத்தில் உள்ள நீச்ச சூரியனோடு பரிவர்த்தனையாகி, சூரியன் மறைமுக ஆட்சி வலுப்பெற்ற நிலையில், சிம்மத்தையும், சிம்மத்தில் இருக்கும் செவ்வாயையும் வலுப்பெற்ற குரு பார்த்த யோக ஜாதகம். ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் இருப்பதும் சிறப்பு. இந்த அமைப்புப்படி உனக்கு அரசு வேலை கிடைக்கும். அதே நேரத்தில் தற்போது மகரராசிக்கு ஜென்மச் சனி ஆரம்பிக்க உள்ளதால், இன்னும் ஒன்றரை வருடங்கள் தாமதமாக கிடைக்கும்.
என்னுடைய கணிப்புப்படி உன்னுடைய வீட்டில் வேறு யாருக்காவது மகர ராசியாக இருக்கும். மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இரண்டு பேருக்கு ஜென்மச் சனி நடக்கும் போது அல்லது பெற்றோரில் ஒருவருக்கு ஜென்மச்சனி நடக்கும்போது குழந்தைக்கு வேலை கிடைப்பது தாமதமாகும் அல்லது மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காது. வரும் நவம்பர் மாதம் 19ம் தேதிக்கு பிறகு உனக்கு ஒரு வேலை கிடைக்கும். ஆனால் அது உன் படிப்பிற்கேற்ற வேலையாக இருக்காது. அதில் சேர்ந்து கொண்டு அரசுத் தேர்வு எழுது.
2020ஆம் ஆண்டு இறுதியில், அடுத்து வர இருக்கும் ராகு தசை, சந்திர புக்தியில் உனக்கு அரசு வேலை நிச்சயம் உண்டு. துலாம் லக்னத்திற்கு குருதசை வரக்கூடாது என்று அடிக்கடி எழுதுவேன். ஆனால் உன்னுடைய அமைப்பின்படி குரு, லக்னாதிபதியான சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமர்ந்து, மூன்றாம் இடத்தை தொடர்பு கொள்வதால் குரு தசையில் உன்னை அரசு வேலையில் நிரந்தரமாக இருக்க வைப்பார். 26 வயதுக்கு பிறகு எவ்வித கஷ்டங்களும் இன்றி நன்றாக இருப்பாய் அம்மா. வாழ்த்துக்கள்.
(29.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.