adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 259 (22.10.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

கமல், திருப்பூர்.

கேள்வி:

நான் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டிப்ளமோ முடித்திருக்கிறேன். அடுத்ததாக வேறு ஏதாவது படிக்கலாமா அல்லது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்குமா? மேற்படிப்பு படிக்கலாம் என்றால் இதே தொடர்புடைய துறை அல்லது வேறு எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது?

பதில்:

(கடக லக்னம், துலாம் ராசி, 1ல் ராகு, 4ல் சந், 7ல் கேது, 10ல் குரு, சுக், சனி, 11ல் சூரி, செவ், புத 16-5-2000 பகல் 12-15 நெல்லை)

லக்னாதிபதி சந்திரன் பௌர்ணமிக்கு அருகில் அமைந்து, திக்பலமும் பெற்று, குரு, சுக்கிர பார்வையும் பெற்ற யோக ஜாதகம். செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றது மிகவும் சிறப்பு. லக்னம் சரமாகி அதற்கு நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் அமைந்து, சதுர் கேந்திர யோகம் அமைந்துள்ளதாலும், பத்தாமிடத்தில் மூன்று கோள்கள் இருப்பதாலும், உனக்கு நிரந்தரமான நல்ல தொழில் அமையும்.

தற்போது நடக்கும் குரு தசையில் சனி புக்தி அடுத்த வருடம் ஜூலையில் முடிந்த பிறகு நல்ல வாழ்க்கை உண்டு. இப்போது வேலைக்குப் போவதை விட நீ படித்திருக்கும் இதே துறையிலேயே மேற்படிப்பு படிக்கவும். 24 வயது முதல் உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்த்துக்கள்.

கா. அறிவழகன், மதுரை.

கேள்வி:

மாலைமலர் தொடங்கிய நாள் முதல் அதன் வாசகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அதிலும் கடந்த நான்கு வருடங்களாக நீங்கள் எழுதும் ஜோதிடக் குறிப்புகளை படித்து, புரியாத பல பகுதிகளை தெரிந்து கொண்டிருக்கிறேன். என் ஜாதகத்தில் கஜகேசரி யோகம், அனபா யோகம், குருச்சந்திர யோகம், அஷ்டலட்சுமி யோகம், மறுபிறவி இல்லா யோகம் உள்ளிட்ட நிறைய யோகங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இதுவரை எந்த யோகமும் வரவில்லை. இனிமேல் வருமா அல்லது வராதா என்று தெரியவில்லை. 11ல் செவ்வாய் உள்ளதால் தாய்வழி, தந்தைவழி சொத்து ஏதும் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று கூறவும். இதை நம்பித்தான் என் மகள் திருமணம் பற்றி யோசித்து வைத்திருக்கிறேன். நினைத்துப் பார்த்தால் மிகவும் பயமாகவும் கஷ்டமாகவும் உள்ளது. நல்லதொரு பதில் அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

(தனுசு லக்னம், மிதுன ராசி, 3ல் சனி, 6ல் ராகு, 7ல் சந், குரு, 8ல் புத, 9ல் சூரி, 10ல் சுக், 11ல் செவ், 12ல் கேது 23-8-1965 மாலை 4 மணி மதுரை)

அனைத்து யோகங்களும், எல்லா கிரகங்களுக்கும், எல்லா நிலைகளிலும் பலன் தருவதில்லை. ஜோதிடம் அறிந்த பெரும்பாலோர் இது போன்று தங்களது ஜாதகத்தில் உள்ள யோகங்களை நினைத்துக் கனவு கண்டே இலவு காத்த கிளியாக மாறிப் போகிறார்கள்.

எந்த ஒரு யோகமும் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசையில், ஜாதகரின் சரியான பருவத்தில், யோக அமைப்புகள் பங்கமின்றி அமைந்திருக்கும் நிலையில் மட்டுமே பலன் தரும். இதுபோன்று அமைந்திருக்கும் ஜாதகர்கள்தான் உண்மையான யோகசாலிகள். இவர்கள் ஆயிரத்தில் ஒருவர்தான். மற்றவர்கள் அனைவரும் யோகத்தை நினைத்து ஏங்கிக் கொண்டே இருப்பவர்கள்தான்.

உங்கள் ஜாதகப்படி 16 வயதிற்கு பிறகு உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் சனி, புதன் தசைகள் அவயோக தசைகள் என்பதால் நடுத்தரமான ஒரு வாழ்க்கை அமைப்பு மட்டுமே  உங்களுக்கு இருக்கும். லக்னாதிபதி லக்னத்தை வலுப்பெற்று பார்ப்பதால் சாப்பாட்டிற்கு  பஞ்சமிருக்காது. ஏதேனும் ஒருவகையில் காலம் ஓடும். அதேநேரத்தில் மேற்கண்ட யோகங்களை நினைத்துக் கொண்டு நாம்தான் அடுத்த அம்பானி என்றெல்லாம் கனவு காணக்கூடாது.

சிம்மத்தை சனி பார்த்தால் பூர்வீகச் சொத்து கிடைக்காது என்பது ஒரு விதி. ஆனால் அதே சனி சுபத்துவமாகிப் பார்க்கையில், விதிவிலக்காக சொத்து கிடைக்கும். உங்கள் ஜாதக அமைப்பின்படி சூரியன் சிம்மத்தில் இருப்பதாலும், அவரே பாக்கியாதியாகவும் இருப்பதாலும், சிம்மத்தை பார்க்கும் சனி, குருவின் பார்வை பெற்று மூலத்திரிகோண அமைப்பில் சுபத்துவமாக உள்ளதாலும், 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் உங்களுக்கு பூர்விகச் சொத்து கிடைக்கும்.

