ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
வி. எஸ். வேல்முருகன், ஈரோடு.
கேள்வி:
கடந்த 15 ஆண்டுகளாக தேங்காய் வியாபாரம் செய்து வருகிறேன். நன்றாகவே தொடர்கிறது. அரசியல் ஆர்வமும் அதிகமாகவே இருக்கிறது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வந்துள்ளது. போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா? துணிந்து போட்டியிடலாமா அல்லது தற்போது உள்ள தொழிலையே விரிவு செய்யலாமா? என்னுடைய ஆயுள் எவ்வாறு உள்ளது? எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
(தனுசு லக்னம், சிம்ம ராசி, 1ல் கேது, 6ல் புத, சுக், 7ல் சூரி, ராகு, 9ல் சந், 10ல் செவ், சனி, 11ல் குரு, 25-6-1982 மாலை 6-35 பவானி)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது ஒரு கண்கட்டி வித்தை போலிருக்கிறது. சமீபத்தில் இணையத்தில் படித்த ஒரு ஜோக்கை சற்று மாற்றி இங்கே சொல்லுகிறேன்.
அமெரிக்க, இங்கிலாந்து, சீன அதிபர்களுடன் நம்முடைய தமிழர் ஒருவரும் சேர்ந்து கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப் போனார்கள். முதலில் அமெரிக்க அதிபர் என்னுடைய நாடு எப்போது முழுமையாக முன்னேறும் என்று கேட்டார். கடவுள் 30 ஆண்டுகள் ஆகும் என்று பதில் சொன்னார். அமெரிக்க அதிபர் அழுதுகொண்டே திரும்பினார்.
அடுத்து இங்கிலாந்து பிரதமர் எனது தேசம் எப்போது முன்னேறும் என்று கேட்க, கடவுள் 50 ஆண்டுகள் ஆகும் என்று பதில் சொன்னார். இங்கிலாந்து பிரதமர் அழுதுகொண்டே திரும்பினார். அடுத்து சீன அதிபர் அதே கேள்வியைக் கேட்க கடவுளிடமிருந்து 70 ஆண்டுகளாகும் என்று பதில் வந்தது. சீன அதிபரும் அழுதுகொண்டே திரும்பினார்.
இறுதியாக நம்முடைய தமிழர் கடவுளிடம் சென்று எங்கள் மாநிலத்தில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று கேட்டார். கடவுள் அழுதுகொண்டே திரும்பினார். இப்படி இருக்கிறது தமிழ்நாட்டின் நிலைமை.
மேம்போக்காகப் பார்த்தால் உங்களுடைய ஜாதகம் அரசியலில் ஜெயிக்க இயலாததை போலத் தோன்றும். ஆனாலும் இதில் சில மறைமுக விதிகள் இருப்பதால் உங்கள் ஜாதகத்தை விளக்க தேர்ந்தெடுத்தேன். இங்கே அரசியலுக்குரிய கிரகமான சூரியன் ராகுவுடன் இணைந்திருந்தாலும் எட்டு டிகிரிக்கு அப்பால் விலகி இருக்கிறார். சூரியனைக் குரு பார்ப்பதால் வலுப் பெற்றிருக்கிறார். சிம்மத்தில் வளர்பிறைச் சந்திரன் இருப்பது சிறப்பு.
ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் குப்பைகூளம், சாக்கடைக்குரிய சனி சுபத்துவமாக இருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், சனி இணைந்து மேம்போக்காக சனி பாபத்துவமாக இருப்பதைப்போல தோன்றினாலும், சனிக்கு ஒருபுறம் குருவும், மறுபுறம் வளர்பிறைச் சந்திரனும் அமர்ந்து சுப கர்த்தாரி யோகம், பத்தாமிடத்திற்கும், சனிக்கும் ஏற்பட்டிருக்கிறது.
சனியை சுபத்துவப்படுத்தக் கூடிய முதன்மைக் கிரகமான குரு, அடுத்த ராசியில் இருப்பதைப்போல தோன்றினாலும், அதாவது சனியும், குருவும் வேறுவேறு ராசியில் இருப்பதைப்போல தோன்றினாலும், இருவருக்குமிடையில் 15 டிகிரி மட்டுமே இடைவெளி இருப்பதால், சனி சுபத்துவமாகவே இருக்கிறார். சனி நல்ல நிலைமையில் இருப்பதால்தான் அவரது காரகத்துவமான தேங்காய் தொழில் உங்களுக்கு கை கொடுக்கிறது. தேங்காய்க்கு உரியவர் சனிதான்.
எனவே உள்ளாட்சி தேர்தல் உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனாலும் வரும் பிப்ரவரி மாதம் முதல் உங்களுக்கு சந்திர தசையில் சுக்கிர புக்தி நடக்க இருக்கிறது. ஜாதகம் யோகமாக இருந்தாலும் தசாபுக்திகள் கை கொடுக்க வேண்டும். சந்திர தசை, சுக்கிர புத்தி என்பது எட்டுக்குடையவன் தசையில், ஆறுக்குடையவன் புக்தியாக அமையும். இது 2021 அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். சுக்கிரன் ஆறில் வலுவாக இருப்பதால் சுக்கிர புக்தியில் உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்காது. தொழிலிலும் கடன் தொல்லைகள், வருமான குறைவு போன்ற சிக்கல்கள் இருக்கும்.
எனவே 2021 பிற்பகுதி வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்கக் கூடாது. அதன்பிறகு நடந்தால் மட்டுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எட்டாம் அதிபதி சுபராகி, சுப வீட்டில் இருப்பதாலும், ஆயுள்காரகன் சுபத்துவமாகி, லக்னாதிபதியும் ஓரளவு நல்ல நிலைமையில் இருப்பதாலும், உங்களுக்கு 70 வயது தாண்டிய தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.
(22.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.