நடப்பு கேது தசை ஓரளவிற்கு நன்மைகளை தருகின்ற தசை என்பதால் மகளின் திருமணத்தை நீங்கள் சிறப்பாகவே நடத்த முடியும். மிதுன ராசிக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு அஷ்டமச்சனி நடக்க உள்ளதால், எதிலும் தடை இருக்கும். 2022ம் ஆண்டு முதல் ஓரளவுக்கு நன்றாகவே இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

பி. சேமராஜ், கோவை.

கேள்வி:

உங்கள் பதிவுகளில் லக்னாதிபதி நீச்சமானால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கு லக்னாதிபதியும், தொழில் ஸ்தானாதிபதியுமான புதன் நீச்சமாகி விட்டார். புதன் அமர்ந்த வீட்டின் அதிபதி குருவும் நீச்சமாகி இருக்கிறார். மொத்தத்தில் கேந்திர ஸ்தானம் பலமிழந்து விட்டது. என்னால் வாழ்வில் முன்னேற முடியாதா? சொந்தமாக வாகன உதிரிபாக கடை வைக்க ஆசைப்படுகிறேன். அந்தக் கனவு சாத்தியமாக என் ஜாதகத்தில் வாய்ப்பு உள்ளதா?

பதில்:

(கன்னி லக்னம், மேஷ ராசி, 2ல் கேது, 3ல் சனி, 5ல் குரு, 7ல் புத, சுக், 8ல் சூரி, சந், ராகு, 9ல் செவ், 20-4-1985 மாலை 5-40 சேலம்)

லக்னாதிபதி நீச்சமானால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று நான் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. லக்னாதிபதி நீச்சமாகி முழுக்க பலமிழந்திருந்தால் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடைகள் இருக்கும், ஜாதகரே எதிலும் முனைப்பின்றி இருப்பார் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகளை கொண்ட இந்த மாபெரும் சாஸ்திரத்தில் லக்னாதிபதி முறையான நீசபங்கம் அடைந்திருந்தால் அவரது முற்பகுதி வாழ்க்கை கடினமாகவும், பிற்பகுதி வாழ்க்கை மிகவும் உயர்வானதாகவும் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி மற்றும் ஜீவனாதிபதி புதன் ஏழாமிடத்தில் நீச்சம் அடைந்திருந்தாலும், அங்கே அவர் உச்ச சுக்கிரனுடன் இணைந்து நீச்சபங்க ராஜயோக அமைப்பில் இருக்கிறார். புதனும், சுக்கிரனும் லக்னத்தைப் பார்க்கும் நிலையில், சந்திரனுக்கு கேந்திரத்தில் இருக்கும் குருவும் லக்னத்தை பார்ப்பது மிகவும் சிறப்பு. லக்னம், லக்னாதிபதி இருவரும் சுபர் சம்பந்தம் பெற்றிருப்பதால் உங்களுடைய ஜாதகம் யோக ஜாதகம்தான். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

அதே நேரத்தில் கடந்த பத்து வருடங்களாக உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் சூரிய, சந்திர தசைகள் யோகம் தருவன அல்ல. சூரிய, சந்திரர்கள் இருவரும் கிட்டத்தட்ட அமாவாசை நிலையில், எட்டில் மறைந்து, ராகுவுடன் இணைந்து பாபத்துவமாகி, சுப அமைப்புகளே இல்லாத நிலையில் வரும் 2023 வரை உங்களுக்கு எந்த நல்லதும் நடக்க வாய்ப்பு இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் தொழில் அமைக்கக்கூடாது.

ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ அந்தக் கிரகத்தின் தொழில் அமையும், அப்படி அமைந்தால் அவர் வாழ்வில் நன்றாக இருப்பார் என்பது என்னுடைய சுபத்துவ சூட்சுமவலு கோட்பாடு. அதன்படி உங்களது ஜாதகத்தில் ராசியில் செவ்வாயின் வீட்டில், செவ்வாயின் பார்வையில், சனி இருந்தாலும், நவாம்சத்தில் சனி குருவோடு இணைந்து, அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் சனி என்பதால் வாகன உதிரி பாகங்கள் கடை வைக்கும் ஆர்வம் உங்களுக்கு வந்திருக்கிறது.

லக்னாதிபதி நேர்வலு இழுந்தாலே வாழ்வின் பிற்பகுதியில் 42 வயதிற்கு பிறகுதான் யோகம் என்பதையும் சொல்லி இருக்கிறேன். எனவே அடுத்து வர இருக்கும் செவ்வாய் தசையில் உங்களுக்கு வாகன உதிரிபாகங்கள் கடை அமைந்து, முதல் மூன்றரை வருடங்கள் கடன் தொல்லைகள் கஷ்டங்கள் என செவ்வாய் கொடுத்து, பின் மூன்றரை வருடங்களில் இருந்து உங்கள் வாழ்க்கை நன்றாகவே இருக்கும். உங்களால் வாகன உதிரிபாக கடை வைக்க முடியும். அதில் நன்றாகவும் பிழைக்க முடியும். செவ்வாய் தசைக்கு பிறகு வரும் ராகு தசை முதல் வாழ்க்கையில் செட்டிலாகி நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

(22.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.